மில்லத்தே இப்ராஹீம்
Sayed Abdurrahman Umari
“மேலும், எவர் அல்லாஹ்வுக்கு முழுமையாக அடிபணிந்து, தன்னுடைய செயல்களை அழகாக்கிக் கொண்டு ஒருமனப்பட்டு இப்ராஹீமின் வழிமுறையையும் பின்பற்றினாரோ அவரை விடச் சிறந்த வாழ்க்கை நெறி உடையவர் யார்? இப்ராஹீமையோ அல்லாஹ் தன் உற்ற நண்பராகத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்.” (அல்குர்ஆன் 4:125)
இபாதத் மற்றும் இஸ்லாமிற்கான இலக்கணம் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்
இபாதத் என்றால் வழிபாடு என்றல்ல பொருள்.
அப்த் என்றால் அடிமை. அப்துல்லாஹ் என்றால் அல்லாஹ்வின் அடிமை.
இபாதத் என்றால் எந்த ஆதிக்கத்திற்கும் கட்டுப்படாமல் இறைவன் ஒருவனுக்கே அடிமையாய் இருப்பது எனப்பொருள்.
இஸ்லாம் என்பது ஒரு மார்க்கத்தின் பெயரோ சமயத்தின் பெயரோ அல்ல.
இஸ்லாம் என்றால் ஓரிறைவனுக்கு மட்டுமே முற்றிலும் கட்டுப்பட்டு வாழ்வது எனப்பொருள்.
நினைத்துப் பாருங்கள். இப்ராஹீமை அவரது இறைவன் சில விஷயங்களில் சோதித்தபோது அவர் முழுமைப்படுத்தினார். அதுகண்ட இறைவன் நான் உன்னை மக்களுக்கு தலைவராக ஆக்குவேன் என்றான். எனது சந்ததியையுமா? என்றார் அவர். அநீதியாளர்களுக்கு என் வாக்கு பொருந்தாது என்றான் இறைவன். (அல்குர்ஆன் 2:124)
இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சோதனைகள் இவ்வசனத்தில் கலிமாத் (வார்த்தைகள்) என குறிப்பிடப்படுகின்றன. இப்ராஹீமை சோதித்து அவருடைய நிலைகுலையாமையையும் வைராக்கியத்தையும் வளர்ப்பதற்காக இறைவன் அவருக்கு வழங்கிய ஆணை களை இங்கே கலிமாத் என்னும் சொல் குறிக்கின்றது. மறுவார்த்தை பேசாமல் அந்த ஆணைகள் அனைத்திற்கும் அவர் கீழ்ப்படிந்தார்.
எடுத்துக்காட்டாக, இறைவனின் கட்டளைக்கிணங்க காலங்காலமாக சிலைகள் செய்யப்பட்டும் பூசிக்கப்பட்டும் வந்த சிலைக் கோவிலில் நின்று அவர் பாங்கொலி கொடுத்தார்; முன்னோர்கள், மூதாதையரின் சமயத்தை துறந்தமைக்காக நெருப்பில் தூக்கியெறியப்பட்டார்; இன்முகத்தோடு நெருப்பாற்றை நீந்திக் கடந்தார்; அவரது மார்க்கத்தை விட்டு அவரை திசைதிருப்ப வலிமைமிக்க மன்னன் ஒருவன் முயன்றான்; இப்ராஹீமின் ஆதாரம் என வரலாற்றில் புகழ்பெற்ற தம் வாதத் திறமையால் அவனை திக்குமுக்காடச் செய்தார்; வீடுவாசலை ஊர்உறவைத் துறந்து ஹிஜ்ரத் கிளம்புமாறு அவருக்கு ஆணை வந்தது; அனைத்தையும் விட்டுவிட்டு வெளியேறினார்; புகலிடம் புகுந்த அந்நிய பூமியில் பாசத்திற்குரிய ஒற்றை மகனை அறுத்துப் பலியிடுமாறு ஆணை வந்தது; அந்த ஆணையை நிறைவேற்றவும் கைச் சட்டையை மடித்துக் கட்டினார்; பிரிய மகனை குப்புறக் கிடத்தினார்.
இறையாணைகளை நிறைவேற்றுவதற்காக உயிரையும் பணயம் வைத்த இது போன்ற நிகழ்வுகளால் அவரது வாழ்க்கை நிரம்பிக் கிடக்கின்றது.
தனது ஆணைகளை – கட்டளைகளைக் குறிக்க இறைவன் இங்கே கலிமாத் என்னும் பதத்தை கையாண்டுள்ளதில் அற்புத இலக்கிய நயம் உள்ளது.
கலிமா என்னும் சொல் புரிபடாத பூடகச் சொல். இறைவன் குன் (ஆகுக) என்றால் நினைத்த செயல் நிறைவேறி விடுகின்றது. அக்காட்சியை படிப்போர் மனதில் இச்சொல் கொண்டுவந்து நிறுத்தி விடுகின்றது.
இது வெறும் ஒற்றைச் சொல்தான். இதில் ஏன் செய்ய வேண்டும் என்னும் காரணமோ விளக்கமோ தத்துவமோ எதுவுமே இல்லை.
ஓரடியானின் நம்பிக்கையையும் கீழ்ப்படிதலையும் சோதிக்கின்ற சோதனைகள் மிகக் கடுமையாக இருக்கின்றன. வெற்றிகரமாக அவற்றை சமாளித்து விடுகின்ற அடியார்களுக்குக் கிடைக்கின்ற வெகுமதிகளும் அபாரமாக இருக்கும்.
உதாரணமாக, மகனை அறுத்துப் பலியிடுமாறு இறைவன் கனவில் இப்ராஹீமுக்கு உணர்த்தினான். ஏன் பலியிட வேண்டும்?
எதற்காகப் பலியிடவேண்டும்? பலியிட்டால் என்ன கிடைக்கும்? என்று எதுவுமே சொல்லப்படவில்லை.
.
இப்ராஹீம் அவர்கள் நினைத்திருந்தால் இது வெறும் கனவு தானே என அலட்சியப்படுத்தி இருக்கலாம். அதற்கு தம் புறத்தில் இருந்து ஒரு விளக்கத்தை கண்டுபிடித்திருக்கலாம். ஆனால், அப்படி அவர் செய்யவில்லை.
இந்த அகிலத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் குன் என்னும் இறைவனின் ஆணைக்கு இணங்குகின்றன; அடிபணிகின்றன. காரணத்தையோ அடிபணிந்தால் கிடைக்கின்ற பலாபலன்களைப் பற்றியோ யோசித்துக் கொண்டிருப்பதில்லை. நெருப்பில் குதி என ஆணை; குதித்தார்.
ஊரை விட்டுப் போ என ஆணை; மறுவார்த்தை பேசாமல் கிளம்பினார்.
மகனின் கழுத்தில் கத்தியை வை என ஆணை; சொன்னவுடன் வைத்தார்.
என்ன மனிதர் இவர்? இங்கே வார்த்தை வெளிப்பட்டவுடன் அங்கே செயலில் இறங்கி விடுகிறார்.
இந்த சிறப்பால் தான் இவ்வாணைகளைக் குறிக்க இறைவன் கலிமாத் என்னும் பதத்தை தேர்ந்தெடுத்தான்.
இப்ராஹீமின் வழிமுறையை யார் புறந்தள்ளுவார்கள், மடையனைத் தவிர! இவ்வுலகத்திலும் அவரை நாம் தேர்ந்தெடுத்தோம்; மறுமையிலோ அவர் சான்றோர்கள் பிரிவில் இருப்பார். உன்னை என்னிடம் ஒப்படைத்து விடு என அவரது இறைவன் ஆணையிட்டபோது அகிலங்களை பரிபாலிக்கும் ஏக இறைவனிடம் என்னையே நான் ஒப்படைத்தேன் என்றார் அவர். (அல்குர்ஆன் 2:130, 131)
சொல்லிவிடுக: அல்லாஹ் சொன்னதே உண்மை! எனவே, இப்ராஹீமின் மார்க்கத்தை பின்பற்றுங்கள், அவர் ஒருமனப்பட்ட ஹனீஃப் ஆக இருந்தார். நிராகரிப்பவர்களில் ஒருவராக இருக்கவில்லை. (அல்குர்ஆன் 3:95)