மாற்றான் மனைவியின்மீது மையல் கொண்ட நபி தாவூது அலைஹிஸ்ஸலாம்
நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தேனிசை குரலால் சபூர் வேதத்தை ஓதும் தனித்துவத்தை இறைவன் வழங்கி இருந்தான். இது தலைமையத்துவத்திற்கு சிறப்பாக இருந்தது.
وَلَقَدْ اٰتَيْنَا دَاوٗدَ مِنَّا فَضْلًا يٰجِبَالُ اَوِّبِىْ مَعَهٗ وَالطَّيْرَ وَاَلَــنَّا لَـهُ الْحَدِيْدَ ۙ
இன்னும், நிச்சயமாக நாம் தாவூதுக்கு நம் (மேன்மையான) அருளை வழங்கினோம்; “மலைகளே! (அவர் தஸ்பீஹு செய்யும் போது) அவருடன் (அத்துதியை) நீங்களும் எதிரொலியுங்கள்; பறவைகளே! (நீங்களும் அவ்வாறே செய்யுங்கள் என்றோம்;) மேலும் நாம் அவருக்கு இரும்பை மிருதுவாக்கித் தந்தோம். (அல்குர்ஆன் : 34:10)
ஒரு நாள் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்களின் வணக்க மாளிகையின் முன் பக்க கதவுகளை உட்புறமாக தாழிட்டு விட்டு மாளிகையில் அமர்ந்து மனமொன்றி இறைவனை வணங்கிக் கொண்டிருந்தார்கள் அப்பொழுது இருவர் சுவர் ஏறி தொப்பென்று கீழே குதித்து உள்ளே நுழைந்தனர் அவர்களை கண்டதும் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் திடுக்கிட்டார்கள்.
“ْதாவூதிடம் நுழைந்த போது அவர்; அவர்களைக் கண்டு திடுக்குற்றார்; அப்போது அவர்கள் கூறினார்கள்; “பயப்படாதீர்! நாங்களிருவரும் வழக்காளிகள்; எங்களில் ஒருவர் மற்றவர் மீது அநீதம் செய்திருக்கிறார்; எங்களிருவருக்கிடையில் நீதத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பீராக! (அதில்) தவறிழைத்து விடாதீர்! எங்களைச் செவ்வையான பாதைக்கு நேர்வழி காட்டுவீராக!”
(அவர்களில் ஒருவர் கூறினார்:) “நிச்சயமாக இவர் என்னுடைய சகோதரர்; இவரிடம் தொண்ணூற்றொன்பது ஆடுகள் இருக்கின்றன; ஆனால் என்னிடம் ஒரே ஓர் ஆடுதான் இருக்கிறது; அவர் அதனையும் தனக்குக் கொடுத்துவிட வேண்டுமெனச் சொல்லி, வாதத்தில் என்னை மிகைத்து விட்டார்.”
(அதற்கு தாவூது அலைஹிஸ்ஸலாம்:) “உம்முடைய ஆட்டை அவர் தம்முடைய ஆடுகளுடன் சேர்த்து விடும்படிக் கேட்டது கொண்டு நிச்சயமாக அவர் உம்மீது அநியாயம் செய்து விட்டார்; நிச்சயமாகக் கூட்டாளிகளில் பெரும்பாலோர் – அவர்களில் சிலர் சிலரை மோசம் செய்து விடுகின்றனர்; ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்பவர்களைத் தவிர; இத்தகையவர் சிலரே” என்று கூறினார்; இதற்குள்: “நிச்சயமாக நாமே அவரைச் சோதித்து விட்டோம்” என்று தாவூது எண்ணித் தம்முடைய இறைவனிடம் மன்னிப்பு கோரிக் குனிந்து விழுந்தவராக இறைவனை நோக்கினார். (அல்குர்ஆன் 38: 22-24)
நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தீர்ப்பு வழங்கியது தவறேதும் ஏதும் இல்லையே பின் ஏன் இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்டார்கள்? அவர்கள் தீர்ப்பு கூறி வாய் மூடுமுன் அவர்களின் அறிவுக் கண்கள் வெளிச்சம் பெற்றன. அவர்களின் மனச்சான்று அவர்களை குத்தியது.
காரணம் தீர்ப்பு கேட்டு வந்த இருவரும் “தாவூத் தமக்கே தாம் தீர்ப்பளித்துக் கொண்டார்” என்று கூறியதும் வந்திருந்த இருவரும் இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட வானவர்கள் என்று நபி அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.
தன் மனச்சான்று உறுத்துதலுக்கு காரணமான சம்பவத்தை அறிய முன்காலத்தில் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் செய்த காரியத்தை நீங்கள் அறிய வேண்டும்.
முன்னொரு காலத்தில் ஒரு நாள் தங்களின் மண்டபத்தின் உப்பரிகை லிருந்து ஒரு அழகான பெண் தன் இல்லத்தில் குளித்துக் கொண்டிருக்கும் பெண்ணை பார்த்தார்கள். அந்தப் பெண்ணின் அழகில் தம்மைத்தாமே மறந்தார்கள் அத்தனை பேரழகு கொண்ட பெண் உடனே அந்தபுரத்து பெண்கள் இருவரை அழைத்து தான் சற்று முன் பார்த்த அழகிய பெண்ணைப் பற்றி விசாரிக்கிறார்கள்.
.
அதற்கு அந்தப் புறத்தில் பெண்கள் விசாரித்ததில் அவள் ஊரியா என்பவரின் மனைவி “பத்த ஷாயா” என்று கூறினார்கள். அதுகேட்டு தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பெரிதும் ஏமாற்றம் உற்றார்கள்.
எனினும் ஆசை அறிவுக்கண்ணை மறைக்க அவர்கள் அந்தப் பெண்ணின் கணவர் ஊரியாவை அழைத்து வருமாறு செய்து அவர் தம் மனைவி பத்த ஷாயாவை மணவிடுதலை செய்து விடுமாறும் பின் தாம் அவளை மணமுடித்து வாழ விரும்புவதாகவும் கூறினார்கள் அதற்கு அவளின் கணவர் ஊர்யா மனம் வருத்தப்பட்டு பின் சம்மதித்தார்.
ஆனால் அந்த அழகிய பெண்ணும் மன்னராய் இருந்த தாவூத் நபியிடம் ஒரு வாக்குறுதி கேட்டாள். அதாவது “நான் தங்களை மணந்த பின் தங்கள் மூலம் எனக்கு பிறக்கக்கூடிய மகனுக்கே அரியணை மற்றும் ஆட்சி அதிகாரம் தரவேண்டும்” என்று கேட்டாள்.
அவளின் அழகு உந்துதலின் காரணமாக அதற்கும் நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் வாக்குறுதி கொடுத்தார்கள்.
ஊரியா அவளை மண விடுதலை செய்ய நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவளை மணந்து தன் மனம் விரும்பிய மனைவியை பெற்று மகிழ்ந்தார்கள். அந்த அழகிய பெண் பத்த ஷாயாதான் நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஈன்றெடுத்த தாய் ஆவார்கள்.
ஆனால் ஊரியாவோ தம் அழகான மனைவியை இழுந்து தம் உள்ளத்தின் உள்ளே உழந்து கொண்டிருந்தார்.
ஒரு பெண்ணை விரும்பினால் அந்தப் பெண்ணின் கணவனை விவாகரத்து செய்யச் சொல்லி திருமணம் செய்வது அக்கால ஷரியத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தது. அக்காலத்தில் உள்ள மக்கள் இவ்வாறு திருமணம் செய்து கொள்வது வழக்கம்.
என்றாலும் நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முர்ஸலான நபியாக இருந்ததால் அவர்களது உயர்வான அந்தஸ்துக்கு இம்முறையில் திருமணம் செய்வது நல்லது அல்ல என்பதை உணர்த்தவே அவ்விரு வழக்காளிகளான 99+1 பெண் ஆடுகளின் வானவர்கள் மனித வடிவத்தில் தோன்றி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களது செயலை உருவகமாக கூறி உணர்த்தினார்கள்.
எனவே தாம் செய்த தீர்ப்பு சரியானதாக இருந்தாலும் தனக்கு 99 மனைவிகள் இருக்க ஊரியாவின் ஒரே ஒரு மனைவியை தான் சொந்தம் கொண்டாடியது தவறு என்று தன் மனம் உறுத்தியது இதற்காக நபி தாவூது அலைஹிஸ்ஸலாம் தன் பாவத்தை மன்னிக்க வேண்டி இறைவனிடம் அழுது புலம்பினார்கள்.
இது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்; “உலகத்தினர் அழுத கண்ணீரை விட ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கண்ணீரே அதிகம். நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கண்ணீரை விட நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கண்ணீரே அதிகம்” என்பதாக அனஸ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
( ரஹமத் ராஜகுமாரன் அவர்களின் “நானே தலைவன்” கட்டுரையிலிருந்து… Jazaakallaah khair.)