‘தர்மமும் தியாகமும்’ – சிறுகதை
அ.முஹம்மது நிஜாமுத்தீன்
பக்ரீத் பண்டிகை சிறப்பாக முடிந்தது. பெருநாள் சிறப்புத் தொழுகையை முடித்துவிட்டு, குர்பானி ஆடு அறுத்து, அதில் மூன்றில் ஒரு பங்கு சொந்த உபயோகத்திற்கு வைத்துக்கொண்டு, ஒரு பங்கை உறவினர்களுக்கும் மற்றொரு பங்கை எளியவர்களுக்கும் பகிர்ந்தளித்தோம்.
சுவையான உணவு உண்டுவிட்டு மாலை நேரமானதும் நானும் என் மனைவியும் தஞ்சாவூர் நகருக்கு புறப்பட்டுச் சென்றோம்.
எஸ். ட்டீ. ஹாஸ்ப்பிடல் (ப்பீ) லிமிடெட், தஞ்சாவூரின் தரமான மருத்துவமனைகளில் ஒன்று. நான்கு தளங்களுடன், தனது பெயரை நியான் விளக்குகள் மூலமாக ஒளி வீசிக் கொண்டிருந்தது.
மாலை 6 மணி.
நான் எனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு என் மனைவியுடன் மருத்துவமனை நோக்கி சென்றேன்.
கேண்ட்டீன் காரர் என்னைப் பார்த்து, “சார், ட்டீ குடிக்கிறீங்களா?” எனக் கேட்டார்.
என் மனைவியிடம் கேட்டுவிட்டு, “திரும்ப வரும்போது குடிக்கிறோம் சார், இன்ஷா அல்லாஹ்!” என அவருக்கு பதில் கூறிவிட்டு படிகள் ஏறி இருவரும் மருத்துவமனையின் உள் சென்றோம்.
மருத்துவமனை பெண் ஊழியர் எங்களைப் பார்த்து, “எந்த டாக்டர் பார்க்கணும்? எஸ்.ட்டீ. சாரா? ட்டீ.சி. சாரா?” எனக் கேட்டாள்.
மருத்துவரைப் பார்த்து ஆலோசனை கேட்க கூடியிருந்த மக்கள் வெள்ளத்தைப் பார்த்துக் கொண்டே, “டாக்டர் யாரையும் பார்க்க வேண்டாம்; அன்புக்குடிலுக்கு நன்கொடை கொடுக்கணும்! கேஷ் கவுண்ட்டர்ல கட்டி இரசீது வாங்கிக்கலாமா?” என நான் கேட்டேன்.
“கேஷ் கவுண்ட்டர்ல கட்ட வேண்டாம்; டாக்டர்ட்டையே கட்டி இரசீது வாங்கிக்கலாம் நீங்க!” என்றாள் அந்தப் பெண்.
“டாக்டரைப் பார்க்க கூட்டம் நிறைய இருக்கு! எனக்கும் அதுவரை காத்திருக்க முடியாது! வேற இடத்துக்கும் போகணும்! கேஷ் கவுண்ட்டர்லயே கட்டிட்டுப் போய் விடுறேன்” என்று நான் சொன்னேன்.
“இல்லை சார்! நீங்க அஞ்சு நிமிஷம் வெய்ட் பண்ணுங்க; டாக்டரைப் பார்த்திடலாம்!” என்று கூறி அமரவைத்தாள்.
டாக்டரின் அறையிலிருந்து நோயாளி வெளியேறி, அடுத்த நபர் உள்ளே செல்லும்போது அந்த உதவியாளரும் உள்ளே சென்று விட்டு வந்தாள். டாக்டரிடம் தகவல் சொல்லியிருப்பாள் போலிருக்கிறது.
அடுத்து, உள்ளிருந்த நபர் வெளியானதும் டாக்டரின் அறைக்கு எங்களை அனுப்பி வைத்தாள்.
நாங்கள் உள்சென்றதும் டாக்டர் எழுந்து, கை நீட்டி என் கையைப் பிடித்து குலுக்கி, “சார் நீங்களா!!! வாங்க, வாங்க! உட்காருங்க!” என்றார்.
“பரவாயில்லை சார்! நம்ம அன்புக்குடிலுக்கு கொஞ்சம் நன்கொடை தரலாம்னு வந்தோம்!” என்றவாறு பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து அவரிடம் கொடுத்தேன்.
“சார், வெளியே கூட்டம் நிறைய இருக்கு! ரசீது கொடுத்தால் புறப்பட்டுருவோம்” என்றேன்.
“முதலில் உட்காருங்க!” என்றதும் உட்கார்ந்தோம்.
“சார், நாங்க உங்ககிட்ட நேரடியா, அன்புக்குடிலுக்கு நன்கொடை குடுங்கன்னு கேட்டோமா?” என்று கேட்டார்.
“இல்ல சார்!
சென்ற முறை வந்தபோது வெளியே விளம்பர போஸ்டர் பார்த்தோம்! அதனால இன்றைக்கு பணம் கொண்டுவந்தோம்!” என்றேன்.
“அதான் சார்! நீங்களாகவே, ஓர் ஆர்வத்துல உதவணும்னு வறீங்க! அப்ப நாங்க உங்களுக்கு தகுந்த மரியாதை செய்யணும்ல? அதனாலதான், முன்னுரிமை அடிப்படையில உங்கள உள்ளே வரச் சொன்னது!”
சொல்லிக் கொண்டே இரசீது எழுதினார்!
“சார்… அன்புக்குடில்ங்கறது கறந்தையில, ஒரு பெரிய வீடு, தோட்டத்தோட அமைஞ்சிருக்கற ஓர் அமைதியான இடம்.
“அங்கே, புற்றுநோயால கஷ்டப்படுறவங்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் சேவை அடிப்படையில உதவிகள் செஞ்சிட்டிருக்கோம். சுமார் 50 நபர்கள் உள் நோயாளியாக அங்கே இருக்காங்க! மேலாளர், உதவியாளர், தோட்டக்காரர், சமையல்காரர், உதவியாளர்னு இன்னும் ஏழு பேர்கள் அங்கே பணியில இருக்காங்க!
“வீட்டோடவே சொந்த காய்கறி தோட்டம் இருக்கு!
“நாங்க 3 டாக்டர்கள் சேர்ந்து நடத்துறோம்! தினமும் போய் கவனிச்சிக்கிறோம். சிறப்பு மருத்துவர்களும் வாரத்தில இரு நாட்கள் வற்ராங்க!
“இன்னும்,
மூணு வேளையும் சத்தான சாப்பாடு, ஆரோக்கியமான பழங்கள், காஃபி, ட்டீ, உள்ளேயே ட்டீவி, நடைபயிற்சிக்கு இடம், வழிபாடு, தியானம் இதுக்கெல்லாம் தனி இடம், பொழுதுபோக்கு, பத்திரிகைகள்னு குறையென்று எதுவுமில்லைனு சொல்லும்படியா சிறப்பா சேவையாக இதை செய்திட்டிருக்கோம்!
“உங்களப்போல நல்ல உள்ளம் படைத்த அன்பர்கள் தரும் உதவிகள்தான் இந்த இல்லம் இயங்குறதுக்கான உயிர் நாடியா விளங்குது.
இந்த சேவை தொடரணும்னு பிரியப்படுறேன்!
” ‘மனிதன் சேமித்த செல்வத்தில்,
உண்டு கழித்தது,
உடுத்தி கிழித்தது,
தர்மம் செய்தது
இந்த மூன்று மட்டுமே அவனுக்கு சொந்தமானது’-னு நபிகள் நாயகம் சொன்னதை நான் படித்திருக்கிறேன்!
“நீங்களும் இன்றைக்கு பக்ரீத் குர்பானி முடிச்சிட்டு, எங்ககிட்டே உங்களோட தர்மம் செய்ற தொகையை, கணவன் மனைவி இணைந்து வந்து கொடுத்திருக்கீங்க!
“அந்த வகையில குர்பானி கொடுத்ததற்கும் தர்மம் செய்ததற்குமான கூலி, இறைவனிடமிருந்து நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும்.
“நீங்களும் உங்களுக்கு வசதிப்படுற நேரத்தில அங்கே வந்து பார்வையிடணும்னு கேட்டுக்கறேன்!” என்று கருணையான குரலில் கேட்டுக் கொண்டார்.
“இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்) விரைவில் அவசியம் வற்ரோம் சார்!” என்று கூறி அவரிடமிருந்து இரசீதைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டோம்.
அதையடுத்து, சிற்றுண்டி விடுதிக்குச் சென்று, அங்கு வந்த வயதான எளியவருக்கு வடை, ட்டீ வாங்கிக் கொடுத்துவிட்டு நாங்களும் சாப்பிட்டு பார்சலும் கொஞ்சம் வாங்கிக் கொண்டு வயிறு நிறைய சிற்றுண்டியுடனும் மனம் நிறைய மகிழ்ச்சியுடனும் உதவிட நல்வாய்ப்பு தந்த இறைவனுக்கு நன்றி கூறி,
மகிழ்ச்சியில் திளைத்தவண்ணம் இரு சக்கர வாகனத்தை உயிர்ப்பித்து புறப்பட்டோம்.