ஷிர்க் (ஓரிறைவனைவிட்டு வேற்றுத் தெய்வங்களுக்கு அடிபணிதல்) (1)
Syed Abdur Rahman Umari
o இஸ்லாமின் அடிப்படைகள்
o ஓரிறைக் கொள்கையே மனிதனின் தேவை
o ஷிர்க், குஃப்ர் என்பதன் விளக்கம்
o ஷிர்க்கை பற்றிய தவறான விளக்கம்
o ஷிர்க்கிற்கான காரணம்
o ஷிர்க் மனிதர்களிடத்தில் எவ்வாறு தோன்றுகிறது?
o ஷிர்க்கின் துவக்கம்
o சிலைகள் பிறந்த கதை!
o இஸ்லாமும் ஜாஹிலிய்யத்தும்
o சிலைகளின் நவீன வடிவங்கள்
o முஸ்லிம்களுடைய தவறான புரிதல்
o “ஷிர்க்” என்றால் என்ன?
o முஸ்லிம்களை வழிகெடுப்பது எப்படி?
o நவீன சிலைகள்
o வழிபாடு என்றால் என்ன?
o ஷிர்க்கைப் பற்றிய தவறான கண்ணோட்டம்
o ஷிர்க் என்பது அல்லாஹ்வுக்கு எதிரான சதி
o ஷிர்க் என்பதே அறியாமை
o ஷிர்க் மன்னிக்க முடியாத பெருங்குற்றம்
o இஸ்லாமோடு தொடர்பில்லாத முஸ்லிம்களின் செயல்கள்
o ஷிர்க் ஃபிஸ் ஸாத்
o ஷிர்க் ஃபில் சிஃபாத்
o ஷிர்க் ஃபில் லவாஜிம்
ஷிர்க் (ஓரிறைவனைவிட்டு வேற்றுத் தெய்வங்களுக்கு அடிபணிதல்)
Syed Abdur Rahman Umari
ஷிர்க் என்பதை தமிழில் இணைவைத்தல் என மொழிபெயர்த்து வருகிறோம். இணை வைப்பு என்பதன் விளக்கத்தை நாம் புரிந்து கொள்வது நல்லது!
இறைவன் அல்லாத இன்னொன்றை, இன்னொருவரை இறைவனாகக் கருதுவது; இறைவனுக்கு மட்டுமே உரித்தான தன்மைகளும், பண்புகளும் இறைவனல்லாத இன்னொன்றிடம், இன்னொருவரிடம் உள்ளதாக நினைப்பது. சுருக்கமாக, இறைவனுக்கு இணையாக இன்னொன்றை, இன்னொருவரைக் கருதுவது. இதுவே இணைவைப்பு ஆகும்.
ஷிர்க் என்ற அரபிப்பதத்துக்கு பங்கிடுதல் எனப்பொருள். அதன்படி இணைவைப்பு என்றால் இறைமையை — இறைப்பண்புகளைப் பங்கிடுதல் என பொருள்படும்.
அனைத்து மனிதர்களும் முஸ்லிம்களே! மனிதனைப் படைக்கவேண்டும் என இறைவன் தீர்மானித்ததற்குப் பிறகு ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை முதல் மனிதராகப் படைத்தான். சிறிது காலம் சென்ற பிறகு அவருடைய துணையை உண்டாக்கி அவர்களை சொர்க்கத்தில் குடிவைத்தான். மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கம் இறைவனை வழிபட வேண்டும். இறைவனுக்கு இபாதத் செய்ய வேண்டும் என்பதே!
“என்னை வணங்குவதற்காகவே நான் ஜின்களையும் மனிதர் களையும் படைத்தேன்’ என வான்மறை குர்ஆனில் தெளிவாக இதைக் கூறியிருக்கிறான்.
மனிதன் இறைவனை வணங்க வேண்டுமென்றால் அதற்கு என்று ஒருதளம் வேண்டும். இறைவன் அந்த தளத்தை உருவாக்கினான். உலகம் என்று அதை அழைக்கிறோம். உண்மையில் உலகம் என்பது வழிபாட்டிற்கான ஒரு தளம். இறைவன் ஆதமையும் அவருடைய துணையையும் வழிபாட்டிற்காக இந்த உலகத்திற்கு அனுப்பிவைத்தான். அவர்கள் இந்த உலகத்திற்கு வந்தார்கள். உலகத்தில் சாம்பாதிப்பதோ, வசதியாக வாழ்வதோ அவர்களது குறிக்கோள் கிடையாது. அவர்கள் உலகத்தில் வாழ்ந்தவாறு, தொடர்ந்து இறைவனை வணங்கி வந்தார்கள்.
அவர்களுக்குப் பிறந்த அவர்களது குழந்தைகள் பிள்ளைகள், சந்ததிகள் என்று தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து இறைவனை வழிபட்டார்கள். இப்படியாக ஆரம்பகட்டத்தில் உலகத்தில் வாழ்ந்துவந்த எல்லா மக்களும் முஸ்லிம்களாகவே வாழ்ந்தார்கள். தங்களைப் படைத்த இறைவனைத் தெளிவாக தெரிந்த நிலையில், தூய வடிவில் அந்த இறைவனை மட்டுமே வணங்கி வந்தார்கள். ஆக, ஆரம்பகால உலகில் வாழ்ந்த எல்லா மனிதர்களும் பரிபூரணமான முஸ்லிம்களாகவே திகழ்ந்தார்கள்.
இஸ்லாமின் அடிப்படைகள்
இஸ்லாம் மற்றும் ஈமானின் அடிப்படைகள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளவேண்டும். வணக்கத்திற்கும் வழிபாட்டிற்கும் உரிமையாளன் என்ற தகுதி அல்லாஹுத் தஆலாவுக்கு மட்டுமே உள்ளது என்பதை மனப்பூர்வமாக நம்ப மனிதன் ஏற்றுக்கொள்ளவேண்டும். அவனது நாடி நரம்புகளில் எல்லாம் இந்த கோட்பாடு ஊடுருவிவிடவேண்டும்.
உலகத்தில் உள்ள அனைத்துப் பொருட்களையும் இந்த பிரபஞ்சத்தையும், தனித்த அல்லாஹ் ஒருவன் மட்டுமே படைத்திருக்கின்றான் என்ற உணர்வை, வாழ்க்கையின் எல்லாக் காலகட்டங்களிலும் எல்லா பகுதிகளிலும் அவன் பெற்றிருக்கவேண்டும். உலகத்தை படைப்பதிலோ அதனை நிர்வகிப்பதிலோ அவனுக்கு யாருடைய துணையும் தேவையில்லை! யாருடைய பங்களிப்பும் தேவை யில்லாமல் அவன் தனித்து ஒரே ஒருவனாக இவற்றைப்படைத்து இயக்கிக் கொண்டிருக்கின்றான்.
படைப்பதிலும் இயக்குவதிலும் யாருடைய துணையும் அவனுக்கு ஒருபோதும் தேவைப்பட்டதில்லை. அனைத்துப் பொருட்களையும் அவனே படைத்தான். அவ்வனைத்துப் பொருட்களுக்கும் கண்டிப்பாக அழிவு காத்திருக்கின்றது.
அழியாத பரம்பெருளாக அவன் ஒருவன் மட்டும்தான் இருக்கிறான் நிரந்தரமாக இருப்பான் நீடித்து இருப்பான் அவனை யாரும் படைத்ததில்லை. அவனுக்கு மகனோ, மகளோ யாரும் கிடையாது. அவன் யாருக்கும் தந்தையோ, தனயனோ இல்லை. அவனுக்கு மனைவியோ, துணையோ இல்லை. அவனுக்கு வேறு உறவினர்களோ, உற்றார்களோ, சொந்தக்காரர்களோ கிடையாது. அவன் எந்தவடிவத்திலும் அவதாரம் எடுப்ப தில்லை. யார்மீதும் வந்து இறங்கி அருள்பாலிப்பதில்லை, மனிதனின் வடிவத்தில் அல்லது வேறுவேறு படைப்புகளின் வடிவத்தில் தோற்றம் எடுப்பதில்லை.
அவன் எந்தத் திசை ஒன்றிலும் நிலைத்திருக்கவில்லை. தனது அடியார்கள் அனைவரையும் அவர்களின் அனைத்துப் பொருட்களையும் ஒவ்வொருவரையும், அவர்களின் ஒவ்வொரு செயலையும் அவன் கண்காணித்துக் கொண்டிருக்கிறான். அனைத்துப் படைப்புகளையும் அடியார்களையும் ஒரே நேரத்தில் பார்க்கும் சக்தி படைத்திருக்கிறான். பார்ப்பது மட்டும் கிடையாது அவர்களது நிலையையும், செயல்களையும் உற்று நோக்கி அறிகிறான். இன்னும் சொல்லப்போனால் தங்களது செயல்களைப்பற்றி அவர்களுக்குத் தெரிந்ததைவிட அதிகமாக அல்லாஹ்வுக்கு தெரிந்திருக்கின்றது.
தனது உள்ளத்தில் ஒரு மனிதன் நினைப்பதைக்கூட அல்லாஹ் அறிகிறான். என்ன நினைக்கப்போகிறான், எதை செயல் படுத்தப்போகிறான் என்பதையும்கூட அவன் அறிகின்றான். தன்னிடத்தில் வேண்டுகோள் விடுக்கின்ற, முறையிடுகின்ற மனிதனின் தேவைகளையும், அவனது நாட்டங்களையும் அவன் அலசிப்பார்க்கிறான் அளவிடுகிறான். அவன் கேட்பது அந்த மனிதனுக்கு உண்மையிலேயே நலம் பயப்பதாக இருந்தால் அவற்றை, அதை அவனுக்கு அருளுகிறான். அந்த இறைவனிடத்தில் கேட்பதற்கோ, முறையிடுவதற்கோ யாருடைய சிபாரிசோ, பரிந்துரையோ, யாருடைய இடைத்தொடர்போ தேவை இல்லை. அந்த இறைவனின் ஒவ்வொரு செயலும், விவேகமானதாக, நுணுக்கம் நிறைந்ததாக, நன்மை பயப்பதாகவே இருக்கின்றது.
எல்லா வகையான சக்தியையும் ஆற்றல்களையும் அவன் பெற்றிருக்கிறான். அவனைப்போல யாருமே கிடையாது. அவன் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. யாருடைய கட்டளைக்கும் அவன் கீழ்ப்படியவேண்டிய அவசியமில்லை. அவனது எந்த ஓர் ஆணையும் எந்த ஒரு கட்டளையும் நிராகரிக்கப்படவோமறுக்கப்படவோ மாட்டாது.
அவனது கட்டளைகளை ஆணையை எதிர்த்து சவால் விடக்கூடிய மனத்துணிவும், தைரியமும் யாருக்கும் கிடையாது. அவன் நீதிமானாக, நியாயத்தை விரும்புவனாக இருக்கிறான். ஒரு முஃஷ்ரிக், அல்லது காஃபிருக்குக் கூட அவன் கடுகு அளவு தீமை செய்வது கிடையாது.
எல்லோருடைய வாழ்க்கையும், மரணமும் அவனது கைப்பிடிக்குள்ளேயே இருக்கின்றன. யார் யார் எப்போது சாவார்கள், யாருக்கு எப்போது மரணம் வரும், அதற்கு என்று எந்த நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதை அவன் அறிந்து வைத்திருக்கிறான். ஒரு வினாடி நேரம் கூட அந்த குறிப்பட்ட கால நிர்ணத்தை விட முந்தியோ, பிந்தியோ நிகழ்வது கிடையாது. அனைத்துப் பொருட்களுக்கும், உயிரினங்களுக்கும் உணவு வழங்கக் கூடியவன் அவனே. மனிதர்கள் கூப்பிடுவதற்கும், அழைப்பதற்கும், தலைகுனிந்து நிற்பதற்கும், நன்றி கூறுவதற்கும், நேர்ச்சைகளை நேர்ந்து கொள்வதற்கும், நம்பிக்கையோடு எதிர்பார்ப்பதற்கும், உள்ளச்சத்தோடு பயந்து நடுங்குவதற்கும் தகுதிவாய்ந்த ஒரே ஒருவனாக அந்த இறைவன் மட்டுமே இருக்கிறான்.
வழிபாடு, வணக்கம் என்று என்னென்ன அம்சங்கள் இருக்கின்றனவோ அவை அனைத்திற்கும் சொந்தக்காரனாக, தகுதியுடையவனாக அவனே இருக்கிறான். இந்த உலகம் முழுவதிலும் அவனது ஆட்சியே வியாபித்து இருக்கின்றது. இறைவனைப்பற்றிய அடிப்படைப் பேருண்மைகளை முழுமையாக ஏற்று நம்பி கடைப்பிடிப்பது தான் இஸ்லாம் மற்றும் ஈமானின் அடிப்படையாக விளங்குகின்றது.
மேற்கூறப்பட்ட எல்லா தன்மைகளும், எல்லா சிறப்பம்சங்களும் அந்த ஒரே இறைவனிடத்தில் மட்டுமே தான் காணப்படுகின்றன. இவ்வனைத்து பண்புகளிலும், இவ்வனைத்து தன்மைகளிலும் ஏதேனும் ஒரு சிறிய பகுதியில் ஒரு சிறியதோர் அம்சம்கூட இறைவன் அல்லாத வேறு எந்த ஒரு பொருளுக்கும் சொந்தமாக இல்லை. அனைத்து சிறப்புகளுக்கும் அவன் ஒருவனே சொந்தக்காரன். அனைத்து வகையான குறைபாடுகளை விட்டும் அவன் தூய்மையானவன்.
ஓரிறைக் கொள்கையே மனிதனின் தேவை
ஒரே ஒரு அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த முழுஉலகத்தையும் படைத்தவனாக, பரிபாலிப்பவனாக, இந்த முழுஉலகத்திற்கும் அதிபதியாக உரிமையாளனாக அவனை மட்டுமே ஏற்று ஈமான் கொள்ளவேண்டும். இதனையே நாம் தவ்ஹீத் ஓரிறைக்கொள்கை என்கிறோம். இந்தத் தவ்ஹீத் ஓரிறைக் கொள்கை மனிதனுக்கு மிகவும் தேவையானது. அவனது இயல்பிலேயே, அவனது அறிவம்சத்திலேயே, அவனது மரபிலேயே இது பொதிந்து வைக்கப்பட்டிருக்கின்றது.
மனிதன் தனது தேவையை நிறைவேற்றுவதற்கு பிறரைச் சார்ந்தே இருக்கிறான். அவனது தேவைகளும் அவனது நாட்டங்களும் கணக்கற்றவை. உலகத்தில் அவனுக்கு ஆயிரக்கணக்கான எதிரிகள் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது அவன், யாரை சார்ந்து இருக்க வேண்டும்? யாருடைய நிழலில் துணை தேட வேண்டும் என்பதை அவன் யோசிக்க வேண்டும். தன்னைவிட ஆற்றலும், வலிமையும், வசதியும், வாய்ப்பும் இருந்தாலும் இவ்வனைத்தையும் குறுகிய அளவிலேயே பெற்றிருக்கக்கூடிய ஒரு பொருளை சார்ந்திருப்பதா? அல்லது எல்லாவகையிலும் அவனது பாதுகாப்பற்கு உத்திரவாதம் அளிக்கின்ற அவனது எண்ணற்ற தேவைகளை முழுமையாக நிறைவேற்றித்தருகின்ற இந்த முழு உலகத்தையும் பிரபஞ்சத்தையும் படைத்து ஆட்டிப் படைக்கின்ற, தனது வலிமையின் கீழ் அனைத்துப் பொருள்களையும் வளைத்து வைத்திருக்கின்ற ஒரு பரம்பொருளின் நிழலில் அவன் பாதுகாப்பு தேடுவதா? என்று அவன் யோசித்துப் பார்க்க வேண்டும்.
மனிதன் யாரை நாடி நிற்கிறானோ அவன், தனக்கு கீழுள்ளவர்கள்மீது பாசமுள்ள தாயாக அன்பைப் பொழியவேண்டும். பாதுகாப்பையும் கவனிப்பையும் நல்கவேண்டும். பிரபஞ்சம் எங்கும் தேடிப்பார்த்தாலும் இத்தகைய ஒரு தன்மை அல்லாஹ்வைத் தவிர வேறுயாருக்கும் கிடையாது என்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால், கெடுவாய்ப்பாக மனிதனின் பார்வை இவ்விஷயத்தில் குளறுபடி செய்துவிடுகின்றது. தன்னைப் போலவே இருக்கின்ற கட்டாயத்திற்கும் நிர்ப்பந்தத்திற்கும் உட்படுகின்ற, ஏராளமான குறைகளையும் குற்றங்களையும் தனக்குள் கொண்டிருக்கின்ற சாதாரண பொருட்களையே அவன் தனது இறைவனாக ஆக்கிக் கொண்டிருக்கிறான்.
ஷிர்க், குஃப்ர் என்பதன் விளக்கம்
தவ்ஹீத் என்றால் என்ன? இஸ்லாம், ஈமான் என்றால் என்ன? அவற்றின் அடிப்படைகள் எவை எவை என்பதைப் பற்றி நாம் நன்றாக விளங்கிக் கொண்டு விட்டால் ஷிர்க் என்றால் என்ன? குஃப்ர் என்றால் என்ன? என்பதைப் பற்றிய விளக்கமும் நமக்கு நன்றாக கிடைத்து விடும்.
ஓரிறைக் கொள்கைக்கும் இறைநம்பிக்கைக்கும் எந்தெந்த விஷயங்கள் எதிராக இருக்கின்றனவோ அவையனைத்தும் ஷிர்க் குஃப்ர் என்றழைக்கப்படும். நீரும், நெருப்பும் எப்படி ஒன்றாக சேர்ந்து இருக்க முடியாதோ அதைப்போல ஈமானும் ஷிர்க்கும், தவ்ஹீதும் குஃப்ரும் ஒன்றாக ஒருசேர இருக்கவே முடியாது.
அல்லாஹுத் தஆலாவின் பண்புகள், தன்மைகள், அவனுக்கென்றே இருக்கின்ற அதிகாரங்கள், சிறப்பம்சங்கள் போன்றவற்றில் வேறு யாரேனும் ஒருவருக்கோ, ஒன்றுக்கோ பங்கு இருக்கும் என்று யாரேனும் நினைத்தால் அது ஷிர்க் ஆகிவிடுகின்றது. அல்லது இறைவன் தன்னால் படைக்கப்பட்ட படைப்பு ஒன்றின்மீது இறங்குகிறான் இறங்கி அருளுகிறான் என்று நம்பினாலோ, அல்லது தான் படைத்த படைப்பு ஒன்றின் வடிவத்தில் அவதாரம் எடுக்கிறான் என்பதை ஏற்றுக் கொண்டாலோ, அல்லது இந்த உலகத்தை உலகப்பொருட்களை படைப்பதிலும், அவற்றை நிர்வகிப்பதிலும் அவனுக்கு யாரேனும் துணை செய்கிறார்கள். யாருடைய துணையாவது அவனுக்கு தேவைப்படுகின்றது. யாரேனும் ஒருவர் மறைவானவற்றை எல்லாம் அறிந்திருக்கிறார். துயரங்களின் போதும் துன்பங்களின் போதும் யாரேனும் ஒருவர் உதவி செய்வார் உதவிக்கரம் நீட்டுவார் என்ற நம்பினாலோ, மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் யாரேனும் ஒருவர் அளிக்க முடியும் என்ற நம்பினாலோ, வாழ்நாளை அதிகரிக்கக் கூடிய சக்தி, மரணத்தை தள்ளிப்போடுகின்ற திறமை யாருக்கேனும் இருக்கின்றது என்று நம்பினாலோ அல்லது தனது படைப்பினங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு வேறு ஒரு பொருளின் துணை அல்லாஹ்வுக்கு தேவைப்படுகின்றது என்பதை ஏற்றுக் கொண்டாலோ ஷிர்க் செய்தவர்களாக, குஃப்ர் செய்தவர்களாக நாம் மாறிவிடுகிறோம்.
மேற்கூறிய தன்மைகள், மேற்கூறிய பண்புகள் உலகத்திலுள்ள உயிருள்ள அல்லது உயிரற்ற படைப்புகளில் யாருக்கேனும் இருக்கின்றன என்று நம்பினாலோ யாரேனும் ஓர் இறைத்தூதர், ஒரு நபி அல்லது ஒரு ரசூலுக்கு இத்தகைய அதிகாரங்கள் இருக்கின்றன என்று நம்பினாலோ ஒரு மனிதன் ஓரிறைக்கோட்பாடு என்னும் வட்டத்தைவிட்டு வெளியேறிவிடுகிறான். ஷிர்க், குஃப்ர் என்றும் புதைசேற்றுக்குள் மூழ்கிவிடுகிறான்.
ஷிர்க்கை பற்றிய தவறான விளக்கம்
இன்று, ஒரிறைவனுக்கு இணையாக இன்னொன்றைக் கருதும் மக்கள் அல்லாஹ்வை நிராகரிப்பதோ, அவன்தான் படைத்தான் அவனுக்கே எல்லாம் சொந்தம் என்பதை ஏற்றுக்கொள்ள மறுப்பதோ கிடையாது! மாறாக, “அல்லாஹ்தான் ஏக இறைவன் அவன்தான் அனைத்தையும் படைத்தான் அவனுக்கே எல்லாம் சொந்தம்’ என்று ஏற்றுக்கொள்கிறார்கள். அதேசமயம் அவனுக்கென்றே உள்ள அதிகாரங்களில், அவனுக்கென்றே உள்ள சிறப்பம்சங்களில் மற்றவர்களையும் இணையாக்குகிறார்கள். நாங்கள் ஏக இறைவனை பரம்பொருளை அடைவதற்குத்தான், அவனது நெருக்கத்தை பெறுவதற்காகத்தான் இத்தகையவர்களின் வழிபாட்டையும் செய்துவருகிறோம் உண்மையில் ஏக இறைவனை பரம்பொருளையே வழிபடுகிறோம்!’ என்று அதற்கு ஒரு காரணத்தையும் கூறுகிறார்கள்.
உண்மையில் இதுவும் ஷிர்க்கே! ஏனென்றால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்தில் அரபுலகின் முஷ்ரிக்கீன்கள் இறைவனைப்பற்றி இத்தகைய கருத்துகளையே கொண்டிருந்தார்கள். அவர்களது நிலையைப்பற்றி வான்மறை குர்ஆன் தெளிவாக விளக்குகிறது. அண்ணலாரைப் பார்த்து அது கூறுகின்றது@ “இறைத்தூதரே! இந்த இணைவைப்பாளிடம் கேளுங்கள்@ இந்த வானங்களையும், பூமியையும் யார் படைத்தான்? இந்தக் கேள்விக்கு “அல்லாஹ்’ என்று தான் பதில் கூறுவார்கள்!’
ஆக, உலகத்தைப் படைத்து நிர்வகிப்பவன் ஒரே இறைவன்தான் என்று ஏற்றுக்கொண்டிருந்தபோதிலும், இஸ்லாமிற்கு அப்பாற்பட்டவர்களாக, இஸ்லாமிய வட்டத்தைவிட்டு வெளியேறியவர்களாக அவர்கள் கருதப்பட்டார்கள். ஏனென்றால், அவர்கள் அல்லாஹ்வையும் ஏற்றுக்கொண்டிருந்தார்கள் அல்லாஹ்வை மட்டுமே ஏற்றுக்கொள்ளவில்லை! அல்லாஹ் மட்டுமே, அல்லாஹ் ஒருவனே என்பதை ஏற்றுக்கொள்வதுதான் இஸ்லாமே ஒழிய, அல்லாஹ்வையும் ஏற்றுக்கொள்வதல்ல இஸ்லாம்!
ஷிர்க்கின் நிழல்கூட படிந்துவிடக்கூடாதே என்று தூய தவ்ஹீதின் பக்கம் அழைப்புவிடுக்கின்ற ஒரு கொள்கையே இஸ்லாம். இறைவனின் நெருக்கத்தைப் பெறுவதற்கோ அவனிடத்தில் முறையிடுவதற்கோ மனிதனுக்கு இடைத்தரகர் தேவையில்லை என இஸ்லாம் முழங்குகின்றது.
ஷிர்க்கிற்கான காரணம்
ஷிர்க்கிற்கான உண்மையான காரணம் என்ன? மனிதர்கள் இறைவனைப்பற்றிய சரியான அறிவை பெற்றுக்கொள்வதில்லை. இறைவனுடைய உண்மையான தன்மைகள் என்ன? அவனுக்கென்றே உள்ள அதிகாரங்கள் என்ன? சிறப்பியல்புகள் என்ன? என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை.
உலகத்தை கட்டியாள்கின்ற மன்னர்கள், அரசர்கள், ஆட்சியாளர்கள் ஆகியவர்களோடு அவர்கள் இறைவனை ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். உலகத்தை ஆளுகின்ற மன்னர்கள் தங்கள் ஆட்சியை நடத்த அமைச்சர்களையும் அதிகாரிகளையும் சார்ந்து இருக்கிறார்கள். அரசரை சாதாரண மனிதன் போய்சந்திப்பது முடியாத காரியம். அதிகாரிகளின் மூலமாக அமைச்சர்களின் மூலமாக அரசனை சந்தோஷப்படுத்தினால்தான் காரியம் ஆகும் என்ற நிலை. இதேபோல மக்கள் அல்லாஹ்வையும் நினைத்துக்கொண்டார்கள். சிலைகள், தேவதைகள், இறைத்தூதர்கள், வலிமார்கள் போன்றவர்களின் உதவி மற்றம் சிபாரிசுகளின் மூலமாகத்தான் அல்லாஹ்வை சந்தோஷப்படுத்த முடியும் (நஊதுபில்லாஹ்) என்று நினைத்துக்கொண்டார்கள்.
உலகத்து ஆட்சியாளர்களும் அரசர்களும் தங்களது சபைகளில் தமக்கு பிரியமானவர்கள் சொல்லும் கருத்துக்களை நிராகரிக்க முடியாமல் ஏற்றுக்கொள்வதைப்போல அல்லாஹ்வும் இந்த தேவதைகள், சிலைகள், தூதர்களின் சிபாரிசுகளை மறுக்க முடியாது ஏற்றுக்கொள்வான் (நஊதுபில்லாஹ்) என நம்பினார்கள். இறைவனின் உண்மையான தன்மைகள், அவனது பண்புகள் அதிகாரங்கள் என்னென்ன? என்பதைப்பற்றி சரிவர விளங்கிக் கொண்டால் இத்தகைய ஷிர்க் மனிதனிடத்தில் தோன்றவே தோன்றாது!.
ஷிர்க் மனிதர்களிடத்தில் எவ்வாறு தோன்றுகிறது?
இப்ளீஸ் மற்றும் ஷைத்தான்களின் தீய வழிகாட்டுதலினால் அல்லது தனது மனோஇச்சைகளை குருட்டாம் போக்கில் பின்பற்றுவதினால் அல்லது தமது முன்னோர்கள் மூதாதையர்களின் வழிமுறைகளை கண்மூடித்தனமாக பின்பற்றுவதால் ஷிர்க் தோன்றுகின்றது.
மனித வரலாற்றை ஆராய்ந்தால் சிலைகளையும் தேவதைகளையும் வணங்குவதும் வழிபடுவதும் முட்டாள்தனமானது. பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என்பதை உணர்ந்திருக்கின்ற ஆயிரக்கணக்கான கோடிக்கணக்கான உள்ளங்களை பார்க்கமுடிகின்றது. அவர்களது மனசாட்சி இந்த செயலுக்கு அங்கீகாரம் வழங்குவதே கிடையாது. இத்தகைய செயல் தவறானது இழிவானது என அவர்களது மனசாட்சி இடித்துரைத்துக் கொண்டே இருக்கின்றது. ஆனாலும் அவர்கள் ஓரிறைக் கொள்கையை தவ்ஹீதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏன்? என்ன காரணம்?
இதற்கான காரணத்தை வான்மறை குர்ஆன் கூறுகிறது. தங்களது மூதாதையர்கள், முன்னோர்கள் நீண்டகாலமாக கடைப்பிடித்து வந்த, வரும் ஒரு செயலை எப்படி குறைகாண்பது? எப்படி விடுவது? என யோசிப்பதுதான் காரணம். ஷிர்க் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது அறியாமை, மூடநம்பிக்கைகளின் வெளிப்பாடு என்றெல்லாம் தெரிந்திருந்தும் அவர்கள் அதனைச் செய்து வந்தார்கள். செய்து வருகிறார்கள்.
ஷைத்தானைப்பற்றியும், மனிதனுக்கும் ஷைத்தானுக்கும் இடையே நிலவிவரும் நீண்டகால நிரந்தரப் பகைமையைப் பற்றியும் ஒருவர் தெரிந்துகொண்டால் தன்னையும், தன்னைப் போன்ற மனிதர்களையும் ஷிர்க் போன்ற புதைசேற்றில் ஆழ்த்தி மறுமைப்பயன்களை அடியோடு அழித்து தன்னை நிரந்தர நரகத்தில் தள்ளுகின்ற ஷைத்தானின் முயற்சியே இது, என்பதை விளங்கி ஷைத்தானைவிட்டும் தூரவிலகி இந்த ஷிர்க்கை, குஃப்ரை கற்பனைகூடசெய்யமுடியாத அளவுக்கு தூய்மை பெற்றுவிடுவார்.
ஷிர்க்கின் துவக்கம்
உலகிலுள்ள மனிதர்கள் அனைவரும் ஆதத்தின் சந்ததியர்கள். முதன்முதலாக ஆதமைத்தான் அல்லாஹ் படைத்தான். அவரில் இருந்துதான் மனிதர் அனைவரையும் தோற்றுவித்தான். ஆதம் படைக்கப்பட்டபிறகு ஆதமும் அவரது மனைவி ஹவ்வாவும் சுவர்க்கத்தில் தங்கவைக்கப்பட்டார்கள். அதற்கு முன்பிருந்தே சுவர்க்கத்தில் இப்லீன் வசித்துவந்தான். அசாதாரணமான அறிவை, கல்வியை அவனுக்கு இறைவன் வழங்கியிருந்தான். தனது படைப்புகள் அனைத்தையும் விட மனிதனை சிறந்தவனாக மனிதனை இறைவன் ஆக்கினான். வானவர்கள், மலக்குகள், ஜின்கள், இப்லீஸ் அனைவரையும் அழைத்து மரியாதை செலுத்தும் வண்ணம் ஆதம் அலைஹிஸ் ஸலாமுக்கு ஸஜ்தா செய்யுமாறு கட்டளையிட்டான். அனைவரும் அக்கட்டளையை ஏற்று ஆதமுக்கு ஸஜ்தா செய்தார்கள். இப்லீஸ் ஒருவனைத்தவிர, அவன் ஸஜ்தா செய்யவில்லை!
“நானோ நெருப்பால் படைக்கப்பட்டவன் இந்த ஆதமோ மண்ணால் படைக்கப்ப்பட்டவர் மண்ணை விட நெருப்பு உயர்ந்தது தானே! நான் ஏன் இவருக்கு ஸஜ்தா செய்ய வேண்டும்?’ என்று கூறி ஸஜ்தா செய்ய மாட்டேன் என நிராகரித்துவிட்டான். அல்லாஹ்வுக்கு முன்னால் அல்லாஹ்வின் ஆணையை துச்சமாக மதித்து தற்பெருமை கொண்டு அவன் இறைவனையே மறுக்கத் துணிந்துவிட்டான். இதனால் சொர்க்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டான். அல்லாஹ்வின் கருணையையும் கிருபையையும் இழந்துபோனான். நிரந்தரமான நரகத்திற்கு சொந்தக்காரனாக ஆகிவிட்டான்.
எனினும், அல்லாஹ்விடம் ஒரு கோரிக்கையை வைத்தான். “உனது ஆணையை மீறியதால் உனக்குக் கட்டுப்பட மறுத்ததால், இந்த ஆதமுக்கு ஸஜ்தா செய்ய மாட்டேன் என்று கூறியதால் நான் நிராகரிக்கப்பட்டவனாக சபிக்கப்பட்டவனாக, நரகத்திற்கு சொந்தக்காரனாக ஆகிவிட்டேன். ஆகையால் இந்த ஆதமுடைய சந்ததியர்களில் என்னால் முடிந்தவரைக்கும் ஏராளமானோரை வழிகெடுத்து என்னோடு நரகத்திற்கு அழைத்துச் செல்ல என்னை நீ அனுமதிக்க வேண்டும்’.
அக்கோரிக்கை ஏற்கப்பட்டது. இறுதித் தீர்ப்புநாள் கியாமத் நாள் வரைக்கும் அவனுக்கு அவகாசம் வழங்கப்பட்டது. அவன், தான் விரும்பிய வழிகளில் மனிதரை சென்று சந்திக்கவும், மனிதர்களை வழிகெடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. அவனால் தனது வடிவத்தை மாற்றிக்கொள்ள முடியும். நேர்வழியிலிருந்து மனிதர்களை வெளியே இழுக்க எண்ணற்ற சூழ்ச்சிகளையும் ஏராளமான சதித்திட்டங்களையும் அவனால் தீட்ட முடியும். தன்னால் முடிந்தவரை எண்ணற்ற மனிதர்களை வழிகெடுத்து தன்னுடன் நரகத்திற்கு அழைத்துச்செல்ல அவனால் முடியும்.
அவனுக்கு இன்னொரு விஷயத்தையும் இறைவன் தெளிவாக்கினான். எனது அடியார்களில் யார் எனக்கு முற்றிலும் கீழ்பட்ட முற்றிலும் அடிபணியும் நன்னம்பிக்கை கொண்ட நல்லடிமைகளாக இருக்கிறார்களோ அவர்களை உன்னால் ஒன்றும் செய்யமுடியாது. அவர்களை நாம் பாதுகாத்துக் கொண்டேயிருப்போம் என அல்லாஹ் தெளிவாக கூறி விட்டான்.
“இத்தகைய ஷைத்தான் உங்களை வழிகெடுப்பான்! நேர்வழியிலிருந்து உங்களை வெளியே இழுத்து விடுவான்! உங்களை நரக நெருப்பற்கு தகுதியானவர்களாக மாற்றிவிடுவான்! இவன் உங்களது பகிரங்கமான பயங்கரமான எதிரியாவான்!’ என்று அல்லாஹ் மனிதர்களிடம், மனிதர்கள் மீது உள்ள அன்பினால் எச்சரித்தும் இருக்கின்றான்.
“நீங்கள் ஜாக்கிரதையாக இருங்கள்! அவனது ஏமாற்றும் முயற்சிகளுக்கு பலியாகிவிடாதீர்கள்! அவனது மாயவலையில் சிக்குண்டுபோய்விடாதீர்கள்!’ ஆகையால், தனது இயல்பான வடிவில் மனிதர்களுக்கு முன்னால் வந்து நேர்வழியிலிருந்து அவர்களை வழிதவற வைக்கின்ற முயற்சியை ஷைத்தான் மேற்கொள்ளவோ வெற்றிபெறவோ இயலாது. இருப்பினும் ஷைத்தான் மிகவும் புத்திசாலி, அறிவுள்ளவன். மனிதர்கள் எத்தகைய பாவங்களைச் செய்தாலும் இறைவன் மன்னித்துவிடுவான் என்பது அவனுக்குத் தெரியும். இறைவன் மன்னிக்காத பாவம் ஒன்று இருக்குமென்றால் அது ஷிர்க் மட்டுந்தான். தனக்கு இணைவைப்பதை மட்டும் இறைவன் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டான். ஒரு போதும் பொறுத்துக் கொள்ளவே மாட்டான் என்பதை அவன் மிகவும் நன்றாகவே அறிந்திருந்தான். எனவே, கடைசி முயற்சியாக அவன் இதை மேற்கொண்டான்.
ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப்பட்ட காலம் முதல் தொடர்ந்து இந்த முயற்சியை செய்துவருகிறான். முஃமின்களாக முஸ்லிம்களாக வாழ்கின்ற இந்த அல்லாஹ்வின் அடியார்களை ஓரிறைக் கொள்கையை பின்பற்றவிடாமல் செய்து முழுமையான ஈமானிய வட்டத்திலிருந்து எப்படியாவது வெளியே கொண்டு வந்து ஷிர்க்குடைய குஃப்ருடைய சேற்று சகதியில் அவர்களை சிக்கவைத்துவிட வேண்டும் என்பதே அவனுடைய முயற்சி. ஆனால் நெடுங்காலம்வரை தனது முயற்சியில் அவனால் வெற்றிபெற முடியவே இல்லை. அல்லாஹ்வை வணங்காதீர்கள். அவனுக்கு இணைவையுங்கள். அவனோடு பங்காளியை ஏற் படுத்துங்கள் என்று நேரடியாக மனிதர்களிடம் வந்து ஷைத்தானால் சொல்லமுடியாது. ஆகவே அவன் வேறொரு தந்திரமான வழியைக் கையாண்டான்.
சிலைகள் பிறந்த கதை!
நம்மை எப்படியாவது வழிகெடுக்கவேண்டும், அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாக்கவேண்டும் என்பதுதான் ஷைத்தானுடைய குறிக்கோள். நேராக நம்மிடம் வந்து “இஸ்லாமைப் பின்பற்றாதீர்கள்! அல்லாஹ்வின் அவனுடைய தூதர்களு டைய பேச்சைக்கேட்காதீர்கள்!’ என்று சொல்லமுடியுமா? சொன்னால் நாம் கேட்போமா? கேட்க மாட்டோம் அல்லவா? அதற்காக ஷைத்தான் ஒரு திட்டம் தீட்டினான். மனிதர்களிடம் வந்து சுற்றி வளைத்துப் பேசினான். மனிதர்களில் சான்றோர்களாக வாழ்ந்த நல்லடியார்கள் இறந்த உடன், பிறமனிதர்களிடம்வந்து அவர்களைப்பற்றி விசாரித்தான். “அவர்கள் அனைவரும் இறையடியார்கள். இறைவனுடைய அன்பையும் நெருக்கத்தையும் சம்பாதித்துக் கொண்ட தூயவர்கள்” என அவர்கள் பதில் சொன்னார்கள்.
“அப்படியென்றால், நீங்கள் அத்தகைய நல்லவர்களை அடிக்கடி நினைவுகூர்ந்துகொண்டே இருக்கவேண்டும் அல்லவா?”என்ற கேள்வியை எழுப்பினான்.
“ஆம், அடிக்கடி அவர்களை நினைத்துப்பார்க்கிறோம்” என்றார்கள் அவர்கள்.
“உங்களுடைய பிள்ளைகளிடம் அவர்களைப்பற்றி சொல்வது இல்லையா?” என்று அடுத்த கேள்விக்கு தாவினான்.
“கண்டிப்பாக சொல்கிறோம். அவர்களைப்பற்றி அவர்களது வாழ்க்கையைப்பற்றி எடுத்துக்கூறி அவர்களைப் போன்றே வாழவேண்டும் என்று போதிக்கிறோம்” என்றார்கள் மக்கள்.
“வெறுமனே வார்த்தைகளால் சொல்வதைக் காட்டிலும் அவர்களது உருவங்களை சித்திரங்களாக தீட்டிவைத்துக்கொண்டு அவற்றை எடுத்துக்காட்டிக் கூறினால் இன்னும் நன்றாக இருக்குமல்லவா?” என்று ஒரு ஆலோசனையை முன்வைத்தான்.
அவனது ஆலோசனையை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். உருவப்படங்களை வரைந்துவைத்துக்கொண்டார்கள். அவற்றைச் சுட்டிக்காட்டி தமது பிள்ளைகளிடம் அந்நல்லடியார்களைப்பற்றி கூறி வந்தார்கள். அந்த சித்திரச்சீலைகள் கொஞ்ச நட்களுக்குள் சாயம்மாறிப்போய் அழியத்தொடங்கின. மறுபடியும் வரைய வேண்டி இருந்தது. இப்படி அடிக்கடி அவற்றை வரைய வேண்டிய கட்டாயத்துக்கு மக்கள் தள்ளப்பட்டார்கள்.
“நான் ஒரு நல்ல ஆலோசனையை தருகிறேன்” என்று சொல்லியவாறு ஷைத்தான் மறுபடியும் வந்துசேர்ந்தான். “சித்திரங்களுக்கு பதிலாக நீங்கள் ஏன் சிலைகளை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது?” என்று அற்புதமான ஆலோசனையை வழங்கினான்.
“அவை சீக்கிரத்தில் அழியாது. சாயம்போய்விடுமோ என்று கவலைப்பட வேண்டியதில்லை. சிறியளவில்செய்து வீட்டிலேயே வைத்துக்கொள்ளலாம்” என்று செய்முறையையும் சொல்லித்தந்தான். மதிகெட்ட மக்கள் அதைநம்பி சிலைகளைச் செய்தார்கள்.
கொஞ்சநாள் கழித்து மறுபடியும் “வழிகாட்ட” வந்தான். “வீடுகளில் வைப்பதைவிட சிலைகளைக்கொண்டுபோய் வீதிகளில் வைத்தால் இன்னும் சிறப்பு. அடிக்கடி அவற்றைப் பார்க்க முடியும். பார்க்கும் போதெல்லாம் அவர்களது ஞாபகம் நெஞ்சில் நிழலாடும். அவர்களைப் போன்றே மாறவேண்டும் என்ற உத்வேகம் பிறக்கும்” என்றான்.
அவ்வாறே மக்கள் அவற்றைக் கொண்டுபோய் வீதிகளில் வைத்தார்கள். அச்சிலைகளுக்கு முன்னால் நின்று அவர்களது அருமை பெருமைகளை தமது குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார்கள்.
எப்பபேற்பட்ட மனிதர்! எத்தகைய உயர்பண்புகளுக்கு சொந்தக்காரராக இவர் வாழ்ந்து சென்றிருக்கின்றார்! நாமும் இவரைப்போலவே வாழவேண்டும்! இவரைப் போலவே உயர்ந்த குணங்களுக்கு சொந்தக்காரராக திகழவேண்டும்!. காலம் சென்றது. மக்களது எண்ணங்களில் ஷைத்தான் விதைத்த சிந்தனைகள் கலந்தன. மக்கள் அச்சிற்பங்களைப் பற்றி உயர்ந்து புகழ்ந்து பிரஸ்தாபிக்கலானார்கள். சிலைகளுக்கு முன்னால் மரியாதை செலுத்தும்விதமாக தலைகளை தாழ்த்தத் தொடங்கினார்கள். சிலைகளுக்கு முன்னால் கைகட்டிநின்று, மாலைகளைப் போட்டு மரியாதை செய்யும் பழக்கமும், சிலைகளுக்கு முன்னால் தலைகுனிந்து நிற்கின்ற பழக்கமும் அதிகரித்தது!
அந்த மக்கள் செத்துப்போனதற்குப் பின்னால் அவர்களது மக்கள் அடுத்த தலைமுறையினர் வந்தார்கள். இந்தச்சிலைகள் யாருடைய சிலைகள்? என்பது அவர்களுக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. சிலைகள் எல்லாம் ஏன் வைக்கப்பட்டன? சிலைகள் நிறுவப்பட்டதன் உண்மையான பின்னணி என்ன? என்பதைப்பற்றி ஆழ்ந்த சிந்தனையை செலுத்த இயலாமல் போனார்கள். சிலைகளுக்கு முன்னால் தங்கள் அப்பா, தாத்தா, மூதாதையர்கள் மரியாதைசெலுத்தி வந்தார்கள், தலையைக் குனிந்து நின்றிருந்தார்கள் என்பதுமட்டும்தான் தெரிந்திருந்தது.
அவர்களிடம்போய் “உங்களை படைத்து ஆளாக்கி காக்கின்ற கடவுளர்கள் இவர்கள்தாம்’ என்றான் ஷைத்தான். அப்படியா என்று நம்பி அவற்றை வணங்க ஆரம்பித்தார்கள். சிலைகள் பிறந்தகதை இதுதான்! இப்படித்தான் மனிதர்களிடையே சிலைவணக்கம் பரவியது.
நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய காலத்தில் நடந்தது இது. அந்த மக்களை வழிப்படுத்த நூஹ் அலைஹிஸ் ஸலாம் அவர்களை அல்லாஹ் தன் தூதராக அனுப்பிவைத்தான். நம்நாட்டில் இன்றும் இப்படிப்பட்ட காட்சிகளைப் பார்க்கமுடியும். சிலைகளை வணங்காதே என்றுசொன்ன பெரியாருக்கும் சிலை உள்ளது. பிறந்தநாள் இறந்தநாளின் போது பூக்களைச்சாற்றி “அஞ்சலி”யும் செலுத்தப்படுகின்றது. மக்கா மாநகரத்தில் புகழ்பெற்ற கஅபத்துல்லாஹ் இறையாலயத்தில் வைக்கப்பட்டிருந்த லாத், உஸ்ஸா, மனாத் போன்ற சிலைகளும் நல்லடியார்களின் சிலைகள்தான்.
இஸ்லாமும் ஜாஹிலிய்யத்தும்
மனிதன் உலகத்தில் இரண்டு விதங்களில் வாழலாம். ஒன்று இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழ்வது. அதற்குப்பெயர் இஸ்லாம். இன்னொன்று இறைவனுக்கு கட்டுப்படாமல் தன்னுடைய இஷ்டப்படி வாழ்வது. அதற்குப்பெயர் ஜாஹிலிய்யத். இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழ்வதுதான் நேர்வழி. அதன் முலம் சொர்க்கம் கிடைக்கும். கட்டுப்பட்டு வாழாவிட்டால் வழிகேட்டுப் பாதையில் சென்றால் நரகம் கிடைக்கும்.
நேர்வழிக்கு வாருங்கள் என்றுதான் அனைத்து இறைத் தூதர்களும் அழைத்துள்ளார்கள். அவ்வழியில் போகாதே என ஷைத்தான் தடுத்துக் கொண்டே உள்ளான்.
நேர்வழியின் பக்கம் அழைப்பது முஃமின்களின் வேலை! அவ்வழியில் இருந்து விலக்குவது ஷைத்தான்களின் வேலை! ஒன்றா இரண்டா, சிலைகள் மனிதனை நேர்வழியில் செல்லவிடக்கூடாது என்பதுதான் ஷைத்தானுடைய நோக்கம். எப்படியாவது எதையாவது செய்து மனிதர்களை நேர்வழியிலிருந்து வெளியே இழுத்துவிட வேண்டும் என்று அவன் கடும் முயற்சி செய்கிறான்.
மனிதர்கள் சிலைகளை வணங்குமாறு ஷைத்தான் செய்தான் என்று பார்த்தோம். எப்போதும் ஒரே சிலையை வணங்கச் செய்ய முடியுமா? வுத், ஸுவாஃ, யஊஸ் என்பன நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் மக்கள் வணங்கிய சிலைகளின் பெயர்கள். அந்த மக்கள் எல்லாம் அழிக்கப்பட்ட உடன் அந்த சிலைகளும் அழிந்துவிட்டன. கொஞ்சகாலம் கழித்து வேறு பகுதியில் வசித்த மக்களிடம் போய் ஷைத்தான் சிலைகளை அறிமுகப்படுத்தினான். அவை வேறு சிலைகள்.
இந்த குறிப்பட்ட சிலைகளையே மக்கள் வணங்க வேண்டும் என்பதெல்லாம் ஷைத்தானுடைய நோக்கம் கிடையாது. மனிதர்கள் அல்லாஹ்வின் வழியில் போகக்கூடாது என்பது ஒன்று தான் ஷைத்தானுடைய நோக்கம்.
இப்றாஹீம் அலைஹிஸ் ஸலாம் காலத்தில் மக்கள் “நன்னார்” என்ற சிலையை வணங்கினார்கள். அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அவைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் லாத், உஸ்ஸா, மனாத் போன்ற சிலைகளை வணங்கினார்கள். இந்தியாவில் சிவனையும் விஷ்ணுவையும் வணங்கினார்கள். அப்புறம் காளியை வணங்கினார்கள். அப்புறம் சிவனுக்கு கணேஷ் என்ற மகன் பிறந்தான். அவனை வணங்கினார்கள். தமிழ்நாட்டில் உள்ள சிவனுக்கு முருகன் என்ற மகனும் பிறந்தான். அவன் பிறந்ததே வடநாட்டில் உள்ளவர்களுக்கு தெரியாது. அவனை வணங்கினார்கள். சிலைகளை வணங்காதீர்கள், அது மூடநம்பிக்கை என்று பெரியார். ஈ.வெ.ராமசாமி பிரச்சாரம் செய்தார். அவருக்கும் மக்கள் சிலைவைத்தார்கள். கொஞ்சநாளில் அவரது பிறந்தநாளன்று மாலைகளை சூட்டத்தொடங்கினார்கள். இன்னும் கொஞ்சநாளில் அவரையும் வணங்குவார்கள். நேர்வழி எது? வழிகேடு எது? என்பதை அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அவைஹி வஸல்லம் அவர்கள் ஒருமுறை வரைபடம் ஒன்றை வரைந்து காட்டி விளக்கினார்கள்.
நேர்க்கோடு ஒன்றை வரைந்தார்கள். அதன் இரண்டு பக்கங்களிலும் சிறுசிறு குறுக்குக்கோடுகளை வரைந்தார்கள். நேர்க் கோடு என்பது நேர்வழி. இறைவனின் பக்கம் கொண்டு போய்ச் சேர்க்கின்ற வழி. குறுக்குக் கோடுகள் அனைத்தும் நேர்வழியை விட்டும் வெளியே இழுக்கின்ற ஷைத்தானின் முட்டுச்சந்துகள்.
இறைவனும் இறைத்தூதர்களும் காட்டிய முறைப்படி சற்றும் மாறாமல் அங்கும்இங்கும் விலகிவிடாமல் நேர்இலக்கில் தொடர்ந்து செல்வதுதான் நேர்வழி. இது சொர்க்கத்திற்கு போய்ச்சேருகின்றது. இந்த வழியில் செல்லவிடாமல் தடுப்பதுதான் ஷைத்தானுடைய வேலை. நீங்கள் பயணத்தை ஆரம்பத்த இடத்திலிருந்து உங்களை வழிகெடுக்க அவன் முயற்சிக்கிறான். சிலரை ஆரம்ப கட்டத்திலேயே வழிகெடுத்து விடுகிறான். கொஞ்சம் பேரை சற்றுதூரம் போகவிட்டு வழிகெடுக்கிறான். இன்னும் சிலர் உறுதியோடு பயணத்தைத் தொடருகிறார்கள். வேகுதூரம்போனபிறகு அதையும் இதையும் செய்து அவர்களை வழிகெடுத்துவிடுகிறான். இன்னும் சிலரோ கடைசிவரை வெற்றிகரமாக போய்விடுகிறார்கள். எல்லையைத் தொட்டுவிடுவார்கள் என்றநிலையில் அவர்களை ஷைத்தான் வென்றுவிடுகிறான்
சிலைகளின் நவீன வடிவங்கள்
“அல்லாஹ்வை வணங்காதே! சிலைகளை வணங்கு!” என்று சொன்னபோது அந்தக்கால மக்கள் கேட்டார்கள். அல்லாஹ்வை விட்டுவிட்டு சிலைகளை வணங்கத் தொடங்கினார்கள். இந்தக் காலத்தில்போய் முருகனை வணங்கு, முனியம்மாவை வணங்கு என்று சொன்னால் யாராவது வணங்குவார்களா? கல்லால் ஆன சிலைகளை வணங்குவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை ஏறக்குறைய எல்லாமக்களும் உணர்ந்து இருக்கிறார்கள். சிலைகளை தெய்வமாக நினைத்து வணங்கி வருகின்ற இந்துக்கள்கூட அவற்றின்மீது நம்பிக்கை வைப்பதில்லை. ஒரு கஷ்டமென வந்துவிட்டால் சிலைகளை கைவிட்டு விடுகிறார்கள்
இருபதாம் நூற்றாண்டில் விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்து மனிதனுடைய அறிவு பல்வேறு விஷஇயங்களைப் பற்றியும் சிந்திக்கத் தொடங்கிவிட்டது. காக்கின்ற தெய்வம் முருகன் என்றால் அவன் உலக மக்கள் எல்லோரையும் காக்க வேண்டுமில்லையா? பழனியிலேயே குடியிருந்தால் எப்படி? விஷ்ணு பகவான் அமெரிக்காவில் ஏன் அவதாரம் எடுக்கவில்லை? அங்குள்ள மக்களை எல்லாம் பிரம்மா படைக்கவில்லையா? வேறு ஏதேனும் கடவுள் அவர்களை படைத்திருக்கிறாரா? அப்படி என்றால் அவர் யார்? என்று இன்றைய இந்துக்கள் யோசிக்கிறார்கள்.
இப்படிப்பட்ட மக்களிடம் போய் “சிலைகளை வணங்குங்கள்!” என்று ஷைத்தானால் சொல்ல முடியுமா? முடியாதல்லவா? ஆகையால், காலத்திற்கு ஏற்றமாதிரி ஷைத்தான் வேறு ஒரு புதிய கொள் கையைக் கண்டுபடித்தான்.
“உலகத்தையும் உலகத்தில் வசிக்கின்ற ஜீவராசிகளையும் யாருமே படைக்கவில்லை!” என்பதே அந்தக் கொள்கை! கடவுள் மறுப்புக் கொள்கை. சிலைகளை வணங்குவது மடத்தனம், அறியாமை என்று சொன்னவர்களும் அதைத் தீவிரமாக எதிர்த்தவர்களும் கடவுளை மறுத்தார்கள். நிராகரித்தார்கள். “கடவுளை வணங்குவது காட்டுமிராண்டித் தனம். கடவுளைப் படைத்தவன் அயோக்கியன்” என்றெல்லாம் பிரச்சாரம் செய்தார்கள்.
“இந்த உலகத்தை யாருமே படைக்கவில்லை. அது தானாகவே தோன்றிவிட்டது. உலகத்திலுள்ள உயிரினங்களும் ஜீவராசிகளும் சுயமாகத்தோன்றி படிப்படியாக வளர்ச்சிபெற்று பரிணாமம் அடைந்து மனிதன்போன்ற உயர்ந்த நிலையை அடைந்துள்ளன. கடவுளை நம்புவது பைத்தியக்காரத்தனம்!’ என கடவுள் மறுப்புக்கொள்கைக்காரர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள்.
கடவுளை நம்பினால் வீட்டோடு வைத்துக் கொள்! “கடவுள் நம்மைப் படைக்கவில்லை என்றாகிவிட்ட பிறகு, கடவுளுடைய வேதம், கடவுளுடைய தூதர் என்று சொல்லி பிதற்றிக்கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் கிடையாது. நாங்கள் சொல்வதை நீங்கள் நம்பவில்லை என்றால், நீங்கள் வணங்கும் கடவுளை உங்களுடைய வீட்டோடு வைத்துக்கொள்ளுங்கள்! வீதிக்கு கொண்டுவராதீர்கள்! கடவுளுடைய சட்டம், கடவுளுடைய கட்டுப்பாடு என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்!’ என்று சொல்கிறார்கள் அவர்கள். அதாவது ஷைத்தான் சொல்கிறான்.
விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட இந்தக்காலத்தில் கடவுள் மறுப்புக் கொள்கையை வளர்த்தால்தான் இறைவனுடைய வழியில் செல்லாமல் மக்களைத் தடுக்கமுடியும் என்பது ஷைத்தானுக்கு நன்றாகத் தெரியும். ஆகையால், இந்த இறைமறுப்புக் கொள்கைகளைப் பயன்படுத்தி கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக மக்களை ஆக்குவதில் அவன் பெருமளவு வெற்றி பெற்றுள்ளான் என்றுதான் சொல்லவேண்டும்.
அப்படியும் மக்கள் கடவுள் நம்பிக்கையை கைவிடவில்லை என்றால், அதற்கும் ஒரு மாற்று ஏற்பாடு முன்வைக்கப் படுகின்றது. “கடவுள் நம்பிக்கை என்பது தனிநபர்சார்ந்த விஷஇயம்! நீங்கள் கடவுளை நம்புகிறீர்கள் என்றால், உங்களது நம்பிக்கையை வீட்டோடு வைத்துக்கொள்ளுங்கள். வீதிக்கு கொண்டு வராதீர்கள். மக்களோடான கூட்டு வாழ்க்கையில் சமூக வாழ்க்கையில் கடவுள் நம்பிக்கை கடைப்பிடிக்கப்படவேண்டும் என்று விரும்பாதீர்கள். சமூகம், அரசியல், பொருளாதாரம், சம்பாதித்தியம், வருமானம், நாட்டு நிர்வாகம் போன்ற விஷயங்களில் கடவுளுக்கு எள்ளளவும் சம்பந்தமில்லை. இவற்றை எல்லாம் நாமே தீர்மானித்துக் கொள்ளலாம்!” இதுதான் முன்வைக்கப்படுகின்ற வாதம்.
இந்த சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இன்று உலகத்தில் உள்ள எல்லா கொள்கைகளும் உருவாக்கப் பட்டுள்ளன. மக்கள் பெரிதும் போற்றிக்கொண்டாடுகின்ற கொள்கைகளான ஜனநாயகம், தேசியவாதம், மக்களாட்சி, பொது உடைமை என்று அனைத்து கொள்கைகளுக்கும் இது ஒன்றே அடிப்படை!
முஸ்லிம்களுடைய தவறான புரிதல்
முஸ்லிம்களும் இதனை விளங்கிக் கொள்ளாமல் தவறிழைக்கிறார்கள். நாம்தான் சிலைகளை வணங்குவதில்லையே! தர்காக்களுக்கும் போவதில்லையே! “ஷிர்க்”கை எந்த வகையிலும் செய்வதில்லையே! என்று முஸ்லிம்கள் தங்களைத் தாங்களே மெச்சிக் கொள்கிறார்கள்.
சிலைகளை கும்பிடாமல் இருந்தால் “ஷிர்க்” செய்யவில்லை என்றாகிவிடுமா? தர்காவுக்கு போகவில்லை என்றால் “ஷிர்க்” செய்யவில்லை என்றாகிவிடுமா? “ஷிர்க்” என்றால் என்ன என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.
– கட்டுரையின் தொடர்ச்சிக்கு கீழுள்ள “Next” ஐ ‘கிளிக்” செய்யவும்