Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

சில நேரம் – டாக்டர் ஃபஜிலா ஆசாத்

Posted on July 23, 2020 by admin

சில நேரம்

    டாக்டர் ஃபஜிலா ஆசாத்     

நீ யார்?

இந்தக் கேள்வியை வேறு யாராவது கேட்டால் சட்டென்று அதற்கு பதில் சொல்லி விடுவீர்கள். ஆனால் உங்களுக்குள் அவ்வப்போது எழும் இந்தக் கேள்விக்கு உங்களால் பதில் தர முடியாமல் பெரும்பாலும் தவிப்பீர்கள்.

உங்களுக்குத் தெரியும். தான் யார் என்பதை அறியக் கூடிய ஒருவரால் தான் தன் விருப்பம் என்ன, தன் பார்வை எங்கு நிலை கொள்கிறது என வரையறுக்க முடியும்.

தன் விருப்பம் அறிந்த ஒருவரால் எந்த சூழலிலும் எதையும் துளைத்து எழ முடியும். எந்த பிரச்னை வந்தாலும் அதில் முடங்கிப் போகாமல் தீர்வை நோக்கிய பார்வையுடன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டு செலுத்த முடியும்.

தவிர, நீங்கள் யார் என்ற அலசல், உங்கள் பலம் என்ன, உங்கள் பலவீனம் என்ன, எது உங்களுக்கு வசப்படுகிறது, எதை நீங்கள் வசப்படுத்த துடிக்கிறீர்கள், உங்கள் கால்கள் எதை நோக்கி செல்ல விரைகிறது என உங்களுக்குள் ஒரு தெளிந்த பார்வையைத் தரும்.

ஆனால் நீங்கள் யார் என்ற கேள்வி ஒன்றாக இருந்தாலும் பதில் ஒவ்வொரு மணித் துளிக்கும் உங்களுக்குள் மாறிக் கொண்டே இருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா..?!

சில நேரம் எனக்கு இது வேண்டும்ஸ இது கிடைத்தால் தான் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என ஏதோ ஒன்றைக் குறி வைத்து உங்களுக்குள் ஒரு அடாவடிக் குழந்தை வீறிட்டு அழும். சில நேரம், காசு, பணம் எதுவும் பெரிதல்ல. எனக்கு நிம்மதியாக, உறவுகளின் பிணைப்பில், நட்பின் பிடிப்பில், மகிழ்ச்சியாக இருந்தால் போதும், என எவ்வளவு வசதியாக இருந்தாலும், கேட்டதெல்லாம் கிடைக்கக் கூடிய சூழல் இருந்தாலும், உங்கள் மனம் ஒரு செல்லக் குழந்தையாக அன்புக்கு ஏங்கும்.

ஒரு புதிர் மனதில் நிலை கொள்ள, தான் எவ்வளவு படித்திருந்தாலும், நல்ல பதவியும், பேரும் புகழும் கிடைத்திருந்தாலும், தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று ஒன்றும் பிடிபடாமல் சில நேரம் மனம் பேதலித்து மருகும். எவ்வளவு பெரிய கூட்டம் தன்னை சுற்றி நிறைந்திருந்தாலும் தனக்காக யாராவது இருக்கிறார்களா என சில நேரம் மனம் உற்று நோக்கித் தேடும்.

சில நேரம் எந்த சூழலிலும் தவிக்காமல் தயங்காமல், விவேகமாக காய் நகர்த்துவது இலாகவமாய் கை கூடும். சில நேரம் எதையும் புரிந்து கொள்ள முயற்சிக்காத கோபம் முன் நிற்கும். ஆற்றாமை எட்டிப் பார்க்கும். நிகழும் ஆட்டத்தை முடித்து விடலாம் என அசுர வேகத்தில் மனம் பரபரக்கும்.

சில நேரம் எனக்கு யாரும் உதவ மாட்டார்களா என இயலாமையில் தவிக்கும் அதே மனம் சில நேரம் எனக்கு யாருடைய தயவும் தேவை இல்லை நானே என்னை முன்னேற்றிக் கொண்டு பிறருக்கும் உதவியாக இருப்பேன் என உங்கள் தன்னம்பிக்கையை தலை நிமிர செய்யும்.

இப்படி அவ்வப்போது வெவ்வேறு விதமாக எட்டிப் பார்க்கும் இந்தக் குணநலன்களில் நீங்கள் யார் என்று வகைப் படுத்த முடியாமல் பல நேரம் திணறி இருப்பீர்கள்.

இந்த குணங்கள் எல்லாமும் சேர்ந்தது தான் நீங்கள் என்பதை நீங்கள் உணரும்வரை, இதில் எது ‘நான்’ என்று ஏதோ ஒன்றில் உங்களை அடையாளப் படுத்தும் முயற்சியில், உங்கள் மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும்.

ஆனால், உங்களுக்கு ஒன்று தெரியுமா.. உண்மையில் பலதரப் பட்ட உணர்வுகளும் நிறைந்தவன் தான் மனிதன். ஒரே ஒரு நாள் உங்கள் உணர்ச்சிகளையும் செய்கைகளையும் நீங்கள் எழுதிப் பார்த்தால், அது எவ்வளவு மேலும் கீழுமாக இருக்கிறது, இப்படித்தான், இது தான் நான் என உங்களை ஒரு வட்டத்திற்குள் கொண்டு வர முடியாததாக இருக்கிறது என நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

அப்படி உங்களை நீங்களே புரிந்து கொள்ளும் போது, மற்றவர்களையும் “இவர்கள் இப்படித் தான்..” என முத்திரை குத்தி தள்ளி வைக்காமல் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியும். மனம் பக்குவப்பட்டதாக எந்த சூழலையும் தாண்டிச் செல்லும்.

ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் இருக்கும் தன் பாட்டியை பார்க்க வந்த அந்த இளைஞனின் முகம் மிகவும் வாடிப் போய் இருந்தது. பாட்டி கேட்ட இயல்பான கேள்விக்கெல்லாம் ரொம்ப அசிரத்தையாகவே பதில் சொன்ன அவன், ஏதோ ஒரு பிரச்னையில் தவிக்கிறான். அவன் மனம் ஏதையோ ஏற்றுக் கொள்ள மறுத்து, தனிமையை நாடி அங்கு வந்திருக்கிறான் என அந்த அனுபவம் மிக்க பாட்டியால் புரிந்து கொள்ள முடிகிறது.

அவனை ஆதரவாக அணுகி, அன்போடு கவனிக்கும் பாட்டியிடம் அவன் மனம் விட்டு பேசுகிறான். தன் நண்பர்களை நம்ப முடியவில்லை என்றும் ஒரு நேரம் சிரித்துப் பேசுபவர்கள், பல நேரம் கிண்டல் செய்கிறார்கள் என்றும் ஒரு நேரம் ஓடி வந்து உதவி செய்பவர்கள், பல நேரம் கண்டு கொள்ளாமல் இருந்து விடுகிறார்கள் என்றும் சொல்லி வருந்துகிறான்.

மற்றவர்களை புரிந்து கொள்ள முடியாமல் தனக்கு மிகவும் மனஉளைச்சலாக இருக்கிறது. நன்றாக பேசக் கூடியவர்கள் ஏன் திடீரென்று பேசாமல் இருக்கிறார்கள், தான் ஏதோ தவறு செய்து விட்டோமோ என மனம் சங்கடப் படுகிறது எனப் பலவாறு புலம்புகிறான்.

அமைதியாக அவன் கூறுவதை கேட்டுக் கொண்டிருந்த பாட்டி, அவன் பேசி முடித்ததும் எதுவும் சொல்லாமல் ஓய்வெடுக்க சொல்லி அனுப்புகிறார். சற்று இளைப்பாறி விட்டு வந்த அவனிடம் அவனுக்குப் பிடித்த பிரியாணி செய்திருப்பதாக சொல்லி சாப்பிட அழைக்கிறார். ஆசையோடு மூடியைத் திறந்து பார்க்கும் அவனுக்கு அங்கு உணவு இல்லாமல் சில பாத்திரங்களில் ஒன்றில் அரிசியும், ஒன்றில் உப்பும், ஒன்றில் மிளகாயும், ஒன்றில் காய் கறியும் என பிரியாணி செய்வதற்கான மூலப் பொருட்கள் மட்டும் மூடி வைக்கப்பட்டிருக்கிறது கண்டு வியப்பாக இருக்கிறது.

பசி வயிற்றைக் கிள்ள.. உனக்கு பிடித்த பிரியாணி.. சாப்பிட வா.. என அன்போடு அழைத்து, வெறும் வேக வைக்காத அரிசியைக் காட்டும் பாட்டியின் இந்த செயலை புரிந்து கொள்ள முடியாமல் ஏமாற்றமும் கோபமாக பாட்டியை பார்க்க, அந்த பாட்டி, ‘ஏன் கோபப்படுகிறாய்’ என்று கேட்கிறார். ‘பிரியாணி என்று சொல்லி விட்டு நீங்கள் வைத்திருப்பதை பார்த்து கோபப் படாமல் எப்படி இருக்க முடியும். இந்தப் பொருட்களை கலந்து சமைத்தால்தானே பிரியாணி ஆகும்’ என்று கேட்கிறான்.

அதைக் கேட்டு சிரித்த பாட்டி ‘இப்படி பல தரப்பட்ட பொருட்களை சேர்த்து சமைத்தால்தான் பிரியாணி ஆகும் என்று தெரிந்த உனக்கு நீ கூறியது போன்ற பல்வேறு குணங்களும் சேர்ந்து இருப்பவன் தான் ஒரு மனிதன் என்பது புரியாமல் போனது ஏன் என்று கேட்கும் அவர் ஒரு ஓரமாக மறைத்து வைத்திருந்த பிரியாணியை எடுத்து வைத்து அவனை அன்போடு உண்ண சொல்கிறார்.

எல்லாவிதமான குணங்களும் சேர்ந்தவர்கள் தான் மனிதர்கள். அவர்களை ஒவ்வொரு குணமாக அலசிப் பார்க்காமல், அவர்களை தான் எதிர்பார்க்கும் ஏதாவது ஒரு குணத்தால் அடையாளப் படுத்த முயலாமல், அவர்களை எல்லாமும் சேர்ந்தவர்களாக, மொத்தமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது அந்தக் கணம் அவனுக்கு புரிகிறது.

ஒருவருடைய செயல், உங்களைப் பற்றி அவர்களுடைய கணிப்பு என்ன என்பதையோ, அவர்களைப் பற்றிய உங்கள் கணிப்பு என்ன என்பதையோ மட்டும் சார்ந்தது அல்ல. அது பெரும்பாலும் ஒருவருடைய அந்த நேர மனநிலையையும் உடல் நிலையையும், சூழலையும் சார்ந்துள்ளது. உண்மையில் அவர்கள் அந்த நேரத்தில் அவர்களுக்கு எப்படி இருக்க முடிகிறதோ அப்படியே இருக்கிறார்கள். அதனால் அது சூழலுக்கேற்ப மாறிக் கொண்டே இருக்கிறது.

இதனை புரிந்து கொண்டால் நாம் மற்றவர்களுடைய ஒவ்வொரு செய்கையையும் நம்மோடு தொடர்புபடுத்தி பார்த்து வருந்த மாட்டோம். நம் உறவுகளும் தழைக்கும் நிம்மதி நிலைக்கும்.

Share & Subscribe the youtube link given below for dr.Fajila Azad’s talks on day to day issues & life problems.

Watch “Dr.Fajila Azad” on YouTube

https://www.youtube.com/c/FajilaAzad

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

39 + = 43

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb