உரிமை இருப்பவர்களிடம்…
dr. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்
சொந்தம் பந்தம் நட்பு இவர்களிடம் இயல்பாக இருப்பதை விட்டும் உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும் தெரியுமா என்று சினிமாட்டிக்காகவா இருக்க முடியும். அன்பும் பாசமும் சொன்னல் தான் புரிய முடியுமா? உரிமை இருப்பவர்களிடம் தானே கோபப்பட முடியும். நம்முடைய கோபதாபங்களையும் சூழலையும் புரிந்து கொள்ளாமல் ஏன் என்னோடு அன்பாக இருக்க மாட்டேன் என்கிறீர்கள், ஏன் எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறீர்கள் என்று தினம் தினம் மருகி, பொசுக்கென்று சோர்ந்து போகும் உறவுகளோடு எப்படி மகிழ்ச்சியாக இருப்பது?!
நெருங்கிய உறவுகள் என்றாலே கோபம், ஆற்றாமை என்ற எதிர்மறை உணர்வுகளை தயங்காமல் வெளிப்படுத்தலாம் என்றும் அன்பு பாசம் காதல் என்ற நேர்மறை உணர்வுகளை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளப் படாமலேயே புரிந்து கொள்ளப் பட வேண்டியவை என்றும் தவறான புரிதல் தான் மகிழ்ச்சியற்று தவிக்கச் செய்யும் பல பிரச்னைகளுக்கும் மூல காரணம்.
ஆழ்மனது தன்னிடம் என்ன சொல்லப் படுகிறதோ அதையே உண்மை என நம்புகிறது. அது பொய்யானதாக இருந்தாலும். ஆழ்மனதின் இந்த குணத்தை வைத்தே பலராலும் சில பொய்கள் உண்மை என நம்பப்படுகிறது. சொல்லப் படாத பல உண்மைகள் பொய் என மறுக்கப்படுகிறது. இதனை placebo effect என்கிறது மனஇயல்.
நீங்கள் என்னதான் வெளிப்படையாக கோபப்பட்டாலும் உள்ளுக்குள் எத்தனை அன்பாக இருக்கிறீர்கள் என்பதை நெருங்கியவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நீங்கள் சாதாரணமாக நினைப்பதை, சாத்தியமில்லாமல் செய்வது இந்த placebo effect தான். இதை புரிந்து கொண்டால் எங்கு பிரச்சினை எழுகிறது, எதை சொல்ல வேண்டும் எதை சொல்லக் கூடாது எதில் மகிழ்ச்சி மலரும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
இத்தாலியில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் இந்த placebo effect செய்யும் மனநிலைக்கும் உடல் நிலைக்குமான தொடர்பு குறித்து ஆராய்ச்சி ஒன்று செய்தார்கள். அங்கு அறுவை சிகிச்சை முடிந்து அதன் வலியில் துடித்துக் கொண்டிருந்த நோயாளிகளை இரு பிரிவாக பிரித்து ஒரு பிரிவினரிடம் டாக்டர் பரிவாக தன் கைப்பட வலி நிவாரண மருந்துகளைக் கொடுத்து, அந்த மருந்துகள் சக்தி வாய்ந்தவை என்றும், எடுத்துக் கொண்ட சிறிது நேரத்திலேயே வலி குறைந்து விடும் என்றும் ஆதாரவாக சொல்லி அவற்றை உட்கொள்ள செய்கிறார். டாக்டர் கொடுத்த அந்த வலி மாத்திரைகளை சாப்பிட்ட அந்த பிரிவினரும் சிறிது நேரத்திலேயே வலி குறைந்து நிம்மதியாக உறங்குகிறார்கள்.
மற்ற பிரிவினரிடம் வலி மருந்து கொடுக்கப் படுவதாக எதுவுமே சொல்லாமல் ivy யில் அதே அளவு மருந்து செலுத்தப்படுகிறது. ஆனால் தனக்கு ஆகாரம் மட்டுமே செலுத்தப் பட்டு வலிக்கான மாத்திரை தரப்படவில்லை என்று எண்ண வைக்கப்பட்ட அவர்கள் வலி மாத்திரை சரியான அளவில் கிடைத்தும் முழுவதும் வலி குறையப் படாமல் வேதனையில் துடிக்கிறார்கள். அவர்கள் தனக்கு வலி மருந்து கொடுக்கப் பட்டதை மனதால் உணராததால், உடம்பாலும் உணர முடியாமல் இந்த வலி குறைய எங்களுக்கு வலி நிவாரணி தாருங்களேன் என்றே தொடர்ந்து அரற்றுகிறார்கள். தனக்கு கிடைக்கக் கூடிய மருந்தைக் கூட கிடைப்பது தெரியவில்லையென்றால் மனம் ஏற்றுக் கொள்ள மறுத்து உடலில் மருந்தின் பலனை குறைய செய்கிறது.
உடல் வலிக்கான மாத்திரையே சொல்லி தரும்போது நல்ல பலனையும் சொல்லாமல் தரும்போது குறைந்த பலனையும் ஏற்படுத்தும் போது சொல்லாமல் செலுத்தப்படும் அன்பும் பாசமும் என்ன பலனைத் தரும்?!. அதுவும் மனதால் அறியப் படாமல் பலன் குன்றிப் போகிறது.
அதே போல் வேறொரு placebo ஆராய்ச்சியில் தலை வலி என்று வருபவர்களுக்கு சாதாரண sugar pills கொடுக்கிறார்கள். அவர்களும் வலி குறைந்து நிம்மதியாகிறார்கள். கிடைக்காத ஒன்று கிடைப்பதாக நம்பச் செய்யும் போது மனம் அதை ஏற்றுக் கொண்டு உடலில் வலியைக் குறைக்கிறது. கிடைக்கக் கூடிய ஒன்றை மனம் அறியாமல் இருக்கும்போது உடலில் குறையும் வலியைக் கூட மனதால் அறிய முடியாமல் துடிக்கிறது.
Appreciation can make a day even change a life. Your willingness to put it in to words is all that is necessary. பாராட்டு ஒரு நாளை ஏன் ஒரு வாழ்க்கையையே நல்ல முறையில் மாற்றக் கூடிய சக்தி வாய்ந்தது. அதை உங்கள் வார்த்தைகளால் நீங்கள் சொல்ல முன் வரவேண்டியது மட்டுமே இங்கு முக்கியம் என்கிறார் மார்கரட் கஸின்ஸ்
உங்கள் பெற்றோராக இருந்தாலும், வாழ்க்கைத்துணையாக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும், உங்கள் மனதுக்குப் பிடித்தவர்களிடம் அவர்களை உங்களுக்குப் பிடிக்கும் என்பதை சமயம் கிடைக்கும் போதெல்லாம் வெளிப்படையாக சொல்லிக் கொண்டே இருங்கள் என்கிறது வாழ்வியல்.
பிறர் செய்கிற ஏதேனும் சிறு செயல் உங்களை மகிழ்ச்சிப்படுத்தினாலும் அதனை அவர்களிடம் சந்தோஷமாக பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்கள் செயல்களின் பலன்கள் அவர்களுக்கு சொல்லப்படும் போது அது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அவர்கள் ஆற்றலை அதிகரிக்கிறது. அது மட்டுமல்ல பிடிக்காதவைகளைக் கூட பிடிக்கும் என்று மீன்டும் மீன்டும் சொல்லும்போது மனம் அதை நம்பத் தொடங்கி அதை உங்களுக்கு பிடித்ததாகவே மாற்றி விடுகிறது.
அமெரிக்காவில் நடந்த மற்றொரு ஆய்வு ஒன்றில் பல ஹோட்டல்களில் இரவு பகலாக கிளினிங் வேலை செய்யும் பெண்களிடம், நீங்கள் உடற்பயிற்சி செய்கிறீர்களா என்றபோது இல்லை. எங்களுக்கு அதற்கெல்லாம எங்கே நேரம் இருக்கிறது. இந்த வேலையிலேயே பொழுது போகிறது என்று ஆற்றாமையாக சொன்னார்கள்.
அவர்களின் உடல் எடை, இரத்த அழுத்தம் எல்லாவற்றையும் பரிசீலனை செய்த ஆய்வாளர்கள், ஒரு சில தினங்களில் அந்த பணியாளர்களை இரு பிரிவினராக பிரித்து, ஒரு பிரிவினரிடம் அவர்கள் செய்யும் பணியின் சிறப்புகளை எடுத்து சொல்லி, உண்மையில், இந்த வேலையே மிகச்சிறந்த உடற்பயிற்சி தான், நீங்கள் செய்து கொண்டிருக்கும் இந்த வேலையில் உங்கள் உடலில் அதிகம் கலோரி எரிக்கப்பட்டு உங்கள் உடல் ஆரோக்கியமடைகிறது, அத்துடன் உங்கள் மனதுக்கும் இந்த வேலை செய்வதால் உற்சாகம் கிடைக்கிறது. இதை நீங்கள் உங்கள் மனதில் புரிந்து கொண்டு செய்யும் போது அதன் பலன் உங்களுக்கு தெரியும் என்று கூறினர். மற்றொரு பிரிவினரிடம் ஒன்றும் சொல்லாமலே விடப்பட்டது.
ஒரு மாத காலம் அவர்களைக் கூர்ந்து கவனித்த ஆய்வுக் குழுவினர் மீன்டும் அவர்களை பரீசீலனை செய்த போது, பணியின் சிறப்புகளை எடுத்து சொன்ன பணியாளர்கள் மிக உற்சாகமாகவும் ஆரோக்யமாகவும் உடல் எடை குறைந்தும் இருந்தனர். ஒன்றுமே சொல்லப் படாத மற்றொரு பிரிவினரிடம் எந்த மாற்றமும் இல்லாதது மட்டுமின்றி இன்னும் சோர்ந்து காணப்பட்டனர்.
வேலை செய்வது என்பது இயல்பான விஷயமாக இருந்தாலும், அதனை அப்ரிஷியேட் பண்ணி, அதன் பலன்கள் எடுத்து சொல்லப் படும்போது, அதை அவர்கள் மனம் உணரத் தொடங்கி, அது மகிழ்ச்சியையும் நல்ல விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. தாங்கள் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல், எந்த அங்கீகாரமும் இல்லாமல் ஒன்றை செய்யும் போது அது மனதில் சலிப்பை ஏற்படுத்தி உடல் சோர்வை தருகிறது என்கிறது அந்த ஆய்வின் முடிவு.
அதுபோல, அன்பு பாசம் என்பதெல்லாம் உறவுகளுக்கும் நட்பிலும் இயல்பானதாகவே இருந்தாலும், அவற்றை அப்ரிஷியேட் பண்ணும்போது அது நல்ல விளைவுகளையும் மகிழ்ச்சியையும் தருகிறது.
தனக்கு முன்னால் என்ன நடக்கிறதோ அதையே உண்மை என மனம் நம்புகிறது. தன்னை யாராவது கோபமாக பேசினால் அவர்கள் தனக்கு வேண்டாதவர்கள் என்றே மனம் அவர்களை ஒதுக்க பழகுகிறது.
இனி, நெருங்கியவர்களிடம்தானே உணர்வுகளை காட்ட முடியும், உள்ளோடிய பாசமும் நெருக்கமும் இருக்கும்போது, வெளிப்படும் கோபத்தால் என்ன தீங்கு ஏற்பட்டு விடப் போகிறதென்ற எண்ணம் எழும் போது இந்த placebo effect டை நினைத்துக் கொண்டு செயல் படுங்கள்.
ஒரு உணவு தயாரிக்கும் கம்பெனியின் நார்மலான உணவுகளை வெளியில் உள்ள லேபிளை மட்டும் மாற்றி ஒன்றில் டயட்டெரி ஃபுட் என்றும் மற்றொன்றில் ஃபேட்டி ஃபுட் என்றும் ஒட்டி இரு சாராருக்கு கொடுத்தனர். ஒரே மாதத்தில் டயட்டெரி ஃபுட் என்று லேபிள் ஒட்டிய உணவினை சாப்பிட்டவர்கள் கொஞ்சம் எடை குறைந்து போக, ஃபேட்டி ஃபுட் லேபிள் உணவு சாப்பிட்டவர்களின் இரத்தத்தில், உண்மையில் கொழுப்பு உணவு சாப்பிடும் போது அதிகரிக்கக் கூடிய ghrelin லெவல் அதிகரித்து அதிக எடை போட்டு விட்டனர்.
மனநிலைக்கும் உடல் நிலைக்கும் இந்த அளவுக்கு தொடர்பு இருக்கிறது என்கிறது அந்த ஆய்வின் முடிவு.
நீங்கள் அன்பையும் உரிமையையும் கோபம் என்னும் லேபிள் ஒட்டி கொடுத்தால் ஃபேட்டி ஃபுட் சாப்பிட்டவர்களுக்கு ஏற்பட்ட நிலைதான் உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கும் ஏற்படும்.
எவ்வளவு வேலை செய்தாலும் அது அங்கிகரிக்கப் படும்போது, பாராட்டப்படும் போது கிளர்ந்தெழும் placebo effect, எதையும் சரி பண்ணக் கூடிய சந்தோஷ மன நிலையை அவர்களுக்கு கொடுத்து மகிழ்ச்சியாக எந்த வேலையையும் செய்ய வைப்பதோடு பாராட்டுபவர்களையும் மகிழ்ச்சியாக வைக்கிறது. மகிழ்ச்சியாக செய்யக் கூடிய செயல்களும் நல்ல result டை த் தருகிறது.
அன்பை இனிமையான பழரசமாய் சேர்ந்து பருகுவதோடு கோபத்தையும் எரிச்சலையும் கூட அன்பு பாசம் என்னும் லேபிள் ஒட்டிக் கொடுங்கள், உறவும் நெருங்கும், மகிழ்வும் மலரும்.
From: Fajila Azad <fajila@hotmail.com>;
முதுவை ஹிதாயத்
www.mudukulathur.com
muduvaihidayath@gmail.com
00971 50 51 96 433