அர்ப்பணிப்புப் பெருநாள்! (3)
(அஸ்ஸாஃப்பாத் வசன விளக்கத் தொகுப்பு)
சையத் குதுப் ஷஹீத் ரஹ்மதுல்லாஹி அலைஹி
தமிழாக்கம் சையத் அப்துர் ரஹ்மான் உமரி
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது வரலாற்றின் அடுத்த கூறு
வரலாற்றின் அடுத்த கூறு இப்போது ஆரம்பமாகின்றது. தந்தையோடும் சமூகத்தோடுமான அவரது நிகழ்வுகள் முடிவடைந்துவிட்டன.
நெருப்பில் போட்டு அந்நெருப்பிற்கு அவர்கள் நரகம் எனப் பெயர் சூட்டியிருந்தார்கள் எரித்துக்கரிக்க முடிவு செய்தார்கள். ஆனால் அவர்களைக் கீழேதள்ள இறைவன் முடிவு செய்திருந்தான். அவர்களது சதியிலிருந்து இப்ராஹீமை பாதுகாப்பாக வெளிக்கொணர்ந்தான். அத்தருணத்தில்தான் தமது வாழ்க்கையின் ஒரு கட்டத்தை முடித்துவிட்டு அடுத்த கட்டத்தில் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அடியெடுத்து வைத்தார்கள். வாழ்க்கைப் புத்தகத்தில் ஓர் அத்தியாயத்தை முடித்துவிட்டு அடுத்த அத்தியாயத்தைப் புரட்டினார்கள்.
“நான் என்னுடைய இறைவனின் பக்கம் செல்கின்றேன்; அவனே எனக்கு வழிகாட்டுவான்’ என்றார் இப்ராஹீம். (99)
நாட்டைத் துறந்து ஹிஜ்றத் ஆம், அண்ணல் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் சொன்ன வார்த்தைகள் இவையே. என் இறைவனை நோக்கி நான் போகின்றேன். ஹிஜ்றத் என்பதுதான் இதற்குப் பொருள். முதலில் சிந்தனையாலும் உள்ளத்தாலும் செய்தாக வேண்டிய ஹிஜ்றத் இது. சிந்தனையை அடக்கி புலன்களை ஒடுக்கிய பிறகுதான் புலம் பெயருதல். விருப்பங்களை முதலில் மாற்றியாக வேண்டும் அப்புறம் தான் வசிப்பிடத்தை மாற்றவேண்டும்.
இந்நிகழ்விற்குப்பின் கடந்த காலத்தோடு தொடர்புடைய அனைத்தையும் விட்டுவிட்டார் அண்ணல் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம். தமது நினைவுகளைக் கூட கொண்டு வராமல் விட்டு விட்டார்கள்!.
தமது தந்தை, சமூகம், வீடுவாசல், சொந்தபந்தம், நாடு, நட்பு, உற்றார், ஊரார், அந்த உலகத்தோடு தொடர்புடைய அனைத்தையும் உதறினார்கள். நினைவின் ஒரு மண்துகளும் ஒட்டிக் கொண்டு கூடவே வரவிடவில்லை!. உறவையும் நினைப்பையும் விருப்பையும் வெறுப்பையும் முற்றிலும் துறந்துவிட்டு ஹிஜ்றத் செய்கிறார்கள். பாரம் எதுவுமே மனதில் இல்லை, சிந்தனையிலும் இல்லை!. எதுவுமற்றவராக தமது இறைவனை நோக்கி!. எல்லாவற்றையும் தூக்கி பின்னால் எறிந்துவிட்டு வெற்றுக்கரங்களோடு இறைவனை நோக்கி!. தமக்கென ஒரே ஓர் அடையாளம்கூட இல்லாமல் எல்லாவற்றையும் இழந்துவிட்டு இறைவனை நோக்கி!.
வழி காட்டுவான் என்னிறைவன் என்னும் ஒற்றை நம்பிக்கையை வலுவோடு பிடித்துக் கொண்டு!. போகவேண்டிய பாதையை பாதங்களுக்கு அறிமுகப் படுத்துவான் என்னும் அசைக்க முடியாத உறுதியோடு!. இந்த ஹிஜ்றத் தான் முழுமையான ஹிஜ்றத்!. ஒரு சிந்தனையில் இருந்து இன்னொரு சிந்தனையை நோக்கி நிகழும் மாற்றம் இது!
ஒரு தன்மையை இன்னொரு தன்மையாக மாற்றிக்கொள்ளும் சிதைமாற்றம் இது! இருக்கின்ற எல்லா உறவுகளையும் அறுத்துக் கொண்டு ஒரே ஓர் ஒற்றை உறவை மட்டும் பற்றிக்கொள்கின்ற செயல் இது! அதனோடு ஒட்டிக் கொண்டு உள்ளத்தில் வேறு எதுவும் எள்ளளவும் இருக்கவே கூடாது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் இதுதான் ஒருமிப்பு. ஓர்மை. தனித்துவம். அகஅமைதி. ஆன்மநம்பிக்கை. பற்றுதலின் பறைசாற்றல்!.
சாலிஹான பிள்ளைக்காக துஆ
ஆக, இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் தனித்திருந்தார்கள். பேர்சொல்லும் பிள்ளையோ வாரிசோ இல்லை. தமது குடும்பத்தையும் உறவுகள் நட்புகள் என அனைத்துவகைத் தொடர்புகளையும் துறந்து விட்டிருந்தார்கள். கடந்தகலத்தின் நினைவுகள் எதனையுமே கையோடு அவர்கள் கொண்டுவரவே இல்லை. ஊரோடும் நாட்டோடும் இருந்த தொடர்பையும் அறுத்து விட்டிருந்தார்கள்.
நெருப்பில் வீசியவர்கள், வீசத் துணை நின்றவர்கள், வீசுவதை விரும்பியவர்கள் ஆகியோரோடு இருந்த அனைத்து வகைத் தொடர்பையும் வீசியெறிந்துவிட்டார்கள்!. இதனால் தமது இறைவன் ஒருவனையே அவர்கள் முன்னோக்கி நின்றபோது என்னிறைவன் ஒருவனை நோக்கியே என் முகத்தை நான் திருப்பிக்கொண்டேன் என அவர்கள் பிரகடனப்படுத்தியபோது அவ்விறைவனிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார்கள். எனக்கொரு சிறந்த மகனைக் கொடு!. என்னையடுத்து இப்பணியைத் தொடர தக்கதொரு மகவைக் கொடு!.
“என் இறைவா! ஒரு மகனை எனக்கு நீ வழங்குவாயாக; அவர் உத்தமரில் ஒருவராக இருக்கவேண்டும்’. (100) சான்றோர்களில் ஒருவராக இருக்கவேண்டும், சாலிஹீன்களில் ஒருவராக!.
வந்தது நற்செய்தி
தனக்கென்றே உருவாகி தனக்கென்று வாழ்ந்துகொண்டுள்ள இந்நல்லடியானின் கோரிக்கையை மனமுவந்து ஏற்றுக்கொண்டான், வல்லோன் அல்லாஹ். அனைத்தையும் விட்டுவிட்டு கல்புன் ஸலீமுன் ஒன்றை மட்டும் தக்கவைத்துக்கொண்டல்லவா, வந்துள்ளார் இவர்?
சாந்த குணம் கொண்ட ஒரு மகனைப் பற்றி நாம் அவருக்கு நற் செய்தி அறிவித்தோம். (101) அத்தியாயத்தில் இவ்வசனத்தின் இடம்பொருளைப் பார்க்கையிலும் அவரைப் பற்றிய வர்ணனைகளை கவனிக்கும் போதும் இஸ்மாயீல் தாம் அவர் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி போல் தெளிவாகின்றது.
“ஹில்ம்’ என்னும் அருங்குணத்தை இயல்பாகப் பெற்றிருக்கும் ஒரு திருமகனை உமக்கு வழங்குவோம். இன்னமும் கருவிலேயே உருவாகி இராத மகவின் பண்பைப் பற்றிக் கூறுகிறான் பேரருளாளன்!. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஊரையும் உறவுகளையும் நாட்டையும் நட்புகளையும் துறந்துவிட்டு, இன்னும் ஹிஜ்றத்திலேயே இருக்கின்ற, பேசவோ உரையாடவோ உறவாடவோ அருகிலும் பக்கத்திலும் யாரும் இல்லாத இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இச்செய்தி இந்நற்செய்தி எப்படி இருந்திருக்கும்? அவர்களது உள்ளத்திற்கு எத்துனை மகிழ்ச்சிக் களிப்பை இச்செய்தி அள்ளியள்ளிக் கொடுத்திருக்கும்? அதுவும் மகனை வளர்த்து அவன் ஆளாகிநிற்கும் போது காணவிருக்கின்ற காட்சியை சான்றோன் என்றறியும்போது ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் மகிழ்வை இறைவன் இப்போதே வழங்கி விட்டானே!. பிறக்கப்போகும் மகன் ஹலீமாக இருப்பான்!.
வாழ்க்கையின் மகத்தான நிகழ்வு இனிதான் அந்த மகத்தான நிகழ்வு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் அவர்களின் வாழ்க்கையில் மட்டுமல்ல, மானுட குல வரலாற்றிலேயே எங்கும் காணக் கிடைக்காத, அருமைக்கும் பெருமைக்கும் உரிய ஒற்றை நிகழ்வு!.
வான்மறை குர்ஆன் நம்முன் எடுத்துரைக்கின்ற இந்த அரிய, அற்புத நிகழ்வை உன்னிப்பாக ஆராய்வோம். இஸ்லாமிய உம்மத்திற்கு அவர்களது முன்னோடியான இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்வைக் குறித்து இறைவன் தருகின்றஅருந்தகவல் இது!.
அம்மகன் அவருடன் சேர்ந்து உழைக்கும் வயதினை அடைந்தபோது இப்ராஹீம் (ஒருநாள்) அவரிடம் கூறினார்: “என் அருமைமகனே! நான் உன்னை பலியிடுவதாய்க் கனவு கண்டேன். உனது கருத்து என்ன என்பதைச் சொல்!’ அதற்கு அவர் கூறினார்: “என் தந்தையே! உங்களுக்கு என்ன கட்டளையிடப்படுகிறதோ அதைச் செய்துவிடுங்கள். அல்லாஹ் நாடினால், என்னைப் பொறுமையாளர்களில் ஒருவனாகக் காண்பீர்கள்’. (102) கனவு கண்டதும் நனவாக்க முயன்றதும் அல்லாஹ்! ஈமான், கீழ்ப்படிதல், கட்டுப்படுதல், ஒப்படைத் தல். உவப்பைத் தேடல் போன்றவற்றிற்கு எவ்வளவு பொருத்தமான உதாரணம் இது!.
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாமோ முதுமைப்பருவத்தில்! வீடுவாசலை ஊர்உறவை விட்டு வெகுதூரத்தில்! ஹிஜ்றத் செய்து நாட்டை துறந்துவிட்ட நேரத்தில்! வயதாகித் தளர்ந்த பிறகு அவருக்கொரு மகவு பிறக்கின்றது. பிறக்காதோ என ஏங்கி ஏங்கித் தவித்ததன் பலனாய்! காலங்கடந்த காத்திருப்புக்கு கைமாறாய்! வறட்சியே விளைந்து கொண்டிருந்த பெருநிலத்தில் வசந்தமாய் வந்தது அம்மகவு!.
தனித்தொரு சிறப்புக்கு சொந்தக்காரனாய் அந்த மகவு! அப் பண்பு உங்கள் மகனிடம் குடிகொண்டுள்ளது என்பதற்கு படைத்தவனே அளிக்கிறான் சான்று! ஹில்ம் தயாளம் எனும் அப்பண்பிற்கே இலக்கணம் அம்மகன்! மொட்டாய் மலர்ந்த சிறுமலரின் அரும்புகள் கூட விரியவில்லை இன்னும்! ஓடியாடிக் குதித்துக் கூத்தாடும் பருவம் மறையவில்லை இன்னும்! வாழ்க்கைத் தடத்தில் தந்தை கைகோர்த்து நடை பயிலவில்லை இன்னும்! இப்ராஹீமை ஈர்க்கும் இழுவிசையாய் இன்னிசையாய் இஸ்மாயீல்!. மகனை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம் நிறைகின்றது இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் அவர்களுக்கு!. குளிர்விக்கும் பனியாய், அணைக்கும் தண்மையாய், அகம்தழுவும் தென்றலாய் இன்னும் என்னென்னவோ ஆறஅமர உணர்ந்துய்யும்முன்பாக வந்து சேர்ந்தது, கனவொன்று!. சொந்தக் கரங்களால் பிஞ்சு மகனை அறுத்துக் கொடுக்கிறார் குர்பான்!.
இது இறைவனிடமிருந்து வந்த செய்தி என்பதை ஐயந்திரிபற அறிந்து கொள்கிறார், இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம். தன் வழியில் என் மகனை அறுத்துப் பலியிடுமாறு கொடுத்தவன் கேட்கிறான், கொண்டவன் கொள்கிறான்!. அதை உணர்த்தும் அறிகுறிதான் இக்கனவு!.
அப்புறம் என்ன?. இமைப்பொழுதும் தயங்கவில்லை, நொடிப் பொழுதும் தடுமாறவில்லை!. உள்ளத்தில் வேறொன்று இருந்தால்தானே உணர்வில் வேறொன்று பிறக்கும்?. அல்லாஹ்வைத் தவிர அங்கே வேறெதற்கும் ஒண்டவும் இடமில்லை என்றாகிவிட்ட பிறகு, அவன் உவப்பைத் தவிர வேறு ஒன்றைத் தேட பிறக்குமா நாட்டம்?. முழுமையான கீழ்ப்படிதலுக்கு பொருத்தமான மானுடனாக மாறிய இலக்கணமல்லவா, இப்ராஹீம்?. வரிந்துகட்டி, துணிந்து நின்றார்.
இது ஓர் அறிகுறிதான்! ஒரு சைகை தான்! தெளிவான வஹியோ திட்டவட்டமான கட்டளையோ அன்று! ஆனாலென்ன சைகையைச் செய்தது அந்த ஒப்பற்ற இறைவனன்றோ?. போதும் அது போதும் அந்த ஒன்று போதும் அவருக்கு!. லப்பைக் என்றவாறு அகக்கண்ணில் கண்டதை நிலமண்ணில் நிகழ்த்திக் காட்ட ஆயத்தமானார். ஏனென்ற கேள்வி எழவில்லை, ஏமாற்றத்திற்கு இடம் தரவில்லை! உள்ளம் கிறீச்சிடவில்லை, உதடுகளில் முறையீடு பிறக்கவில்லை!. என்இறைவா, காலங்கடந்து கனிந்த இந்த ஒற்றை மகனையா விரும்பிக் கேட்கிறாய்? என ஒரு வார்த்தை சிந்தையில் உதிக்கவில்லை!.
கட்டளைக்கு கீழ்ப்படிகிறார், வேண்டா விருப்போடா? என்னடா செய்வது வேறுவழியில்லையே என்னும் வெறுப்போடா? விரும்பிப் பணிகிறார் சிலர் வெறுப்போடு குனிகிறார் பலர் என்பது தானே உலகின் காட்சி! வெறுப்போடு குனிகின்ற இடத்தில் விருப்போடு பணி என்பதுதானே இதாஅத் என்பதற்குப் பொருள்!. உங்களுக்குப் பிடித்தமான செயலை இறைவனுக்காக செய்வதில் என்ன சிறப்பு இருக்கின்றது? உங்களுக்குக் கொஞ்சங்கூட பிடிக்காத செயலை இறைவனுக்காக செய்யவேண்டும்! அதுதான் இதாஅத். கீழ்ப்படிதல் என்பதற்கு இதுவே இது ஒன்றே பொருள்!.
கீழ்ப்படிகின்றேன் என்றுசொல்லிவிட்டு அலைபாயும் மனதோடும் துடிதுடிக்கும் உள்ளத்தோடும் கிளம்பவில்லை. உவப்பேறிய மனதோடும் அமைதி கமழும் அகத்தோடும் எழுந்து நின்றார் அண்ணல் இப்ராஹீம். தமது தமயனிடம் அவர் இவ் விஷயத்தை எடுத்துச்சொல்ல கையாண்ட சொற்களிலிருந்து இதனை நாம் உணரமுடிகின்றது. மனதின் உவப்பும் அகத்தின் அமைதியும் முகத்தில் விரிந்தவாறு சொல்கிறார்.
“என் அருமை மகனே! நான் உன்னை பலியிடுவதாய்க் கனவு கண்டேன். உனது கருத்து என்ன என்பதைச் சொல்!’. அமைதியும் நிச்சலனமும் புலன்களை அடக்கியாளும் ஓர் ஆளுமையின் சொற்கள் இவை!. என்ன செய்யப் போகிறோம்? யாருக்காக செய்யப் போகிறோம்? என்பதைப் பற்றி அவருக்குத் தெளிவிருந்தது, முழு மன ஒப்பதல் இருந்தது. சலனமற்ற மனதோடு தாம் தேர்ந்த பணிக்கு தம்மை தயார் படுத்திக் கொண்டிருந்தார் அவர்!. அதுமட்டுமன்று இது, இச்செயலை எண்ணி பயப்படாத, தடுமாறாத ஒரு திடமான முஃமினின் கூற்றும் கூட!. தீர்க்கமாக எண்ணி ஆராயாமல் உணர்ச்சி வசப்பட்டு திடுமென முடி வெடுத்துவிட்டு அப்புறம் ஏன் செய்தோமா? செய்யாமலே இருந்திருக்கக் கூடாதோ? என்றெல்லாம் அலைபாய்வதற்கு சிறிதும் வாய்ப்பில்லாத வைரம் பூண்ட ஈமானிய நெஞ்சின் சொல் இது!.
செயற்பாரத்தை சுமக்க இயலாமல் அவசர அவசரமாக சுமையை இறக்க ஓடோடிச் செல்கின்ற அவசர புத்திக்காரனின் சொற்கள் அல்ல!. பொறுமை, கூடைகூடையாக தேவைப்படுகின்ற செயல் இது!. உங்கள் ஒற்றை மகனை உயிரை விலைக்குக் கேட்கும் போர்க் களத்திற்கு அனுப்புங்கள் என்றோ உயிரைப் பணயம் வைத்து செய்யவேண்டிய பெருங்காரியம் ஒன்றில் ஈடுபடுத்துங்கள் என்றோ இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் கேட்கப்படவில்லை.
உங்கள் இருகரங்களால் நீங்கள் பெற்ற திருமகனைப் பலி கொடுங்கள் என்றல்லவா கேட்கப்படுகின்றது?. அதன் பிறகும் அவர் முழுமனதோடும் உவப்போடும் அதனைச் செய்ய முன்வருகிறார். தாம் பெற்ற மகனிடம் செய்தியைச் சொல்லி நீ என்ன நினைக்கின்றாய்? எனக் கேட்கவும் செய்கிறார். நேரமெடுத்து நன்கு யோசித்து நல்லதொரு முடிவைச் சொல் என்கிறார்.
மகனிடமே சொல்லாமலேயே ரகசியமாக அவனை அழைத்துச் சென்று காரியத்தை முடித்துவிட நினைக்கவில்லை. ஏதோ சந்தைக்கடைக்கு போவதைப் பற்றி பேசுவதைப்போல ஆறஅமர மகனிடம் தான் செய்யப் போகும் காரியத்தைப் பற்றிச்சொல்லி யோசனையும் கேட்கிறார்.
எப்ப? எப்படி இது சாத்தியம்? இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பொருத்தவரை இது இறைகட்டளை!. இறைவன் இதைத் தான் விரும்புகிறான் என்றால் செய்துதானே ஆகவேண்டும்? இறைவனுக்காக செய்வது என்றால் அது எதுவாக இருந்தாலும் முழு மனதோடும் நிறை உவப்போடும் செய்வதுதானே நம்பிக்கையாளனுக்கு அழகு? அப்படியென்றால் மகனிடமும் சொல்லிவிடுவதுதானே முறை? அவனும் இதற்கு முழுமையான கீழ்ப்படிதலோடும் மகிழ்வோடும் உடன்பட்டாக வேண்டும் அல்லவா? உவப்போடு கீழ்ப்படிதல் என்பது எவ்வளவு உன்னதமான களிப்பு! பரவசம்! அந்தச் சுவையை மகனும் நுகரவேண்டும் அல்லவா? சொல்லாமலேயே கூப்பிட்டுக் கொண்டு வந்து அவனைக் கட்டாயப்படுத்தி அழுத்தி அமுக்கி செய்யாமல் அவனது முழு விருப்பத்தோடும் முழுக் கட்டுப்பாட்டோடும் செய்வதுதானே அழகு?
தம்மைப் போன்றே சலனமற்ற மனதோடும் ஆற்றல்மிகு இறைவனுக்கு கட்டுப்படுகிறோம் என்னும் உவகையோடும் மகன் இப்பணியில் உடன்பட வேண்டும் என இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் விரும்பினார். வாழ்வைக் காட்டிலும் மகத்தான பொருள்பொருந்திய வாழ்க்கையைக் காட்டிலும் மிகமிகச் சிறந்த நிரந்தரமான, அந்த “வாழ்வாங்கு’ வாழ்க்கையின் தித்திப்புச் சுவையை மகனும் அனுபவிக்க வேண்டும் என ஆசைப்பட்டார்.
மகனளித்த மறுமொழி
கனவில் கண்டதை நிறைவேற்றும் வகையில் நீ பலியிடப்பட உள்ளாய் என்றதற்கு அகவையில் சிறிய அச்சிறு பாலகன் என்ன பதில் தருகிறான் என்பதைப் பாருங்கள். ஏறமுடியாத அந்த உயரிடத்திற்கு ஏற்கனவே அவரது தந்தை நின்று கொண்டிருந்த அந்த உன்னட இடத்திற்கு அவரும் ஏறி நின்றுவிட்டார்.
அவர் கூறினார்: “என் தந்தையே! உங்களுக்கு என்ன கட்டளையிடப்படுகிறதோ அதைச் செய்துவிடுங்கள். அல்லாஹ் நாடினால், என்னைப் பொறுமையாளர்களில் ஒருவனாகக் காண்பீர்கள்.’ (102)
கீழ்ப்படிதலையும் கட்டுப்படுதலையும் மட்டும் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அப்போது வெளிப்படுத்தவில்லை. தமது சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் மனத்தெளியையும் நம்பிக்கையையும் அகநிம்மதியையும் கூடவே வெளிப்படுத்துகிறார்.
“யா அபத்தீ’ என்னருமைத் தந்தையே! தனக்கே தனக்கு சொந்தமான தன்னருமைத் தந்தையை அன்பும் பாசமும் குழைந்து அழைக்கும் குரல்!. அந்நியோன்யத்தை தனக்குள் அடக்கிய குரல்! பயியிடப்பட உள்ளோமே என்னும் பயமோ திகிலோ அவரிடம் அறவே இல்லை! கையால்களில் நடுக்கமோ குரலில் தடுமாற்றமோ கொஞ்சமும் இல்லை! தனக்கு மிகவும் பிடித்தமான ஒரு செயலைச் செய்யப் போகும் அக அமைதியே சொற்களிலும் ஏறி ஒலிக்கின்றது.
“எந்தையே! தங்களுக்கு என்ன கட்டளையிடப்படுகிறதோ அதைச் செய்து முடியுங்கள்’. தனக்கு முன்பாக தன் தந்தை உணர்ந்தனுபவித்த பரவசத்தை இப்போது தமயனும் அனுபவிக்கிறார். இந்தக் கனவு இறைவனின் கட்டளை, அவனது அருளைப் பெறுவதற்கான குறியீடு என்பதை அவரும் உணர்ந்து கொள்கிறார். மறுப்போ மறுதலிப்போ வெறுப்போ நிராகரிப்போ சறுக்கலோ சாக்குபோக்கு எதுவும் இல்லாமல் முழுமையான அடிபணிதலோடு விசுவாசமான அடிமையாக மாறி லப்பைக் சொல்லியாக வேண்டும் இதற்கு என்பதை அவரும் உணர்ந்துகொள்கிறார்.
இறைவன் திருமுன் அடக்கத்தோடு இறைவனுக்கு முன்னால் உதிர்க்கின்ற வார்த்தைகளில் எச்சரிக்கையாக இருந்தாக வேண்டும். தன்னால் எந்தளவு பொறுத்துக்கொள்ள முடியும்? தன்னுடைய “தாங்கு எல்லை’ என்ன என்பது அவருக்குத் தெரியும்தானே. தனது பலவீனத்தையும் இயலாமையும் எதிர்கொள்ள தேவையான உதவியை தன் இறைவனிடமே கோருகிறார் அவ்வடியான், இளம் அடியான், இனிய அடியான்!.இறைவா, உன்னருளாலும் நேர்வழியில் நிலைத்திருக்க வைக்கும் உன் நன்னாட்டத்தாலும் என்னைக் காத்துக் கொள்! உன்னருள் என்னைப் போர்த்திக் கொண்டால் மட்டுமே என்னை நான் என்னையே நான் உனக்காக பலிகொடுப்பதில் பலியாவதில் வெற்றி ஈட்டமுடியும்!. நீயிட்ட கட்டளையை இனிதே நிறைவேற்றிய பெருமையை சொந்தம் கொண்டாட முடியும்!.
“அல்லாஹ் நாடினால், என்னைப் பொறுமையாளர்களில் ஒருவனாகக் காண்பீர்கள்.’ (102)
தனது தைரியத்தையும் திடநெஞ்சையும் வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக அத்திருமகன் அச்சிறுமகன் கருதவே இல்லை. அருஞ்செயல்களை செய்யவும் அபாரமான காரியங்களில் இறங்கவும் துணிந்தவன் நான் என்பதை நிரூபிக்க எண்ணவில்லை.
தன்னிடம் எதுவுமே இல்லை என்பதையும் எதுவாக இருந்தாலும் தன்னிறைவன் அருளால் மட்டுமே சாத்தியம் என்பதையும் உணர்ந்தவராக, அவன் அருள் தன்மீது கவிந்து தன்னை அரவணைத்தால் மட்டுமே தன்னிடம் இந்நிமிடம் கோரப்படும் அவ்வருஞ் செயலுக்கு தான் இணங்கவும் ஒத்துழைக்கவும் முடியும் என்பதையும் நன்கறிந்தவராக, நிலைகுலையாப் பொறுமையை அவன் தனக்கு நல்கினால் மட்டுமே தன்னால் இப்பள்ளத்தாக்கை பெருவெற்றியோடு கடக்கமுடியும் என்றுணர்ந்து தெளிந்தவராக சொல்கிறார்…
‘அல்லாஹ் நாடினால், என்னைப் பொறுமையாளர்களில் ஒருவனாகக் காண்பீர்கள்.’ (102)
இறைவன் திருமுன் வெளிப்படும் இந்த நிகரற்ற அடக்கத்தை என்னவென்பது? இதன் அழகை எப்படிப் புகழுவது? ஓர் அடியானை ஈமான் எங்கே கொண்டு போகின்றது, பாருங்கள்! எவ்வளவு உயரம்! தொடவே முடியாத, மனக்கண்களால் கூட ஏறிட்டுப் பார்க்கமுடியாத ஓங்குயரம், வானுச்சி! இதாஅத்திற்கும் கீழ்ப்படிதலுக்கும் எவ்வளவு அழகிய இலக்கணம்!
இதனினும் மேலாக இன்னோர் இலக்கணத்தை யாரால் வகுக்க இயலும்? செயலாக்கம் பெறும் உரையாடல் உரையாடலைத் தாண்டி அடுத்த கட்டத்திற்கு நகருகின்றது, பேச்சு!. செயலூக்கம் பெற்று நிகழ்வெல்லையில் கால்பதிக்கின்றது.
இறுதியில் அவ்விருவரும் இறைவனுக்கு முன்னால் முழுமையாகச் சரணடைந்துவிட்டார்கள். மேலும், இப்ராஹீம் மகனைமுகங்குப்புறக் கிடத்தினார். (103)
வான்மறை கையாளுகின்ற வார்த்தையைப் பார்த்தீர்களா? “அஸ்லமா’ இறைவனிட்ட பணியைச் செய்ய இருவரும் முன் வந்துவிட்டதைக் குறிக்க “அஸ்லமா’. ஸுப்ஹானல்லாஹ்!. மனமுவப்போடு கீழ்ப்படிதலுக்கான மகத்தான உதாரணம். கீழ்ப்படிதல் என்னும் உணர்வு மறுபடியும் ஒருமுறை வானேறி உச்சத்தில் நிற்கின்றது. வானுயர்ந்து விண்ணிலேறி நிற்கின்றது
ஈமான்!. மனமுவந்து கீழ்ப்படிதலுக்கான ஒப்பற்ற முன்னுதாரணத்தை மானுட குலம் இப்போது காணவுள்ளது. முழுமையாக ஆயத்தாமாகிய நிலையில் தனது மகனைக் குப்புறக் கிடத்துகிறார் அந்தத் தந்தை. மகனும் அதற்கு உடன்பட்டவராய் ஆடாமல் அசையாமல் கிடக்கிறார். “நிகழ்வு’ நடந்தேற நிமிடக்கணக்கிலான நேரமே பாக்கி!.
தந்தையும் மகனும் தம்மை முழுக்க முழுக்க இறைவனிடம் ஒப்படைத்தே விட்டார்கள். இதுதான் இஸ்லாம்!. இஸ்லாம் என்பதன் முழுப் பொருள், உண்மைப் பொருள் இதுவே!. ‘அஸ்லமா’
நெஞ்சில் நம்பிக்கை, முகத்தில் நிம்மதி, அகத்தில் அமைதி, நிறைவும் நிம்மதியும் கலந்த நிச்சலனம், இறைவனுக்குக் கட்டுப்படும் அகஅமைதி, இறைகட்டளைக்குக் கீழ்ப்படிகின்ற உளப்பெருமிதம் இருவரின் உள்ளத்தையும் இவ்வுணர்வுகளே வியாபித்துள்ளன. தொடவே முடியாத தொலைதூர ஈமானின் அடையாளப்புள்ளிகள் இவை!. தைரியமென்றோ துணிச்சலென்றோ சொல்லமுடியாது இதனை! பக்திப் பரவசம் என்றோ உணர்ச்சிக் கொந்தளிப்பு என்றோ அடக்கமுடியாது இதனை!.
ஆம், ஒரு போர்வீரன் போரில் ஆவேசத்தோடும் ஆக்ரோஷத்தோடும் களமாடுவது இயற்கை! கொல்கிறான், கொலையாகிறான். திரும்பி வர மாட்டோம் எனத் தெரிந்தே உயிருக்குத் துணிந்தே அருஞ்செயலுக்குத் தயாராகிறான் மாவீரன்!. ஆனால் அவையெல்லாம் வேறு, இது வேறு!.
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாமும் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாமும் இங்கே செய்துகொண்டிருப்பது முற்றிலும் வேறுவகையான செயல்!. இரத்தக்களறியோ கோபக் கொந்தளிப்போ இங்கில்லை. உணர்ச்சி வேகத்திற்கோ ஆக்ரோஷ ஆர்ப்பாட்டத்திற்கோ இங்கு இடமில்லை. வெறிகொண்டு போராடிக் கொண்டிருப்பவனின் உள்ளத்தின் ஓரத்தில் அச்சம் உறைந்துகிடக்கலாம். தன் பயத்தை மறைத்தவாறு அவன் களமாடிக் கொண்டிருக்கலாம்!.
இங்கோ இதாஅத்தும் கீழ்ப்படிதலும் அல்லவா, கொட்டப்படுகின்றது!. நன்கு யோசித்து, தெளிவாக சீர்தூக்கிப் பார்த்து, அறிவாராய்ச்சி நடத்தி, எண்ணத்தை ஒன்றுக்கு நூறுமுறை அலசிப்பார்த்து அல்லாஹ்விடம் தம்மையே ஒப்படைக்கின்றார்கள், இவர்கள்!. என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பது நன்றாகத் தெரியும், எதைச் செய்து கொண்டிருக்கிறோம் என்பதில் மனப்பூர்வமான ஒப்புதலும் உண்டு!. ஒப்புதல் மட்டுமல்ல, நிம்மதியும் கூடவே உண்டு!. நிம்மதி, நிச்சலனம்!. கீழ்ப்படிகின்றோம் என்பதில் மனதின் களிப்பு. நாடிநரம்புகளில் எல்லாம் கிறங்கியோடும் இதாஅத்தின் இன்சுவை!.
இதாஅத்தின் கடமையை முறைப்படி நிறைவு செய்துவிட்டனர் இப்ராஹீமும் இமாயீலும். தம்மையே இறைவனிடம் முழுமையாக ஒப்படைத்துவிட்டனர். அவனது கட்டளையை நிறைவேற்றத் துணிந்து விட்டனர். கழுத்தில் வைக்கப்பட்ட கத்தி உள்ளே இறங்குவது ஒன்றுதான் பாக்கி!. கத்தி உள்ளே இறங்கிவிட்டால் போதும் இரத்த வெள்ளத்தில் உடல் கொப்புளிக்கும்!. உயிர்ப்பறவை கூடுதுறந்து விண்ணேகும்!. ஆனால், அது தேவையில்லை இறைவனுக்கு! எது தேவையோ அதனை முழுமையாக ஏன் கூடுதலாவே கொடுத்து விட்டிருந்தனர் இப்ராஹீமும் இமாயீலும்!. இறைவனின் தராசுக்கோலில் எதற்கு எடை மிகுதியோ அது கூடுதலாகவே கொடுக்கப்பட்டுவிட்டது.
இக்லாஸ் எனும் எண்ணத் தூய்மையும் ஈஸார் எனும் அர்ப்பணிப்பும் அள்ளிவைத்து விட்டிருந்தனர் அல்லாஹ்வின் திருமுன் தந்தையும் தமயனும்!. நிறைவடைந்த சோதனை வைக்கப்பட்ட சோதனை நிறைவேறிவிட்டது. பரீட்சை தேறிவிட்டது. சோதனையின் நோக்கம் முழுமையாகிவிட்டது. உடல் புண்ணாவது மட்டும்தான் பாக்கி!. குருதி வழிந்தோடி ஓர் அர்ப்பணிப்பு நிகழ வேண்டும். அது ஒன்றுதான் இன்னமும் எச்சம்!. துன்புறுத்தியும் துயரங்களுக்கு ஆட்படுத்தியும் தன்னடியார்களை சோதிப்பதில் இறைவனுக்கு ஒருபோதும் நாட்டமில்லை!. அவனுக்கு அவர்களது குருதியும் தேவையில்லை, காயங்களும் தேவையில்லை!.
அவ்விருவரும் தங்கள் எண்ணத்தூய்மையை வெளிப்படுத்தி இறைவனுக்காக எதைச்செய்யவும் தயார் என்பதை நிரூபித்தே விட்டனர். இனியெதற்கு காயங்களும் கழுத்தறுப்பும்? இறைவனை தாங்கள் நேசிக்கின்றோம் என்பதையும் அந்நேசத்திற்கு உரிய விலையை மனமுவந்து செலுத்த எந்நேரமும் சித்தமாயிருக்கின்றோம் என்பதையும் காட்டிவிட்டனர். ஆக, வெற்றிகரமாக கடந்துசென்றுவிட்டனர் சோதனையை!. இருவரின் அகத்தினுள்ளும் மாசற்ற அன்பு மாண்புகுறையாமல் உறைகின்றது என்பதை இறைவன் கண்டுகொண்டான். அதன் விளைவாக, கீழ்ப்படிகின்ற, இறைநேசத்தை வெளிப்படுத்துகின்ற, இறைக் கட்டளைக்கு தலைகுனிகின்ற, கண்ட கனவை மெய்ப்பிக்கின்ற அருஞ்செயலை அவர்கள் நிறைவேற்றிவிட்டனர் என்னும் சான்றிதழை வழங்கிவிட்டான், அவன்!. அப்போது நாம் அவரை அழைத்துக் கூறினோம்: “இப்ராஹீமே! (104) நீர் கனவை நனவாக்கி விட்டீர். நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி வழங்குகின்றோம். (105) திண்ணமாக, இது ஒரு தெளிவான சோதனையாய் இருந்தது. (106) மேலும், ஒரு பெரும் பலியை ஈடாகக் கொடுத்து அக்குழந்தையை நாம் விடுவித்துக் கொண்டோம். (107)
இப்ராஹீமே! கனவை நனவாக்கி விட்டீர்கள் இப்ராஹீமே, கனவை நனவாக்கியே விட்டீர்கள்!. கனவில் கண்டதை கண்களுக்கு முன்னால் கொண்டுவந்து நிறுத்தி விட்டீர்கள். தனது அடியான், தனக்கு முன்னால் எல்லாவற்றையும் கீழே வைத்துவிட்டு முற்றிலும் அடிபணிந்து நிற்க வேண்டும்; தன்னை முழுமையாக அவன் வசம் ஒப்படைத்து விட வேண்டும் என்பதையே இறைவன் விரும்புகிறான். இறைவனுக்குப் பிடிக்காத ஒன்றை உள்ளத்தில் ஒளித்து வைத்திருக்கக் கூடாது!, இறைவனின் கட்டளையை விட இன்னொன்றை பெரிதாக நினைக்கக் கூடாது!, இறைவனா? இன்னொன்றா? என்றால் அந்த இன்னொன்றுக்கு அது எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும் முக்கியத்துவம் அளிக்கக்கூடாது!. இறைவனின் கட்டளையை விட்டும் காப்பாற்றி அதற்கு உயிரளிக்க நினைக்கவே கூடாது!. அந்த “இன்னொன்று’ நீங்கள் பெற்றெடுத்த பிள்ளையாக இருக்கலாம், உங்கள் ஈரக்குலையாக இருக்கலாம், ஏன் உங்கள் உயிராகவும் கூட இருக்கலாம்!.
இப்ராஹீமே, நீ உன்னை மெய்ப்பித்துவிட்டாய்!. இறைவனின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவிட்டாய்!. இறைநேசத்தை நிலத்தில் நிரூபித்துவிட்டாய்!. விருப்போடும் மகிழ்வோடும் மனநிம்மதியோடும் நம்பிக்கையோடும் நேசத்தோடும் இறைவனின் பாதையில் அர்ப்பணம் ஆகிவிட்டாய்!.
இப்போது எஞ்சியிருப்பது இந்த பூதஉடல்தான்!. தோலால் போர்த்தப்பட்ட ஒரு சதைப் பிண்டம்! அதற்குப் பதிலாக அதேபோன்று எலும்புகளாலும் சதையாலும் உருவான ஒரு மிருகத்தைப் பலி கொடுத்தால் போதும்! என்றைக்குமான இதாஅத்தை நெஞ்சார நிறைவாகப் பெற்றிருந்த அந்த உயிரை அல்லாஹ் விடுவித்துக் கொண்டான்!. அதற்குப் பகரமாக அதற்குப் பிணையாக மகத்தான மாற்றுப் பலியை உருவாக்கினான்.
அது ஒரு செம்மறியாடு என்கிறார்கள். இறைவன் பாதையில் பலி கொடுப்பதற்காக இப்ராஹீமிற்கு அவ்வாடு வழங்கப்பட்டது!. இஸ்மாயீலுக்குப் பதிலாக அவ்வாட்டை இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் பலி கொடுத்தார்கள். வெற்றியின் சுபச்செய்தி அடுத்து, இப்பெருவெற்றியின் சுபச்செய்தி வழங்கப்படுகின்றது. நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி வழங்குகிறோம்.(105)
நன்மை செய்வோரின் நற்றன்மைக்கு இவ்வாறே நாம் நற்கூலி வழங்குகிறோம்!. முதலாவதாக, இப்பேற்பட்ட சோதனைக்கு அவர்களை தேர்வு செய்கிறோம். இரண்டாவதாக, அவர்களுக்கு வழிகாட்டுகிறோம். அவர்களுடைய உள்ளத்தில் இறையன்பையும் நன்றியுணர்வையும் நிரப்புகிறோம். மாண்புயர் படித்தரங்களில் குடியமர்த்துகிறோம். மூன்றாவதாக, இவ்வருஞ்செயலை நிகழ்த்தத் தேவையான உறுதியையும் வலுவையும் வழங்குகிறோம். அதில் அவர்களை நிலைத்திருக்கச் செய்கிறோம். நான்காவதாக, இந்நற்கூலிக்கு பொருத்தமானவர்களாக அவர்களை உருமாற்றுகிறோம்.
நிகழ்வின் நினைவாக!
மகத்தான இந்நிகழ்வின் நினைவாகத்தான் அர்ப்பணிப்புப் பெருநாளின் குர்பானி கொடுக்கப்படுகின்றது. தூய ஈமானின் அடையாளமாக, மாசற்ற இதாஅத்தின் முன்னுதாரணமாக, அர்ப்பணிப்புப் பேருணர்வின் கல்வெட்டாக, மனமுவந்து கீழ்ப்படிதலின் சின்னமாக வரலாற்றுப் பேரேட்டில் தகதகவென மின்னுகின்றது, இது!.
இப்பேரொளிப் பெருவெளிச்சத்தில் தனது மூதாதை இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாமுடைய தூய வரலாற்றையும் மாசில்லா நினைவையும் வழிகாட்டும் பெருவாழ்வையும் நினைவூட்டிக் கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் அர்ப்பணிப்புப் பெருநாளை இஸ்லாமிய உம்மத் கொண்டாடுகின்றது!. அந்த இப்ராஹீமைத்தான் இந்த உம்மத் பின்பற்றுகின்றது, போற்றத்தக்க முன்மாதிரியாக அவரது காலடிச் சுவடுகளை அடியொற்றி நடைபயிலுகின்றது, அவரது கடவுட் கோட் பாட்டையும் வழிபாட்டு நெறிகளையும் நெஞ்சோடு சேர்ந் தணைத்துக் கொள்கின்றது. அவரோடு ஆன்மீகத் தொடர்பை வலுவாக்குகின்றது.
அவர் எந்த மார்க்கத்தின் பக்கம் அழைப்பு விடுத்தாரோ அதை முழுமையாகப் புரிந்து, தெளிவதும் இதில் அடக்கம்!. இறைவனின் சட்டதிட்டங்களுக்கு முன்னால் முழுமையாக நிறைவாக தலைகுனிந்து அடிபணிவதற்குப் பெயர்தான் அவனது கட்டளைகளுக்கு தங்குதயக்கமில்லாமல் ஏன், எதற்கு என்று ஆராயாமல் லப்பைக் சொல்வதற்குப் பெயர்தான் இஸ்லாம் என்பதை மறுபடியும் சிந்தனையில் பதித்துக் கொள்வதும் ஒரு நோக்கம்!.
தனது இறைவனின் கட்டளையையோ குறியீட்டையோ கண்டமாத்திரத்தில் இதோ செய்யத் தொடங்கிவிட்டோம் என நொடிப் பொழுதும் தாமதிக்காமல் செயல்வடிவில் அறிவிப்பது ஒன்றுதான் இந்த உம்மத்தின் அடையாளம்!. தமக்காக என்று உள்ளத்திலும் கொஞ்சத்தை மிச்சம் ஒளித்து வைக்கக் கூடாது!. இறைவனின் திருமுன் எதைப் படைப்பதாக இருந்தாலும் எப்படிப் படைத்தால் அவனுக்குப் பிடிக்குமோ அவன் விரும்புவானோ அப்படி படைப்பது ஒன்றுமட்டுமே சிந்தனையில் இருக்கவேண்டும்!.
அடுத்து, சோதனைகளிலும் துன்பங்களிலும் வாட்டி வதைத்து இன்னல்களையும் இடுக்கண்களையும் இடைவிடாது தருவதல்ல, இறைவனின் நோக்கம் என்பதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும். கீழ்ப்படியும் குணத்தை நன்றி உணர்வை இந்த உம்மத் எந்தளவு தனக்குள் ஆழப்பதித்துள்ளது என்பதை அறிவது ஒன்றே அவன் நோக்கம்!. எந்தளவுக்கு இறைவனின் கட்டளைகளுக்கு இவர்கள் கட்டுப்படுகின்றார்கள்? எந்தளவுக்கு அவன் விதித்த கட்டுப்பாடுகளை நிறைவேற்றுகின்றார்கள்? அவனுக்கு முன்பாக எந்தளவுக்கு தலை குனிகின்றார்கள்? அடிபணிகின்றார்கள்? இறைவன் விஷயத்தில் தாமாக உருவாக்கிக் கொண்ட நியதிகளை ஒருபோதும் பின்பற்றலாகாது!. அடிபணிகின்ற விஷயத்தில் தவறுதல் நிகழ்ந்து விடக்கூடாது!.
உள்ளத்தின் தூய்மையை அல்லாஹ் செயலுருவில் அறிந்துகொண்டால் மேலும் மேலும் ஏற்படவுள்ள சோதனைகளிலிருந்து விடுவிப்பான்; அவன் நிகழ்த்திக்காட்டிய அருஞ்செயலை அவனது நன்றியுணர்விற்கும் கட்டுப்பாட்டிற்கும் “ஒருசோற்று’ உதாரணமாக எடுத்துக்கொள்வான்; அங்கீகாரம் என்னும் ஒப்பற்ற சான்றிதழை அவனுக்கு வழங்கிவிடுவான்; சோதனைகளிலிருந்து அவன் உயிரைக் காப்பாற்றுவான்; அவர்தம் மூதாதை இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாமுக்கு அளித்த அதே கண்ணியத்தை அவனுக்கும் அளிப்பான்!. இறைவனின் அருட்கொடைகள் பின்னர் தோன்றிய தலைமுறைகளில் அவருடைய புகழையும், நற்பெயரையும் விட்டு வைத்தோம். (108)
இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் அவர்களுடைய நற்பெயரும் கீர்த்தியும் தலைமுறை தலைமுறையாகத் தொடருகின்றது. மக்கள் தலைமையும் வழிகாட்டும் பெருமிதமும் அவர் கணக்கில் சேர்ந்தது. அபுல் அன்பியா தூதர்களின் தந்தை ஆகவும் திகழ்ந்தார் அவர். இஸ்லாமிய உம்மத்தின் மூதாதை அவர். இஸ்லாமிய நன்னெறி அவரது செந்நெறியின் இறுதிச் சுவடு!.
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய காலடிகளைப் பின்பற்றி மானுட குலத்திற்கு தலைமை தாங்கக்கூடிய பொறுப்பையும் வழிகாட்டக் கூடிய பெரும்பணியையும் இந்த இஸ்லாமிய உம்மத்தின் மீது இறைவன் சுமத்தியுள்ளான். அவர்களுக்கு மட்டுமே உரித்தான நற்பேறு இது!. இறுதித்தீர்ப்பு நாள்வரை அண்ணல் இப்ராஹீமின் வாரிசுகளாக இந்த உம்மத் ஒன்றுதான் விளங்கப்போகின்றது. சாந்தி உண்டாகட்டும், இப்ராஹீம் மீது! (109)
இறைவனின் புறத்திலிருந்து இப்ராஹீமிற்கு ஸலாம் உரைக்கப்படுகின்றது. உலகழிவு நாள்வரை நிலைகொண்டிருக்கும் இறுதி வேதத்தில் இந்த ஸலாம் பதியப்பட்டுள்ளது. மகத்தான பிரபஞ்சத்தில் மாண்புடைய பதிவாக இந்த ஸலாம் திகழுகின்றது.நன்மை புரிவோருக்கு நாம் இத்தகைய கூலியையே வழங்குகின்றோம். (110)
நமது நடைமுறையைப் பார்த்தீர்களா? நாமே அவரைச் சோதித்தோம். அச்சோதனையில் அவரை வெற்றிபெற வைத்தோம். அவரது நற்பெயரை வரலாற்றின் பேரேட்டில் நிலை பெறச் செய்தோம். அவர்மீது ஸலாம் உரைக்கிறோம். மேலும் அவரது கண்ணியத்தை செழிக்க வைக்கிறோம். திண்ணமாக, நம்மீது நம்பிக்கைகொண்ட அடியார்களுள் ஒருவராக அவர் திகழ்ந்தார். (111) ஈமானுக்குக் கிடைத்த பெருமதிப்பு இது! ஈமானின் உயிரோட்டமும் கூட! இந்தச் சோதனைகளின் விளைவாக வெளிப்பட்ட புதையல்.
இஸ்ஹாக்கின் பிறப்பு
அண்ணல் இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் மீது மறுபடியும் ஒருமுறை இறைவன் தன் பேரருளைப் பொழிந்தான். இஸ்ஹாக் போன்ற மகவொன்றை வழங்கினான். அண்ணல் இப்ராஹீமையும் இஸ்ஹாக்கையும் அருள்மழையில் நனைவித்தான்!. இம்மட்டன்று, இஸ்ஹாக் அவர்களுக்கு மகத்தான மகவொன்று பிறக்கும் எனும் நற்செய்தியையும் வழங்கினான்.
மேலும், இஸ்ஹாக் பற்றியும் அவருக்கு நாம் நற்செய்தி அறிவித்தோம். அவர் ஒரு நபியாகவும் சான்றோர்களுள் ஒருவராகவும் இருந்தார். (112) மேலும், அவர் மீதும் இஸ்ஹாக் மீதும் அருட்பாக்கியங்களைப் பொழிந்தோம். (113) அவருக்குப் பின் அவரது சந்ததியர் தொடர்ந்தனர். ஆனால், அவரிடமிருந்து அவரது சந்ததியினருக்குக் கிடைத்தது உயர்குடிச் சிறப்பும் பிறவிப் பெருமையும் மிக்க வாரிசுரிமை அல்ல. அதுவொரு சிந்தனைப் பொறுப்பு, மார்க்கச் சுமை, இறைநெறிப்பணி!. அவ்வழியில் யார் அவருக்கு சிறந்த வாரிசாகத் திகழ்ந்தார்களோ அவர்கள்தாம் “முஹ்ஸின்’கள் சான்றோர்கள்!. அதற்குப் புறம்பாக நடந்துகொண்டோர் அநியாயக்காரர்கள். சொந்தமோ பந்தமோ நெருங்கிய உறவோ பலத்த நட்போ எதுவும் அவர்களைக் காப்பாற்றாது!.
அவ்விருவரின் வழித்தோன்றல்களில் சிலர் நன்னடத்தை கொண்டவர்களாகவும் இன்னும் சிலர் தமக்குத் தாமே வெளிப்படையாக கொடுமை புரிபவர்களாகவும் இருக்கின்றார்கள். (113)
[ கட்டுரையாசிரியருக்கும், மொழியாக்கம் செய்த ஆலிம் பெருமகனாருக்கும் “JAZAAKALLAAHU KHAIR” ]