“முஸ்லிம்கள் தினமும் ஐந்து தடவை தொழுகிறார்கள் என்பது உண்மையா?”
ஷாறா
‘முஸ்லிம்கள் தினமும் ஐந்து தடவை தொழுகிறார்கள் என்பது உண்மையா?’ என ஜப்பானிய பெண் மருத்துவ யுவதியொருவர் என்னிடம் கேட்டார். நான் ‘ஆம்’ என்றதும், திகைப்பும் ஆட்சேபிக்கும் பாவனையும் கொண்ட தொனியில் அவர், ‘ எப்படி உங்களால் அது முடிகிறது?’ எனக் கேட்டார்.
நான் கேட்டேன்: ‘நீங்கள் ஒரு மருத்துவர். உங்கள் பணியின் போது ஏராளமான நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கிறீர்கள். இதன்போது தினமும் எத்தனை தடவை உங்கள் கைகளைச் சுத்தம் செய்கிறீர்கள்?’ அதற்கு, ‘முப்பது… ஐம்பது’ எனக் கூறிக் கொண்டே என்னைப் பார்த்தார். நான் கூற வருவதை அவர் புரிந்து கொண்டார் என்பதை அவரது பார்வையிலேயே படிக்க முடிந்தது.
‘எழுந்து தொழுவீராக; ஏனெனில் தொழுகையில் நிவாரணம் உள்ளது.’ (ஹதீஸ்).
‘வைரஸ்’களால் நிறைந்தது நம்மைச் சூழ உள்ள வாழ்வு.
இச்சையின் தூண்டுதல்கள், மோக மயக்கங்கள், மனிதப் பலவீனங்கள், நெறி பிறழ்வுகள், செய்த்தானிய ஊசலாட்டங்கள்…. ஏன ஏராளமான வைரஸ்கள். இந்த அனைத்தையும் சுத்தி செய்வது தண்ணீரல்ல; தொழுகை.
தண்ணீர் நமது புற உடலைத்தான் சுத்தம் செய்யும். அகமியத்தைத் தூய்மைப்படுத்த முடிந்த சாதனம் தொழுகைதான்.
எனவே, ஒரு தொழுகையாளி எந்த மாற்றத்தையும் தனக்குள் உணராமல், அல்லது தன்னில் ஒட்டியிருந்த பல பாவக் கறைகளிலிருந்து விடுபட்ட உணர்வைப் பெறாமல், அல்லது தான் புதிதாகப் பிறந்திருப்பதாக உணராமல் தொழுகையிலிருந்து –நுழைந்தது போன்றே – வெளிவருவாராயின், அவரது அகத்தின் ஆழத்தில் ‘வைரஸ்கள்’ இன்னும் அகற்றப்படாமல் அப்படியே உள்ளன.
இந்நிலையில் தொழுகைக்கு முன்னர் காணப்பட்ட பலவீனங்களையும் விகாரங்களையும் பிறழ்வையும் நோக்கியே அவர் மீண்டும் வந்து சேர்கிறார்.
[அஹ்மத் பஸ்ஸாம் ஸாஈ அவர்களால் எழுதப்பட்டு, கலாநிதி பீ. எம். எம். இர்பான் (நளீமி) அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள ‘தொழுகையை மீளக் கண்டடைதல்’ எனும் நூலிலிருந்து!]
-ஷாறா