அர்ப்பணிப்புப் பெருநாள்! (1)
(அஸ்ஸாஃப்பாத் வசன விளக்கத் தொகுப்பு)
சையத் குதுப் ஷஹீத் ரஹ்மதுல்லாஹி அலைஹி
தமிழாக்கம்: சையத் அப்துர் ரஹ்மான் உமரி
o அர்ப்பணிப்புப் பெருநாள் தரும் செய்தி
o இறைத்தூதர் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாறு
o இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாறு
o அண்ணல் இப்ராஹீமின் தனிச்சிறப்புகள்
o நம்பிக்கை மிக்க முஃமின்!.
o நிகழ்வின் நினைவாக!
அர்ப்பணிப்புப் பெருநாள் தரும் செய்தி
“இவர்கள் எப்படிப்பட்ட மக்களென்றால், தம் முன்னோர்கள் நெறிதவறிச் செல்பவர்களாய் இருக்கக் கண்டார்கள். மேலும், அவர்களுடைய அடிச்சுவட்டிலேயே விரைந்து சென்றார்கள். உண்மையில் அவர்களுக்கு முன்னர் பெரும்பாலோர் வழிகெட்டுப் போயிருந்தார்கள். மேலும், அவர்களிடையே அச்சமூட்டி எச்சரிப்பவர்களை (தூதர்களை) நாம் அனுப்பியிருந்தோம். இப்போது பாருங்கள்: அவ்வாறு எச்சரிக்கை செய்யப்பட்டவர்களின் கதி என்னவாயிற்று? ஆனால், இத்தீய கதியிலிருந்து தப்பித்தவர்கள், அல்லாஹ்வின் வாய்மையான அடியார்கள் மட்டுமே!’ நூஹ் நம்மை அழைத்தபோது அழகாக பதில் தருபவர்களாக நாமிருந்தோம் (என்பதைப் பாருங்கள்). அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் கடும் துன்பத்திலிருந்து நாம் காப்பாற்றிக் கொண்டோம். இன்னும் அவருடைய சந்ததியையே நிலைத்திருக்கும்படிச் செய்தோம்.
மேலும், பின்னர் தோன்றிய சந்ததிகளில் அவருடைய புகழையும் நற்பெயரையும் விட்டு வைத்தோம். சாந்தியும் சமாதானமும் பொழியட்டும் நூஹ் மீது உலக மக்கள் மத்தியில்! நன்மை புரிவோர்க்கு இவ்வாறே நாம் கூலி வழங்கி வருகின்றோம். உண்மையில், நம் மீது நம்பிக்கை கொண்ட அடியார்களுள் ஒருவராக அவர் விளங்கினார். பிறகு, மற்ற கூட்டத்தார்களை நாம் மூழ்கடித்துவிட்டோம்.
மேலும், நூஹின் வழியில் செல்பவராகவே இப்ராஹீம் இருந்தார்; தம் இறைவனிடம் பண்பட்ட தூய உள்ளத்துடன் அவர் வந்தபோது, தம் தந்தையிடமும் தம் சமூகத்திடமும் இவ்வாறு கூறியபோது: “எவற்றை நீங்கள் வணங்கிக்கொண்டிருக்கின்றீர்கள்? அல்லாஹ்வை விடுத்துப் பொய்யாக உருவாக்கப்பட்ட கடவுளையா நீங்கள் விரும்புகின்றீர்கள்? பிறகு அகில உலகங்களின் அதிபதி பற்றி நீங்கள் என்னதான் நினைக்கிறீர்கள்?’.
பிறகு, அவர் நட்சத்திரங்களின் பக்கம் ஒரு பார்வை செலுத்தினார். மேலும் கூறினார்: “நான் நோயுற்றிருக்கின்றேன்.’ எனவே, அம்மக்கள் அவரை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள். பின்னர் அவர் அவர்களுடைய கடவுளரின் கோயிலுக்குள் இரகசியமாக நுழைந்து (அவற்றை நோக்கிக்) கூறினார்: “நீங்கள் ஏன் சாப்பிடுவதில்லை? நீங்கள் பேசாமலிருக்கிறீர்களே? உங்களுக்கு நேர்ந்ததென்ன?’ அதன் பிறகு அவர் அவற்றின் மீது வலுவாகத் தாக்கப் பாய்ந்தார்.
பின்னர், அம்மக்கள் (திரும்பி வந்ததும்) அவரிடம் ஓடிவர, அவர் கேட்டார்: “என்ன, நீங்களாகவே செதுக்கிய பொருள்களையா நீங்கள் பூஜை செய்கிறீர்கள்? உண்மையில் அல்லாஹ்தானே உங்களையும் படைத்தான்; நீங்கள் உருவாக்கிய இப்பொருள்களையும் படைத்தான்?’ அவர்கள் தமக்கிடையே கூறிக்கொண்டார்கள்.
“இவருக்காக ஒரு நெருப்புக் குண்டத்தை உருவாக்குங்கள்; கொழுந்து விட்டெரியும் நெருப்பில் இவரை வீசிவிடுங்கள்!’ அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அவர்கள் திட்டமிட்டனர். எனினும், நாம் அவர்களையே தோல்வியுறச்செய்தோம்.
இப்ராஹீம் கூறினார்: “நான் என்னுடைய இறைவனின் பக்கம் செல்கின்றேன்; அவனே எனக்கு வழி காட்டுவான்’.
“என் இறைவா! ஒரு மகனை எனக்கு நீ வழங்குவாயாக; அவர் உத்தமரில் ஒருவராக இருக்கவேண்டும்.’ (இந்தப் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு) சாந்த குணம் கொண்ட ஒரு மகனைப் பற்றி நாம் அவருக்கு நற்செய்தி அறிவித்தோம். அம்மகன் அவருடன் சேர்ந்து உழைக்கும் வயதினை அடைந்தபோது இப்ராஹீம் (ஒருநாள்) அவரிடம் கூறினார்: “என் அருமை மகனே! நான் உன்னை பலியிடுவ தாய்க் கனவு கண்டேன். உனது கருத்து என்ன என்பதைச் சொல்!’ அதற்கு அவர் கூறினார்: “என் தந்தையே! உங்களுக்கு என்ன கட்டளையிடப்படுகிறதோ அதைச் செய்துவிடுங்கள். அல்லாஹ் நாடினால், என்னைப் பொறுமையாளர்களில் ஒருவனாகக் காண்பீர்கள்.’
இறுதியில் அவ்விருவரும் இறைவனுக்கு முன்னால் முழுமையாகச் சரணடைந்துவிட்டார்கள். மேலும், இப்ராஹீம் மகனை முகங்குப்புறக் கிடத்தினார். அப்போது நாம் அவரை அழைத்துக் கூறினோம்:
“இப்ராஹீமே! நீர் கனவை நனவாக்கி விட்டீர். நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி வழங்குகின்றோம். திண்ணமாக, இது ஒரு தெளிவான சோதனையாய் இருந்தது.’ மேலும், ஒரு பெரும் பலியை ஈடாகக் கொடுத்து அக்குழந்தையை நாம் விடுவித்துக் கொண்டோம்.
பின்னர் தோன்றிய தலைமுறைகளில் அவருடைய புகழையும், நற்பெயரையும் விட்டு வைத்தோம். சாந்தி உண்டாகட்டும், இப்ராஹீம் மீது! நன்மை புரிவோருக்கு நாம் இத்தகைய கூலியையே வழங்குகின்றோம். திண்ணமாக, நம்மீது நம்பிக்கைகொண்ட அடியார்களுள் ஒருவராக அவர் திகழ்ந்தார்.
மேலும், இஸ்ஹாக் பற்றியும் அவருக்கு நாம் நற்செய்தி அறிவித்தோம். அவர் ஒரு நபியாகவும் சான்றோர்களுள் ஒருவராகவும் இருந்தார். மேலும், அவர் மீதும் இஸ்ஹாக் மீதும் அருட்பாக்கியங்களைப் பொழிந்தோம். அவ்விருவரின் வழித்தோன்றல் களில் சிலர் நன்னடத்தை கொண்டவர்களாகவும் இன்னும் சிலர் தமக்குத் தாமே வெளிப்படையாக கொடுமை புரிபவர்களாகவும் இருக்கின்றார்கள்.
(அல்குர்ஆன் 37@ 69113)
“தமது மூதாதையர் வழிகேடர்களாய் இருப்பதை இவர்கள் கண்டார்கள். (69) மேலும், அவர்களுடைய அடிச்சுவட்டிலேயே விரைந்து சென்றார்கள். (70) உண்மையில் அவர்களுக்கு முன்னர் பெரும்பாலோர் வழிகெட்டுப் போயிருந்தார்கள். (71) மேலும், அவர்களிடையே அச்சமூட்டி எச்சரிப்பவர்களை (தூதர்களை) நாம் அனுப்பியிருந்தோம். (72) இப்போது பாருங்கள்: அவ்வாறு எச்சரிக்கை செய்யப்பட்டவர்களின் கதி என்னவாயிற்று? (73) ஆனால், இத்தீய கதியிலிருந்து தப்பித்தவர்கள், அல்லாஹ்வின் வாய்மையான அடியார்கள் மட்டுமே!’ (74) கண்ணைமூடிக் கொண்டு மூதாதையரைப் பின்பற்றுதல் வழிகேட்டின் தளை அவர்கள் மேல் அழுத்தமாக விழுந்தது. தங்கள் முன்னோர்களை கண்ணை மூடிக்கொண்டு கொஞ்சங்கூட யோசிக்காமல் பின்பற்றினர். சிந்தனைக்கு வேலையே கொடுக்கவில்லை. ஆடுகளைப் போன்று விழுந்தடித்துக் கொண்டு முன்னோர்களின் பாதையில் குதித்தார்கள். “தமது மூதாதையர் வழிகேடர்களாய் இருப்பதை இவர்கள் கண்டார்கள். (69) மேலும் அவர்களுடைய அடிச்சுவட்டிலேயே விரைந்து சென்றார்கள்’. (70) முன்னோர்கள், மூதாதையர்களுடைய வழிகேட்டுக்கான ஓர் உதாரணம் இது. அவர்களுடைய முன்னோர்களிலும் பெரும்பாலோர் இப்படித் தான் இருந்தார்கள். உண்மையில் அவர்களுக்கு முன்னர் பெரும்பாலோர் வழி கெட்டுப் போயிருந்தார்கள். (71) எச்சரிப்போர் எச்சரித்த போதும் அறிவுறுத்துவோர் அறிவுறுத்திய போதும் அவர்கள் வழிகேட்டிலேயே கிடந்தார்கள். மேலும், அவர்களிடையே அச்சமூட்டி எச்சரிப்பவர்களை (தூதர்களை) நாம் அனுப்பியிருந்தோம். (72) ஆனால் விளைந்ததென்ன? எச்சரித்தவர்களுக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வால் தேர்வான இந்நல்லடியார்கள் கண்ட பலன் தான் என்ன? இவை அனைத்தும் ஒன்றன்பின்ஒன்றாக விவரிக்கப்படுகின்றன. அதன் தொடக்கமாக கேட்போரின் சிந்தனையில் பதியும் வண்ணம் கவனத்தை ஈர்க்கும் விதத்தில்… இப்போது பாருங்கள்: அவ்வாறு எச்சரிக்கை செய்யப்பட்ட வர்களின் கதி என்னவாயிற்று? (73)
இறைத்தூதர் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாறு
நூஹ் அவர்களுடைய வரலாற்றிலிருந்து விஷயம் தொடங்குகின்றது. மேலோட்டமாக இவ்வரலாறு சொல்லப்படுகின்றது. சொல்லப்படும் நோக்கமும் அதன் விளைவும் நமக்கு விளங்கி விடுகின்றன. தனது நல்லடியார்கள் மீது எப்படி அல்லாஹ் கவனம் செலுத்துகிறான் என்பது தெளிவாகின்றது. நூஹ் நம்மை அழைத்தபோது அழகாக பதில் தருபவர்களாக நாமிருந்தோம் (என்பதைப் பாருங்கள்)(75). அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் கடும் துன்பத்திலிருந்து நாம் காப்பாற்றிக் கொண்டோம்.(76) இன்னும் அவருடைய சந்ததியையே நிலைத்திருக்கும் படிச் செய்தோம்.(77) மேலும், பின்னர் தோன்றிய சந்ததிகளில் அவருடைய புகழையும் நற்பெயரையும் விட்டு வைத்தோம்.(78) சாந்தியும் சமாதானமும் பொழியட்டும் நூஹ் மீது உலக மக்கள் மத்தியில்!(79) நன்மை புரிவோர்க்கு இவ்வாறே நாம் கூலி வழங்கி வருகின்றோம்.(80) உண்மையில், நம் மீது நம்பிக்கை கொண்ட அடியார்களுள் ஒருவராக அவர் விளங்கினார்.(81) பிறகு, மற்ற கூட்டத்தார்களை நாம் மூழ்கடித்து விட்டோம்.(82)
இந்நிகழ்வு நூஹ் அலைஹிஸ் ஸலாம் தமது இறைவனிடம் செய்த துஆவை நமக்கு நினைவூட்டுகின்றது. அந்த துஆ இறைவனால் முழுமையாக ஏற்கப்பட்டது. துஆவை யார் அழகிய முறையில் அங்கீகரித்து ஏற்பானோ அந்த ஒப்பற்ற ஆளுமையிடம் கோரப்பட்ட துஆ அது. அல்லாஹ் ஸுப்ஹானஹு தஆலாவிடம்!.
ஆக, நாம் மிக அழகான பதில் தருவோராயிருந்தோம். (75) அடுத்து நூஹ் அலைஹிஸ் ஸலாம் அவர்களையும் அவர்தம் குடும்பத்தாரையும் கொடிய துன்பத்திலிருந்து காப்பாற்றியதைப் பற்றி சொல்லப்படுகின்றது. அக்காலத்தில் ஏற்பட்ட பிரளயத்திலிருந்து!. அல்லாஹ் யார் யாரையெல்லாம் காப்பாற்றினானோ யார் யாரெல்லாம் உயிரோடு இருக்கவேண்டும் என்று முடிவு செய்தானோ அவர்கள் மட்டும் தான் அப்பிரளயத்திலிருந்து தப்பிப் பிழைத்தார்கள். அதன்பின், இறைவனின் வகுத்திருந்த திட்டம் விவரிக்கப்படுகின்றது. அதாவது இந்தப் பூமியில் நூஹ் அலைஹிஸ் ஸலாம் அவர்களுடைய சந்ததி ஒன்றே தப்பிப் பிழைத்திருக்கவேண்டும் என்ற திட்டம்!. அடுத்த உலகம் அவர்களில் இருந்துதான் தொடங்கவேண்டும். அதுமட்டுமல்ல, கியாமத் நாள்வரை இப்புவியில் வசிக்கும் மக்களிடையே நூஹ் அலைஹிஸ் ஸலாமுடைய நற்பெயர் நிலைத்து நிற்கவேண்டும்.
மேலும், பின்னர் தோன்றிய சந்ததிகளில் அவருடைய புகழையும் நற்பெயரையும் விட்டு வைத்தோம்.(78) பிறகு, அண்ணல் நூஹ் அலைஹிஸ் ஸலாம் மீது ஸலாம் உரைக்குமாறு இப்புவியுலகில் பிரகடனம் செய்யப்படுகின்றது. அவரது நன்மைக்கான அழகிய அங்கீகாரம் இது. சாந்தியும் சமாதானமும் பொழியட்டும் நூஹ் மீது உலக மக்கள்மத்தியில்!(79) நன்மை புரிவோர்க்கு இவ்வாறே நாம் கூலி வழங்கி வருகிறோம்.(80)
இறைவனின் புறத்திலிருந்து ஸலாம் உரைக்கப்படுவதைக் காட்டிலும் கியாமத் நாள்வரை நன்முறையில் நினைவு கூரப்படுவதைக் காட்டிலும் மிகச்சிறந்த கொடை வேறென்ன இருக்க முடியும்? இவ்வளவு சிறப்புகளுக்கும், இந்த அற்புதக் கொடைக்கும் ஈமான்தான் காரணம். உண்மையில், நம் மீது நம்பிக்கை கொண்ட அடியார்களுள் ஒருவராக அவர் விளங்கினார்.(81)
நம்பிக்கையாளர்களின் இறுதிக்கட்டம் எவ்வளவு அற்புதமானது, பார்த்தீர்களா? நூஹ் அலைஹிஸ் ஸலாம் அவர்களுடைய சமூகத்தைச் சேர்ந்த ஈமான் கொள்ளாத மக்களின் நிலை என்னவாயிற்று? அழிவையும் நாசத்தையும் அவர்கள் பங்கிற்கு அல்லாஹ் எழுதி வைத்திருந்தான். பிறகு, மற்ற கூட்டத்தார்களை நாம் மூழ்கடித்துவிட்டோம்.(82) மனித குலத்தின் ஆரம்ப கால வரலாற்றிலிருந்து தொன்று தொட்டு நடைபெற்று வருகின்ற இறைவனின் ஸுன்னத் (வழிமுறை) இதுதான். வரலாறு சொல்லுமுன் தொடக்கத்திலேயே இதனைக் குறிப்பிட்டுக் கூறியுள்ளான், இறைவன். மேலும், அவர்களிடையே அச்சமூட்டி எச்சரிப்பவர்களை (தூதர்களை) நாம் அனுப்பியிருந்தோம். (72) இப்போது பாருங்கள்: அவ்வாறு எச்சரிக்கை செய்யப்பட்டவர்களின் கதி என்னவாயிற்று? (73) ஆனால், இத்தீய கதியிலிருந்து தப்பித்தவர்கள், அல்லாஹ்வின் வாய்மையான அடியார்கள் மட்டுமே! (74)
கட்டுரையின் தொடர்ச்சிக்கு கீழுள்ள “Next” ஐ ‘கிளிக்” செய்யவும்.