அர்ப்பணிப்புப் பெருநாள்! (2)
(அஸ்ஸாஃப்பாத் வசன விளக்கத் தொகுப்பு)
சையத் குதுப் ஷஹீத் ரஹ்மதுல்லாஹி அலைஹி
தமிழாக்கம் சையத் அப்துர் ரஹ்மான் உமரி
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்
அவர்களின் வரலாறு
அதன்பிறகு, அண்ணல் இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாமுடைய வரலாறு வருகின்றது. அந்த வரலாற்றின் இரண்டு முக்கியக் கூறுகள் இங்கே சொல்லப்படுகின்றன. முதல் கூறில், அண்ணல் இப்ராஹீம் தமது சமூக மக்களுக்கு முன் எடுத்துவைத்த இறையழைப்பும் அதன் தொடர்ச்சியாக துண்டுதுண்டாக சிலைகளை உடைத்த நிகழ்வும் சொல்லப்படுகின்றது.
அதனால் வெகுண்ட அம்மக்கள் அண்ணல் இப்ராஹீமை தீயில் சுட்டுப் பொசுக்கிக் கொல்ல முடிவு செய்தார்கள். இறைவனோ அவரைக் காப்பாற்றி விட்டான். அவரது பகைவர்களை தோல்வியுறச் செய்தான். வரலாற்றின் இப்பகுதி குர்ஆனின் வேறுபல அத்தியாயங்களிலும் இடம் பெற்றுள்ளது.
வரலாற்றின் அடுத்த கூறு முற்றிலும் புதியது. இந்த அத்தியாயத்தில் மட்டும்தான் அது இடம்பெறுகின்றது. அண்ணல் இப்ராஹீம் கண்ட கனவு, மகன் இஸ்மாயீலை பலிகொடுக்க முனைந்தது, அவரது உயிர் காப்பாற்றப்பட்ட நிகழ்வு ஆகியன இதிலுள்ளன. இரண்டாம் கூற்றில் உள்ள இத்தகவல்கள் யாவும் விளக்கமாகவும் விரிவாகவும் சொல்லப்பட்டுள்ளன.
சிந்தனையையும் கவனத்தையும் ஒருசேர ஈர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது, சொல்நயம். இறைவன் ஒருவனுக்கே முற்றிலும் கீழ்ப்படிவது, அவனுக்கு முன்பாக அனைத்தையும் ஒப்படைத்துவிடுவது, உயிரையும் உடைமைகளையும் அவன் ஒருவனுக்கே அர்ப்பணித்து விடுவது போன்றவற்றிற்கான ஒப்பற்ற உதாரணங்களை நமக்கு எடுத்துக் காட்டுகின்றது இது. மனித குல வரலாறு நெடுக இதற்கு இணையான இன்னொரு நிகழ்வை நம்மால் காணவே இயலாது.
மேலும், நூஹின் வழியில் செல்பவராகவே இப்ராஹீம் இருந்தார்;(83) தம் இறைவனிடம் பண்பட்ட தூய உள்ளத்துடன் அவர் வந்தபோது,(84) தம் தந்தையிடமும் தம் சமூகத்திடமும் இவ்வாறு கூறியபோது: “எவற்றை நீங்கள் வணங்கிக் கொண்டிருக்கின்றீர்கள்?(85) அல்லாஹ்வை விடுத்துப் பொய்யாக உருவாக்கப்பட்ட கடவுளையா நீங்கள் விரும்புகின்றீர்கள்?(86) பிறகு பிரபஞ்சங்களின் அதிபதி பற்றி நீங்கள் என்னதான் நினைக்கிறீர்கள்?’.(87)
இப்ராஹீமிற்கும் நூஹுவிற்கும் இடையிலான தொடர்பு இந்த வரலாற்றின் முகவுரை இது. அதன் முதற்கட்டம். நூஹ் அவர்களுக்குப் பிறகு இப்ராஹீம்தான் வருகிறார். ஈமான், கோட்பாடு, இறையழைப்புப் பணி, இறைப்பாதையில் சந்தித்த துன்பதுயரங்கள் என இருவரையும் இணைக்கின்ற கண்ணிகள் ஏராளம். காலக்கணக்கில் வேறுவேறு காலகட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும் இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாமும் அண்ணல் நூஹ் அலைஹிஸ் ஸலாமுடைய கூட்டத்தைச் சேர்ந் தவரே. இருவரும் ஒரே குழுவினர்!.
ஓரிறைவன் வகுத்துக்கொடுத்த ஒற்றைப்பாதையிலேயே வாழ்க்கையைச் சந்தித்தவர்கள் இருவரும். எனவேதான் இருவரின் சிந்தனையும் ஒருமித்துப் போய்விட்டிருக்கின்றது. இணைந்தும் பிணைந்தும் கோர்த்தும் கட்டியும் காட்சிதரும் செயல்வீரர்கள் இருவரும்.
அண்ணல் இப்ராஹீமின் தனிச்சிறப்புகள்
தம் இறைவனிடம் பண்பட்ட தூய உள்ளத்துடன் அவர் வந்தபோது,(84) முற்றிலும் அடிபணிவதன், முழுமையாகக் கீழ்ப்படிவதன் இலக்கணம் இது. இறைவனுக்கு முன்னால் இப்ராஹீம் வந்து நின்ற காட்சி. தூய்மை, பரிசுத்தம், பவித்ரம், மாசிலா மருவிலா புனிதத்தின், நேர்நன்னெறியின் சித்திரம். இறைவன் எப்படிக் கொடுத்திருந்தானோ கறைபடாமல் குறை விழாமல் அப்படியே தூய்மையாக வைத்திருந்தார், அந்த உள்ளத்தை. “கல்புன் ஸலீமுன்’. எவ்வளவு அழகிய சொற்றொடர்?. எவ்வளவு ஆழிய பொருளை தனக்குள் அடக்கிக்கொண்டுள்ளது, இது?.
புரிவதற்கு எளிதான, உள்ளத்தில் நேர்த்தியாகப் படிகின்ற துல்லியமான தோற்றம் இது. குறையற்ற, கறையற்ற, எண்ணத் தூய்மையைக் கொண்ட, நேர் நன்னெறியில் நிலைத்து நிற்கின்ற இவை போன்ற பல அரிதினும் அரிய பண்புகளைக் கொண்டிருந்தாலும் புரிவதற்கும் அறிவதற்கும் எளிய உருவகமாக இருக்கின்றது கல்புன் ஸலீமுன். குழப்பமோ கலப்போ எதற்கும் கொஞ்சமும் இடம் தருவதில்லை இது. இவ்வனைத்துப் பண்புகளையும் தனித்தனியே சொல்லி விளக்கினாலும் வெளிப்படுத்த முடியாத பொருட்செறிவை ஒற்றைவார்த்தையாக நின்று விளக்கி விடுகின்றது கல்புன் ஸலீமுன். குர்ஆனிய சொல்லாடலுக்கு ஆகச்சிறந்த சான்றாகவும் மின்னுகின்றது.
சமூகத்தின் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் கல்புன் ஸலீமுன் பெற்றிருந்த இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் என்ன செய்வார்? என்ன செய்திருக்க முடியும்? விவரிக்கின்றதுவான்மறை.
தமது சமூகம் வேகவேகமாக போய்க்கொண்டிருந்த கோட்பாட்டுப் பாதையை கடும்விமர்சனத்திற்கு உள்ளாக்கினார் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம். தமக்கு அதில் கொஞ்சமும் விருப்பமில்லை என்பதைத் தெளிவாக அறிவித்தார்கள். நேர்மையும் நாணய மும்மிக்க இயல்பான மனிதன் எப்படி தன்னியல்புக்குப் பொருந்தாக எதனையும் ஏற்க மறுப்பானோ முற்றிலும் அதேபோல். தம் தந்தையிடமும் தம் சமூகத்திடமும்: “எவற்றை நீங்கள் வணங்கிக் கொண்டிருக்கின்றீர்கள்?(85) அல்லாஹ்வை விடுத்துப் பொய்யாக உருவாக்கப்பட்ட கடவுளையா விரும்புகின்றீர்கள்?(86) அப்புறம் பிரபஞ்சங்களின் அதிபதி பற்றி நீங்கள் என்னதான் நினைக்கிறீர்கள்?’ என்றபோது.(87) தூய்மையையே நிறையியல்பாகப் பெற்றவன் நாற்றத்தையும் நரகலையும் கண்டு முகம்சுழிப்பதைப் போல சிலைகளையும் சிற்பங்களையும் கண்டு மனம்சுழித்தார் இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம். அவர் கல்புன் ஸலீமை அல்லவா, பெற்றிருந்தார்? அதே சுழிப்போடு தம் சமூக மக்களைப் பார்த்து வினவினார். “நீங்கள் எவற்றைத்தான் கும்பிடுகின்றீர்கள்?’ (85)இவையெல்லாம் என்ன? இறையாண்மை மிக்கதாக எவற்றை நீங்கள் கருதுகின்றீர்கள்? கும்பிடுவதற்கும் வணங்குவதற்கும் உரியவைதாமா இவை? சத்தியத்தை சந்தேகத்தோடு அறிந்து வைத்திருப்பவன் கூட இவற்றை ஒருபோதும் வழிபட முன்வரமாட்டான். முழுக்க முழுக்க கற்பனையாயிற்றே இவையாவும்?
இட்டுக்கட்டப்பட்ட கட்டுக்கதைகள் தானே இவற்றிற்கு அடிப்படை? இவை கதைகள், கற்பனைகள், புராணங்கள் என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகமே இல்லையே. அப்புறம் எதற்காக இவற்றைப் போய் கும்பிடுகின்றீர்கள்? வணங்குகின்றீர்கள்?வழிபடுகின்றீர்கள்? கதைகள், கற்பனைகள் என்று நன்றாகத் தெரிந்தபின்பும்?
அல்லாஹ்வை விடுத்துப் பொய்யாக உருவாக்கப்பட்ட கடவுளையா நீங்கள் விரும்புகின்றீர்கள்?(86)சரி, அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் என்னதான் நினைக்கின்றீர்கள்? எடுத்த எடுப்பிலேயே மனித இயல்பு முற்றிலும் நிராகரித்து விடுகின்ற அளவுக்குத் தான் அல்லாஹ்வைப் பற்றிய உங்களது நினைப்பு இருக்கின்றதா? அந்தளவுக்கு கீழ்த்தரமாகவும் குழம்பிப்போயும் கிடக்கின்றதா, அல்லாஹ்வைப் பற்றிய கருத்து?. பிறகு பிரபஞ்சங்களின் அதிபதி பற்றி நீங்கள் என்னதான் நினைக்கிறீர்கள்?’.(87)
இச்சொற்றொடர் ஒரு பேருண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. அப்பட்டமாக வெளிப்படுகின்றது அப்பேருண்மை!. தெளிவான ஆதாரங்களின் துணையில்லாத, அறிவுக்குப்பொருந்தாத, மனிதனின் மனச்சாட்சி அங்கீகரிக்காத, மனித இருப்போடு ஒத்துவராத எந்த ஒன்றையும் இயல்பான மனிதனின் அகம் ஏற்கவே ஏற்காது என்பதுதான் அந்தப் பேருண்மை!.
வரலாற்றின் இரண்டாவது கூறு
இந்தக் கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்களையும் அதற்கு அண்ணல் இப்ராஹீம் கொடுத்த தெளிவுகளையும் வான்மறை குர்ஆன் இங்கே குறிப்பிடாமல் தவிர்த்துவிட்டது. மாறாக, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துவிடுகின்றது. அண்ணலின் வைராக்கியத்தைப் பற்றியும் திட நெஞ்சைப் பற்றியும் தெளி சிந்தனையைப் பற்றியும் சொல்லத் தொடங்கி விடுகின்றது. இறைவனின் மீது அப்பட்டமான பொய்யைப் புனையும் இக் கேடுகெட்ட கடவுட்கோட்பாட்டைப் பற்றி மனதுக்குள் அவர் நிகழ்த்திக் கொண்ட உரையாடல் அது!.
பிறகு, அவர் நட்சத்திரங்களின் பக்கம் ஒரு பார்வை செலுத்தினார்.(88) மேலும் கூறினார்: “நான் நோயுற்றிருக்கின்றேன்.'(89) எனவே, அம்மக்கள் அவரை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள்.(90) பின்னர் அவர் அவர்களுடைய கடவுளரின் கோயிலுக்குள் இரகசியமாக நுழைந்து (அவற்றை நோக்கிக்) கூறினார்: “நீங்கள் ஏன் சாப்பிடுவதில்லை?(91) நீங்கள் பேசாமலிருக்கிறீர்களே? உங்களுக்கு நேர்ந்ததென்ன?'(92) அதன் பிறகு அவர் அவற்றின் மீது வலுவாகத் தாக்கப் பாய்ந்தார்.(93) நிகழ்வின் பின்னணி அது ஒரு திருநாள் என அறிவிப்புகள் சொல்கின்றன. புத்தாண்டுப் பெரு விழாவாக இருந்திருக்கலாம்.
அந்நாளில் தங்கள்குலதெய்வங்களுக்கு பழங்களையும் சாப்பாட்டுப் பொருட்களையும் படையலிடுவது அம்மக்களின் வழக்கம். படையலுக்குப்பின் பூப்பறிக்கவும் ஓடியாடிக் கொண்டாடி மகிழவும் நீர்த்துறைகளுக்கும் தோப்புத்துறைகளுக்கும் போய்விடுவார்கள். மணல்விரிந்த மைதானங்களில் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவார்கள். அதன்பிறகு கோவிலுக்குத் திரும்பி தாங்கள் படைத்த பொருட்களையும் பொங்கலையும் பெற்றுக்கொண்டு வீடு திரும்புவார்கள். தொன்றுதொட்டு நிலவிவரும் மரபு இது!. ஓரிறைவன் பக்கம் அழைத்து அழைத்து மனம்வெதும்பிப் போயிருந்த அண்ணல் இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் அம்மக்களின் அகமும் ஆன்மாவும் இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டது என்பதை அறிந்து விட்டிருந்தார். அதைச் சீர்திருத்தவும் செம்மைப்படுத்தவும் இனி வாய்ப்பே இல்லை என்பது அப்பட்டமாக தெரிந்துபோய்விட்டது.
(அழைப்புப்பணி செய்தோர் அனைவரும் இந்நிலையை அடையாமல் இருந்ததே கிடையாது. வரலாற்றின் எந்தவொரு காலகட்டத்திலும் ஓரிறைவனை நோக்கிய அழைப்புப்பணிக்கு மக்களிடம் வரவேற்பு இருந்ததாகவே தெரியவில்லை. அல்ஹம்துலில்லாஹ் மக்களிடம் இந்தப் பணிக்கு அமோக வரவேற்பு இருக்கின்றது என்னும் வார்த்தைகளை இந்த நூற்றாண்டில்தான் கேட்க முடிகின்றது. நாம் தவறிழைக்கின்றோமோ இல்லை அவர்கள் தவறிழைத்தார்களா அல்இயாது பில்லாஹ்என்பது தான் தெரியவில்லை.)
கடைசியில் அண்ணல் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் ஒரு முடிவிற்கு வந்தார்கள். இந்தப் பெருநாளை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். மக்கள் எல்லாம் கோவிலையும் பலிபீடத்தையும் விட்டு தூரமாக விலகிச் சென்று விட்டார்கள். அம்போவென சிலைகளையும் விட்டுவிட்டார்கள். தாம் எடுத்த முடிவை அமுல்படுத்த சரியான தருணம் கிடைத்துவிட்டது இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் அவர்களுக்கு!. தமது சமூகத்தின் வழிகேட்டுப் போக்கை பார்த்து பார்த்து முற்றிலும் மனம் கருகிக் கிடந்தார் இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம். அவர்களது நடத்தையும் பேச்சுகளும் அவரை வாட்டி வதக்கின. தம்மோடு கூட வருமாறு அவரையும் மக்கள் அழைத்தார்கள். வானத்தை அண்ணாந்து நோக்கிய இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் “இல்லை. எனது உடல்நிலை சரியில்லை’ என்றார்கள். பொழுதைக் கழிக்கவும் உல்லாசமாக இருக்கவும் நான் உங்களோடு வர முடியாது.
உண்மைதானே? பொழுதைக் கழிக்கவும் உல்லாசமாக உலாவவும் யார் போகின்றார்கள்? திருவிழாக்களிலும் மேளாக்களிலும் யாரைப் பார்க்க முடிகின்றது? கூடிக்களித்து கும்மாளமிடுவதில் விருப்பம் உடையோர், அறிவையும் சிந்தனையையும் அணைத்து வைத்திருப்போர், ஆன்மாவை அடகு கொடுத்துவிட்டோர்!.
இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் அவர்களுடைய மனம் உல்லாசத்திற்கு இடம் கொடுக்கின்ற வகையிலா இருக்கின்றது? துவண்டு போய்க் கிடந்தது அவர்மனம்!. மக்களை நினைத்து நினைத்து மருங்கிக் கொண்டிருந்தார் அவர்!. தமது துக்கத்தையும் துயரத்தையும்தான் அவர் வார்த்தைகளில் வெளிப்படுத்தினார். அவர் மனம் படுகின்ற பாட்டை அவ்வார்த்தைகள் வெளியே கொட்டின. தம்மை விட்டுவிடுங்கள் என அவ்வார்த்தைகள் மக்களிடம் முறையிட்டன. அண்ணல் இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் ஒன்றும் பொய்யுரைக்கவில்லை, வார்த்தைகளை புரட்டியும் போடவில்லை. உள்ளத்து நிலையைத்தான் வார்த்தைகளில் வடித்தார். மனம் சரியில்லை என்றால் உடல் ஆரோக்கியமும் குன்றிவிடுகின்றது. மனம் ஒட்டவில்லை என்றால் உடலும் சோர்ந்து போய்விடுகின்றது. இதுதானே மனித இயல்பு?
மக்கள் அவசரத்தில் இருந்தார்கள். விழாக்கோலமும் பண்டிகைப் பரபரப்பும் அவர்களை அலைக்கழித்தன. குலப்பழக்கங்களையும் மரபையும் அவர்கள் செய்தாக வேண்டியிருந்தது. ஆகையால் இப்ராஹீம் என்ன சொல்கிறார்? என்ன சொல்ல வருகிறார்? என்பதை சிந்தித்துப் பார்க்கும் நிலையில் அவர்கள் இல்லை. அவரை விட்டுவிட்டு, மறந்துவிட்டு போயே போய்விட்டார்கள். காத்திருந்த தருணம் கைகளில் வந்து சேர்ந்தது.
சிலைக்கோவிலில் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் வேகவேகமாக அவர்கள் கும்பிடும் தெய்வங்கள் குடியிருக்கும் சிலைக் கோவிலுக்கு போனார் இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம். இறைவன் உறையும் இடம் என்பதைத்தானே கோவில் என்கிறார்கள்!. போய்ப் பார்த்தால் அங்கே வகைவகையான உணவுப்பதார்த்தங்களும் சாப்பாட்டுப் படையலும் வைக்கப்பட்டிருக்கின்றன. சொற்சிலம்பம் ஆடினார் அண்ணல் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்.
அடடே, ஏன் சாப்பிடவில்லை? “நீங்கள் ஏன் சாப்பிடுவதில்லை?(91) மண்ணைக் குழைத்தும் கல்லைச் செதுக்கியும் செய்யப்பட்ட அந்த தெய்வங்கள் எப்படித்தான் பதில் கொடுக்கும்? மௌனிகளாகக் கிடந்தன. அதைப் பார்த்த இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் தம் சிலம்பத்தை மேலும் சுழற்றினார். அதில் கொஞ்சம்சினமும் கலந்திருந்தது.
“நீங்கள் பேசாமலிருக்கிறீர்களே? உங்களுக்கு நேர்ந்ததென்ன?’ ஈதொன்றும் அற்புதமில்லையே. சமயங்களில் பதிலே தராத பொருட்களோடும் மனிதன் பேசத்தானே செய்கின்றான்? வாய்திறந்து பேசவோ பதில்தரவோ சக்தியற்றவை என நன்றாகத் தெரிந்தும் அவற்றோடு அவ்வப்போது பேசுவதில்லையா,மனிதன்?
அவற்றோடு பேசுவதல்ல இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நோக்கம். அவற்றைப் போய் கடவுளாகக் கருதி வணங்கி வழிபடும் மக்களின் அறியாமைச் சிந்தனையைப் பற்றிய துக்கத்தின் வெளிப்பாடு அது.
மறுபடியும் அவை மௌனம் சாதித்தன. இப்ராஹீம் அவர்களின் கேள்வியில் சினம் படியேறியது. சினத்தை வார்த்தைகளில் வெளிக்கொட்டாமல் செயல்வடிவில் வெளியிட்டார். அதன்பிறகு அவர் அவற்றின் மீது வலுவாகத் தாக்கப் பாய்ந்தார்.(93)
உள்ளக்கோபத்தையும் மனத்துயரையும் துக்கத்தையும் நெஞ்சக்கொதிப்பையும் இவ்வாறு ஆற்றிக்கொண்டார்.
மூன்றாம் காட்சி
இக்காட்சி இத்தோடு நிறைவடைகின்றது. அடுத்து வேறொரு புதிய காட்சி காட்டப்படுகின்றது. விழாக்கொண்டாட்டத்தில் இருந்து திரும்புகிறார்கள் மக்கள். இங்கே வந்து பார்த்தால் அவர்களுடைய சிலைகள் யாவும் உடைந்துபோய் சுக்குநூறாக சிதறிக்கிடக்கின்றன. இங்கே அந்தக் காட்சியைக் காட்டவில்லை குர் ஆன். வேறோரிடத்தில் அதனை விவரித்துள்ளது. அவர்கள் ஒருவரையொருவர் விசாரித்துக் கொண்டார்கள். யார் இந்த அபசாரத்தைச் செய்தது? தெய்வங்களோடு முறைதவறி நடந்துகொண்டது யார்? விளக்கங்களை தவிர்த்துவிட்டு குர்ஆன் அவர்களைக் கொண்டுபோய் நேரடியாக இப்ராஹீமுக்கு முன்னால் நிறுத்திவிடுகின்றது.
பிறகு, அம்மக்கள் அவரிடம் ஓடோடி வந்தனர். (94) காதோடு காதாக விஷயம் அனைவரிடமும் கசிந்துவிட்டது. இந்த “அபசாரத்தை’ யார் செய்திருக்க முடியும் என்பது அனைவருக்கும் வெளிச்சமாகிவிட்டது. ஓடோடி வந்தார்கள் அவரிடம். நாலாபக்கங்களில் இருந்தும் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். சினமும் கோபமும் சீற்றமும் ஆத்திரமும் கொப்புளிக்கும் எதற்கும் அடங்காக் கூட்டம் ஒருபக்கம்!. எல்லாவற்றையும்சந்திக்கும் துணிச்சலோடு ஒரே ஒரு ஒற்றை ஆள் மறுபக்கம்!.
நம்பிக்கை மிக்க முஃமின்!.
எப்பேற்பட்ட முஃமின் தெரியுமா? தனது பாதை எதுவென அவருக்குத் தெரிந்திருந்தது, தெளிவாக. அகத்திலும் ஆன்மாவிலும் சிந்தனையிலும் சீருள்ளத்திலும் இறைமை பற்றிய தெளிவான கோட்பாடு தீர்க்கமாக உறைந்திருந்தது. அதை நன்கு அறிந்திருந்தார், நம்பிக்கையோடு பற்றியிருந்தார். தனது உள்ளத்திலும் அதனை அறிந்திருந்தார்.
அதனை அறிவுறுத்தும் அத்தாட்சிகள் ஊர்உலகத்திலும் விண்வெளி வானம் பிரபஞ்சத்திலும் கொட்டிக்கிடப்பதை கண்டுகொண்டார். எனவேதான் ஆத்திரமும் ஆவேசமும் கொந்தளிக்கும் அந்தக் கலவரக் கூட்டத்திற்கு இடையே கோட்பாடும் கடவுட்கொள்கையும் பிய்ந்துபோய் பொத்தல் விழுந்து கிடக்கும் அக்கூட்டத்தினருக்கு மத்தியில் வலுவானவராகவும் பலசாலியாகவும் தென்பட்டார் அவர்!. சமூகத்தோடு வாக்குவாதம் இதனால்தான், அவர்களுடைய பெரும்பான்மையைக் கண்டு பயப்படாமல், அவர்களுடைய ஆற்றல் வலிமையைக் கண்டு அஞ்சாமல் அவர்களுடைய ஆத்திரத்திற்கும் சீற்றத்திற்கும் மதிப்பளிக்காமல் அவர்கள் தம்மை சூழ்ந்து கொண்டிருப்பதையும் பொருட்படுத்தாமல் மிகமிக எளிமையான வார்த்தைகளில் அவர்களுக்கு முன்னால் உண்மையை எடுத்துச் சொன்னார்.
அவர் கேட்டார்: “என்ன, நீங்களாகவே செதுக்கிய பொருள் களையா நீங்கள் பூஜை செய்கின்றீர்கள்?(95)
“உண்மையில் அல்லாஹ்தானே உங்களையும் படைத்தான்; நீங்கள் உருவாக்கிய இப்பொருள்களையும் படைத்தான்?'(96)
மனித இயல்பின் மொழி இது. உள்ளத்தில் சதாசர்வ காலமும் எழுகின்ற குரல் இது. நீங்களே செதுக்கிக்கொள்கின்ற இந்த தெய்வங்கள் எப்படி உங்களுடைய கடவுளாகும்?
“நீங்களாகவே செதுக்கிய பொருள்களையா கும்பிடுகின்றீர்கள்?(95)
உண்மையான கடவுள் என்றால் அவன்தானே அனைவரையும் படைத்திருக்க வேண்டும்? நாமாக உருவாக்கிக் கொண்ட பொருள் எப்படி நமக்கே கடவுளாக ஆகமுடியும்?
“உண்மையில் உங்களைப் படைத்தவனும் அல்லாஹ்தான்; நீங்கள் உருவாக்கிய இப்பொருள்களைப் படைத்தவனும் அவன்தான்?'(96)
அல்லாஹ் மட்டும்தான் படைத்தவனும் உருவாக்கியவனுமாகிய ஒற்றை அல்லாஹ் மட்டும்தான் வழிபடுவதற்கு உரியவன்!. ஒரே இறைவன்!. அசத்தியத்தின் கடைசி ஆயுதம் பலப்பிரயோகம் மறுக்கமுடியாத தெளிவான வாதம் இது!. அலட்சியத்தில் மயங்கியும் ஆத்திரத்தில் அறிவிழந்தும் கிடந்த அம்மக்கள் இதைப்பற்றியெல்லாம் சிந்திக்கின்ற மனோநிலையில் இல்லை. சத்தியத்தின் எளிய குரலை என்றைக்கு காதில் வாங்கியிருக்கின்றது, அசத்தியம்? அதிகாரத்தை கையில் வைத்திருந்தோர் அராஜகத்தில் இறங்கினார்கள். படுபயங்கர வதைகளை அவிழ்த்துவிட்டார்கள்.
“அவர்கள் தமக்கிடையே கூறிக்கொண்டார்கள். “இவருக்காக ஒரு நெருப்புக் குண்டத்தை உருவாக்குங்கள்; கொழுந்து விட்டெரியும் நெருப்பில் இவரை வீசிவிடுங்கள்!’ (97)
அதிகாரம் தருகின்ற பதில் இதுதான். இப்படித்தான். அதிகாரத்தில் வீற்றிருக்கும் அக்கிரமக்காரர்களுக்கு இதைத்தவிர வேறு மொழியே தெரியாது. கொடுப்பதற்கு பதில் எதுவும் அவர்களிடம் இல்லாதபோது, சத்தியத்தின் சாதாரணமான, தெளிவான வாதத்திற்கு எப்படி மறுப்பளித்தாலும் எக்கச்சக்கமாக மாட்டிக்கொள்வோம் என்னும் நிலையில் இப்படித்தான் அவர்கள் அராஜகத்தை களமிறக்குகின்றார்கள்.
சத்தியம் மேலோங்கும் அசத்தியம் கீழொதுங்கும்
இந்த மிரட்டலுக்குப் பிறகு என்ன நடந்தது என்பதை குர்ஆன் இங்கே சொல்லவில்லை. கடைசியில் என்னவானது என்பதை மட்டும் சொல்கின்றது. தனது நல்லடியார்களுக்கு அல்லாஹ் அளிக்கும் வாக்குறுதி எப்படி நிறைவேறுகின்றது என்பதை பொய்ப்பித்து நிராகரிக்கும் பகைவர்கள் எப்படி கோபத்திற்கு இலக்காகின்றார்கள் என்பதை விளக்கி விடுகிறான்.
“அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அவர்கள் திட்டமிட்டனர். எனினும், நாம் அவர்களையே தோல்வியுறச் செய்தோம்’. (98)
மனிதர்கள் என்னதான் திட்டம் தீட்டினாலும் அவர்களைக் கீழே தள்ள இறைவன் முடியுசெய்திருக்கும்போது பயன்தரவா போகின்றது?. வலிமையற்ற, கீழ்த்தரமான அம்மக்கள் அதாவது அதிகார போதையில் அராஜகம் செய்வோர், கொடுங்கோல் ஆட்சியாளர்கள், அநீதியாளர்களின் அடிப்பொடிகள், அல்லக்கைகள் என்னதான் செய்யமுடியும்? அல்லாஹ்வின் அருளும் கருணையும் அவனது நல்லடியார்களை சூழ்ந்து கவிந்திருக்கும் போது.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு கீழுள்ள “Next” ஐ “கிளிக்” செய்யவும்.