இழப்புக்குள்ளான சமூக அந்தஸ்து…?
ஒரு அமைப்பு நிறுவனம் தன்னைப் பேசுவதற்காக அழைத்திருக்கிறது. தமக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பல்கலைக் கழகம் தனக்கு கௌரவப் பட்டம் தரவிருக்கிறது. பரிசுகள் பெறாதவர் வீண் மனிதர். விருது பெறாதவர் வாழத் தகுதியற்றவர். பெயருக்கு முன்னும் பின்னும் ”செந்தமிழ் முத்துமணி”. ”தமிழ்க் குன்றுமணி” டைட்டில் இல்லையா? வெட்கக்கேடு! இத்தகைய கற்பிதங்கள், பெருமைகள் சொல், செயல், பதிவுகளில் வெளிப்படுத்தப்படுகிறது.
ஏதோ ஓர் வழியில் பணத்தேடல் நடக்கிறது. இரு தலைமுறை அனுபவிக்குமளவு இருப்பு சேர்ந்ததும் பயணம் சமூகத்துக்குள் அந்தஸ்து தேடுகிறது. பணத்தின் வழியாக அடைய முனைகிறது. சுய பகட்டு, தம்பட்டம், வெளிச்சத்துக்கு மனம் ஏக்கமுற்று ஆசை அலைபாய்கிறது.
சில சமூகத்தவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னம் தொலைநோக்குச் சிந்தனையுடன் ஆக்கப்பூர்வ பயனுக்கு பல நூறு ஏக்கர் நிலத்தை வளைத்தனர். வகைப்படுத்தினர். நிறுவனங்களை மக்களுக்காக, தமது சமூகத்தவருக்காக ஏற்படுத்தினர். வேர் விட்டன. விரிந்து படர்ந்தன. பரவின கிளைகள். இளைப்பாற, பயனெடுக்க படையெடுத்தனர். ஏதோ ஓர் சமூகத்தவர் உழைப்பில் மற்ற சமூகங்களும் குளிர்காய்ந்தன.
அதே காலக்கட்டத்தில் முஸ்லிம் செல்வந்தர்களும் வாழ்ந்தனர். பரவலாக பல நூறு, ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையிருப்பில் இருந்தன. சொத்துக்களுக்கு டிரஸ்ட் அமைத்து உறவினர்களை பொறுப்பாளிகளாக நியமிக்கும் போக்கும், வஃக்பு செய்தால் புண்ணியம் நினைப்புகளுமே மேலோங்கியிருந்திருக்கின்றன. மற்றோர் செயல்படுத்திக்காட்டிய தன்மைகள் உணரப்படவும், உள்வாங்கப்படவுமில்லை. மறைபெற்ற சமூகத்திலிருந்தும் கூர்மை இல்லா நிலை ஆட்கொண்டிருந்திருக்கிறது.
குறிப்பிட்ட சமூகத்தவர் நாற்பது வருடம் முன்பு கேவலமாக அடையாளச் சொல் கொண்டு அழைக்கப்பட்டது போன்று பொருளாதாரத்தில் பலவீனமான, கல்வியில் கீழான முஸ்லிம்களை பொது இடங்களில் ”யோவ்பாய்”. ”ஏ பாய் அம்மா”. ”ஒரமா போ பாயம்மா” ”தள்ளி நில்லுபாய்” இடுகுறிப்பெயரால் அழைக்கும் போக்கு நிலவி வருகிறது. ”பாய்” சகோதரனைக் குறிக்கும் சொல்லானாலும் அதன் பொருள் உணர்ந்து, ஏற்று மொழியப் படுவதில்லை. ஒரு வித எரிச்சல், வெறுப்புடன் உமிழப்படுகிறது.
எந்த ஒரு சமூகத்தவர் மீதும் உயர்வான பார்வை பதிய சுயகேரக்டர் 100 சதம் ஒழுக்க வாழ்வை வெளிப்படுத்தனும். அவர்களால் மற்ற சமூகங்களுக்கு பரவலான பயனிருக்க வேண்டும். அந்த இடத்தில் முஸ்லிம் சமூகம் மைனஸாகவிருக்கிறது. எரிச்சலடைய வைப்பதில் ப்ளஸ் போக்கிருக்கிறது.
மற்றவர் உருவாக்கிய அமைப்பு, நிறுவனம், கல்வியகம், தொழிலகங்களில் பயனடையக் கருதுவது. ஒதோ ஓர் சமூகத்தவர் கடுமையாக உழைத்து ஒரு பெயரை நிறுவி பரிசு, விருது உண்டாக்கி உச்சத்தில் அமர்த்தி ஊரெங்கும் பேச வைத்தபிறகு அதை அடைய ஏங்குதல், காய் நகர்த்துதல் எந்த உழைப்பும் செலுத்தாது குளிர்காய நினைத்தல் வெறுப்புக்குரிய செயல்.
பரிசுகள், விருதுகள், பட்டங்களை முஸ்லிம் சமூகம் உருவாக்க வேண்டும். உழைப்பால் உச்சத்திலேற்றி உதடுகளில் உச்சரிக்கச் செய்யவேண்டும். முஸ்லிம்களிடம் பரிசு, விருது, பட்டம் பெறுவதை பெருமையாக, உயர்வாக ஏனையோர் கருதும் எண்ணம் உருவாக்கப்படணும். கல்விச் சாலைகள், மருத்துவமனைகள், தொழில்முனையங்கள் அமைக்க ஆர்வப்படணும். தன்னலமற்ற போக்கிருக்கணும். சோஷியல் ஸ்டேட்டஸ் சமூக அந்தஸ்தை இளைய சமூகத்துக்கு பெற்றுத்தரப் போரடணும்.
சமூகத்தின் மீதான ஒரு வித கேவலப்பார்வை மாற்றப்பட கடுமையான உழைப்பு அவசியம். 5 மணி நேர உழைப்பு 10 மணி நேரமாக, 10 மணி நேர உழைப்பு 15 மணி நேரமாக உயர்த்திக் கொள்ளல் தேவை. உண்மை – உழைப்பு – தியாகம் – முறைமை வாழ்வு மட்டுமே மூலதனமாகக் கொண்டு பயணிக்க யகீன் – உறுதி நம்பிக்கை ஒவ்வோர் முஸ்லிம் சிந்தனையிலும் ஆழமாய்ப் பதியணும். இலக்கை எட்ட உதவும். அவரவரும் இறைவன் தமக்குத் தந்தவற்றிலிருந்து சமூகத்துக்குத் தரணும்.
”யா அய்யு ஹல்லஸீன ஆமனூ.. அன்பிகூ மிம்மா ரஸக்னாகும் மின்கப்லி அ(ன்)ய் யெஃதிய யவ்முல்லா பைஉன் பீஹி வலா குல்லது (ன்)வ் வலாஷபா அஹ்” (அல்குர்ஆன்)
”நம்பிக்கை கொண்டோரே! பேரம், நட்பு, பரிந்துரை இது போன்ற செயல் ஒன்றும் இல்லாத நாள் வருவதற்கு முன்பாக நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து நீங்கள் செலவு செய்யுங்கள். மறுப்பவர்களே (தங்களுக்குத்) தீங்கிழைத்துக் கொள்வோர்.” (அல்குர்ஆன்)
–ஜெ. ஜஹாங்கீர்
(முஸ்லிம் முரசு செப்டம்பர் 2012)