பர்ஸக்கில் தூய ஆன்மாக்கள்
இனி, நல்ல ஆன்மாக்களின் நிலையைப் பார்ப்போம். தூய கலிமா எனும் சத்திய வாக்கினை ஏற்றுக்கொண்டு அதில் உறுதியாக நிலைத்து நின்ற ஓர் இறைநம்பிக்கையாளன் உலக வாழ்க்கையில் தனது கொள்கையில் எந்த வகையிலும் பிறழ்ந்து போக மாட்டான்.
முழு மனநிறைவோடு எத்தகைய அறைகூவல்களையும் அவனால் எதிர்கொள்ள முடியும். இதே நிலையில்தான் தொடர்ந்து மண்ணறையில் கேள்வி கணக்கு கேட்கப்படும்போதும், பர்ஸக்கிலும், மற்ற கட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவன் சந்திக்கும் அனைத்து பிரச்னைகளையும் தைரியமாக எதிர்கொள்ள அவன் தயாராய் இருப்பான் என்பதை நாம் முன்னரே அறிந்தோம்.
அதனால்தான் குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு கூறியுள்ளான் :
“நம்பிக்கை கொண்டோருக்கு, அல்லாஹ் ஒரு வலுவான வாக்கின் அடிப்படையில் இம்மையிலும், மறுமையிலும் உறுதிப்பாட்டை அருளுகிறான்.” (திருக்குர்ஆன் 14 : 27)
மேற்சொன்ன வசனத்தில் ‘மறுமையில் உறுதிப்பாட்டை அருளுவது’ என்றால் இறுதித் தீர்ப்பு நாளில் என்று பொருளல்ல. ஏனெனில் அங்கு அதற்கான தேவையே இருக்காது எனும்போது, இங்கு மறுமை என்பது பர்ஸக்கையே குறிக்கும்.
இதனையே அண்ணலாரின் ஒரு பொன்மொழி இவ்வாறு தெளிவுபடுத்து-கிறது: “மண்ணறையில் கேள்வி கணக்கு கேட்கப்படும் நேரம்தான் அது” என்று அண்ணலார் கூறினார்கள். (முஸ்லிம்)
ஜனாஸாவை அடக்கம் செய்த பிறகு, நாம் சுற்றிலும் நின்று கொண்டு செய்யும் பிரார்த்தகையை இங்கு கவனத்தில் கொள்க.
இன்னும், ஒவ்வொரு நாளும் மண்ணறையில் அவனது இருப்பிடமாகிய சொர்க்கம் அவனுக்குக் காட்டப்படும் என்று முன்பு சொல்லப்பட்டதல்லவா. மண்ணறையில் கேள்வி கணக்கு விசாரணை முடிந்த பிறகு தூய ஆன்மாவிடம் ‘புது மாப்பிள்ளையைப் போல உறங்குவாயாக’ என்று சொல்லப்படும் என்று அண்ணலார் அறிவித்துள்ளார்கள். மேலும் அண்ணலார் ஒருமுறை இவ்வாறு கூறினார்கள் :
“இறைநம்பிக்கையாளரின் ஆன்மா சுவனத்திலே மரக்கிளை-களின் மீது உணவுண்டு வாழும் பறவையைப் போல் இருக்கும். மீண்டும் உயிர்ப்பித்து எழுப்பப்படும் நாளில் அல்லாஹ் அதனை அதன் சரீரக் கூட்டினுள் நுழைக்கும்வரை இந்நிலை தொடரும்.”
மற்றொரு முறை கூறினார்கள் :
“அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்ற நிலையில் மரணிக்கின்ற எந்தவொரு ஆன்மாவும் மீண்டும் உலகிற்கு திரும்பிவர விரும்புவதேயில்லை; ஆனால் இறைவழியில் உயிர்த் தியாகம் செய்த ஆன்மாக்களின் நிலை சற்று மாறுபட்டது. உயிர்த் தியாகத்தின் காரணமாக ஆகிரத்தில் (பர்ஸக்கில்) அதற்குக் கிடைக்கின்ற வெகுமதிகளைக் கண்டு, மீண்டும் ஒரு முறை பூமிக்குச் சென்று இன்னொரு முறைகூட இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அவை ஏக்கம் கொள்ளும். இந்த வகையிலான இரண்டு மிக முக்கியமான நிகழ்வுகள் பின்வருமாறு:
1. முன்பொரு காலத்தில் ஒரு நாட்டுக்கு அல்லாஹ் இரண்டு நபிமார்களை அனுப்பிவைத்தான். அவர்கள் மக்களிடம் சென்று தூதுச் செய்தியை எடுத்துரைத்தபோது மக்கள் அவர்களை விரட்டினார்கள். அப்போது மூன்றாவதாக ஒரு மனிதரை அங்கு அல்லாஹ் அனுப்பினான். அவரையும் அம்மக்கள் துன்புறுத்தினர். மட்டுமல்ல, ‘நீங்கள் உங்கள் புதிய மதத்தின் பரப்புரையை நிறுத்தவில்லையெனில் உங்களை நாங்கள் கல்லால் அடித்துக் கொன்றுவிடுவோம்’ என்று அச்சுறுத்தினர். இக்கட்டத்தில் அவ்வூரின் கடைக்கோடியிலிருந்து நேர்மையுள்ள ஒரு நல்ல மனிதர் அந்த இடத்திற்கு ஓடி வந்து சேர்ந்தார்.
வந்தவர் தம் ஊர் மக்களிடம் இறைத்தூதர்களின் பேச்சைக் கேட்குமாறும் அவர்களைப் பின்பற்றுமாறும் அறிவுரை கூறினார். ஆனால் அம்மக்களுக்கு இது மேலும் வெறுப்பைத் தந்தது. பிறகு அவர்கள் அம்மனிதரைக் கொன்றுவிட்டனர்.
அப்போது இறைவழியில் உயிர்த் தியாகம் புரிந்த அந்த ஆன்மாவை நோக்கி அக்கணமே அல்லாஹ் கூறினான் : ‘நீ சுவனத்தில் நுழைந்துவிடு!’ (36 : 26) இதைக் கேட்டதுமே அந்த மனித நேயம் மிக்க ஆன்மா இவ்வாறு கூறியது : “என் அதிபதி என் மீது திருப்தியுற்று எனக்குக் கருணை காட்டினான். என் சமுதாயத்தவர் இதனை அறிந்திருப்பார்களானால் எவ்வளவு நன்றாக இருக்கும்!”
“(இறுதியில் அம்மக்கள் அவரைக் கொன்றுவிட்டார்கள். பிறகு) அவரிடம் ‘சுவனம் புகுவீராக!’ என்று கூறப்பட்டது. அவர் கூறினார். ‘ஹா! என் இறைவன் எக்காரணத்தால் என்னை மன்னித்து, கண்ணியமிக்கவர்களில் ஒருவனாய் என்னை ஆக்கினான் என்பதை என் சமூகத்தவர் அறிந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்?” (திருக்குர்ஆன் 36 : 27)
தம்மைக் கொலை செய்தவர்களின் மீதே அவர் இப்படிப்பட்ட ஒரு நல்லெண்ணம் கொள்ளுமளவுக்கு அவருக்குக் கிடைத்த நற்பேறு அமைந்திருக்கிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கது. அதனால்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவரைப் பற்றி இவ்வாறு புகழ்ந்து கூறினார்கள் :
“இவர் வாழ்நாளிலும் மரணத்திற்குப் பின்னும் தம் சமுதாயத்தவருக்கு நலம் நாடினார்.”
2. “இறைவழியில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்களாக ஒருபோதும் கருதாதீர்! உண்மையில் அவர்கள் உயிரோடு இருக்கின்றார்கள். அவர்கள் தம் இறைவனிடமிருந்து தங்களுக்குத் தேவையான வாழ்வாதாரத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ் தனது அருளிலிருந்து அவர்களுக்கு அளித்தவற்றைக் கொண்டு மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றார்கள். தங்களுக்குப் பின் உலகில் வாழ்ந்து வருகின்ற – இன்னும் தங்களுடன் வந்து சேராமல் இருக்கின்ற இறைநம்பிக்கையாளர்கள் குறித்து, அவர்களுக்கு எத்தகைய அச்சமும் இல்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள் என்று இவர்கள் மனநிறைவு பெறுகின்றார்கள். அல்லாஹ் அளித்த கொடையினாலும் அருளினாலும் அவர்கள் அக மகிழ்வுடன் இருக்கின்றார்கள். இறைநம்பிக்கை கொண்டோரின் நற்கூலி வீணாகிவிடுவதில்லை என்பது அவர்களுக்குத் தெரிந்து விட்டிருக்கிறது.” (திருக்குர்ஆன் 3 : 166-171)
மேற்கண்ட வசனத்திற்கு விளக்கமளித்து நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இவ்வாறு கூறினார்கள் : “உஹத் போரில் உயிர்த் தியாகம் செய்த உங்களுடைய சகோதரர்களின் ஆன்மாக்களை அல்லாஹ் பச்சை நிறப் பறவைகளின் சரீரக் கூட்டினுள் ஆக்கி வைத்துள்ளான். அவை சுவனத்துத் தடாகங்களிலிருந்து நீர் அருந்தியும் அங்குள்ள கனிகளை உண்டும் மகிழ்வுற்றிருக்கின்றன; அர்ஷின் நிழலில் – தங்கக் கூண்டுகளில் வசித்து வருகின்றன. மிக்க சுவையான உணவு வகைகளும் ஆனந்த மயமான தங்குமிடமும் வழங்கி அல்லாஹ் தங்களுக்கு அளித்த இத்தகைய மகத்துவத்தைக் கண்டு ஆன்மாக்கள் இவ்வாறு ஏக்கத்துடன் எண்ணிக்கொள்ளும்;
‘அல்லாஹ் நமக்கு அளித்த இந்த அருட்கொடைகளை உலகில் நமது சகோதரர்கள் அறிவார்களானால், இறைவழியில் போர் செய்வது பற்றி அவர்களுக்குத் தயக்கமோ, அச்சமோ தோன்றாது. இன்னும் தீரத்துடன் போர் செய்ய அது அவர்களுக்கு உதவியாயிருக்கும். அவர்களின் இந்த எண்ணத்தை அறிந்த அல்லாஹ் அவர்களிடம், ஓ… என் ஆன்மாக்களே! உங்களது இந்த விருப்பத்தைப் போன்றே நான் அவர்களுக்கு இதை அறிவித்து விடுகிறேன் என்று கூறினான். அதன்படிதான் இந்த வசனத்தை அல்லாஹ் இறக்கியருளினான்.”
மேலும் இந்த வசனம் பற்றி அண்ணலார் தந்த மற்றொரு விளக்கம் வருமாறு : மஸ்ரூக் கூறுகிறார் : இந்த வசனத்தைப் பற்றி நாங்கள் அப்துல்லாஹ்விடம் கேட்டபோது அவர் கூறினார் : நாங்கள் இதுகுறித்து நபியிடம் கேட்டோம் அவர்கள் கூறினார்கள்,
“அந்த ஆன்மாக்கள் பச்சை நிறக் கிளிகளின் சரீரக் கூட்டில் ஆக்கப்பட்டுள்ளன.” அவை – சுவனத்தில் தங்கள் விருப்பம் போல் ஓடியாடிக் களிப்புடன் விளையாடிக் கொண்டிருக்கின்றன; பிறகு அர்ஷுடன் இணைக்கப்பட்ட விளக்கின் கூடுகளில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றன; அல்லாஹ் ஒருமுறை அவற்றுக்கு முன்பாகத் தோன்றி இவ்வாறு கேட்டான் : “உங்களுக்கு இன்னும் ஏதாவது தேவையா… ஏதேனும் விரும்புகிறீர்களா?” அதற்கு அவை, “இந்தச் சுவனத்தில் நாங்கள் எங்கள் விருப்பம்போல் மகிழ்ச்சியுடன் இருக்கிறோமே இதற்கு மேல் நாங்கள் ஆசைப்பட என்ன இருக்கிறது?” அப்போது அல்லாஹ் மீண்டும் அதே கேள்வியையே கேட்பான்.
இவ்வாறு மூன்று முறை கேட்டபோதும், எதையாவது கேட்காமல் அல்லாஹ் விடப் போவதில்லை என்று எண்ணி ஆன்மாக்கள். “எங்கள் அதிபதியே, எங்களுக்கு இனி ஒரே ஓர் ஆசைதான் உள்ளது. அதாவது எங்களை எங்களுக்குரிய உடலுடன் மீண்டும் இணைத்து வைப்பாயாக; பிறகு நாங்கள் உனது மார்க்கத்திற்காக இன்னுமொருமுறை கொல்லப்பட வேண்டும்.” இவ்வாறு அவை கூறியதைக் கேட்ட அல்லாஹ், இவர்களுக்கு இனி வேறு எந்த ஆசைகளும் கிடையாது என்பதை அறிந்து மேற்கொண்டு வற்புறுத்தாமல் விட்டுவிடுவான். (முஸ்லிம்)*
இவ்வாறு ஆன்மாக்கள் பர்ஸக்கில் எவ்வளவு காலம் கழிக்க வேண்டியிருக்கும்? கோடானகோடி ஆண்டுகள் இப்படியே கழியுமா? அல்லது வெகு சீக்கிரத்திலேயே அது முடிவுக்கு வருமா? இவையெல்லாம் அல்லாஹ்வே அறிந்த இரகசியம்.
மண்ணறையில் கேள்வி விசாரணை, தண்டனைகள் பற்றியெல்லாம் ஏற்கனவே நாம் தெரிந்துகொண்டோம். அதனால் அது பற்றி தனியாக ஓர் அத்தியாயம் எழுத வேண்டியதில்லை. ஆயினும், அறியாமையினாலோ நம்பிக்கையில்லாமலோ சிலர் இந்த மண்ணறை நிகழ்வு-களைப் பற்றி ஏளனம் செய்வதுண்டு, ‘இது என்ன.. இப்படியொரு லாக்கப் தண்டனை?’ என்று. இவ்வாறு கேலி செய்வதில் அவர்களுக்கொரு அற்ப மகிழ்ச்சி. அவர்கள் அவ்வாறு சொல்லிவிட்டுப் போகட்டும்.
ஒவ்வொரு தொழுகையிலும் – “மண்ணறை வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக்கொள்ளுங்கள்” என்று அண்ணலார் அறிவுறுத்தியதும், மேலும் அண்ணலார் சொன்ன மற்ற போதனைகளும் இருந்தும்கூட, இவ்வாறு அவர்கள் எண்ணினால் எண்ணிவிட்டுப் போகட்டும். ஆயினும் மேற்கண்ட குர்ஆன் வசனங்களைப் பற்றியேனும் இவர்கள் சிந்திக்கலாமே!
Chapter : 2 ‘பர்ஸக்’ (ஆன்மாக்கள் வாழுமிடம்)
Series Number : 13
Book: திருக்குர்ஆனில் மறுமை
Publisher: Islamic Foundation Trust (IFT) – 8668057596