தூது வீரர்கள்
நூருத்தீன்
“உங்கள் தரப்பிலிருந்து ஒருவரை அனுப்புங்கள். நாம் அவரிடம் பேச வேண்டும்!” பாரசீகத் தளபதியிடமிருந்து தகவல் வந்தது.
உமர் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கலீஃபாவாக ஆட்சி புரிந்து கொண்டிருந்தபோது,
பாரசீகர்களுடன் கடுமையான போர்கள் பல நிகழ்ந்தன. அவற்றுள் வெகு முக்கியமான ஒன்று காதிஸிய்யாப் போர். பாரசீகர்களின் படைத் தளபதி ருஸ்தம் காதிஸிய்யாவுக்கு வந்திருந்தான். கூடவே முப்பத்து மூன்று யானைகள் கொண்ட பிரம்மாண்ட படை. முஸ்லிம்களின் படை பலத்துடன் ஒப்பிடும்போது அது பன்மடங்கு பெரிது.
இருப்பினும், முதலில் பேச்சுவார்த்தை நடத்திப் பார்க்கலாம் என்று தகவல் அனுப்பியிருந்தான். ஸஅத் இப்னு அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை முஸ்லிம்களின் படைக்குத் தளபதியாக நியமித்திருந்தார் உமர் ரளியல்லாஹு அன்ஹு. ருஸ்தமின் தகவல் வந்ததும் ஸஅத் தம் படையிலிருந்து ராபீஇ இப்னு ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு என்பவரைத் தேர்ந்தெடுத்து, “போய் பேசிவிட்டு வாருங்கள்” என்று அனுப்பி வைத்தார்.
பாரசீகர்களின் படை மட்டும் பிரம்மாண்டமானதன்று. ஆடை, அணிகலன், ஆசனங்கள் என்று அவர்களிடம் அமைந்திருந்த அனைத்துமே ஆடம்பரம், படோடபம். ருஸ்தமின் சிம்மாசனம் தங்கம். கம்பளம், மெத்தை, தலையணை போன்றவை நெய்யப்பட்ட நூலில் இழையோடியதும் தங்கம். விளக்குமாறுக்கும் பட்டுக் குஞ்சம் இருந்திருக்கலாம். வரலாற்றுக் குறிப்புகளில் அத்தகவல் இல்லை.
ருஸ்தமின் பளபளப்பான அந்த அவையில் மிக எளிய உடையில் வறுமையான ஒரு வழிப்போக்கனைப்போல் வந்து நுழைந்தார் ராபீஇ இப்னு ஆமிர். அவரிடம் ஒரு வாள். அந்த வாளாயுதத்திற்கு துணி உறை. அத்துணியுடன் சேர்த்துக் கட்டப்பட்ட ஓர் ஈட்டி. அவரது உடைமை அவ்வளவே.
தமது குதிரையிலிருந்து இறங்கி அந்த ஆடம்பர அவையைப் பார்த்த ராபீஇ, அங்கிருந்த தலையணை இரண்டைக் கிழித்தார். அவற்றிலிருந்த துணிகளைக்கொண்டு தமது குதிரையை அங்கிருந்த கம்பத்தில் கட்டினார். அக்குதிரையின் மீதிருந்த சேணைத் துணியை எடுத்து அதை அங்கிபோல் தம்மீது சுற்றிக்கொண்டார். அந்த ராஜப் பேரவையில் அப்படியோர் இலட்சணத்துடனும் அலட்சியத்துடனும் வந்து நின்றார்.
ருஸ்தமின் சேவகர்கள் அவரிடம் இருந்த அந்த இரண்டே இரண்டு ஆயுதத்தையும் கீழிறக்கி வைக்கும்படி சைகை புரிந்தனர். அதற்கு அவர், “நானாக விருப்பப்பட்டு உங்களைச் சந்திக்க வந்திருந்தால் உங்களுடைய நெறிமுறைகளைக் கேட்டிருப்பேன். ஆனால் வரச்சொன்னது நீங்கள். அதனால்தான் வந்திருக்கிறேன்” என்று தம் ஆயுதத்தைக் களைய மறுத்துவிட்டார்.
அது மட்டுமின்றி, தமது ஈட்டியின்மீது சாய்ந்தபடி மிக மெதுவாக அந்தக் கம்பளத்தின்மீது அவர் நடக்க, ஈட்டியின் கூர்முனை கம்பளத்தைக் கிழித்துக்கொண்டே சென்றது. ருஸ்தமை நெருங்கியதும், “நாங்கள் உங்களது அறைகலன்களில் அமர்வதில்லை” என்று சொல்லிவிட்டு, தரையில் அமர்ந்து விட்டார். அங்கிருந்த கம்பளத்தில் செருகப்பட்டு நிமிர்ந்து நின்றது அவரது ஈட்டி. அனைத்தையும் வியந்து வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தது ருஸ்தமின் பேரவை.
“உங்களை எங்கள் நாட்டிற்கு வரவழைத்தது எது?” என்று கேட்டான் ருஸ்தம்.
“அல்லாஹ் எங்களை இங்கு அழைத்து வந்தான். அவன் நாடியவர்களிடம் நாங்கள் அழைப்பு விடுக்க அவன் அழைத்து வந்தான். பிறரை வணங்குவதை விட்டுவிட்டு அவனை மட்டும் வணங்க, உலகாதாய ஆசைகளைக் களைந்துவிட்டு எளிமையைக் கடைப்பிடிக்க, பிற மதங்கள் இழைக்கும் அநீதியை விட்டு நீங்கி இஸ்லாமிய நீதியைப் பின்பற்ற உங்களை அழைக்கும்படி எங்களை இங்கு அழைத்து வந்தான். அவனுடைய மார்க்கத்தை அறிவிக்க அவன் எங்களுக்கு அவனுடைய தூதரை அனுப்பினான். எவரெல்லாம் அம்மார்க்கத்தை ஏற்றுக்கொள்கிறாரோ, அவரை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். அவருடைய நிலங்கள் அவருடையவை. ஆனால் எவரெல்லாம் மறுக்கிறாரோ அவரை வெற்றிகொள்ளும் வரை அல்லது நாங்கள் சொர்க்கத்தை எட்டும் வரை போரிடுவோம்”
அத்தகு அவையில் நின்றுகொண்டு இத்தகு பேச்சைப் பேச, எத்தகு துணிச்சல் வேண்டும்?
“நீங்கள் சொன்னதை நாங்கள் கேட்டுக்கொண்டோம், அதைப் பற்றி சிந்திக்க எங்களுக்கு சிறிது அவகாசம் அளிக்க முடியுமா?” என்று கேட்டான் ருஸ்தம்.
“அளிப்போம். எதிரிகளுக்கு மூன்று நாள்களுக்கு மேல் அவகாசம் அளிக்கக்கூடாது என்பது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எங்களுக்குக் கற்றுத் தந்துள்ள பாடம். எனவே, மூன்று நாள்கள் உங்களுக்கு அவகாசம். சிந்தித்து மூன்றில் ஒரு முடிவுக்கு வாருங்கள். ஒன்று நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்; உங்கள் நிலங்களும் ஆட்சியும் உங்களுடையவை. அல்லது ஜிஸ்யா வரி அளியுங்கள்; உங்கள் மதம் உங்களுக்கு; உங்களுக்கான தேவைகளும் உதவிகளும் எங்கள் கடமை; தேவைக்கு ஏற்ப ஓடோடி வருவோம். அல்லது நான்காம் நாள் போருக்கு வாருங்கள்; நீங்கள் விரும்பினால் அதற்குமுன்னரும் வரலாம். இவையெல்லாம் என் தோழர்கள் சார்பாக நான் உங்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகளாகும்” என்று பதில் அளித்தார் ராபீஇ.
“நீர்தாம் அவர்களின் தலைவரோ?” என்று அடுத்து கேட்டான் ருஸ்தம்.
“இல்லை. முஸ்லிம்களாகிய நாங்கள் ஓர் உடலின் அங்கங்களைப் போன்றவர்கள். எங்களுள் உயர்ந்த அதிகாரத்தில் உள்ளவர் ஆகக் கீழ்மட்டத்தில் உள்ளவர் அளிக்கும் வாக்குறுதிக்குக் கட்டுப்பட்டவராவார்” அத்துடன் தம் பேச்சு வார்த்தையை முடித்துக் கொண்டு திரும்பினார் ராபீஇ.
தம் சகாக்களுடன் ருஸ்தம் ஆலோசனை புரிந்தான். “இப்பொழுது இந்த மனிதர் உரையாற்றியதைப் போல் இதற்குமுன் வேறு எங்காவது கேட்டிருக்கிறீர்களா?”
ஆத்திரத்தில் இருந்த அவர்கள் ராபீஇவைத் தரம் தாழ விமர்சிச்க முனைந்தனர். அதைத் தடுத்து, “உங்களுக்குக் கேடு விளைய. அவருடைய ஞானம், நாவன்மை, நடத்தை ஆகியனவற்றை நான் நினைத்துப் பார்க்கிறேன். அரபியர்கள் உடைகளைப் பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் வம்சாவளியின்மீது பெரும் அக்கறை கொள்கின்றனர்” என்றான் ருஸ்தம்.
அடுத்த நாள். “அந்த மனிதரை மீண்டும் அனுப்பி வையுங்கள்” என்று ஸஅத் பின் அபீவக்காஸுக்குத் தகவல் அனுப்பினான் ருஸ்தம். ஆனால் இம்முறை ஹுதைஃபா இப்னு மிஹ்ஸான் அல்-ஃகல்ஃபானி என்பவரை அனுப்பி வைத்தார் ஸஅத். “நேற்று வந்தவர் இன்று வரவில்லையே ஏன்?” என்று வினவினான் ருஸ்தம். “எல்லா காலகட்டத்திலும் எங்களுடைய தளபதி எங்களைச் சமமாகவே நடத்துவார். அதன்படி இன்று என்னுடைய முறை” என்று பதில் அளித்துவிட்டு, முந்தைய நாள் ராபீஇ கூறியதையே வார்த்தை மாறாமல் தாமும் கூறினார் ஹுதைஃபா.
“எங்களுக்கு இன்னும் எத்தனை நாள் அவகாசம் உள்ளது?”
“நேற்றிலிருந்து மூன்று நாள்கள்”
மூன்றாம் நாள். ஒருவரை அனுப்புங்கள் என்று மீண்டும் தகவல் அனுப்பினான் ருஸ்தம். இம்முறை முகீராஹ் இப்னு ஷுபாஹ்வை அனுப்பி வைத்தார் ஸஅத். அவனது அவையை அடைந்த முகீராஹ் நேராகச் சென்று ருஸ்தமின் சிம்மாசனத்தில் அவனுக்குப் பக்கத்தில் சமமாக அமர்ந்து கொண்டார். பதைத்து பதறிப்போன அவனுடைய சேவகர்கள் ஓடிச் சென்று அவரை இழுத்து நகர்த்தினர்.
அவர்களிடம், “நீங்கள் புத்திசாலிகள் என்று நாங்கள் நிறைய கேள்விப்படுவதுண்டு. ஆனால் உங்களைவிட மேலான மூடர்களை நான் பார்த்ததில்லை. அராபியர்களாகிய நாங்கள் எங்களுக்குள் பாரபட்சம் பார்ப்பதில்லை. நீங்களும் எங்களைப்போல் ஒருவரையொருவர் சமமாகக் கருதுவீர்கள் என்று நினைத்திருந்தோம். உங்களுள் ஒருவர் மற்றவர்களுக்கு எசமானனைப்போல் நடந்துகொள்கிறீர்கள். இவ்விதம் நீங்கள் தொடர முடியாது. ஏனெனில் இத்தகைய மனோபவாத்தில் அமையும் ராஜாங்கம் நீடிக்காது”
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்களுள் ஒருவர், “அல்லாஹ்வின்மீது ஆணையாக. அந்த அராபியர் உண்மையே உரைக்கின்றார்” என்று மகிழ்ச்சியில் குதித்தார். குடியானவர்களின் தலைவரோ, “இத்தகு கருத்தைக் கேட்பதற்கே நமது அடிமைகள் காத்துக் கிடந்தனர். நம்மைக் கீழ்படிந்தவர்களாகவே வைத்திருந்த முந்தைய அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாபம் இழிவதாக” என்றார்.
தன் அவையில் உள்ள மக்கள் அவர்களுக்கு ஆதரவாகத் திரும்புவதைக் கண்டு கொதிப்படைந்த ருஸ்தம், பாரசீகர்களின் புகழ் பாடி, அராபியர்களைக் கண்டபடி இகழ்ந்து, பரிதாபகரமான, கடினமான வாழ்க்கையில் அந்த அராபியர்கள் உழன்றுக் கிடந்ததை ஏளனமாகக் குறிப்பிட்டு ஏசினான்.
அனைத்தையும் கேட்டுக்கொண்ட முகீராஹ், “நீ குறிப்பிட்டதெல்லாம் உண்மையே. நாங்கள் பிளவுபட்டுக் கிடந்தோம். வாழ்க்கை பரிதாபகரமானதாய்த்தான் இருந்தது. மறுக்கவில்லை. இவ்வுலகில் உள்ளவை என்றென்றும் நீடித்திருப்பதில்லை. துன்பத்தையடுத்து இன்பம் தொடரும். உனக்கு அளிக்கப்பட்டிருக்கும் வளங்களுக்கு நீ அல்லாஹ்வுக்கு எவ்வளவு நன்றி செலுத்தினாலும் ஒப்பீட்டளவில் அது மிகக் குறைவே. என்பதிருக்க, அவனை ஏற்றுக்கொள்ளவோ நன்றி செலுத்தவோ மறுக்கிறாயே அந்த உன் நிலை உன்னைக் கீழிறக்கும்” என்று பதில் அளித்தார்.
அடுத்து அல்லாஹ்வைப் பற்றியும் இறுதித் தூதரைப் பற்றியும் முன் இருநாள்களும் முஸ்லிம்கள் சார்பாய் அவனிடம் வந்த தூதர்கள் கூறியதையே இவரும் கூறினார். அவர்கள் அளித்த அதே அவகாசத்தையும் வாய்ப்புகளையும் மீண்டும் அறிவித்தார்.
அவர் விடைபெற்றபின் தம் சகாக்களிடம் பேசினான் ருஸ்தம். “உங்களுடன் ஒப்பிடும்போது அவர்களெல்லாம் யார்? முன்னர் இருவர் வந்தனர். உங்கள் அனைவரையும் தைரியமாக எதிர்கொண்டனர். இவரும் அவர்களைப் போன்றே வந்தார். அவர்களைப் போன்றே நடந்துகொண்டார். அவர்கள் அனைவரும் ஒரே வாழ்க்கை முறையைப் பின்பற்றுகின்றனர். ஒன்றேபோல் நடந்துகொள்கின்றனர்.
அவர்கள் நேர்மையானவர்களோ பொய்யர்களோ – எப்படிப்பட்டவர்களாய் இருப்பினும் மெய்யான ஆண்மையை அவர்களிடம் காண்கிறேன். இறைவன்மீது ஆணையாக, அவர்களுடைய ஒழுக்கமும் வாக்குச் சுத்தமும் உயர்நிலையை எட்டிவிட்டன. சற்றும் மாற்றமில்லாமல் அவர்கள் அனைவரிடமும் ஒரேவிதமான செயல்பாடுகள். அவர்களைப்போல் நினைத்ததைச் சாதிப்பவர் எவரும் வேறு இனி இலர். அவர்கள் நேர்மையானவர்களாக இருப்பின் அவர்களை யாரும் எதிர்க்கவே முடியாது”
அதன் பின்னர் ருஸ்தம் தோற்றதும் கொல்லப்பட்டதும் முஸ்லிம்கள் காதிஸிய்யா போரில் பெற்ற பெருவெற்றியும் மகத்தானதொரு வரலாறு.
-நூருத்தீன்
புதிய விடியல் மே 16-31, 2020 இதழில் வெளியான கட்டுரை
http://darulislamfamily.com/family/dan-t/dan-articles-t/1204-muslim-delegation.html