எப்பேற்பட்ட ஜோடி!
அனைத்து விதங்களிலும் தன்னைப்போன்று திகழுகின்ற தன்னையொத்த பண்புநலன்களைக் கொண்ட வாழ்க்கைத் துணை ஒருவருக்கு அமைந்துவிட்டால் அதைவிட பெரும்பேறு வேறெதுவும் இல்லை
.
நீங்கள் ஏதோ ஓர் உலகில் வசிக்கிறீர்கள், உங்கள் மனைவி வேறு ஏதோ ஓர் உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார் என்றால் அதைவிடக் கொடுமை உலகில் வேறெதுவும் கிடையாது
.
தூய்மையான, கற்பிலும் பண்பிலும் சிறந்த இல்லத் துணை ஒரு வருக்கு வாய்க்கப் பெற்றால் உலகிலுள்ள அனைத்து அருட்கொடைகளும் அவருக்கு நிறைவாகக் கிடைத்துவிட்டன என தயக்கமேயில்லாமல் தாராளமாகச் சொல்லலாம்
.
பொதுவாக, மனிதன் யதார்த்தத்தில் ஒரு விதமாகக் காட்சி அளிக்கிறான். அதேசமயம் தான் எப்படி மாறவேண்டும் என்றோர் இலட்சிய உருவை கற்பனையில் கொண்டிக்கிறான். அதுபோன்றே, தான் எப்படி மாறிவிடக் கூடாது என்றும் ஓர் உருவை மனதில் பதித்து ஒதுக்கி வைத்துள்ளான்.
கணவன் – மனைவி இருவருக்கு இடையிலும் இவ்விரு விஷயங்களும் ஒன்றுபோல ஒத்துப்போகின்றன என்றால் அது யாருக்கும் எளிதில் கிட்டாத, எங்கும் அவ்வளவு எளிதில் காணமுடியாத நற்பேறு ஆகும். அப்படிப்பட்ட ஜோடி ஒன்றை இறைவன் இங்கே ஏற்படுத்தினான். இவரோ அல்அமீன், அவரோ அத்தாஹிரா.
நீங்கள் எப்படி உள்ளீர்களோ உங்களுடைய மனைவியும் அப் படிப்பட்டவளாகத்தான் இருப்பாள். ஏறக்குறைய அனைத்து ஜோடி களும் பொருத்தமான ஜோடிகளாகத்தான் அமைகின்றன. எங்காவது இலட்சத்தில் ஓரிடத்தில்தான் பொருத்தம் தவறி அமைந்து விடுகின்றது. அது வெகுநாள்கள் நிலைக்காது. பிரிந்துவிடும்.
தன்னுடைய தூதருக்கு இறைவன் ஒரு பெண்ணை தேர்ந்தெடுக் கிறான் என்றால் அவள் எப்பேற்பட்ட பெண்ணாக இருந்திருக்க வேண்டும். தாஹிரா என அழைக்கப்பட்ட பெண்மணி. இந்த ஜோடி எப்பேற்பட்ட ஜோடி என்பதை கொஞ்சம் பாருங்களேன் மண மகனை மக்கள் யாவரும் அல் அமீன் – நேர்மையாளர், அஸ்ஸாதிக் – வாய்மையாளர் என அழைக்கிறார்கள். மண மகளையோ அத் தாஹிரா- தூய்மையானவர் என அழைக்கிறார்கள்.
இறைவன் இணைத்துவைத்த இந்த இணை, இந்த ஜோடி எப்பேற்பட்ட ஜோடி என்று பாருங்கள். ஜாஹிலிய்யா காலத்திலேயே இருவருக்கும் மக்களால் சிறப்புப் பெயர்கள் சூட்டப் பட்டுவிட் டன. ஒருவர் அல்அமீன். (நேர்மையாளர்) இன்னொருவரோ அத் தாஹிரா. (ஒழுக்கக் குன்று) அல்அமீனுக்கும் அத்தாஹிராவுக்கும் நடந்த திருமணம். ஸுப்ஹானல்லாஹ்! இறைவா, நீ மகத்தானவன்
.
ஒழுக்கம் என்னும் பண்பிற்கு காலவரையறை எதுவும் கிடையாது. காலம் என்னென்னவோ பொருட்களை தன்னுள் கொண்டுள்ளது. பெருமதிப்பு மிக்க பொருள்கள் அதனுள் உள்ளன. விலைமதிப்பற்ற, இல்லத்தை அலங்கரிக்கும் சாதனங்கள் உள்ளன. பெரும் பெரும் வாழ்வியல் பொருட்கள் உள்ளன. நந்தவனங்கள் உள்ளன.
தொழிற்கூடங்கள், பண்பாட்டு பெருமன்றங்கள், வளர் சங்கங்கள், திடல்கள், அவைகள் ஏன், அரசியற்றும் சபைகள் என எல்லாமுமே காலத்திற்குள் அடங்கி விடுகின்றன. ஆனால், காலத்தை தாண்டி நிற்கின்றது ஒழுக்கம். மனிதன் செய்யும் அனைத்து வினைகளும் காலத்திற்குள் அடங்கிவிடுகின்றன. ஆனால் மனிதனின் ஒழுக்கம் மட்டும் காலங்கடந்து விரிந்து பரவி நிற்கின்றது. மற்றவரின் பார்வையை அவனை நோக்கி ஈர்க்கும் வல்லமை உடையதாக ஒழுக்கம் மட்டுமே திகழுகின்றது.
ஒழுக்கச் சிறப்புகளின் வாயிலாக மனிதன் உயர்ந்த இடத்தை அடைகிறான். ஒழுக்க சிறப்புகள் உள்ளத்தை சீர்படுத்துகின்றன நல்லுள்ளத்தில் நற்கருத்துகள் இடம்பெறுகின்றன. நற்கருத்துகள் நல்ல மனிதனை உருவாக்குகின்றன. ஒழுக்கம் உயர்வுக்கு வழி கோலுகின்றது. ஒழுக்கம் சிகரத்தில் ஏற்றி உங்களை உட்கார வைக்கின்றது. ஒழுக்கச் சிறப்பில்தான் உயர்ந்த அந்தஸ்தை மனிதன் அடைந்து கொள்கிறான்.
‘அல்அமீன்’ என மக்களால் சிறப்பிக்கப் பட்டவர் பிற்காலத்தில் இறைவனின் தூதராக மாறுகிறார். அத்தாஹிரா என மக்களால் சிறப்பிக்கப் பட்டவர் பிற்காலத்தில் இறைத்தூதரின் மனைவியாக மாறுகிறார். அது மட்டுமல்ல உம்முல் முஃமினீன் என்னும் அடைமொழிக்கு சொந்தக்காரராக மாறுகிறார்.
உம் முல் முஃமினீன் என்னும் அடைமொழிக்கு முற்றிலும் சொந்தக்காரராக ஏறக்குறைய 25 ஆண்டுகாலம் தனித்து திகழ்ந்திருக்கிறார்கள். உம்முல் முஃமினீன் என்னும் அடைமொழி முதன் முதலாக கதீஜா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு மட்டுமே பொருந்துகின்றது.
அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்ன பொன்மொழி ஒன்றை இங்கு நினைவுகூருங்கள்.
“அடைக்கல நேர்மை யாரிடம் இல்லையோ அவரிடம் இறை நம்பிக்கை -ஈமான் இல்லை. வாக்குத்தூய்மை யாரிடம் இல்லையோ அவரிடம் இறைநெறி – தீன் இல்லை”
எவ்வளவு அற்புதமான கருத்து இது! அடைக்கல நேர்மைக்கும் இறை நம்பிக்கைக்கும் தொடர்பு இருக்கின்றது. வாக்குத் தூய்மைக்கும் சமய நெறிக்கும் தொடர்பு இருக்கின்றது.
இப்பொழுது மறுபடியும் நுபுவ்வத்திற்கு முந்தைய அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் காணுங்கள். அடைக்கல நேர்மை கொண்டவர்; வாக்குத் தூய்மை உடையவர். இவ்விரண்டு பண்புகளின் காரணத்தினால் அண்ணலார் ஸல்லல் லாஹு அலைஹி வ ஸல்லம் இறைவனின் தூதராக, ஈமானை இவ் வுலகத்திற்கு அறிமுகப்படுத்தும் இறைத்தூதராக, இஸ்லாமிய சமய நெறியை இவ்வுலகத்திற்குக் கொண்டுவரும் இறைவனின் நபியாக மாறினார்கள் என்று சொல்லலாம்.
அத்தாஹிரா தூய்மையானவர்! எப்பேற்பட்ட சமூகம் அது? ஜாஹிலிய்யாவின் தீமைகள் யாவும் கொட்டிக் கிடக்கின்ற சமூகம். அக்காலத்து மக்கள் ஜாஹிலிய்யாவை ஒரு பண்பாடாக பின்பற்றி னார்கள். மனைவியரை மாற்றிக் கொள்ளும் வழக்கம் போன்ற நவீன காலத்து கேடுகெட்ட வழக்கங்கள் யாவும் அக்காலத்தில் தென்பட்டன. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் கதீஜா ரழியல் லாஹு அன்ஹா ஒழுக்கத்திலும் பண்புநலன்களிலும் மிகச்சிறந்தவ ராக விளங்கினார்கள்.
எதைச் செய்தாலும் யாரும் ஏறெடுத்துப் பார்க்க முடியாத ஏன் என்று கேள்வி கேட்கமுடியாத ஓரிடத்தில் கதீஜா ரழியல்லாஹு அன்ஹா இருக்கிறார்கள். செல்வம், செல்வாக்கு, மதிப்பு, மரியாதை, கண்ணியம், கௌரவம் அனைத்தும் இருக்கின்றன. அவ்வீட்டில் அப்படிப்பட்ட ஒரு நிலையில் இருந்து கொண்டு தூய்மைக்கு இலக்கணமாக திகழ்ந்திருக்கிறார்கள். தாஹிரா என்னும் சிறப்புப் பெயரை (தூய்மையானவர்) மக்கள் அவருக்கு வழங்கியிருந்தார்கள்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன், தாஹிரா என்னும் ஈடுஇணையற்ற சிறப்பு அடைமொழிக்காக அவரை தேர்ந்தெடுத்துக் கொண்டான். ஒரு சமூகம் அடைமொழி இட்டு அழைக்கின்றது என்றால் அப்பண்புகளுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக இலக்கணமாக அவர்கள் திகழ்கிறார்கள் என்றுதானே பொருள்.
நேர்மையானவராக இருப்பது வேறு, நேர்மைக்கு அடையாளக் குறியீடாக காட்டப்படுவது வேறு. ஒழுக்கத்தோடு திகழுவது வேறு ஒழுக்கத்திற்கு முன்னுதாரணமாக திகழ்வது வேறு. இரண்டுக்கும் இடையே பாரதூரமான வேறுபாடுகள் நிலவுகின்றன. இவ்விரு மானுடர் மாணிக்கங்களும் குறியீடாக ‘ஐகான்’ (Icon)களாக சுட்டிக்காட்டப்பட்டனர்.
“அழகைக் கண்டோ அந்தஸ்த்தை கண்டோ குலச்சிறப்பை கண்டோ எப்பெண்ணையும் மணம் முடிக்காதீர்கள். சமயப்பற்றைக் கொண்டே ஒரு பெண்ணை தீர்மானியுங்கள்” என அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வலியுறுத்தியிருக்கிறார்கள். தன்னுடைய தூதருக்கு இறைவன் தேர்ந்தெடுத்த பெண்மணி அப்படிப்பட்டதொரு பெண்மணியாகத்தான் இருந்தார்.
இங்கே நாம் பல்வேறு விஷயங்களை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
ஆற்றலும் வல்லமையும் கொண்ட உலகாலும் பேரரசன் அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா தன்னுடைய தூதருக்கு கன்னிப் பெண் ஒருத்தியை மனையாளாகக் கொடுக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் களுடைய வாழ்க்கை வரலாற்றை ஆழமாக நீங்கள் கவனித்துப் பார்த்தீர்கள் என்றால் இறைத்தூதரின் வாழ்க்கையில் ஒரே ஒரு பெண்மணி தான் மனைவி என்னும் அந்தஸ்த்தை வகித்திருக்கிறார். அவர்தான் கதீஜா ரழியல்லாஹு அன்ஹா. ஏறக்குறைய 25 ஆண்டுகள் அண்ணலார் கதீஜாவோடு இல்லற வாழ்க்கையை நடத்தியிருக்கிறார்கள்.
கதீஜா இறப்பெய்தும்வரை அண்ணலார் வேறு திருமணம் புரியவில்லை. பிற்காலத்தில் நடந்த திருமணங்கள் யாவும் அரசியல் காரணங்களுக்காவும் இறைத்தூததை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்னும் நோக்கத்திலும் அமைந்த திருமணங்கள். மனைவி என்னும் சொல்லுக்கு உரிய ஒரே பெண்மணியாக, ஒரே மனைவியாக கதீஜா மட்டுமே விளங்கியிருக்கிறார்.
அப்படியென்றால், இறைவன் தன்னுடைய தூதருக்காகத் தேர்ந்தெடுத்த மனைவி ஒரு கன்னிப் பெண் அல்லர். இறைவன் நமக்குக் கொடுக்கின்ற உலகியல் அருட்கொடைகளையெல்லாம் கருத்தில் ஒருபோதும் கொள்ளக்கூடாது என்பதையே இந்நிகழ்வு எடுத்துரைக்கின்றது.
.
இறைத்தூதர் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்கள் சொல் கிறார்கள், இந்த உலகமும் உலகில் உள்ள பொருட்களும் இறை வனின் பார்வையில் ஒரு கொசுவின் இறக்கைக்குச் சமமான மதிப் பைப் பெற்றிருந்தால் உலகில் உள்ள இறை நிராகரிப்பாளர்கள் ஒரு வருக்கும் எதுவும் கிடைக்காது. உலகத்திற்கும் உலகத்தில் உள்ள பொருட்களுக்கும் இறைவனிடத்தில் எந்த மதிப்பும் கிடையாது. தான் நேசிக்கின்ற தன்னை நேசிக்கின்ற இறையடியார்களுக்கு உல கப் பொருட்களை உலக வளங்களை உலக அருட்கொடைகளை கொடுக்க வேண்டும் என இறைவன் எண்ணுவதும் கிடையாது.
இறை அடியார்களுக்கான சிறப்புகளும் வெகுமதிகளும் கூலியும் மறு உலகில் காத்துக்கிடக்கின்றன. இறைவன் தன்னுடைய தூதருக்கு ஒரு விதவைப் பெண்ணை மனைவியாகத் தேர்ந்தெடுத்தான். எப்பேற்பட்ட விதவைப் பெண்? இருமுறை திருமணம் ஆனவர்.
அண்ணலாரோடு திருமணம் ஆவதற்கு முன்னால் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு இரண்டு கணவர்கள் இருந்திருக்கிறார்கள். அந்த திருமண உறவுகள் என்ன ஆயின என்பதையும் கொஞ்சம் சீர்தூக்கிப் பாருங் கள். விவாக விலக்கு பெற்றாரா? திருமணம் முறிந்து போனதா? இல்லை இரண்டு துணைவர் களுக்கும் சிறந்த மனைவியாக கதீஜா ரழியல்லாஹு அன்ஹா வாழ்ந்திருக்கிறார்கள். கணவர் உலகிலிருந்து விடைபெற்றுச் சென்ற காரணத்தினால்தான் மறுமணம் புரிந்திருக்கிறார்கள்.
(நம்பிக்கையாளர்களின் அன்னையர் – நூலிலிருந்து)
Thanks to – Sayed Abdur Raman Umari
source: https://www.facebook.com/photo?fbid=1345492465655145&set=a.138724279665309