ஃபாத்திமா இஸ்மாயில் – போலியோ இல்லாத இந்தியாவுக்கு அடித்தளம் அமைத்தவர்
Fathema Ismail (1903-1987) was an Indian parliamentarian.
She was awarded the Padma Shri in 1958 and was nominated as member of the Rajya Sabha from 1978 and served till 1984.
She was the sister of Usman and Umar Sobhani who financed the Khilafat movement and the Congress party in Bombay.
Fathema Ismail was instrumental in the setting up of the children orthopaedic hospital in Bombay which was the first of its kind in India.
போலியோ மற்றும் ஊனமுற்றோருக்காக இந்தியாவில் முதல் மருத்துவம் மற்றும் பராமரிப்பு மையங்களை உருவாக்கியவர் பாத்திமா இஸ்மாயில்.
இவர் கிலாபத் இயக்கத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட சகோதரர்களான உமர் சுபானி மற்றும் உஸ்மான் சுபானி ஆகியோரின் சகோதரி ஆவார்.
பாத்திமாவின் தந்தை ஹாஜி யூசுப் சுபானி, மும்பையில் பிரபல தொழிலதிபர். எல்ஃபின் ஸ்டோன் மில்ஸ் எனும் ஜவுளி நிறுவன வியாபாரியும் சமூகசேவகரும் ஆவார். 1903ல் பம்பாயில் பிறந்தார் பாத்திமா.
1920ல் வியன்னா நாட்டிற்கு மருத்துவம் படிக்கச்சென்ற பாத்திமாவிற்கு, குடும்பத்தில் நிலவிய பொருளாதார பின்னடைவினை தொடர்ந்து படிக்க இயலாமல் போனது.
1923ல் மீண்டும் தாய்நாடு திரும்பியவருக்கு, முகமது ஹாஷிம் இஸ்மாயில் என்கிற மருத்துவருக்கு திருமணம் முடித்து வைக்கப்பட்டார். தம்பதியர் இருவருமாக இணைந்து மருத்துவ பயிற்சியில் இருந்துகொண்டே அங்குள்ள பாவப்பட்ட மக்களுக்கு இலவச சிகிச்சையும் வழங்கி வந்தனர்.
இதனிடையே சக பம்பாய்வாசியும் சுதந்திர போராட்ட இயக்கங்களோடு இணைந்து பெண்களுக்கான கல்விச்சாலையும் மருத்துவமனையும் நடத்திவந்த குல்சும் சயானியுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பினை பெற்றார் பாத்திமா.
பிரிட்டிஷ் காவலாளிகளால் தாக்கப்பட்ட இந்திய தியாகிகளை அரவணைத்து அவர்களுக்கு மருத்துவம் செய்து வந்தனர் இருவரும். அப்போது தான் முதன்முதலாக பிரசவத்திற்கு மருத்துவமனையை நாடி வரும் சமூகச்சூழல் ஏற்பட்டிருந்தது. இலவச பிரசவ சேவைகளோடு குழந்தை பராமரிப்பும் செய்து கொடுத்து வந்தனர். ஆனால் இவை அனைத்திற்கும் பொருளாதாரம் பற்றாக்குறையாக இருந்து வந்தது.
மறுபுறம் பாத்திமாவின் சகோதரர்களான உமரும் உஸ்மானும் நாடு முழுக்க பிரயாணம் செய்து ஆங்காங்கு இருந்த முஸ்லிம் தனவந்தர்களை சந்தித்து கிலாபத் இயக்கத்திற்கான நிதியை சேகரித்து வந்தனர். தங்கையின் மருத்துவ சேவைக்காக ஒரு பகுதியை ஒதுக்கி கொடுக்க முன் வந்தும் பாத்திமா- ஹாஷிம் இஸ்மாயில் தம்பதியர் ஏற்க மறுத்துவிட்டனர். இந்திய தேசிய விடுதலைக்கான நிதியை தாங்கள் துஷ்பிரயோகம் செய்ய விரும்பவில்லை என தெரிவித்துவிட்டனர்.
இந்நிலையில் 1936ல் பம்பாய் வாழ் ஏழை பெண்களுக்கென ஆல் இந்தியா வில்லேஜ் இன்டஸ்ட்ரீஸ் அசோசியேசன் எனும் சுயதொழில் அமைப்பினை தொடங்கினார் பாத்திமா.
தாம் வாழும் நாட்டிலுள்ள பெண்களின் நிலையை விட, இந்திய சுதந்திரத்திற்காக பாடுபடும் அவர்களின் கணவர்மார்களின் நிலைமை மிகவும் படுமோசமாக இருப்பதை உணர்ந்த அவர், போராட்டங்களில் கலந்துகொண்டு சிறையில் வாடும் தியாகிகளின் மனைவிமார்கள் பொருளாதார சிக்கலின்றி ஜீவனம் நடத்த அவர்களுக்கான தொழில்பயிற்சி பாசறையை தொடங்கினார்.
பம்பாயில் தோன்றிய முதல் பெண்கள் தொழில் பயிலகம் அதுவாக இருந்தது. பிறகு குல்சும் சயானியுடன் இணைந்து ஆல் இந்தியா உமன்ஸ் கான்பிரன்ஸை நடத்தி… சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கும் குடும்பத்தில் உள்ள பெண்கள், தங்களால் இயன்றளவு இல்லாத குடும்பத்து பெண்களுக்கு கைகொடுத்து உதவ வேண்டும் எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
சமூக சேவையும் மருத்துவ சேவையுமாக கடந்து கொண்டிருந்த நிலையில் பாத்திமாவிற்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.. போலியோ தாக்கத்தால் பிறந்த அக்குழந்தைக்கு பாத்திமா , உஷா என பெயரிட்டார். தம்முடைய மகளை , போலியோ தாக்குதல் பெற்ற குழந்தையாக அறிந்த பிறகு அவரது மகளை கொண்டு மத்ராஸ் புறப்பட்டு சென்றார். அங்கு சிறந்ததொரு மருத்துவரை அணுகி சிகிச்சை செய்த நிலையில் மேற்கொண்டு சிகிச்சை பெற வசதியற்று போனார். எனினும் மருத்துவர், அவருக்கு இலவசமாக அனைத்தும் செய்வதாக உறுதியளிக்கவே மேற்கொண்டு சிகிச்சையை தொடர்ந்தார்.
எட்டு மாதங்கள் தொடர்ந்து மதராஸில் மருத்துவமனையிலேயே தங்கி மகளுக்கு மருத்துவம் பார்த்தவருக்கு அங்கு வந்த போலியோ தாக்குதல் பெற்ற குழந்தைகளை கண்டு பட்சாதாபமும் பரிதாமும் தோன்றியது.
மருத்துவ உலகம் இவர்களுக்காக எதையாவது செய்து இவர்களின் வாழ்வினை மேம்படுத்த வேண்டும் என தீர்மானித்துக்கொண்டவர். 1940ல் மீண்டும் புனே நகருக்கு திரும்பினார். அங்கு காயமடைந்த பிரிட்டிஷ்-இந்திய காவலாளிக்களுக்கான புனர்வாழ்வு மையத்தில் மூன்று வருட பயிற்சி பெற்றார் பாத்திமா.
பயிற்சிக்குப்பின் போலியோ தாக்குதலடைந்தவர்களுக்கான சிகிச்சை மையம் தொடங்கயிருந்த நேரத்தில் பிரிட்டிஷ் அரசு மருத்துவ உபகரணங்களுக்கும் மருந்துகளுக்கும் போட்டிருந்த தடை உத்தரவால் அவரால் சிகிச்சை மையம் தொடங்க முடிந்தது தவிர மேற்கொண்டு உபகரணங்களை தருவிக்க இயலவில்லை.
பிறகு 1946ல் கணவர் ஹாஷம் இஸ்மாயில் அவர்களுடைய நண்பர்களான மருத்துவர்கள் இருவர் உதவியால் பம்பாயில் சிறிய அளவில் அதாவது 7 படுக்கைகளுடன் கூடிய மருத்துவ சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையத்தை துவங்கினார் பாத்திமா.
Children’s orthopaedic Hospital என்கிற அந்த மருத்துவமனையில் சேர, நோயாளிகள் காத்திருக்க வேண்டிய நிலைக்கு மிகவும் ஓய்வின்றி உழைத்து வந்தது. சிறுக சிறுக கிடைக்கப்பெற்ற உதவிகளை கொண்டு அம்மருத்துவமனையை பெரிது படுத்தினர் தம்பதியர் இருவரும். இந்தியாவில் போலியோ தாக்கம் மற்றும் பிறவி ஊனம் கொண்டவர்களுக்காக தொடங்கப்பட்ட முதல் மருத்துவமனையாக அது திகழ்கிறது.
மீண்டும் 1956ல் Fellowship of the Physically Handicapped எனும் உடல் ஊனமுற்றோர் மருத்துவமனையை பம்பாயின் ஹாஜி மார்க் பகுதியில் தொடங்கினார் பாத்திமா.
முதல் மருத்துவ மையம் தொடங்கிய சிலநாட்களிலேயே பாத்திமாவிற்கு உலக மருத்துவ அரங்கில் ஒரு நற்பெயர் உண்டானது. இதன் வாயிலாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்து அங்குள்ள மருத்துவ முறைகளை பயின்று வர வாய்ப்புகள் அமைந்தது.
உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்காக மருத்துவமனையும் கைவிடப்பட்ட குழந்தைகளுக்காக பராமரிப்பு மையமும் கட்ட நேரு அவர்களிடம் நிலம் வேண்டி நீண்டநாள் கோரிக்கை வைத்திருந்தார் பாத்திமா. அது அத்தனை லேசில் அவருக்கு கிடைக்கவில்லை. இரண்டு வருட காத்திருப்பிற்கு பின் பம்பாய் ரேஸ் கோர்ஸ் மைதானம் அருகே அவரது மருத்துவமனைக்கு நிலம் ஒதுக்கி கொடுக்கப்பட்டது. அங்கு உதயமானது தான்
Society for the Rehabilitation of Disabled and Crippled Children ஆகும். 1958 ல் உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான கல்வி் நிலையத்தை தொடங்க அதே இடத்தில் அடிக்கல் நாட்டினார் .
தன்னுடைய சொந்த பணம் 40,000 ஐ கொண்டு கட்டப்பட்டது தான் இந்தியாவின் முதல் மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளி SEC – The Society for the Education of the Challenged (Child and Adult). முதலில் 17 மாணவர்களுடன் தொடங்கிய அப்பள்ளி இப்போதும் பல நன்கொடையாளர்களின் உதவியால் நல்ல நிலையில் இயங்கி வருகிறது. அவருடைய மருத்துவமனைகளும் செவ்வனே இயங்கி வருகின்றன.
பாத்திமா இஸ்மாயில் செய்த மருத்துவ சேவைகள் அளப்பறியது. உலகளாவிய சமூக சேவை சங்கங்களால் ஆஸ்திரேலிய செவிலியான சகோதரி. எலிசபெத் கெனி என்பவருக்கு நிகராக ஒப்பிட்டு கூறப்படும் பாத்திமா, போலியோ மற்றும் ஊனமுற்றோருக்காக அவர் செய்த சாதனையை இந்தியா கொண்டாடவில்லை என்பதே மிகப்பெரும் வேதனை. 1978-84 வரையிலான ஆண்டுகளில் ராஜ்சபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு 1958ல் பத்மஸ்ரீ விருது கொடுத்து கவுரவித்ததோடு நிறுத்திக்கொண்டது.
1987, பிப்ரவரி 4 அன்று தமது 84வது வயதில் பம்பாயில் இயற்கை எய்திய பாத்திமா இஸ்மாயில் அவர்களது கல்லறையில் எழுதப்பட்டுள்ள வாசகம் , “என் நாடு என் வீட்டின் நீட்சியாகும், பிற குழந்தைகளுக்கு நாம் செய்யும் சேவகம் நம் குழந்தைக்கு நாம் தேடும் புண்ணியமாகும்” என்பதாக உள்ளது.
இந்தியாவில் போலியோவை ஒழிக்கவும் உடல் ஊனமுற்ற மற்றும் மளவளர்ச்சி குன்றியோருக்காக பாத்திமா செய்த அர்ப்பணிப்புகள் அனைத்தும் மகத்தானது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.
நன்றி
–Nasrath S Rosy