பெண் நினைத்தால் புருஷனைப் புனிதனாக்கலாம்!
ஒரு பெண் நினைத்தால் புருஷனைப் புனிதனாக்கலாம்! கணவன் செய்யும் சிறு தவறுகளையும் தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டு தண்டோராப் போடுவதால் தனக்கும் கேவலம்; தன் குடும்பத்துக்கும் கேவலம் என்பதை சில பெண்கள் உணர்வதில்லை.
உலகில் எல்லாக் கணவனும் உத்தமன் என்று இருக்க மாட்டான்! பித்தன் இருப்பான்! பித்தலாட்டக்காரன் இருப்பான்! குடிகாரன் இருப்பான் கூத்துக்காரன்கூட இருப்பான்.
அவனைக் குழந்தைப் போல் எண்ணிக்கொண்டு செய்யும் தவறுகளைப் பொறுத்து, கொடுக்க வேண்டியதைக் கொடுத்து – கடிக்க வேண்டிய நேரத்தில் கடித்து வைத்தால் ஒரு நாள் இல்லை… மறுநாள் அவன் நிச்சயம் திருந்துவான்.
“அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?” என்பது போல அன்பையும், பண்பையும், பாசத்தையும் காட்டி கல்மனதுக் கணவனையும் கனிய வைக்கலாம்! இரும்பான இதயத்தையும் உருக வைக்கலாம்.
ஒரு குடும்பத்தில் வளர்ந்துவிட்ட வாலிபனுக்குப் பெண் பார்க்க வேண்டிய கடமை பெற்றோருக்கு வந்துவிட்டது. ஆனால், “பையன் பெயர் சொல்லி” பெண் கேட்கும் அளவுக்கு மகனுக்கு நல்ல பெயர் இல்லை என்பதை உணர்ந்து இருந்தார்கள். சொல்லி வைத்த இடங்களில் எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை. தெரியாதவர்கள் வந்து பார்த்துப் போனாலும், பையனுக்குப் பெண் கொடுத்தால் குடும்ப மானம் கப்பலேறிவிடும் என்று தெரிந்து கொண்டு நழுவி விட்டார்கள்.
பையனின் நண்பர்கள் நல்லவர்கள் அல்ல! பையன் குடுமத்துக்கு அடங்கியவன் அல்ல! ‘தாய் தந்தைக்கெல்லாம் முந்திப்பிறந்தவன்’ (அதாவது தாய் தகப்பன் பேச்சை கேட்காதவன்) என்று சொல்வார்களே! அது போல் இருந்தான். வீட்டுக்கு வந்த மனிதர்களுக்குக் கூட மரியாதை கொடுக்கத்தெரியாதவன். வாழ்க்கைப்பட்டு வந்தவளை எப்படி மானத்தோடு வாழ வைப்பான்? என்ற கேள்வியையே எல்லோரும் கேட்டனர்.
மற்றவர்கள் கேட்டதற்கு தகுந்த பதில் சொல்ல முடியாமல், தாய், தந்தை மவுனமாகத்தான் இருந்தார்கள். பிள்ளை உருப்படியாக இருந்தால் அல்லவா துணிந்து பேச முடியும்?!
காலங்கள் சென்று கொண்டிருப்பதைப் பெற்றோர்கள் உணர்ந்தார்களே தவிர, பிள்ளை உணர்ந்த பாடில்லை. அவன் ஒரு நாள் உழைத்து வருவதும் அதைத் தானே வைத்து மறுநாள் செலவழித்து விடுவதுமாக சொகுசு வாழ்வில் திரிந்து கொண்டிருந்தான்.
கடைசி முடிவாக ஒரு உறவினரை அழைத்து உண்மை நிலாவரங்களை எல்லாம் சொன்னார்கள். குடும்ப நிலை! பையனின் நிலை! அவனின் போக்கு…! எல்லாம் இதுதான்! இப்படிப்பட்ட என் மகனுக்கு பெண் வேண்டும்! அவன் உழைத்துப் போடாவிட்டாலும் நாங்கள் அவளைக் காப்பாற்றுவோம்! எங்களை நம்பிப் பெண் பாருங்கள்! எங்கள் மானத்தைக் காப்பாற்றுவதற்காக அவனுக்கு ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும்.” என்று சொல்லி மன்றாடினார்கள்.
இதையெல்லாம் கேட்டவர் யோசித்துவிட்டு “எங்கள் ஊரில் எனது தூரத்து உறவில் ஒரு பெண் இருக்கிறாள். தாய் உண்டு! தந்தை இல்லை! எளிய குடும்பம்! அவர்களிடம் சொல்லிப்பார்க்கிறேன். அவர்கள் இஷ்டப்பட்டால் சொல்கிறேன்…” என்று சொல்லிச் சென்றவர் நல்ல பதிலோடு மறுமுறை சந்தித்தார்.! சம்மதம் சொன்னார்!
மாப்பிள்ளை வீட்டார் குடும்பத்தோடு ஊர் சென்று திருமணம் முடித்துப் பெண்ணை மலேசியா கொண்டு வந்து விட்டார்கள். மலையைப் பெயர்த்து மடியில் வைத்துக் கொண்ட பெருமை அவர்களுக்கு! இனிமேல் தான் இடியும் மின்னலும் என்ற கலக்கமும் ஒரு பக்கம் இருந்தது. அதுவும் வந்துவிட்டது.
ஒரு நாள் மகன், மருமகளை அழைத்துக்கொண்டு நண்பர் வீட்டு விருந்துக்குக் கிளம்பினான். திரும்பி வரும்போது ஒரு வாடகை வண்டி அவனைக் கொண்டு வந்து வீட்டு வாசலில் போட்டுவிட்டுப் போனது. மருமகள் வாந்தியும், பேதியுமாக விழி பிதுங்கி, கண் கலங்கி நின்று கொண்டிருந்தாள்.
ஜடமாகக் கிடந்த பையனை இழுத்துச் சென்று வீட்டில் போட்டுவிட்டு – மருமகளை பதவிசாக அழைத்துப் போய் உடல் கழுவி, உடை மாற்றி வைத்தார் மாமியார்.
“இப்படித்தாம்மா… எவனாவது இழுத்துப் போய் இல்லாததும் பொல்லாததும் நடந்து விடுகிறது!” என்று மாமியார் கூறினார். இடித்து வைத்த புளி போல் அமர்ந்திருந்த மருமகள் அதிர்ச்சியில் மூழ்கி இருந்தாள். செய்வதறியாது மிரண்டு போய் உட்கார்ந்திருந்தாள். தான் ஏதோ சூனியத்தில் மாட்டிக்கொண்டது போன்ற பிரமை அவளுக்கு! திருமணதுக்கு தரகு பார்த்த பெரியவரை அழைத்துப் பேசினாள். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த பெரியவர் பேசினார்!
“அம்மா! இதெல்லாம் பழைய கதை! சின்ன விஷயம்! பையனைத் திருத்துவது உன் பொறுப்பு! பெண்ணுக்கு அடங்காத ஆணில்லை! உன்னை ஊரில் இருந்து கூட்டிக்கொண்டு வந்துவிட்டேன். உனக்கு இனி இங்குதான் வாழ்க்கை! மாமியார், மாமனார் தங்கமானவர்கள். அனுசரித்துப் பையனைத் திருத்து.” என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.
வெறி கொண்ட வேங்கை போல் ஆனாள். இனி யாரும் நமக்குப் பொறுப்பில்லை. ஆண்டவன் தான் பொறுப்பு! பொழுதுபோக்கான கணவன்! தண்டிக்க முடியாத பெற்றோர்! இதற்கிடையே நாம்! என்ன செய்வேன் இறைவா? என்று ஏதோ முடிவுக்கு வந்து விட்டாள்.
மாமியார், மாமனார் யாரும் தன் புருஷனுக்குப் பணம் கொடுக்கக் கூடாது. அவர் உழைத்து வந்தால் தான் அவருக்கு வீட்டில் சாப்பாடு; உழைக்காத போது வெளியிலே சாப்பிடட்டும்! கொஞ்ச நாளைக்கு அவர் மேல் யாரும் இரக்கப்படக் கூடாது. இது அவள் போட்ட சட்டம்.
இதற்கிடையே கணவனுக்குத் தேவையான மற்ற பணிவிடைகளைக் குறைவின்றிச் செய்து கொடுத்தாள். “குடும்ப வாழ்வுக்கு” ஈடு கொடுத்தாள்! மனைவி என்ற பாத்திரத்தில் இருந்து எள்ளளவும் பிசகவில்லை. ஆனால், காசு பணத்தில் மட்டும் கச்சிதம் செய்து கொண்டாள்.
தன் கணவன் அழைத்து வரும் நண்பர்களுக்கு எவ்விதப் பணிவிடையும் காட்டவில்லை. இதை அவமானம் என்று சொன்ன கணவனிடம் “இவர்கள் நம் வீட்டுக்கு வருவதே அவமானம்” என்றாள்.
கணவன் கோபமாக நடந்தாலும் மறைவில் குணம் காட்டிக் குளிர வைத்தாள். அவனின் சில குற்றங்களைத் திரை மறைவில் திருத்தினாள். பிறரிடம் சொல்லி அங்கலாய்க்கவில்லை. அவனை வீணாகப் புகழ்ந்தாள்.
“நீங்கள் நல்லவர்தான். உங்கள் கூட்டாளிகள் தான் உங்களைக் கெடுக்கிறார்கள்” என்றாள்.
“நீங்கள் வீட்டில் இருந்தால்தான் வீடு நன்றாக இருக்கிறது. வேலை முடிந்ததும் வீட்டுக்கு வந்து விடுங்கள்” என்பாள். எப்படியோ தன் மனைவி தன் மீது அக்கரை உள்ளவள் என்பதை அவன் மதில் விதைத்து விட்டாள்.
முடிவு என்ன ஆனது…!
நண்பர்களை விட்டான்! கெட்ட பழக்கங்களை விட்டான்! வேலை உண்டு வீடு உண்டு என்று மாறினான்! மனைவி பட்ட பாட்டுக்கு நல்ல பலன் கிடைத்து விட்டது.
-மவ்லவீ, உமர் ஃபாஜில் மன்பஈ