இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாறு
ரஹ்மத் ராஜகுமாரன்
ஹழ்ரத் இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம்
முதன் முதலாக உலகில் …
1) ஹழ்ரத் இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் இவர்கள்தான் நட்சத்திரக் கணக்கை முதன்முதலில் உலகிற்கு கொண்டு வந்தவர்கள்.
2) அதேபோல் முதன் முதலாக உலகில் மக்களுக்கு எழுதுகோலை கொண்டு எழுதக் கற்றுக் கொடுத்தார்கள்.
3) முதன் முதலாக உலகில் ஆடைகளை தைத்து உடுக்கும் முறையை கற்பித்தார்கள்.
4) முதன் முதலாக உலகில் யுத்தத்தில் உபயோகப்படுத்துவதற்கான ஆயுதங்களை புழக்கத்தில் கொண்டு வந்தார்கள்.
5) முதன் முதலாக உலகில் அல்லாஹ்வின் பாதை போராடியவர்களுள் முதலாமானவர்கள் இவர்கள்தான்.
ஹழ்ரத் ஷீத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நான்காம் தலைமுறையில் எகிப்து நாட்டில் தோன்றிய ஹழ்ரத் இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இயற்பெயர் எக்னூஹ் என்றும் குனூஹ் என்றும் சொல்லப்படுகிறது. அரபியில் இவர்கள் பெயர் ஹெர்மிஸ் இத்ரீஸ் அல்முதுல்லுத் பின் பினாத் என்பதாகும். இதன் பொருள் மூன்று பேரருளைப் பெற்றவர் என்பதாகும்.
தங்களது மூதாதையரின் போதனைகளையும், வழிமுறைகளையும், ஆன்மீக மேம்பாடுகளையும் மக்களுக்கு போதித்து வந்ததால் இத்ரீஸ் என்ற பெயர் வந்தது. இவர்களின் மொழி சுர்யானி ஆகும். இவர்கள் ரஸூலாகவும், நபியாகவும் இருந்தார்கள்.
இவர்கள் பழுப்பு நிறமுடையவர்களாகவும் நீண்ட உருவினராகவும் பெரிய மீசையும், தாடியும் வைத்திருந்தனர். இவர்கள் தையல் தொழில் செய்து வந்தனர். இவர்கள் மீது 30 ஷுஹ்புகள் வேதமாக இறக்கப்பட்டன.
அல்லாஹ் வழிதவறிய காபீலுடைய சந்ததியினரை நேர்வழிப்படுத்துமாறு கூறி அவர்களுக்கு நபித்துவத்ததைக் கொடுத்தான்.
இத்ரீஸ் நபி காலத்து மக்கள் வானம், பூமி, இதர படைப்புகளை சக்தி மிக்கவை என்று நம்பி செயல்பட்டு வந்தனர். தமது சமுதாய மக்களில் 7 பேர்களைத் தேர்ந்தெடுத்து அல்லாஹ்வைப் பற்றி அச்சுறுத்தியும், அவனிடம் எப்படி விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் போதித்தார்கள். அவர்கள் இஸ்லாத்தை ஏற்று அதன்படி செயல்பட ஆரம்பித்தனர்.
பிறகு இவர்களின் எண்ணிக்கை 1000 ஆக பெருகியது. அவர்களின் 100 பேரை தேர்ந்தெடுத்தார்கள். அதிலிருந்து 70 பேரை தெரிவு செய்து அதிலிருந்து 10 நபர்களை பொறுக்கி எடுத்துக் கொண்டார்கள்.இத்ரீஸ் நபி அல்லாஹ்விடம் துஆ கேட்க அந்த 10 பேரும் அமீன் சொன்னார்கள். அல்லாஹ் அந்த துஆவை ஏற்றுக் கொண்டு 3 வஹீயை இறக்கினான்.
தம் கால மக்களுக்கு 72 மொழிகளில் போதனை செய்து வந்தார்கள். அவர்கள் வாழ்வதற்காக 100 நகரங்களை நிர்மாணம் செய்து கொடுத்தார்கள். தொழக் கற்றுக் கொடுத்தார்கள். ஒரு மாதத்தில் சில குறிப்பிட்ட நாட்களில் நோன்பு நோற்கவும் கற்றுக் கொடுத்தார்கள். ஜகாத்தும் கொடுத்து வருமாறு வற்புறுத்தினார்கள். கழுதை, பன்றி ஆகியவற்றின் இறைச்சியை உண்ணக் கூடாதென்று தடுத்தனர். பொழுதுபட்டு தலைப்பிறையைக் கண்டபின் இறைவனுக்குப் பலிகொடுக்குமாறு இவர்கள் போதித்தார்கள்.
இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அதிகமாக நோன்பு நோற்று வந்தார்கள். தினமும் 12000 தடவைகளில் தஸ்பீஹ் ஓதி வந்தார்கள். இவர்களது சபையில் வானவர்களும் கலந்து கொள்வார்கள். முப்பது தடவை வானுலகம் சென்று மறைவான பல இரகசியங்களை அறிந்து வந்தார்கள்.
தமக்குப் பின்னர் வரக்கூடிய நபிமார்களைப் பற்றியும், நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் காலத்தில் வரக்கூடிய பிரளயம் பற்றியும் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.
பெரும்பாலும் இவர்கள் வாய்மூடியே இருப்பர். பேசினால் நிறுத்தி, நிறுத்திப் பேசுவர். அப்பொழுது அவர்களின் சுட்டுவிரலை அசைப்பர்.
ஒருநாள் ஹழ்ரத் இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சென்று கொண்டிருக்கும்போது வெயிலின் உஷ்ணத்தால் மிகவும் அவதிப்பட்டார்கள். சூரியன் இவ்வளவு தூரத்திலிருக்கும்போதே நாம் அதன் உஷ்ணத்தை தாங்க முடியவில்லையே! அதனை சுமந்து கொண்டிருக்கும் வானவர் எப்படி தாங்குவார் என்று மனதிற்குள் எண்ணி, “யா அல்லாஹ்..! சூரியனைச் சுமக்கும் வானவருக்கு அதன் உஷ்ணத்தால் சிரமம் ஏற்படாதவாறு அருள் புரிவாயாக! “என்று துஆ செய்தார்கள்.
அல்லாஹ் அந்த துஆவை ஏற்றுக் கொண்டு சூரியனைத் தாங்கும் வானவர் மீது கிருபை செய்தான். அந்த வானவர் அல்லாஹ்விடம் இதுபற்றி கேட்டதற்கு இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உம்மீது இரக்கம் கொண்டதால் இது நடந்தது என்று சொன்னான். உடனே அந்நபி மீது அந்த வானவருக்கு அன்பு சுரந்தது. அவர்களைப் பார்க்க வேண்டுமென்று ஆவலும் ஏற்பட்டது. அந்த வானவரும் பலமுறை முயன்று ஒரு தடவை சந்தித்தார்கள்.
நபியவர்களை வானலோகத்திற்கு அழைத்து சென்று மலக்குகள் பார்வையிடும் ஸிர்ருல் மலக்கூத்து என்கிற பிரபஞ்சங்கள் இரகசிய கிதாபை படிக்க கொடுத்தும் சூரியனுடைய கோள்கள் சுற்றி வரும் பாதைகளில் அந்தந்த கிரகங்களோடு அவரையும் பயணிக்க செய்தார்கள்.
இப்படி சனிக்கோளுடன் சேர்ந்து 30 ஆண்டுகள் விண்ணிலே பயணித்து வந்தார்கள் ஆகையால் இவர்களால் தன்னால் நேரில் கண்ட நட்சத்திரத்திரங்களைப் பற்றியும் கிதாபு (பிரபஞ்சங்கள் இரகசியத்தை) ஒன்றாக சேர்த்து வான சாஸ்திரத்தை இவர்கள் தொகுத்து பூமிக்கு கொடுத்தார்கள்.
இஸ்ராயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் தாங்கள் சொல்லி எனது மரணத்தை கொஞ்சம் தள்ளிப் போட சொல்லுங்கள். நான் இன்னும் பூமியில் இருந்து அல்லாஹ்வை அதிகம் வணங்க விரும்புகிறேன் என்று இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வேண்டினார்கள்.
அல்லாஹ்வின் உத்திரவு பெற்று அந்த வானவர் இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை சுமந்து சூரியனுக்கருகில் விட்டுவிட்டு, மலக்குல் மவ்த்திடம் வந்து, இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மவ்த்தை தள்ளிப் போட வேண்டினார்கள்.
அதற்கு மலக்குல் மவ்த் அது என்னால் ஆகக் கூடியது அல்ல. ஆனால் அவர் இன்னும் எத்தனை நாள் வாழ முடியும் என்று கணக்குப் பார்க்க முடியும் என்று சொன்னார். அவரது மரணம் சூரியனருகில் நிகழும் என்று சொன்னார்.
அவரை நான் சூரியனருகில் விட்டு வந்திருக்கிறேன் என்று சொன்னதும், இஸ்ராயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அப்படியானால் அவர் இந்நேரம் மறைந்திருக்க வேண்டுமே! நீங்கள் அவரைப் போய் பாருங்கள் என்று சொன்னார்.
அங்கு போய் பார்த்ததும் இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறந்துவிட்டிருந்தார்கள்.
ஏழு வானங்களுடைய வானவர்களும் அவர்களை குளிப்பாட்டி ஜனாஸா தொழுகை நடத்தி பைத்துல் மஅமூரில் நல்லடக்கம் செய்தார்கள் என்று திருக்குர்ஆனிலுள்ள 19வது அத்தியாயமான மர்யம் அலைஹிஸ்ஸலாம் பற்றிய விளக்கவுரையில் ஹழ்ரத் அஹ்பார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாக முஆலிமுத் தன்ஜீமில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றொரு வரலாற்றில்….
ஒரு வானுலகப் பயணத்தின் போது வானவரின் இறக்கையில் நான்காவது வானத்தை அடைந்ததும், அந்த வானவர் மலக்குல் மவ்த்திடம் (உடலிலிருந்து உயிரை எடுக்கும் வானவரிடம்) வந்து, “இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மரணத்தைத் தள்ளிப் போட முடியுமா? அவர் அல்லாஹ்வை அதிகம் வணங்க விரும்புகிறார்கள்” என்று கேட்டபோது, அதற்கு மலக்குல் மவ்த் “இப்போது அவர் எங்கே இருக்கிறார்?” என்று கேட்க, “என் இறக்கையில்தான்” என்று அந்த வானவர் பதில் தர, அதற்கு மலக்குல் மவ்த் “இப்போது தான் இறைவன் நபி இத்ரீஸின் உயிரை நான்காம் வானத்தில் கைப்பற்றச் சொன்னான்.
நானோ எப்படிப் புவியிலிருக்கும் இத்ரீஸின் உயிரை நான்காம் வானத்தில் கைப்பற்றுவது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்” என்று சிரித்துக் கொண்டே நபி இத்ரீஸின் உயிரை கைப்பற்றியதாகச் சொல்லப்படுகிறது. இதைத்தான் “நாம் அவரை ஓர் உயரிய இடத்தில் உயர்த்தினோம் என்று திருக்குர்ஆனில் 19:57 குறிப்பிடுவதோடு நபி இத்ரீஸை அலைஹிஸ்ஸலாம் ‘சத்தியவாதியாக இருந்துள்ளார்’ என்றும் அல்லாஹ் குர்ஆன் 19:56-இல் கூறியுள்ளான். இதையே நபிகள் நாயகம் மிஃராஜ் பயணத்தின் போதும் நான்காவது வானத்தில் இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பார்த்தாகவும் ஹதீஸ்களும் உறுதியளித்துள்ளன.
மற்றொரு அறிவிப்பின்படி அவர்கள் தம் விருப்பப்படி மவ்த் ஆகி திரும்பவும் உயிர்ப்பெற்று எழுந்தனர். வானுலகம் சென்று சுவர்க்கத்தையும், நரகத்தையும் கண்டு வந்தனர். சுவனத்தைக் கண்டபின் மண்ணகம் வர விருப்பமில்லாமல் இஸ்ராயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் வாதிட்டனர். அல்லாஹ் அவர்களின் விரப்பத்தை நிறைவேற்றினான். விண்ணகத்தில் இன்றுவரை உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் காணப்படுகிறது.
ஹழ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மரணத்தின் போது ஹழ்ரத் இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வயது 100. அதன்பிறகு 200 வருடங்கள் கழித்துதான் அல்லாஹ் அவர்களுக்கு நுபுவ்வத் வழங்கினான். 150 வருடங்கள் நபியாக மக்களுக்கு சேவை செய்தார்கள். வானத்திற்கு அவர்கள் அழைத்துச் செல்லப்படும்போது அவர்களது வயது 450.
இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது 65 ஆவது வயதில் திருமணம் செய்தார்கள். அவர்களுக்கு மத்தூஷலக் என்பவர் பிறந்தார். இவர் 170 ஆவது வயதில் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு மலிக் யாலா மக் என்பவர் பிறந்தார். 969 வது வயதில் மத்துஷலக் காலமானார். மலிக் யாலா மக் தமது 180வது வயதில் திருமணம் செய்து கொண்டார். அந்த அம்மையார் வயிற்றிலிருந்துதான் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறந்தார்கள்.
– ரா ரா.
1) ஹாரூத் மாரூத் வானவர்களுக்கு நபி இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ:
மக்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்வதைக் கண்ட வானவர்கள் யா அல்லாஹ் நீ இந்த மனிதர்கள் மீது மாபெரும் கிருபை செய்தும் அவர்கள் உனக்கு மாறு செய்கிறார்களே! நாங்கள் மட்டும் புவியில் இருந்தால் எக்காலமும் உனக்கு மாறு செய்யாமல் இருப்போமே என்று கூறினார்கள்.
அதற்கு நான் மனிதர்களிடத்தில் காம இச்சையையும், மன இச்சையையும் ஏற்படுத்தியுள்ளேன். இந்த இரண்டு குணங்களினால்தான் அவர்கள் பாவங்களை அதிகம் செய்கிறார்கள். இந்த இரண்டு குணங்களை உங்களிடம் ஏற்படுத்தி விடுவேனாயின் நீங்களும் அவர்களைப் போலவே தீமைகள் அதிகம் செய்ய முற்பட்டு விடுவீர்கள் என்று அல்லாஹ் சொன்னான். அதற்கு கண்டிப்பாக நாங்கள் செய்ய மாட்டோம் என்று சொன்னார்கள்.
அவர்களை சோதிப்பதற்காக வானவர்களிலேயே விசேசமாக இருந்த ஹாரூத், மாரூத் என்ற இரு வானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மனித உருவத்தையும், குணங்களையும் கொடுத்து பூமியில் வாழ அனுமதித்து சில நிபந்தனைகளையும் விதித்தான். அதாவது அவர்கள் பூமியில் வாழும்வரை இறைநிராகரிப்பு, மது அருந்துதல், கொலை செய்தல், விபச்சாரம் செய்தல் போன்ற தீய காரியங்களை செய்யக் கூடாது என்று நிபந்தனை விதித்தான்.
அந்த இருவானவர்களும் பூமியில் பகலெல்லாம் தங்கிவிட்டு இரவு வந்ததும் இஸ்முல் அஃலம் ஓதியவாறு வானத்திற்குச் சென்று இரவு முழுவதும் வணக்கத்தில் ஈடுபட்டு வந்தனர். இப்படியே ஒரு மாதம் கழிந்தது.
وَمَا أُنزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ هَارُوتَ وَمَارُوتَ ۚ وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّىٰ يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ ۖ فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ ۚ وَمَا هُم بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ ۚ وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ ۚ وَلَقَدْ عَلِمُوا لَمَنِ اشْتَرَاهُ مَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ ۚ وَلَبِئْسَ مَا شَرَوْا بِهِ أَنفُسَهُمْ ۚ لَوْ كَانُوا يَعْلَمُونَ
இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் ‘நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்’ என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை; அப்படியிருந்தும் கணவன் – மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள்.
எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது; தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே – கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
2) ஒரு நாள் இவர்கள் இருவரும் பூமியில் தங்கியிருந்தபோது, ஜொஹ்ரா என்ற அழகிய பெண் இவர்களிடம் வந்து தன் கணவனுடன் சண்டை போட்டுக் கொண்டு வந்துவிட்டதாகவும், தன்னை அவர்கள் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டாள். அவளின் அழகு அவர்களை வசீகரித்து விட்டது. அந்தப் பெண் அடிக்கடி வந்து மனித ரூபத்திலுள்ள இந்த வானவர்களிடம் பழக ஆரம்பித்தாள்.
அவளுடன் உடலுறவு கொள்ள அவ்விருவரும் ஆசைப்பட்டனர். அதற்கு அவள் மது அருந்த வேண்டும், ஒருவரை கொல்ல வேண்டும், விக்கிரகத்தின் முன்னால் தலை வணங்க வேண்டும். பிறகுதான் என்னோடு உடலுறவு கொள்ளலாம் என்று நிபந்தனை விதித்தாள்.
அதற்கு அல்லாஹ் நமக்கு தடை விதித்திருப்பதால் இதை செய்ய முடியாது என்று சொன்னார்கள். அவள் போய்விட்டாள். ஆனால் அவளின் பிரிவு இவர்களிருவரையும் வாட்டி எடுத்தது. பிறகு இரண்டு, மூன்று முறை அப்பேரழகியை கண்டு தங்கள் இச்சையை தெரிவித்தனர். அவளும் அந்த நிபந்தனைகளை விதித்தாள். இவர்களும் மறுத்ததால் அவள் திரும்பிக் கொண்டிருந்தாள்.
ஒருநாள் அந்தப் பேரழகி மீண்டும் வந்தாள். இச்சமயம் அவளது கையில் ஒரு மதுப்பாட்டில் இருந்தது. அவ்விரு வானவர்களும் அவளை நெருங்கினர். இதையாவது குடியுங்கள் என்று மதுபாட்டிலை அவர்கள் முன் நீட்டினாள். மது அருந்துவது பெரிய குற்றமில்லையே என்று கருதிய அவர்கள் அதை அருந்தத் துவங்கினர்.
போதை தலைக்கேறியதும், அவளை கட்டிப்பிடிக்க முயற்சிக்கும்போது அந்த அழகி எனக்கு இஸ்முல் அஃலத்தை கற்றுத் தாருங்கள். நானும் வானம் செல்ல ஆசைப்படுகிறேன் என்று கூறினாள். அவர்களும் அந்த அற்புதமான இஸ்முல் அஃலத்தை அவளுக்கு கற்றுக் கொடுத்து உடலுறவு கொண்டனர்.
இதை ஒருவன் பார்த்து விட்டான். எங்கு அவன் யாரிடமும்சொல்லி விடுவானோ என்று பயந்து அவனை கொல்லவும் செய்தனர். மக்கள் இதைத் தெரிந்து அவர்களை விரட்டி செல்லவே ஒரு கோயிலுக்குள் புகுந்து விக்கிரக ஆராதனை செய்பவர்களோடு சேர்ந்து விக்கிரகத்தின் முன் ஸஜ்தா செய்தனர்.
3) அந்த ஜொஹ்ரா இஸ்முல் அஃலத்தைக் கொண்டு மூன்றாம் வானம் வரை சென்று விட்டாள். அவளை அல்லாஹ் ஒரு நட்சத்திரமாக்கிவிட்டான். அவளைத் தொடர்ந்து வானவர்கள் இருவரும் வானத்தில் பறக்க முற்பட்டனர். ஆனால் அல்லாஹ் அவர்களின் பறக்கும் சக்தியைப் பிடுங்கிக் கொண்டதால் அவர்களால் பறக்க முடியவில்லை. அப்போதுதான் அவர்களுக்கு தாங்கள் செய்த குற்றங்கள் புரிய ஆரம்பித்தது.
அவ்விருவரும் இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை சந்தித்து விபரங்களை சொல்லி அல்லாஹ்விடம் தங்களை மன்னித்து அருளும்படி செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். அல்லாஹ்விடம் இத்ரீஸ் நபியும் துஆ கேட்டனர்.
அதற்கு அல்லாஹ் அவர்கள் செய்த குற்றத்திற்கு தண்டனையை இவ்வுலகில் பெற்றுக்கொள்கிறார்களா? மறுமையில் பெற்றுக் கொள்கிறார்களா? என்று கேட்கச் சொன்னான். நபி அவர்களும் கேட்டார்கள். மறுமையில் தண்டனையை எங்களால் பொறுக்க இயலாது. எனவே இம்மையிலேயே தண்டனையை பெற்றுக் கொள்கிறோம் என்று சொன்னார்கள்.
அவர்கள் இருவரையும் பாழும் கிணற்றுக்குள் தலைகீழாக தொங்க விடுமாறு வானவர்களுக்கு கட்டளையிட்டான். அதன்படி வானவர்கள் இராக்கிலுள்ள மிகப் பழைய நகரமான பாபுலில் ஒரு கிணற்றுக்குள் தலை கீழாகத் தொங்கவிட்டனர். அதற்குள் இருந்த தண்ணீருக்கும் அவர்களின் தலைக்கும ஒரு அங்குல இடைவெளி மட்டுமே இருந்தது. அவர்களின் முகங்கள் கருநிறமாக்கப்பட்டன. கண்கள் நீல நிறமாக்கப்பட்டன. தாகத்தால் அவர்கள் உலகின் இறுதிநாள் வரை இப்படியே தொங்கி கொண்டிருப்பார்கள்.
ஒருமுறை ஓருவர் இந்த மலக்குமார்களின் நிலையை பார்த்து விட்டு லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்று சொல்லி அனுதாபப்பட்டார். இதைக் கேட்ட அவ்விருவரும் நீங்கள் யார்? என்று கேட்க நான் முஹம்மது நபியின் உம்மத் என்று சொன்னார்.
மலக்குகள் இருவரும் சந்தோஷப்பட்டு முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்து விட்டார்கள். எனவே இறுதிநாளும் விரைவில் வந்து விடும் நமக்கும் விடுதலை கிடைத்து விடும் என்று மகிழ்ச்சி அடைந்தனர்.
அப்துற் றஹீம் எழுதிய “நபிமார்கள் வரலாறு” பதிவிலிருந்து.