தொழுகையில் துஆக்கள் – ஒரு ஃபத்வா
Usthaz Mansoor
தொழுகையின் போது ஸுஜுதில் அரபு அல்லாத சொந்த மொழிகளில் வாயால் மொழிந்து பிரார்த்தனை செய்யலாமா?
இந்தக் கேள்வியைப் பலரும் என்னிடம் கேட்டதுண்டு. அப்போதெல்லாம் நான் ”அரபு மொழியில் மட்டுமே கேட்க முடியும். நீங்கள் உங்களது துஆக்களை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்” என்றே சொல்லி வந்தேன். எனினும் திருப்பித் திருப்பி இக் கேள்வியை என்னிடம் பலரும் கேட்டு வந்தனர்.
உண்மையில் மனதால் கேட்பதை விட வாயால் மொழிவதில் ஒரு திருப்தியும், தாக்கமும் உள்ளது என்பதில் சந்தேகமில்லை. எனவே எனது மனதிலும் நான் சொல்லி வந்த கருத்தில் அவ்வளவு தூரம் திருப்தியிருக்கவில்லை.
இந்த பின்னணியில் மூன்று அறிஞர்களிடம் இந்த கேள்வியை முன்வைத்தேன். ஒருவர் யூசுப் அல் கர்ளாவி. அவர் பற்றிய அறிமுகம் தேவையில்லை. அல்குர்ஆன், ஸுன்னா, இஸ்லாமிய சட்டம் என்ற மூன்று துறைகளிலும் புலமை மிக்க அறிஞர் அவர். இஸ்லாமிய சட்டத்துறையிலும் நிபுணத்துவம் பெற்றவர். அத்தோடு நவீன உலக யதார்த்தம், முஸ்லிம் சமூக பிரச்சினைகள் குறித்த அறிவும் மிக்கவர். இந்த வகையில் அவரது ஃபத்வாக்களுக்கு தனியானதொரு பெறுமதி உண்டு.
இரண்டாவது அறிஞர் அலி முஹியத்தீன் கர்ரா தாகி. இவர் கத்தார் பல்கலைக் கழகத்தில் ஃபிக்ஹ் – உஸுல் துறை பீடாதிபதி. இஸ்லாமிய சட்டத்துறை நிபுணர். பல சட்டத் துறை நூல்களின் ஆசிரியர்.
மூன்றாவது அறிஞர் ஜாஸிர் அவ்தா. இவர் ஒரு இஸ்லாமிய சட்ட நிபுணர். குறிப்பாக மகாஸிதிய இஸ்லாமிய சட்டக் கோட்பாட்டுத் துறையின் நிபுணர்களில் ஒருவர். பல பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர். பல சட்ட ஆய்வு நூல்களின் ஆசிரியர்.
இந்த அறிஞர்கள் தந்த மூன்று ஃபத்வாக்களும் ஒரே தீர்வையே முன்வைக்கின்றன. ஆனால் ஒன்றை விட ஒன்று விளக்கமாக உள்ளது.
இப்போது கீழே ஃபத்வாவைத் தருகிறேன்:
கேள்வி: கடமையான சுன்னத்தான தொழுகைகளில் குறிப்பாக ஸுஜுதின் போது அரபு மொழி அல்லாத மொழிகளைப் பாவித்துப் பிரார்த்தனை புரியலாமா?
அல்லாமா யூசுப் அல் கர்ளாவி:
பல கருத்துக்களைப் பொதித்த பொது துஆக்களை அரபு மொழியில் படித்து ஓதுவது மிகச் சிறந்ததாகும். எனினும் அரபு மொழி தெரியாத போது தனது மொழியில் அவர் பிரார்த்தனை புரியலாம். குற்றமில்லை.
குறிப்பு: பல கருத்துக்களை உள்ளடக்கிய பொது துஆ என்பதற்கு ஒரு உதாரணம்:
وَمِنْهُم مَّن يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ ﴿٢٠١﴾
ஸூரா பகரா 2 : 201
இறைவா எமக்கு இவ்வுலகிலும் நலன் பயப்பதைதா அடுத்த உலகிலும் நல்லதைத்தா. நரகத்திலிருந்தும் எம்மைக் காப்பாயாக.
அறிஞர் ஜாஸிர் அவ்தா:
அடிப்படையில் அது அனுமதிக்கப் படுகிறது என்பதே உண்மையாகும். இதற்கு கீழ்வரும் அல்குர்ஆன் வசனங்கள் ஆதாரமாக அமைகின்றன;
” ..உங்களது மொழிகளும், நிறங்களும் மாறுபட்டிருப்பதும்.. அவனது அத்தாட்சிகளில் சிலவாகும். (ஸூரா ரூம் 30 : 22)
நாம் அனுப்பிய எந்தத் தூதரையும் அவரது சமூகத்தின் மொழியிலேயே அனுப்பினோம். அவர்களுக்கு தெளிவு படுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காக. (ஸூரா இப்றாஹீம் 14 : 4)
வணக்க வழிபாட்டின் முதன்மையான அடையாளமாகக் கொள்ளப்படும் பாங்கு, தக்பீர், அல்குர்ஆன் தவிர ஏனையவை வேறு மொழிகளில் சொல்லப் படுவது தடைசெய்யப்படுகிறது என்பதற்கு ஆதாரமில்லை. குர்ஆன் அரபியிலேயே அமைய வேண்டும் என்பதை கீழ்வரும் இறை வசனம் காட்டுகிறது.
”நிச்சயமாக நாம் அதனை அரபு மொழியில் அமைந்த குர்ஆன் ஆகவே இறக்கினோம்.”
(ஸூரா யூசுப் 12 : 2)
இந்த வகையில் குர்ஆன், தக்பீர், அத்தஹிய்யாத், சலாம் கொடுத்தல் என்பவை அரபு மொழியில் அமைவது தவிர வேறு பிரதியீடு கிடையாது.
அறிஞர் அலி முஹிய்யுதீன் கர்ரா தாகீ:
துஆக்களைப் பொறுத்தவரையில் முதன்மையானதும், மிகச் சிறந்ததும் அல் குர்ஆனில் வரும் துஆக்களைத் தெரிவு செய்வதாகும். அது நபிமார்களது பிரார்த்தனைகளாகவோ நல்லடியார்களது பிரார்த்தனையாகவோ இருக்க முடியும். அல்லது அல்குர்ஆன் யாரோடும் சம்பந்தப்படுத்தாது தனியாகக் குறிப்பிடும் பிரார்த்தனையாகவும் இருக்க முடியும், ஸூரா பகராவின் இறுதியில் வரும் பிரார்த்தனை இதற்கு உதாரணமாகும்.
அடுத்தது ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் வரும் பிரார்த்தனைகளைத் தெரிவு செய்வது சிறந்ததாகும்.
பாவகாரியங்கள், இரத்த உறவை முறித்தல் என்பவையற்ற சிறந்த பிரார்த்தனையைப் பொறுத்த வரையில் தொழுகையிலோ, தொழுகையல்லாத இடங்களிலோ இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலமாக வராததாயினும் சொந்தமாகப் பிரார்த்திப்பது அனுமதிக்கப்பட்டது என்பது பெரும்பாலான அறிஞர்களது கருத்தாகும். ஏனெனில் அல்லாஹ் பிரார்த்திக்குமாறு பொதுவாகக் கட்டளையிட்டுள்ளான். மொழிகளைப் படைத்தவனும் அவனே. அவற்றையும் அவற்றின் நோக்கங்களையும் நன்கறிந்தவனும் அவனே.
கீழ்வரும் இறைவசனம் இக் கருத்தைக் காட்டுகிறது:
என்னிடம் நீங்கள் பிரார்த்தியுங்கள் உங்களுக்கு நான் பதில் சொல்கிறேன். (ஸூரா காஃபிர் 40 : 60)
இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கும் கீழ்வரும் ஹதீஸும் இதற்கு ஆதாரமாக அமைகிறது:
நாங்கள் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு தொழுகையில் இருந்தால் “அல்லாஹ்வுக்கு அவனது அடியார்களிடமிருந்து ஸலாம் உண்டாகட்டும். இன்னின்னாருக்கு ஸலாம் உண்டாகட்டும் எனச் சொல்லி வந்தோம். அப்போது இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்:
அல்லாஹ்வுக்கு ஸலாம் உண்டாகட்டும் என்று கூறாதீர்கள். ஏனெனில் அல்லாஹ்வே ஸலாம் ஆவான் (அதாவது இறை திருநாமங்களில் ஒன்று அது) ஆனால் நீங்கள் கீழ்வருமாறு கூறுங்கள்:
التحيات لِله والصلوات والطيبات السلام عليك ايها النبى ورحمة الله
وبركاته والسلام علينا وعلى عباد الله الصالحين.
இவ்வாறு நீங்கள் கூறினால் வானத்திலுள்ள அல்லது வானத்திற்கும் பூமிக்கும் இடையேயுள்ள அனைத்து அடியாரையும் அது அடையும்.
தொடர்ந்து கூறுங்கள்:
أشهد أن لا اله الا الله وأشهد أن محمدا عبده ورسوله
பின்னர் தனக்குத் திருப்பதியான துஆவைத் தெரிவு செய்து பிரார்த்தியுங்கள்.
(ஸஹீஹ் புகாரி 835, ஸஹீஹ் முஸ்லிம் 402, ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 1955)
இந்த ஆதாரபூர்வமான ஹதீஸ் தொழுபவர் அத்தஹிய்யாத் ஓதியதன் பின்னர் தனது மார்க்கம், உலகம், மறுமை இவற்றிக்கு நன்மை பயக்கும் தான் விரும்பிய துஆக்களைக் கேட்க முடியும் எனத் தெளிவாகக் காட்டுகிறது.
இது அறிஞர்கள் ஒரு தொகையினரது கருத்தாகும்.
ஷெய்க் அல் இஸ்லாம் இப்னு தைமியா கீழ்வருமாறு கூறுகிறார்:
இமாம் அஹ்மதும் இன்னும் சில அறிஞர்களும் துஆவைப் பொறுத்த வரையில் விரிந்த கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர். அதுவே சரியானதுமாகும். ஏனெனில் இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “தனக்குத் திருப்தியான துஆவை தெரிவு செய்து பிரார்த்திக்கட்டும்” என்று கூறினார்கள் என ஏற்கனவே குறிப்பிட்டோம். ஜனாஸா தொழுகையில் குறிப்பிட்டதொரு துஆவை தனது தோழர்களுக்கு இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரையறுக்கவில்லை. ஆனால் திக்ர்களை இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரையறுத்துத் தந்துள்ளார்கள். இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரையறுக்காது பொதுவாக துஆ விடயத்தில் விட்டுள்ள போது நாம் எப்படி வரையறுக்க முடியும். (பதாவா இப்னு தைமியா 22/477)
மேலே நாம் விளக்கியதற்கேற்ப இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து பெற்ற துஆக்களுக்கு அப்பாலும் சிறந்த பிரார்த்தனைகளை அமைத்துக் கொள்வது அனுமதிக்கப்பட்டதாகும். இக் கருத்தே மிகவும் சரியானதாகும்.
ஆனால் அரபு மொழியல்லாத பிற மொழிகளில் அரபு மொழி ஆற்றல் உள்ளவரும் கடமையான ஸுன்னத்தான தொழுகைகளில் பிரார்த்தனை புரிவது பற்றி அறிஞர்களுக்கு மத்தியில் கருத்துவேறுபாடுள்ளது. சிலர் அது ஹராம் என்றனர். வேறு சிலர் அது மக்ரூஹ் என்றனர். இன்னும் சிமர் அதனை அனுமதித்தனர்.
பலமான அபிப்பிராயம்:
பிரார்த்தனை வாஜிபான துஆக்களோடு இருப்பின் அரபு அல்லாத அடுத்த மொழிகளில் அதனைச் சொல்லல் அரபு மொழி ஆற்றல் உள்ளவருக்குக் கூடாததாகும். அவர் குறிப்பிட்ட அந்த வார்த்தைகளையே உச்சரிக்க வேண்டும்.
ஆனால் வாஜிபான துஆவில் அடங்காவிட்டால் உதாரணமாக ஸுஜுதில் வரும் இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலம் வந்த துஆக்கள், அல்லது வாஜிபான அத்தஹிய்யாத்தின் பின்னர் வரும் துஆக்கள் இவற்றை அரபு மொழியில் அப்படியே சொல்வதுதான் மிகச் சிறந்ததாகும். கடமையான தொழுகைகளில் இவற்றைப் பிற மொழியில் மொழி பெயர்த்துச் சொல்வது மக்ரூஹ் ஆகும்.
ஆனால் வாஜிபல்லாத துஆக்களை சுன்னத்தான தொழுகைகளில் உதாரணமாக கியாமுல் லைல் தொழுகையில் தனது மொழியில் ஓதுவது அனுமதிக்கப்பட்டதாகும். ஏனெனில் இதுவே அவருக்கு இலகுவாக இருக்கும். அத்தோடு உளத்தாக்கத்தையும், மன்றாட்டத்தோடு கேட்கும் நிலையையும், மிகுந்த பணிவுணர்வையும் கொடுக்கும்.
கடமையான துஆக்கள், இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து வந்த துஆக்கள் என்பவற்றை அரபுமொழியில் சொல்ல சக்தியற்றவர் அவற்றை மொழி பெயர்த்து ஓத முடியும். எனினும் அவற்றை வாசிக்கவும், விளங்கவும் முயற்சி செய்வது அவரது கடமையாகும். இமாம் இப்னு அப்துல் பர் கூறுகிறார்: ஸ “இயலாத வரைப் பொறுத்த வரையில் சரியான அபிப்பிராயப்படி இது அனுமதிக்கபட்டதாகும்.”
இமாம் அபூ யூசுஃப் ரஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் முஹம்மத் ரஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் ஷாபியி ரஹ்மதுல்லாஹி அலைஹி என்போரது அபிப்பிராயப்படியும் இமாம் அஹ்மத் அவர்களின் ஒரு அறிவிப்பின் படியும், மாலிகி மத்ஹபின் அபிப்பிராயப்படியும் கடமையான திக்ர்களை அரபு மொழியில் உச்சரிக்க முடியாதவர் மொழி பெயர்த்து ஓதுவது அனுமதிக்கபட்டதாகும்.
அரபிகள் அல்லாத சகோதரர்கள் ஹஜ்ஜிலும், உம்ராவிலும் தொழுகைகளிலும் துஆக்களை விளங்காமலே ஓதுவதை நாம் கேட்கிறோம். சில வேளை அவர்கள் அறியாமலே ஓதும் போது பல பெரிய தவறுகளையும் விடுகிறார்கள். அவர்கள் விளங்கும் அவர்களது மொழிகளிலேயே பிரார்த்தனைகளை அமைத்துக் கொள்வதே மிகவும் சிறந்ததாகும். ஏனெனில் துஆ என்பது வெறும் மொழி உச்சரிப்பன்று அது ஒரு மன்றாட்டம்.
குத்பாவைப் பொறுத்த வரையிலும் குத்பாவை நிகழ்த்துபவர் தமக்கு செவிதாழ்த்துபவர்கள் அரபிகளாயின் அரபி மொழியில் நிகழ்த்த வேண்டும். அரபு மொழி தெரியாதவர்களுக்கு மத்தியில் அல்லது அரபு மொழி தெரியாதவர்கள் அதிகமாக இருந்தால் அரபு மொழியில் குர்ஆன் வசனங்களையும், இரண்டு குத்பாக்களினதும் அடிப்படைப் பகுதியாக அமைபவற்றை மட்டும் அரபியில் கூறி விட்டு குத்பாவை தனது மக்களின் மொழியிலேயே அமைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் குத்பாவி்ன் நோக்கம் உபதேசம், வழிகாட்டல் என்பவையாகும். அங்கு குறிப்பிட்ட உபதேசச் சொற்கள் வணக்கமாகக் கொள்ளப் படுவதில்லை.
சுருக்கம் என்னவெனில்:
கடமையான சுன்னத்தான தொழுகைகளில் அரபி அல்லாத அடுத்த மொழிகளில் அரபு மொழி ஆற்றலற்றவர் பிரார்த்தனை புரிவது அனுமதிக்கப் பட்டதாகும். இது இமாம் அபூ யூசுஃப், முஹம்மத் என்போரதும் மாலிகி மத்ஹபில் சிலரதும், கருத்தாகும். அத்தோடு ஷாபியி மத்ஹபின் ஆதாரபூர்வக் கருத்துமாகும். ஹன்பலி மத்ஹபின் அபிப்பிராயங்களில் ஒன்றாகவும் இது காணப்படுகிறது.
அவர்கள் முன் வைத்த ஆதாரங்களில் ஒன்று கீழ்வரும் இறை வசனமாகும்:
உங்களால் முடியுமானளவு அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். (ஸூரா தகாபுன் 64 : 16)
தொழுகையில் வரும் வாஜிபான இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலமாக வந்த துஆக்களை அரபுமொழி தெரியாதவர் மொழி பெயர்ந்து ஓதுதல் கடமையாகும். சுன்னத்தானவற்றை மொழி பெயர்த்தல் ஓதுதல் சுன்னதாகும்.
இவற்றில் கடமையான பகுதியை படித்துக் கொள்வதும் அவரது கடமையாகும்.
அரபு மொழி ஆற்றலுள்ளவர், கடமையாகவும், ஷரத்தாகவும் உள்ளவற்றை அரபு மொழியிலேயே ஓத வேண்டும். அவற்றை அரபு அல்லாத பிறமொழி பெயர்த்து ஓதினால் தொழுகை நிறைவேறாது போகும்.
இஸ்லாமிய சட்டப் பகுதியில் இன்னொரு அபிப்பிராயமும் காணப்படுகிறது:
அரபு மொழி ஆற்றல் உள்ளவரும் அரபு மொழி அல்லாத ஏனைய மொழிகளில் பிரார்த்தனை செய்ய முடியும்.
அவர்களது ஆதாரங்களாவன:
அனைத்து மொழிகளும் அல்லாஹ்விடமிருந்து வந்தவையாகும். தூதர்கள் எல்லோரும் அந்தந்த சமூகத்தின் மொழியிலேயே அனுப்பப்பட்டார்கள்.
“நாம் அனுப்பிய எந்த தூதரையும் அவரது சமூகத்தின் மொழியிலேயே அனுப்பினோம். அச் சமூகத்தினருக்குத் தெளிவு படுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காக. (ஸூரா இப்றாஹீம் 14 : 4)
இது இமாம் அபூ ஹனீபாவின் கருத்தாகும். மாலிகி மத்ஹபிலும் ஷாபியி மத்ஹபிலும் ஹன்பலி மத்ஹபிலும் இப்படி ஒரு அபிப்பிராயம் உள்ளது.
ஷெய்க் அல் இஸ்லாம் இப்னு தைமியா கூறுகிறார்:
“பிரார்த்தனை அரபு மொழியிலும் அமையலாம். அரபு அல்லாத மொழியிலும் அமையலாம். அல்லாஹ் பிரார்த்திப்பவன் மொழியை சரியாக அமைத்துக் கொள்ளாவிட்டாலும் அவனது நாட்டத்தையும் நோக்கத்தையும் அறிகிறான். தேவைகள் வித்தியாசப்பட்டாலும், மொழிகள் வேறுபட்டாலும் குரல்களின் சப்தத்தை அல்லாஹ் அறிகிறான்.”
சட்ட அபிப்பிராயங்களை உறுதி செய்து கொள்ள பார்க்க:
அல் மன் நூர் பி அல் கவாயித் 1/282,283,
ஹாஷியா இப்னு ஆபிதீன் 1/350,
கஷ்ஷாப் அல்கினாஉ 2/420,421,
அல் ஷரஹ் அல் கபீர் ஹாஷியா தஸூகி 1/233,
ஃபதாவா இப்னு தைமியா 22/488,489,
அல் மஜ்மூஃ – இமாம் நவவி 3/299,300
source: https://www.usthazmansoor.com/duas-in-prayer-fatwa/