என் உம்மா ஒரு தீவிர வாசகி
படிப்பினைகள் நிறைந்த வாழ்க்கை வரலாறு
[ இன்னும் பத்து நாட்களில் என் உம்மா மௌத்தாகி மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. வீட்டில் நாள் தவறாமல் உம்மாவின் நினைவுகள் மீட்டப்படுகின்றன. உம்மா நோயுற்றிருந்த இறுதி வேளையிலும், மரணித்த பின்பும் நான் இட்ட பதிவுகளின் தொகுப்பு இது. -ஷாறா ]
என் உம்மாவுக்கு வயது 85. உம்மா ஒரு தீவிர வாசகி. எங்கள் எல்லோருக்கும் புத்தகக் காதல் உம்மாவிடமிருந்துதான் வந்திருக்கிறது. வாசிப்பில்தான் அவரது வாழ்வில் பெரும் பகுதி கழிந்திருக்கிறது. இத்தனைக்கும் எழுத்தறிவில்லாத ஒரு தாயின் மகள் அவர்.
வாசிப்பதற்காக நான் தோழிகளிடமிருந்து ஆவலோடு நூல்களை எடுத்துக் கொண்டு போவேன்.
உம்மா எனக்கொரு வேலையைத் தந்து விட்டு நூலை வாசிக்கத் தொடங்கிவிடுவார்.
எதிர்த்துப் பேசவோ, சண்டை பிடிக்கவோ தெரியாமல் உம்மா வாசித்து விட்டுத் தரும் வரை ஏக்கத்தோடு காத்திருப்பேன்.
சமரசம், அல்ஹஸனாத் இதழ்களை வாசிக்கும் வரை உம்மாவுக்கு மாதமே பிறக்காத மாதிரிதான். அவரது மூத்த மகன் அரும்பு சஞ்சிகையை வெளியிடத் தொடங்கிய பின் அதன் தீவிர அபிமானியாக மாறிவிட்டார் உம்மா.
அறிஞர் சித்தி லெப்பையின் ‘அஸன்பே சரித்திரம்’ வாசிக்க வேண்டுமென்பது உம்மாவின் அண்மைக்கால ஆசை. அதைத் தேடிக் கண்டுபிடிக்கும் போது உம்மாவுக்கு வாசிக்க முடியாத நிலை வந்து விட்டது. வயோதிபம் காரணமாக பார்வையை சீர் செய்ய முடியவில்லை. வாசிப்பில்லாமல் வாழவேண்டி வந்தது அவருக்கு, பெரியதொரு சோதனையாகி விட்டது. தன் வாழ்வுக்கு அர்த்தமில்லாமல் போய் விட்டதாக என்னிடம் பல முறை சொல்லி வேதனைப்பட்டார். அப்போதெல்லாம் சிறந்த பார்வையும் இளமையும் இருந்தும் வாசிக்காமலிருப்பவர்களைப் பற்றி நான் யோசிப்பேன்.
எனது மகள் 9 அல்லது 10ம் வகுப்பில் கற்றுக் கொண்டிருந்த போது பாடநூலில் முத்தௌள்ளாயிரத்திலிருந்து ஒரு செய்யுள் இடம்பெற்றிருந்தது. வாசிப்பதற்குச் சங்கடமான செய்யுள்தான். அதனை டிமைன்ட சீட்டில் அழகாக எழுதிக் கொண்டு வரும்படி டீச்சர் சொல்லியிருந்தார். அடுத்த நாள் கொண்டு போவதற்காக மகள் அழகான கையெழுத்தில் அதை எழுதி அறையில் தொங்க விட்டாள்.
அந்த நேரம் பார்த்து ஊரிலிருந்து உம்மா வந்து சேர்ந்தார். உம்மும்மா என்றால் என் மகளுக்கு உயிர். என்றாலும் இந்தச் செய்யுளைப் பார்த்து உம்மா சொல்வாரோ என்ற பயம். மடித்து வைத்தால் நொறுங்கிப் போகலாம். சரிதான். இவ்வளவு கஷ;டமான செய்யுள் உம்மாவுக்கு விளங்காது என நினைத்து பேசாமலிருந்து விட்டாள்.
மகளின் அறைக்கு வந்தார் உம்மா. முதல் வேலையாக பெரிய எழுத்தில சுவரில் தொங்கிய செய்யுளை வாசித்தார். முகம் கறுத்தது. ‘சீ! இந்த அருவருப்ப ஏன் தூக்கி வச்சீக்கிற? கிழிச்சு வீசு!’ என்று ஏசியதும் மகள் அதிர்ந்து விட்டாள்.
உம்மா அபாரத் திறமைசாலி. பெண் கல்விக்குப் பாரிய தடை இருந்த அந்தக் காலத்தில் கல்லூரி அதிபர் திருமதி பிந்தாரா காலித் அவர்கள் வீடுவீடாகப் போய் பெண் பிள்ளைகளைப் பாடசாலைக்குக் கொண்டு வந்து சேர்த்தார். அப்படிச் சேர்க்கப்பட்ட உம்மா, முதலாம் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்புக்கும், நான்காம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்புக்கும் வகுப்பேற்றப்பட்டார். அத்தோடு அவரது கல்வி வாழ்வுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.
உம்மும்மா செய்த வேலையால் சமூகம் சிறந்த சட்டத்தரணியொருவரைப் பெற்றுக் கொள்ள முடியாமற் போய்விட்டது என திருமதி காலித் அவர்கள் கல்லூரிக்கு வரும் போதெல்லாம் என்னிடம் சொல்லுவார். அவர் அப்படிச் சொல்வதற்கு உம்மாவின் பேச்சாற்றலும் காரணமாக இருக்கலாம்.
உம்மாவின் தலைமைத்துவ ஆற்றலைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன். எந்தவொரு விடயத்தையும் தலைமை தாங்கி அழகாகத் திட்டமிட்டு செய்து முடித்து விடுவார்.
உம்மாவை ஒரு சாதனைப் பெண்ணாகவே நான் பார்க்கிறேன். உம்மா திருமணம் செய்யும் போது வயது 19. வாப்பாவின் ஊரான பெந்தொட்டையின் கோம்மள கிராமத்தில் மூன்றே மூன்று முஸ்லிம் குடும்பங்கள். ஒழுங்காகச் சிங்கள மொழி தெரியாத நிலை. சுட்டெரிக்கும் வறுமை, வாப்பாவின் வாழ்வில் பெரும் பகுதி வியாபார நிமித்தம் தூர இடங்களில். இப்படிப்பட்ட நிலையில் எட்டுப் பிள்ளைகள், அதுவும் ஆறு ஆண் பிள்ளைகளை, சுற்றியுள்ள கலாச்சாரத்தின் தாக்கம் சிறிதுமின்றி வளர்த்தெடுக்க எப்படிப்பட்ட போராட்டமொன்றை நடத்தியிருப்பார் என்று நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் விழிகள் குளமாகின்றன.
தனக்கிருந்த அறிவுத் தாகத்தை பிள்ளைகள் மூலம் தீர்த்துக் கொள்ள வாப்பாவுடன் இணைந்து உம்மா கடுமையாகப் போராடினார். தனக்கிருந்த மிகக் குறைந்த வளங்களுடன் பிள்ளைகளை தன்னால் முடிந்த உயரத்தில் கொண்டு வந்து வைத்தார். முழு ஊரிலும் முதன்முதலாய் பல்கலைக்கழகம் சென்றவர்கள் எனது சகோதரர்களே.
ஊரில் சிங்கள சமூகத்திடம் வாப்பாவுக்கிருந்த கண்ணியத்தை எள்ளளவும் குறையாமல் பாதுகாத்துக் கொண்டார் உம்மா. ஊரிலிருந்து வந்து கால் நூற்றாண்டு கடந்து விட்ட போதும் இன்றைக்குப் போனாலும் உம்மாவைத் தான் ஊர் மக்கள் பாசத்தோடு விசாரிப்பார்கள்.
உம்மா எல்லோருடனும் நேசமாகப் பழகுபவர்; கலகலப்பானவர். அவரது பேச்சில் எப்போதும் நகைச்சுவை நிறைந்திருக்கும். அவரது உறவுக்கு வயது வித்தியாசம் தெரியாது. உம்மாவின் நட்பு வட்டத்தில் அவரது நண்பிகள் மட்டுமன்றி பிள்ளைகளது, பேரப்பிள்ளைகளது நண்பர்களும் இருந்தனர்.
தன் பிள்ளைகள் தொடக்கம் பேரப்பிள்ளைகளின் பிள்ளைகள் வரை ஒவ்வொருவரது நலனிலும் தனியான அக்கறை கொண்டவர். மிக அண்மையில் பேரப்பிள்ளைகளின் குழந்தைகளுக்கு தன் கையால் பூ வேலைப்பாடுகளுடன் உடை தைத்துக் கொடுத்தார். உம்மாவின் சமையல் அற்புதமானது.
முற்போக்குச் சிந்தனை, ஆழமான சமூகப்பற்று, வித்தியாசமான அணுகுமுறை போன்ற எத்தனையோ சிறப்பியல்களை உம்மாவிடம் நான் பார்த்திருக்கிறேன்.
தன் பிள்ளைகள் சமூகத்தின பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குபவர்களாக இருக்க வேண்டுமென விரும்பியதோடு நின்று விடாமல் தன்னாலும் முடிந்ததையெல்லாம் சமூகத்துக்குச் செய்தார் உம்மா.
அது 1977ம் ஆண்டு. தாலியும் சீதனமும் இன்றி திருமணமே இல்லை என்ற நிலை. திருமணங்கள் பெரும்பாலும் இரவிலேயே நடக்கும். இறைவனின் அருளால் பெரிய நானாவின் திருமணத்தை தாலியும் சீதனமும் இன்றி பகலில் நடத்திக் காட்டினார் உம்மா.
மகன்மாருக்குக் கல்வியறிவூட்டிய பின் எப்படியெல்லாம் சீதனம் வாங்குகிறார்கள். ஆறு நானாமாருக்கும் சீதனம் எடுத்திருந்தால் நீங்கள் ஹெலிகப்டரே வாங்கிருக்கலாம் என உம்மாவை நான் கேலி செய்வேன். நான் பிள்ளை வளர்த்தது விற்பனைக்கல்ல என்பதுதான் உம்மா எப்போதும் சொல்கின்ற பதில். இது போன்ற தனது கருத்துக்களை பெண்களிடம் தீரத்துடன் எடுத்துச் சொல்வார் உம்மா.
உம்மாவின் நினைவாற்றல் எம்மை எப்போதும் வியக்க வைக்கும். தனக்கு முந்திய நான்கு தலைமுறையின் முழுக் குடும்ப விபரமும் உம்மாவுக்கு நன்கு தெரியும். அதை வைத்து ஒரு நூல் எழுதினார் உம்மா. ரஸ_லுல்லாஹ் தனது முன்னோர்கள் பற்றித் தெரிந்து வைத்திருந்தார். நாங்களும் அது போலத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பார்.
உம்மாவைப் பற்றி போஸ்ட் ஒன்று போடப் போகிறேன் என்று சொன்னபோது என் பிள்ளைகள் சொன்னார்கள், உம்மும்மாவைப் பற்றி ஒரு போஸ்ட் என்ன, ஒரு நூலே எழுதி விடலாம் என்று.
8 பிள்ளைகளும் அவர்களது வாழ்க்கைத் துணைகளும், 37 பேரப் பிள்ளைகளும், அவர்களில் திருமணம் செய்த 18 பேரின் வாழ்க்கைத் துணைகளும் 24 கொள்ளுப் பேரப் பிள்ளைகளும் என சுமார் நூறு பேர் கொண்ட குடும்ப சாம்ராஜ்யத்தின் அரசியாய்த் திகழ்ந்தவர் உம்மா. ஓர் அரசிக்குரிய மிடுக்கும் புத்திக் கூர்மையும் தலைமைத்துவ ஆற்றலும் தன்னம்பிக்கையும் துணிவும் தூர நோக்கும் நுணுக்கமான திட்டமிடலும் உம்மாவிடம் தாராளமாக இருந்தன.
திருமணம் செய்து கொடுத்தபின் பிள்ளைகளின் குடும்ப வாழ்வில் ஒரு போதும் அவர் தலையிட்டதில்லை. பிள்ளைகள் சந்தோசமாக வாழ வேண்டும் என்பதற்காக எல்லோரையும் சுதந்திரமாக விட்டு விட்டார் உம்மா.
இறைவனின் அருளால் உண்மையையும் நேர்மையையும் எங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் ஊட்டி வளர்ப்பதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தவர் உம்மாதான். நேர்மை இரத்தத்தில் கலந்திருக்க வேண்டுமெனச் சொல்வார் உம்மா.
வறுமையின் கோரப்பிடியில் இருக்கும் நிலையில் பிள்ளைகளை வளர்த்த போதும், தனக்கு விசுவாசமான ஓரிருவரைத் தவிர எந்த ஒருவரது உதவியையும் பெற்றுக் கொள்ளக் கூடாது என்பதில் பிடிவாதமாயிருந்தார் உம்மா.
தன் பிள்ளைகள் எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு வரும் போது, அவர்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும், யாரும் அவர்களைப் பார்த்து, எங்களது உதவியால்தான் இவர்கள் படித்தார்கள் எனச் சொல்லிக்காட்டிவிடக் கூடாதே என்பதுதான் அந்தப் பிடிவாதத்தின் காரணம்.
.
மனிதன் எப்படி வாழ்கிறானோ அப்படியே அவனது இறுதிக் காலமும் அமையும் என்பதை உம்மாவின் இறுதி நாட்களில் நிதர்சனமாகக் கண்டு கொள்ள முடிந்தது. உலக ஆசைகள் எதுவுமின்றி மரணத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தவராகவே தன் இறுதி நாட்களைக் கழித்தார் உம்மா.
உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும், அதன்பின் வீட்டில் வாழ்ந்த சில நாட்களிலும் மரணத்தையே நினைவு கூர்ந்தார். “எதற்குப் பயப்படுகிறீர்கள்? மௌத்து எல்லோருக்கும் உள்ளதுதானே! நான் அதற்குப் பயமில்லை” என்றார்.
வைத்தியசாலையில் இருந்த போது கலிமாச் சொல்லித் தக்பீர் கட்டி, கண்களை மூடிக் கொள்வார். சிறிது நேரத்துக்குப் பின் கண்களைத் திறந்து அங்குமிங்கும் பார்ப்பார். “நான் எங்கிருக்கிறேன்? இன்னும் நான் மௌத்தாகவில்லையா?” எனக் கேட்பார். இப்படி என் முன்னிலையில் பல தடவைகள் நடந்தன. சிரப்பட்டுப் பேசும் உம்மாவின் இந்தச் செயல் எனக்கு ஆரம்பத்தில் புரியவில்லை. புரிந்தபோது, “உம்மா நீங்கள் மௌத்தாகி விட்டதாக நினைத்தீர்களா?” எனக் கேட்டேன்.
“ஓ!” என்றார்.
“உம்மா எந்த ஒரு மனிதனும் மரணிக்க முன் அவன் சுவனவாதியா, நரகவாதியா என்பதைக் கண்டு கொள்வான் எனப் படித்திருக்கிறேன். எனவே, இன்ஷா அல்லாஹ் உங்கள் நற்செயல்களுக்குரிய வெகுமதியைக் கண்டுகொள்ளாமல் நீங்கள் மரணிக்க மாட்டீர்கள்” எனச் சொல்லி, சுவன இன்பங்களை நினைவூட்டினேன். அப்படிச் சொன்னவுடன் சிரமத்துடன் தன் கையைத் தூக்கி என் வாயைத் தடவிக் கொடுத்தார் உம்மா. அதற்குப் பிறகு பல தடவைகள் மரணத்தைப் பற்றிப் பேசிய போதும், நான் மௌத்தாகவில்லையா எனக் கேட்கவேயில்லை.
அவர் செய்த நற்செயல்களை பேரப் பிள்ளைகள் நினைவூட்டிய போது, “முகத்துக்கு முன் புகழாதே! அது மனிதனின் குரல்வளையை நசுக்குவது போல” என்று உம்மா சொன்னதை மறந்து, நானும் ஒரு முறை நோயால் துன்பப்படும் நிலையில் அவரது நற்செயல்களை, மன ஆறுதலுக்காக ஞாபகப்படுத்தினேன். பேசவோ, கைகளைத் தூக்கவோ முடியாத நிலையில் சிரமப்பட்டு மெல்லக் கையைத் தூக்கி பேசவிடாமல் என் வாயைப் பொத்தி விட்டார் உம்மா.
கடைசி வரை மங்காமல் இருந்த அவரது புத்திக் கூர்மையைக் கண்டு அனைவருக்கும் வியப்பே மேலிட்டது.
முழுக் குடும்பமும் சுற்றிவர, தன் வாரிசுகள் பற்றிய திருப்தியும் மகிழ்ச்சியும் நிரம்பிய நிலையிலேயே உம்மாவின் இறுதி நாட்கள் கழிந்தன. உம்மாவோடு அதிக நேரத்தைச் செலவளிக்கக் கிடைத்த திருப்தி அவரது வாரிசுகளுக்கும் கிடைத்தது. இவையெல்லாம் எங்களால் செய்ய முடிந்தவை அல்ல. இறைவனின் பேரருளேயன்றி வேறெதுவுமில்லை. அல்ஹம்துலில்லாஹ்.
-ஷாறா