காருண்யசீலர்களாகும் குஜராத்தி முஸ்லிம்கள்
கடந்த ஒரு மாத கொரனா சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வீடு திரும்பிய குஜராத்தின் பெரும் தனக்காரர் காதர் ஷேக் (வயது 63), வீடு திரும்பிய கையோடு முதல் வேலையாக சூரத்தின் அதன்ஜா பகுதியில் இருக்கும் அவரது ஒரு பெரிய அலுவலகத்தை கோவிட் மருத்துவமனையாக மாற்றிவிட்டார்.
30,000 சதுர அடி பரப்பளவுள்ள அந்த கட்டிடத்தில் சுமார் 185 சாதாரண படுக்கைகளும், 15 ICU படுக்கைகளும், மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கான தனித்தனி அறைகளும் ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்.
சூரத் நகரின் பிரபல மருத்துவமனையில் தாம் பெற்ற சிகிச்சைக்கு லட்சங்களில் பில் தொகை கட்டிய அவருக்கு தோன்றியது இது தான், “பணக்காரனாகிய எனக்கே இந்த தொகை மலைப்பை கொடுக்கிறது எனில் சாதாரணமானவர்களுக்கு இது எத்தகையதொரு தாக்கத்தையும் வசதி குறைபாட்டால் சிகிச்சை பெற முடியாத பின்னடைவினையும் உண்டாக்கும்” என நினைத்தே இந்த இலவச மருத்துவம் கொடுக்கும் முடிவுக்கு வந்ததாக கூறினார்.
மிகவும் வசதி படைத்த குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தமக்கும் வாழ்வின் ஏற்றத்தாழ்வுகள் வறுமையின் வாசனையை உணர்த்திச்செல்லாம் இருக்கவில்லை இப்போது தாம் பணக்காரர் ஆகியதற்கு கடின உழைப்புதான் காரணம், தன்னுடைய மூன்று மகன்களும் வணிக வியாபாரத்தில் பெரிய அளவில் உள்ளனர், ஏழைகள் பலருக்கு உதவுகின்றனர். எனவே இது எனக்கான வாய்ப்பாக நான் எடுத்துக்கொண்டேன் என கூறியவர், சூரத் நகர முனுசிபல் கமிசனர் பி.எம்.பாணி மற்றும் டெபுடிடி ஹெல்த் கமிசனர் Dr.ஆஷிஸ் நாயக் ஆகியோரிடம் அனுமதி பெற்று தன்னுடைய அலுவலகத்தை கோவிட் மரித்துவமனையாக மாற்றியுள்ளதாக கூறினார். மருத்துவமனைக்கு அவரது பேத்தியின் பெயரான ஹிபா என்பதை குறிப்பிட்டு ஹிபா கோவிட் ட்ரிட்மன்ட் சென்டர் என வைத்துள்ளார்.
இதன் அடுத்தகட்டமாக அங்கு ஒரு சமையலறை தயார் செய்து அனைவருக்கும் உணவு தயாரிப்பதற்கான அனைத்து பொருட்களையும் வழங்கவிருப்பதாக தெரிவித்தார். இந்த மருத்துவமனை சாதி,மதம் போன்ற பிரிவினைகளுக்கு அப்பாற்பட்ட அனைத்து தரப்பினருக்குமானது என கூறினார் காதர் ஷேக்.
இதேபோல குஜராத் வதோதரா, தண்டால்ஜாவில் இயங்கி வரும் தாருல் உலூம் மதரஸாவினை 198 படுக்கைகளுடைய கோவிட் சிகிச்சை மையமாக மாற்றியுள்ளார் அதன் தாளாளர் முப்தி ஆரிப் ஹகீம் ஃபலாஹி.
குஜராத், பரோடாவின் மிகப்பெரிய முஸ்லிம் கம்யூனிட்டி சென்டரின் சுபேர் கோபலானி மற்றும் பரோடா முஸ்லிம் மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் முகமது உசேன் ஆகியோரின் ஆரோசனையின் பெயரில் இப்ராஹீம் பேவானி ஐடிஐ ஹாஸ்டலையும் கோவிட் சிகிச்சை மையமாக மாற்றிக்கொடுத்துள்ளனர்.
அஹமதாபாதில் இருக்கும் ஆசியாவின் மிகப்பெரிய முஸ்லிம் சேரி என அழைக்கப்படும் ஜுஹாபுராவில் இருக்கும் இக்ரா மருத்துவமனையும், சரஸ்பூரிலுள்ள ஜாமியா ஃபைசுன் குர்ஆன் மதரஸா மற்றும் சர்கேஜில் இருக்கும் தாருல் குர்ஆன் மதரஸாவும் சுமார் 1,200 படுக்கைகளுடைய குவாரண்டைன் வார்டாக தானம் கொடுக்கப்பட்டுள்ளது.
குஜராத்தின் பெரிய பரப்பளவிலுள்ள கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் எதுவும் மாநில அரசின் கொரனா நடவடிக்கைகளுக்கு ஆதரவுக்கரம் கொடுக்காத நிலையில் முஸ்லிம்களின் தாராளமும் தயாளமும் அங்கே பேசு பொருளாகியுள்ளது.
– S. Nasrath Rosy