மங்கோலியர்களிடமிருந்து இந்தியாவைக் காத்த அலாவுத்தீன் கில்ஜி
M.S.Abdul Hameed
‘பத்மாவத்’ என்ற படம் 2018ம் ஆண்டு வெளிவந்தது. இந்தப் படத்தில் அலாவுத்தீன் கில்ஜியை மிகப் பயங்கரமான வில்லனாகக் காட்டியிருப்பார்கள். அவரது முகத் தோற்றமும் நடை, உடை, பாவனைகள் அனைத்தும் மிருகத்தனமாக இருக்கும்.
இப்படித்தான் முஸ்லிம் மன்னர்களை ‘மாஸ் மீடியா’ எனப்படும் சினிமா முதல் அனைத்து ஊடகங்களிலும் காட்டி, சாதாரண பொதுமக்களின் புத்தியில் அவர்களைப் பயங்கர வில்லன்களாகப் பதிய வைக்கிறார்கள்.
அலாவுத்தீன் கில்ஜி மதவெறியர், ஹிந்து மக்களை ஒடுக்கியவர், ஹிந்துக்கள் மீது ஜிஸ்யா வரி விதித்தவர் – இப்படி பல குற்றச்சாட்டுகள் அவர் மேல் உள்ளன. அவையெல்லாம் உண்மையா, இல்லையா என்பதைப் பின்னர் பார்ப்போம்.
ஒட்டுமொத்த உலகையும் தங்கள் காலுக்குக் கீழே போட்டு மிதித்திடக் கிளம்பினார்கள் மங்கோலியர்கள். அன்றைய காலக்கட்டத்தில் உலகிலேயே அதிகப் பலமுள்ள படையைக் கொண்டிருந்த மங்கோலியர்கள் இந்தியா மீது படையெடுத்து வந்தபொழுது அலாவுத்தீன் கில்ஜியும் அவர்தம் படையினரும் மிகத் தீரமாகப் போராடி மங்கோலியர்களைத் தோற்கடித்தனர்.
இப்படி ஒருமுறை இருமுறையல்ல, ஆறு முறை மங்கோலியர்களைத் தோற்கடித்தார் அலாவுத்தீன் கில்ஜி!
இரண்டு படைகள் போரில் மோதின, அதில் அலாவுத்தீன் கில்ஜியின் படை வென்றது என்று சாதாரணமாக எண்ணிவிடாதீர்கள். அன்றைய காலக்கட்டத்தில் மங்கோலியப் படையை வெல்வது என்பது எண்ணிப்பார்த்திட இயலாத ஒன்று.
மங்கோலியர்கள் பாரசீகம், பக்தாத், ரஷ்யா, சீனா, ஈராக், சிரியா, ஐரோப்பா என்று பல பகுதிகளை வெற்றிகொண்டபொழுது என்னென்ன அழிச்சாட்டியம் புரிந்தார்கள் என்பது வரலாற்றில் நன்கு பதியப்பட்டிருக்கிறது.
அவர்கள் மற்ற படையினர் போன்று வெறுமனே மக்களைக் கொன்றுவிட்டு செல்பவர்களல்லர். மக்கள் அனைவரையும் கொல்வார்கள். அது எத்தனை இலட்சமாக இருந்தாலும் அவர்களுக்குக் கவலையில்லை. நகரங்களின் உட்கட்டமைப்புகளைத் தகர்த்துவிடுவார்கள். அந்த மண்ணின் சொந்தக் கலாச்சாரத்தை அழித்துவிடுவார்கள். இலக்கியங்களைத் தடம் தெரியாமல் எரித்துவிடுவார்கள். மத வழிபாட்டுத்தலங்களைத் தரைமட்டமாக்கிவிடுவார்கள்.
முழங்கால் வரை பக்தாதில் இரத்த ஆறு ஓடியது. இலட்சக்கணக்காக நூல்களை டைக்ரிஸ் நதியில் கொட்டி அழித்தார்கள் மங்கோலியர்கள். டைக்ரிஸ் நதி நூல்களின் கறுப்பு மையும் மனிதர்களின் சிவப்பு இரத்தமும் கலந்து கறுஞ்சிவப்பாக ஓடியது என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
வரலாற்றாசிரியர்கள் எப்படி எழுதுகிறார்கள் என்றால் மங்கோலியர்கள் தாங்கள் ஆக்கிரமித்த நகரங்களை வெறும் குப்பைமேடுகளாக மாற்றிவிட்டுப் போய்விடுவார்கள். குறைந்தது அடுத்த 100 வருடங்களுக்கு அந்நகரங்களைத் தலைதூக்கவே முடியாத அளவுக்கு ஆக்கிவிடுவார்கள்.
இப்பேற்பட்ட கொடும் படையினரை எதிர்த்துத்தான் அலாவுதீன் கில்ஜி மிகத் தீரத்துடன் போராடினார். அவரது வீரமும் போர்த் தந்திரமும் படையினர் மேல் அவர் வைத்திருந்த கட்டுப்பாடும் மிக்க ஒழுங்கும் நேர்த்தியும் கொண்ட படையும் அவர் தேர்ந்தெடுத்து அனுப்பிய மிகச் சிறந்த படைத்தளபதிகளும்தான் வெற்றிக்கான காரணிகள்.
ஆக, அலாவுத்தீன் கில்ஜி வெறும் இந்தியாவை மட்டும் மங்கோலியர்களிடமிருந்து காப்பாற்றிடவில்லை. இந்தியத் துணைக்கண்டத்தின் ஒட்டுமொத்தக் கலாச்சாரத்தையும் மங்கோலியர்களிடமிருந்து காப்பாற்றினார். ஹிந்துக்கள், முஸ்லிம்கள், புத்தர்கள், ஜைனர்கள் என்று இந்தியாவில் வாழ்ந்த அத்தனை மக்களையும்தான் மங்கோலியர்களிடமிருந்து காப்பாற்றினார்.
எப்படிக் காப்பாற்றினார் என்பதை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
முதல் படையெடுப்பு
கிபி 1298ல் இந்தியாவின் மீது மங்கோலியர்களின் முதல் படையெடுப்பு நடைபெற்றது. ஒரு இலட்சம் குதிரைப் படையினருடன் மங்கோலியர்கள் மிகப் பிரம்மாண்ட படையெடுப்பை நடத்தினர்.
டெல்லி சுல்தானாக இருந்த அலாவுதீன் கில்ஜி தன் சகோதரன் உலூக் கானையும் தளபதி ஸஃபர் கானையும் மங்கோலியர்களை எதிர்க்க அனுப்பி வைத்தார். மங்கோலியர்களை எதிர்த்து அலாவுதீனின் படை வீரதீரமாகப் போராடி வெற்றி பெற்றது. 20,000 மங்கோலியர்கள் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். அத்தனை பேரும் கொல்லப்பட்டனர்.
இரண்டாவது படையெடுப்பு
கிபி 1299ல் மங்கோலியர்கள் மீண்டும் படையெடுத்தனர். இம்முறை அவர்கள் குறி வைத்தது சிந்துப் பகுதியை. சிவஸ்தான் என்ற கோட்டையையும் ஆக்கிரமித்தனர். அலாவுதீன் தன் சிறந்த படைத்தளபதியான ஸஃபர் கானை அவர்களை எதிர்த்திட அனுப்பினார். ஸஃபர் கான் மங்கோலியர்களை எதிர்த்து தீரமாகப் போராடி வெற்றி பெற்றார். சிவஸ்தான் கோட்டையையும் அவர்களிடமிருந்து மீட்டெடுத்தார்.
மூன்றாவது படையெடுப்பு
இந்த அவமானகரமான தோல்வி மங்கோலிய மன்னர் துவா கானைப் பெரிதும் கோபப்படுத்தியது. எப்படியாவது அலாவுதீன் கில்ஜியைத் தோற்கடித்து பழி வாங்கவேண்டும் என்ற வெறியுடன் துவா கான் 2 இலட்சம் படையினருடன் தன் மகன் குத்லுக் குவாஜாவை அனுப்பி வைத்தார்.
இந்தப் பிரம்மாண்டப் படையுடன் வந்த மங்கோலியர்கள் பல மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், அதிகப்படியான ஆயுதங்கள் என்று சகல ஆயத்தங்களுடன் நீண்ட முற்றுகைக்குத் தயாராக வந்திருந்தனர்.
மங்கோலியர்களின் பிரம்மாண்டமான படையைக் கண்டு அலாவுதீனின் நெருங்கிய ஆலோசகர்கள்கூட அச்சத்தில் உறைந்துபோய், அலாவுதீனிடம் நாம் மோத வேண்டாம் என்றும் இவ்வளவு பிரம்மாண்டமான படையை எதிர்த்து நம்மால் போரிட முடியாது என்றும் கூறினர். ஆனால் அலாவுதீன் அசரவில்லை. போராடியே தீர்வேன் என்று கூறிவிட்டார்.
கிலி என்ற இடத்தில் மங்கோலியப் படையை எதிர்கொண்டார் அலாவுதீன். இதனால் இது “கிலி யுத்தம்” என்றழைக்கப்படுகிறது. கடுமையாக நடந்த போரில் மங்கோலியர்களை அலாவுதீன் வெற்றிகொண்டார். ஆனால் அலாவுதீனின் நம்பிக்கைக்குரிய சிறந்த படைத்தளபதியான ஸஃபர் கான் போரில் கொல்லப்பட்டார்.
மங்கோலியப் படைத்தலைவர் குத்லுக் குவாஜா படுகாயமுற்றார். அலாவுதீன் படையின் அடி தாங்கவியலாமல் மங்கோலியர்கள் திரும்பிப் பார்க்காமலும் இடையில் எங்கும் நிற்காமலும் பின்னங்கால் பிடரியில் பட ஓடினார்கள் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
நான்காவது படையெடுப்பு
அலாவுதீன் கில்ஜியிடம் மூன்று முறை தோற்ற பின்னரும் மங்கோலிய மன்னர் துவா கான் துவண்டுவிடவில்லை. கிபி 1303ம் ஆண்டு படைத்தளபதி தராகாய் தலைமயில் 1,20,000 வீரர்கள் கொண்ட படையை டெல்லியை நோக்கி அனுப்பி வைத்தார்.
இம்முறை அலாவுதீனுக்குச் சாதகமான சூழ்நிலை இல்லை. சித்தூர் பேரரசை மிக நீண்ட முற்றுகைக்குப் பிறகு அப்பொழுதுதான் அலாவுதீன் வென்றிருந்தார். படைவீரர்களெல்லாம் காயங்களைச் சுமந்துகொண்டு, கடும் களைப்புற்றிருந்த நேரம் அது. இன்னொரு மிகப் பெரிய படையைச் சந்திக்கும் அளவுக்குப் படையில் தெம்பும் திராணியும் இல்லை.
இவற்றையெல்லாம் மனதிற்கொண்டுதான் துவா கான் தன் படையை அனுப்பியிருந்தார். அலாவுதீன் வலு சேர்க்கும் படைகளை இதர அரசுகளிடமிருந்து கேட்டார். ஆனால் டெல்லி செல்லும் அத்தனை வழிகளையும் மங்கோலியர்கள் அடைத்துவிட்டார்கள். ஆதலால் அலாவுதீனுக்கு இதர அரசுகளிடமிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை.
அலாவுதீன் அசரவில்லை. மிகப் பெரிய போர்த்தந்திரியும் இராஜதந்திரியுமான அலாவுதீன் அற்புதமான சில நடவடிக்கைகளை எடுத்தார். இதனை வரலாற்றாசிரியர் கே.எஸ். லால் இவ்வாறு விளக்குகிறார்:
“சுல்தான் அலாவுதீன் கூடுமானவரை தலைநகரிலிருந்த தன் படைகளை சிரி என்ற இடத்தில் ஒன்றுகூட்டினார். தன் சிறிய படையை வைத்து மங்கோலியர்களின் பெரும் படையை எதிர்கொள்ளமுடியாது என்பதை அறிந்திருந்த அலாவுதீன் முற்றுகையை நீடிக்க வைத்து எதிரிகளைக் களைப்படைய வைத்தார். இதற்கிடையில் தன் பாதுகாப்பு எல்லைகளைப் பலப்படுத்தும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டார்.” (History of the Khaljis (1290-1320) by K.S. Lal)
அலாவுதீனின் தடுப்பரண்களைத் தகர்ப்பதற்கு கடும் முயற்சிகளை எடுத்த தராகாய் அதில் தோற்றார். இரண்டு மாத முற்றுகைக்குப் பிறகு, தன்னிடமிருந்த உணவு சேமிப்புகளெல்லாம் தீர்ந்த பிறகு பொறுமையிழந்த தராகாய் வேறு வழியின்றி தன் படைகளுடன் திரும்பிச் சென்றார். இந்த நிகழ்வில் அலாவுதீனின் புத்திசாலித்தனமான போர்த்தந்திரத்தையும் தகைசார் தலைமைப்பண்பையும் வரலாற்றாசியர்கள் வெகுவாகப் பாராட்டுகிறார்கள்.
ஐந்தாவது படையெடுப்பு
தங்கள் முந்தைய தோல்விகளுக்குப் பழி வாங்கும் முகமாக கிபி 1305ல் அடுத்த படையெடுப்பை தராகாய், அலீ பேக், தார்தாக் ஆகிய தளபதிகளின் தலைமையில் நடத்தினார்கள் மங்கோலியர்கள். இம்முறை 50,000 குதிரைப்படைவீரர்கள் வந்திருந்தனர்.
அலாவுதீன் தன்னுடைய தளபதி மலிக் நாயக் தலைமையில் 30,000 முதல் 40,000 குதிரைப்படைவீரர்களை மங்கோலியர்களை எதிர்கொள்ள அனுப்பிவைத்தார். மங்கோலியப் படை டெல்லிக்கு வரும் முன்பே அலாவுதீனின் படையினர் மங்கோலியர்களை எதிர்கொண்டு தராகாயைக் கொன்றனர்.
பின்னர் நடந்த தாக்குதல்களில் அலாவுதீனின் படை மங்கோலியர்களுக்குக் கடும் தோல்வியைக் கொடுத்தது. மங்கோலியர்களின் 20,000 குதிரைகளை அலாவுதீனின் படையினர் கைப்பற்றினர். கிட்டத்தட்ட மங்கோலியப் படையினர் அனைவரும் கொல்லப்பட்டனர். மங்கோலியர்களின் 2 தளபதிகள் உட்பட 8000 கைதிகள் டெல்லிக்குக் கொண்டுவரப்பட்டனர். அனைவரும் தலைதுண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.
ஆறாவது படையெடுப்பு
எப்படியாவது அலாவுதீன் கில்ஜியைப் பழிவாங்கிட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்த துவா கான், கிபி 1306ல் அடுத்த படையெடுப்பை நடத்தினார். தனது இறப்புக்கு முன், 50,000 முதல் 60,000 வரை குதிரைப்படைவீரர்கள் கொண்ட ஒரு படையை குபாக், இக்பால்மந்த் ஆகிய தளபதிகளின் தலைமையில் அனுப்பி வைத்தார் துவா கான்.
குபாக் தன் படைப்பிரிவுடன் ரவி ஆற்றை நோக்கிச் சென்றார். இக்பால்மந்த் தன் படைப்பிரிவுடன் நகோர் நோக்கிச் சென்றார். தன் நம்பிக்கைக்குரிய தளபதியான மாலிக் கஃபூரை மங்கோலியர்களை எதிர்ப்பதற்காக அலாவுதீன் அனுப்பி வைத்தார்.
ரவி ஆறு யுத்தத்தில் மாலிக் கஃபூர் மங்கோலியர்களை எதிர்கொண்டு வெற்றி பெற்று, குபாக்கை உயிருடன் பிடித்தார். பின்னர் நகோர் சென்று இக்பால்மந்தை எதிர்கொண்டார் மாலிக். அவர்களையும் வெற்றிகொண்டு மங்கோலியர்களுக்குப் பெரும் தோல்வியைக் கொடுத்தார் மாலிக். 3000 அல்லது 4000 படைவீரர்களே மங்கோலியர்கள் படையில் மிஞ்சினார்கள். மீதி அத்தனை பேரும் போரில் கொல்லப்பட்டார்கள்.
இப்படி, மேலை நாட்டினர், கீழை நாட்டினர் யாரும் மங்கோலியர்களைத் தோற்கடித்து அடையமுடியாத வெற்றியை அலாவுதீன் அடைந்தார். மங்கோலியர்களுடன் நடந்த ஆறு சண்டைகளில் ஒரு சண்டையில் அலாவுதீன் தோற்றால்கூட மங்கோலியர்கள் இந்தியாவை 200 முதல் 300 ஆண்டுகள் பின்தங்க வைத்திருப்பார்கள் என்று வரலாற்றாசியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
நூற்றாண்டுகளாக இந்தியாவில் குடிகொண்டிருக்கும் பாரம்பரிய கலாச்சாரங்கள் அழிக்கப்பட்டிருக்கும். நூலகங்கள், கல்விக்கூடங்கள், கோயில்கள், மஸ்ஜித்கள், வீடுகள் என்று அத்தனையையும் மங்கோலியர்கள் அழித்திருப்பார்கள்.
இன்று இந்தியாவில் நம்முடைய பாரம்பரிய கலாச்சாரங்கள் நிலைநிற்கின்றன என்றால் அதன் அனைத்துப் பெருமைகளும் மாபெரும் சுல்தானான அலாவுதீன் கில்ஜிக்குத்தான் சேரும் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இன்று ஹிந்துக்களும் முஸ்லிம்களும் இன்னபிற மதத்தவர்களும் தங்கள் மதங்களைக் கடைப்பிடித்து இங்கே வாழ்கிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணகர்த்தாவான அலாவுதீன் மதவெறியரா என்பதை இன்னொரு பதிவில் காண்போம்.
முற்றும்.
(Source: “India Should Be Grateful to Alauddin Khilji for Thwarting the Mongol Invasions” by Historian Seshadri Kumar, published in ‘The Wire’ on 09.12.2017)
– MSAH வரலாற்றுத் துளிகள்
source: https://www.facebook.com/MSAH2020