உலகின் முதல் மாதவிடாய் பிரச்சனை
Rahmath Rajakumaran
“நாம் (ஆதமுக்குத் துணையாக அவர் மனைவியைப் படைத்து ஆதமை நோக்கி) “ஆதமே! நீங்கள் உங்களுடைய மனைவியுடன் இச்சோலையில் வசித்திருங்கள். நீங்கள் இருவரும் இதில் விரும்பும் இடத்தில் (விரும்பியவற்றைத்) தாராளமாகப் புசியுங்கள். ஆனால் இந்த மரத்தை அணுகாதீர்கள். அணுகினால் நீங்கள் இருவரும் (உங்களுக்குத்) தீங்கிழைத்துக் கொண்டவர்களாவீர்கள்” என்று கூறினோம் ” (குர்ஆன் : 2:35)
இப்லீஸ் அவர்களிடம் வந்தான். “நீங்கள் என்னை நம்புவீர்களையானால் என்னுடைய வார்த்தையில் உங்களுக்கு நம்பிக்கை இருக்குமேயானால் நான் சொல்வது போல் செய்யுங்கள் இங்கு ஒரு மரம் உள்ளது. அதன் பெயர் ”ஷஜரத்துல் குல்து” (சிரஞ்சீவி மரம்) என்பதாகும்.
நான் உங்களை அழைத்துச் செல்கிறேன் அதனுடைய தீஞ்சுவை கனிகளை நீங்கள் சுவைத்தீர்களானால் துன்பமும் உங்களுக்கு இல்லை, துயரமும் உங்களுக்கு இல்லை, இறப்பும் உங்களுக்கு இல்லை எல்லாம் இன்ப மயம்தான்.
நீங்கள் வானவர்களாகவோ நித்தியமானவர்களாகவோ ஆகி என்றென்றும் நீங்கள் இனிதே இங்கு வாழ்வீர்கள்.
மேலும் உங்களுக்கு நிலையான அரசாட்சியும் இங்கு உண்டு. இறைவன் அம்மரத்தை நீங்கள் அணுக வேண்டாம் என்று உங்களுக்கு ஆணையிட்டுள்ளானே தவிர அம்மரம் உண்மையில் உங்களுக்கு ஹராம் அல்ல” என்றான்.
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அம்மரத்தை நெருங்கவில்லை என்றும் ஹவ்வாதான் அக்கனியை பறித்து தாம் தின்றதுடன் தம் கணவர் அவர்களுக்கும் கொடுத்தனர் என்றும் அதனை பறித்தப்பொழுது அம்மரத்திலிருந்து ரத்தம் வழிந்தது என்றும் அதன் காரணமாகவே பெண்களுக்கு மாதவிடாய் இறைவன் ஏற்படுத்தினான் என்றும் மஆது ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றனர்.
فَاَزَلَّهُمَا الشَّيْطٰنُ عَنْهَا فَاَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِيْهِ وَقُلْنَا اهْبِطُوْا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَـكُمْ فِى الْاَرْضِ مُسْتَقَرٌّ وَّمَتَاعٌ اِلٰى حِيْنٍ
எனினும் (இப்லீஸாகிய) ஷைத்தான் அவ்விருவரையும் (தடுக்கப்பட்டிருந்த மரத்தை அணுகித்) தவறிழைக்கும்படிச் செய்து அச்சோலையை விட்டும், அவ்விருவரும் இருந்த (மேலான) நிலைமையிலிருந்தும் அவர்களை வெளியேறும்படி செய்து விட்டான். ஆகவே (அவர்களை நோக்கி) “உங்களில் சிலர் சிலருக்கு எதிரியாவர். (இச்சோலையிலிருந்து) நீங்கள் இறங்கிவிடுங்கள். உங்களுக்கு பூமியில்தான் வசிக்க இடமுண்டு. அதில் சிறிது காலம் வரையில் சுகமும் அனுபவிக்கலாம்” என நாம் கூறினோம். (குர்ஆன் : 2:36)
சில நாட்கள் கழித்து ஒரு செவ்வாய்க்கிழமை ஹவ்வாவுக்கு மாதவிடாய் ஏற்பட்டது. அவர்கள் என்னவோ ஏதோ என்று பயந்து அலறினார்கள் . அப்போது இறைவன், “அவ்வாறு அஞ்சாதே அது உனக்கும் ஒரு பெண் மக்களுக்கும் பரிகாரமாக இருக்கும்” என்று ஆறுதல் கூறினான்.
.
இதன்பின் ஹவ்வா அவர்களுக்கு ஒர் ஐயம் ஏற்பட்டது இந்நிலையில் தொழலாமா கூடாதா என்பதே அந்த ஐயம். இதுபற்றி அவர்கள் தம் கணவரிடம் வினவினார்கள். அவர்கள் இச்செய்தியை ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கூறி இறைவனிடம் இது பற்றி கேட்டு வருமாறு வேண்டினர். இறைவன் அந்த நேரங்களில் தொழ வேண்டாம் என்று அருள் சலுகை அழித்தான்.
மீண்டும் நோன்பு காலத்தில் அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட பொழுது முன்னர் இறைவன் தொழுகை பற்றி அளித்த அருள்சலுகையே மனதில் கொண்டு நோன்பை விட்டு விடுமாறு தன் மனைவியிடம் பணித்தனர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள். அவ்விதமே ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் செய்தார்கள். உடனே இறைவனிடமிருந்து ஹவ்வா அவர்கள் விட்ட நோன்பை “களா”ச் செய்ய வேண்டும் என்று கண்டிப்பான கட்டளை வந்தது அது கேட்டு அதிர்ந்து போன ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “இறைவனே..! தொழுகையும் நோன்பும் வணக்கத்தின் பாற்பட்டவைதாமே. அவ்வாறு இருக்க தொழுகையைக் ‘களா’ச் செய்ய வேண்டாம் என்று நீ கூறிய போது நோன்பு மட்டும் களாச் செய்யுமாறு ஏன் கூறுகிறாய் என்று ஆதம் அலைஹிஸ்ஸலாம் வினவினார்.
அதற்கு இறைவன் “நீர் தொழுகையைப் பற்றி தாழ்மையுடன் என்னிடம் விளக்கம் கேட்டீர். எனவே சலுகை அளித்தேன். ஆனால் நோன்பைப் பற்றியோ நீரே உம் விருப்பப்படி தீர்ப்பு வழங்கினீர். எனவேதான் இவ்வாறு நான் தீர்ப்பு வழங்குகிறேன். மாதவிடாய் நின்றதும் மீண்டும் விட்ட நோன்பைக் ‘களா’ச் செய்யுமாறு ஹவ்வாவுக்கு கூறும்!” என்றான்.
மாதவிலக்கு அல்லது மாதவிடாய் என்பது ஒரு பூப்படைந்த பெண்ணின் உடலில், மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றமாகும். இது பெண்ணின்இனப்பெருக்கத் தொகுதியிலுள்ள ஒரு உறுப்புக்களில் ஒன்றான கருப்பையிலிருந்து, யோனியினூடாக மாதத்தில் 3-7 நாட்கள் குருதியுடன்சேர்ந்து கருப்பையின் உள் சீதமென் சவ்வும் வெளியேறுவதை குறிக்கும்.
மருத்துவப்படி, ஒவ்வொரு மாதமும், கருத்தரிப்பிற்கான தயார்ப்படுத்தலுக்காக, கருப்பையின் உள் மடிப்புகளில் (endometrium) போதிய இரத்தம் நிரம்பி இருக்கிறது. ஒரு பெண் கர்பமடைவாரேயானால், கருப்பையில் தங்கும் கருக்கட்டிய முட்டைக்கு போதிய ஊட்டச்சத்தை வழங்குவதற்காகவே இந்த குருதி நிறைந்த மடிப்புக்களை இயற்கை உருவாகியிருக்கிறது.
பெண் கருத்தரிக்காத நேரங்களில் இம்மடிப்புகளில் உள்ள தேவையற்ற இழையங்களும், அவற்றுடன் சேர்ந்து மடிப்புக்கள் இருக்கும் நுண்ணிய குருதிக் குழாய்களிலிருந்து வெளிவரும் குருதியும் வெளியே கழிவாக தள்ளப்படுகிறது.
மாதவிடாய் மாதவிடாய்ச் சுழற்சியின் ஒரு பகுதியாகும். இச்சுழற்சியின் நீட்டம் 21 நாட்களிலிருந்து 35 நாட்கள் வரை இருக்கும். முதல் மாதவிடாய் பொதுவாக 10 வயதிற்கும் 16 வயதிற்கும் இடையே ஒரு பெண் பூப்படையும்போது ஏற்படுகிறது.
இந்நிகழ்வு அனைத்து பாலூட்டிகளிலும் நடந்தாலும், மனிதன், மற்றும் பரிணாம வளர்ச்சியில் மனிதனுடன் நெருங்கிய தொடர்புடைய சிம்பன்சி போன்ற சில விலங்கினங்களிலேயே இவ்வாறு வெளிப்படையாக கருப்பை மடிப்பு வெளியேறுகிறது. மற்ற பாலூட்டிகளில், இனப்பெருக்க சுழற்சியின் இறுதிக் காலத்தில் கருப்பைமடிப்புகள் மீளவும் உள்ளே உறிஞ்சப்படுகின்றது.
கருத்தரித்திருக்கும் காலத்திலும் குழந்தை பிறந்த சில மாதங்களுக்கும் மாதவிடாய் இருப்பதில்லை. அதாவது, குருதிப்போக்கு இருப்பதில்லை. இச்சுழற்சி மீண்டும் துவங்கும்வரை, பாலூட்டும் காலத்தில் கருத்தரிப்பு நடக்காது. சில குறிப்பிட்ட பாலூட்டும் பழக்கங்களை பின்பற்றினால் இந்த காலத்தை நீடிக்க முடியும். இதனை குடும்பக் கட்டுப்பாட்டு முறையாகவும் கையாளலாம்.
பெரும்பாலான பெண்கள் மாதவிடாயின்போது 50 மி.லி. வரை உதிரம் இழக்கிறார்கள். இந்த நாட்களில் தங்கள் உள்ளாடைகள் கறைபடாதிருக்க அணையாடை அல்லது அடைப்பான் பாவிக்கின்றனர். கர்ப்பம் தரித்திருப்பதற்கான முதல் அடையாளம் மாதவிலக்கு நிற்பது என்றாலும் சில வேளைகளில் கருத்தரிக்காமலேயே மாதவிலக்கு நின்றிருக்கும்.
இந்த நிலைக்கு உடல் இயக்கங்களும், நோய்களும் முக்கிய காரணமாக இருக்கும். குறிப்பாக புதிய இடங்களில் குடியேறுதல், புதிய சூழல்களில் பணியாற்றுதல், டீன் ஏஜ் பருவத்தின் கடைசியில் இருத்தல், அதிக கவலை, டென்ஷன், போன்ற மனநிலைகளில் இருத்தல், குறிப்பிட்ட காலத்தில் ஹார்மோன்கள் முட்டைகளை வெளியிடாத நிலை ஆகிய காரணங்களாலும் மாதவிலக்கு நின்றிருக்கும்.
நோய் என எடுத்துக்கொண்டால், நாள்பட்ட நோய்கள், ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடுகள், உடற் பருமன், நரம்புத் தளர்ச்சி நோய், போன்றவற்றால் மாதவிலக்கு தொடராது. ஆகவே மாதவிலக்கு நின்றுவிட்டது என்று தாங்களாகவே முடிவுக்கு வந்துவிடக்கூடாது. சரியான மருத்துவரை அணுகி காரணத்தை அறிந்து சரிசெய்துகொள்ள வேண்டும்.
மாதவிடாய் நிறுத்தம் என்பது, 45-70 வயது காலகட்டத்தில் ஒரு பெண்ணில் மாதவிடாயினால் ஏற்படும் உதிரப்போக்கு நின்றுவிடுவதைக் குறிக்கிறது. இக்காலத்தில் பெண்ணின் பாலின பண்பிற்கு காரணமான எஸ்ட்ரோஜன் எனும் நொதி சுரப்பது குறைகிறது.
காரணமின்றி எரிச்சல்படுவது, உடல் வெப்பமடைதல், யோனி எரிச்சல் மற்றும் உலர்ந்திருத்தல் ஆகியன சில அறிகுறிகளாகும். மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்ட பெண்கள், அதன் பின்னர் இனப்பெருக்கத்தில் பங்கேற்றி கரு தரிக்க இயலாதே தவிர ஆனால் சுகம் பெற முடியும்.
சரியான சுழற்சியில் மாதவிடாய் நிகழாமல் இருப்பதுமாதத்திற்கு ஒருமுறை அல்லது மாறுபட்ட சுழற்சியில் மாதவிடாய்.மாதவிடாய் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை வராமல் இருப்பதுமாதவிடாய் உண்டாகும்போது அதிகமான அடிவயிற்று வலி, உடல் அசதி, வாந்தி, குமட்டல், தலைச்சுற்றல் சாதாரண வேலைகளை கூட செய்ய முடியாத நிலை.மாதவிடாய் ஒழுங்காக வந்தாலும் அளவுக்கு அதிகமாக உதிரம் போவது.மாதசுழற்சிக்கு இடையில் ஓரிரு நாட்கள் உதிரம் படுவது.
மாதவிடாயின்போது அதிகளவு உதிரப்போக்கு ஏற்படும் பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள், கருப்பைக் கட்டிகள் அல்லது கருப்பையில் புற்றுநோயின் பாதிப்போ இருக்கக்கூடும்.
228. ‘அபூ ஹுபைஷ் என்பவரின் மகள் ஃபாத்திமா என்ற பெண், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் அதிகம் உதிரப்போக்குள்ள ஒரு பெண். நான் சுத்தமாவதில்லை. எனவே நான் தொழுகையைவிட்டு விடலாமா?’ எனக் கேட்டதற்கு, ‘இல்லை! அது ஒருவித நோயால் ஏற்படுவதாகும். அது மாதவிடாய் இரத்தமன்று. உனக்கு மாதவிடாய் வரும்போது தொழுகையைவிட்டு விடு; அது நின்றுவிட்டால் இரத்தம் பட்டு இடத்தைக் கழுவிவிட்டுத் தொழுகையை நிறைவேற்று’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ‘பின்னர் அடுத்த மாதவிடாய் வரும் வரை ஒவ்வொரு தொழுகைக்கும் நீ உளூச் செய்து கொள்’ என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்பெண்ணிடம் கூறினார்கள்’ என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார். (ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 4. உளூச் செய்வது)
மாதவிடாய் இயற்கையின் இயல்பாக இருப்பினும் மக்கள் இதனை பொதுவிடங்களில் குறிப்பிடத் தயங்கினர். அதனாலேயே இடக்கரடக்கலாக வீட்டில் இல்லை, வீட்டிற்கு வெளியே, வீட்டுக்குத் தூரம், வீட்டு விலக்கு என்ற சொல்வழக்கு எழுந்தது. குறிப்பிட்ட காலத்தில் நிகழாது தாமதமாகும்போது தள்ளிப்போயிற்று எனக்கூறுவர். தள்ளிப்போதல் ஒரு பெண் கருவுற்றிருப்பதன் முதல் அறிகுறியாகும். ஆனால் இது மட்டுமே கருத்தங்கலை உறுதிப்படுத்தாது. சீரற்ற மாதவிடாய் சுழற்சி ஆரம்ப ஆண்டுகளில் இயல்பானது. தவிர பெண்ணின் உள/உடல் தகைவுகள் இச்சுழற்சியை பாதிக்கும்.
கருத்தரித்த காலத்திலும் முதலிரு மாதங்களில் சில பெண்களுக்கு மாதவிடாய் ஒழுகல் தொடர்வதும் உண்டு. மாதவிடாயினாலான உதிரப்போக்கு நின்ற பிறகு (3-7 நாட்களில்) தலைக்கு நீர்விட்டு குளிப்பதும் உண்டு. இதனால் குளிக்காமல் இருக்கிறாயா என்பது கருத்தரித்திருக்கிறாயா என்னும் பொருளில் பொதுமக்களிடையே நிலவும் சொற்றொடராகும்.
மாதவிலக்கு பற்றியும் அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். அது ஓர் (இயற்கை) உபாதை. எனவே, மாதவிலக்கின் போது (தாம்பத்திய உறவு கொள்ளாமல்) பெண்களிடமிருந்து விலகியிருங்கள். அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள். அவர்கள் தூய்மை அடைந்து விட்டால், அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டபடி அவர்களிடம் செல்லுங்கள். பாவத்திலிருந்து மீள்வோரை அல்லாஹ் நேசிக்கிறான், தூய்மையானவர்களையும் நேசிக்கிறான் எனக் கூறுவீராக!” (அல்குர்ஆன், 2 : 222)
பல சமயங்களிலும் மாதவிடாய் குறித்த வழக்கங்கள் சில உள்ளன. இக்காலத்தில் உடலுறவு கொள்வதை சூடாயியம், இந்து மற்றும் இஸ்லாமிய சமயங்கள் தடை செய்கின்றன. சில பழங்குடிகள் பெண்களை இந்தக் காலம் முடியும் வரை தனிக் குடிலில் தங்க வைக்கிறார்கள்.
தமிழக சமூகங்களிலும் அண்மைக் காலங்களில் அவர்களை வீட்டிற்கு வெளியே, புறக்கடையில், தங்க வைத்திருந்தனர். இந்த நாட்களில் அவர்கள் சமையலறை, சமய சடங்குகள் எதிலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை.
பல இடங்களில் மாதவிலக்கு சமயத்தில் பெண்கள் வெளியில் சென்றால் விபத்து நடக்கும், குளித்தால் சளி பிடிக்கும், காயம் படும், கனமான பொருட்களை தூக்கக்கூடாது, பூக்களைத் தொட்டால் வாடிவிடும், வயல்வெளியில் சென்றால் பயிர் கருகிவிடும், தனி தட்டில்தான் சாப்பிட வேண்டும், தலைக்கு குளிக்காமல் வீட்டுக்குள் நடமாடக் கூடாது, சாப்பிட்ட மிச்சத்தை நாய்க்கு போட்டால் வயிறு வலிக்கும்… என்பதான நம்பிக்கைகள் உள்ளன.
கிராமப்புறங்களில் மாதவிலக்கான பெண்ணை தனிக் குடிசையில் ஒதுக்கி வைப்பதோடு, குளிக்க வெளியே வருவதானால்கூட ஒரு இரும்புக் கம்பியை பாதுகாப்புக்குக் கொடுத்தனுப்பும் வழக்கம் உண்டு.
ஐரோப்பியாவில் கூட சில காலங்களுக்கு முன்னர் வரை உணவகங்களில் வேலை செய்யும் பெண்கள் அந்த நாட்களில் உணவைத் தொடக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. மாதவிலக்கின் போது குறிப்பிட்ட அந்தப் பெண்ணின் கை பட்ட உணவுகள் பழுதடைந்து விடுமென்ற நம்பிக்கையே அதற்குக் காரணமாக இருந்தது. 1960 இல் இருந்து சில பெண்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சியை மாற்றும் மருந்துகளைக் கொண்டு மாதவிடாய் நேருவதையும் கருத்தரிப்பதையும் சுயகட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கின்றனர்.
296. ‘ஒருவர் ‘தம் மனைவி குளிப்புக் கடமையான நிலையில் தம்முடன் நெருங்கலாமா? மாதவிடாய்க்காரி தமக்குப் பணிவிடை செய்யலாமா?’ என்று உர்வாவிடம் கேட்டதற்கு உர்வா ‘அது எல்லாமே என்னிடம் சிறிய விஷயம்தான். (என் மனைவியர்) எல்லோருமே எனக்குப் பணிவிடை செய்வார்கள். அவ்வாறு செய்வதில் யார் மீதும் எந்தக் குற்றமுமில்லை. ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹாவுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தலை முடியைச் சீவி விடுவார்கள். என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா என்னிடம் கூறினார்’ என்றார்’ என ஹிஷாம் அறிவித்தார்.
298. ‘நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஒரு போர்வையைப் போர்த்திப் படுத்துக் கொண்டிருந்தபோது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. மாதவிடாய்க் காலத்தில் அணியும் துணியை எடுப்பதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் தெரியாதவாறு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன். ‘உனக்கு நிஃபாஸ் (மாதவிடாய்) ஏற்பட்டுவிட்டதா?’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கேட்டார்கள். ‘ஆம்’ என்றேன். ஆயினும் அவர்கள் என்னை அருகில் வரக் கூறினார்கள். நான் அவர்களோடு போர்வைக்குள் படுத்துக் கொண்டேன்’ என உம்முஸலமா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார். (ஸஹீஹ் புகாரி)
297. ‘எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னுடைய மடியில் சாய்ந்து கொண்டு குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்’ என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார். (ஸஹீஹ் புகாரி)
“மாதவிலக்கு என்பது ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் விதித்த ஒன்றாகும்” என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
– ர.ரா