வீரமும் விவேகமும் மிக்க முஹம்மத் பின் காசிமின் துயரமான முடிவு
முஹம்மத் பின் காசிம் புத்திசாலியான, வீரமும் விவேகமும் மிக்க, இறையச்சமுள்ள ஓர் இளவல்.
ஓர் இளைஞனாக இருந்து சிந்துப் பகுதியையும் இந்தியாவையும் மதியுக்தியுடன் வெற்றிகொண்ட முஹம்மத் பின் காசிமை வரலாற்றாய்வாளர்கள், “ருஸ்தமையும் அலெக்சாண்டரையும் விஞ்சிய வீர இளவல் இவர்” என்றும் அவரது நீதியை நிலைநாட்டும் தன்மையையும் மக்கள் மீது அவர் வைத்த நேசத்தையும் கண்டு, “நீதியின் இலக்கணமான நவ்ஷெர்வானை விஞ்சியவர் இவர்” என்றும் புகழாரம் சூட்டினார்கள்.
சிந்துப் பகுதியை வெற்றிகொண்டு வெற்றிகரமாக அடுத்த பகுதியை நோக்கி அவர் அடியெடுத்து வைக்க முனைந்தபொழுதுதான் அந்தச் செய்தி வந்தது. புதிதாகப் பதவியேற்ற ஃகலீஃபா சுலைமான் பின் அப்துல் மலிக்கிடமிருந்து வந்த செய்தி அது.
முஹம்மத் பின் காசிம் தன் படைவீரர்களைப் பெரிதும் நேசித்தார். படைவீரர்களும் அவரைப் பெரிதும் நேசித்தனர். அவர் என்ன சொன்னாலும் உடனடியாக மனமுவந்து கீழ்ப்படிந்தனர். இதுவே அவர் ஒரு தகுதியான, திறமையான படைத் தலைவர் என்பதற்குப் பெரும் சான்றாகத் திகழ்கிறது.
முஹம்மத் பின் காசிமை நன்றாகப் பயன்படுத்தியிருந்தால் அவர் சீனா, ஜப்பான் வரை மொத்த ஆசிய கண்டத்தையும் கைப்பற்றியிருப்பார் என்று வரலாற்றாய்வாளர்கள் கூறுகிறார்கள். ஒட்டுமொத்த ஆசிய கண்டத்திற்கும் நீதியும் நேர்மையும் மிக்க ஓர் ஆட்சி கிட்டியிருக்கும்.
முன் ஃகலீஃபாவாக இருந்த தன் சகோதரர் வலீத் பின் அப்துல் மலிக்கின் மீதும் அவருக்குகந்த ஆளுநரான ஹஜ்ஜாஜின் மீதும் தனக்கிருந்த தனிப்பட்ட பகைமைத் தீயில் எரிந்துகொண்டிருந்தார் சுலைமான் பின் அப்துல் மலிக்.
அந்தத் தனிப்பட்ட பகை ஹஜ்ஜாஜின் உறவினரான முஹம்மத் பின் காசிம் மீதும் நீண்டது. வலீத் இறந்தபின் பதவியேற்ற சுலைமான், ஹஜ்ஜாஜ் இறந்தபின் எந்தத் தவறும் செய்யாத முஹம்மத் பின் காசிமைப் பழிவாங்கத் துடித்தார்.
அதன் காரணமாக யஸீத் பின் அபூ கப்ஷா என்பவரை சிந்துப் பகுதியின் ஆளுநராக அனுப்பினார் சுலைமான். அவரிடம் முஹம்மத் பின் காசிமைக் கைது செய்து, கைதியாக தன்னிடம் அனுப்பவேண்டும் என்பதே சுலைமான் அனுப்பிய அந்தச் செய்தி.
சுலைமானின் இந்த உத்தரவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிற்று. மொத்தப் படையையும் படைத்தளபதிகளையும் மானசீகமாகத் தளர்த்திற்று. அவர்களனைவரும் விரக்தியின் விளிம்புக்குச் சென்றனர்.
இத்தனை வெற்றிகளை ஈட்டித்தந்த முஹம்மத் பின் காசிமையும் அவர்தம் படையையும் சுலைமான் பாராட்டி மகிழ்ந்திருக்கவேண்டும், கௌரவப்படுத்தியிருக்கவேண்டும், கண்ணியப்படுத்தியிருக்கவேண்டும். ஆனால் அதற்கு நேர்மாறாக அந்த மகா வெற்றிகளுக்குக் காரணகர்த்தாவான அனைத்துத் தகுதிகளும் படைத்த ஒரு படைத் தலைவனைக் கைதியாகத் திரும்ப அழைப்பதா? வெந்து நொந்துபோனார்கள் வீரர்கள்.
முஹம்மத் பின் காசிமுக்கு அங்கிருந்த புகழுக்கும் பெருமைக்கும் அந்த மக்கள் அவருக்குக் காட்டிய மரியாதைக்கும் யஸீத் பின் அபூ கப்ஷாவால் சிந்துப் பகுதியில் முஹம்மத் பின் காசிமை ஒன்றும் செய்திருக்கமுடியாது. ஆனால் நடந்ததோ வேறு.
ஃகலீஃபாவின் உத்தரவையறிந்த முஹம்மத் பின் காசிமின் படைத்தளபதிகள் அவரிடம், “இவ்வுத்தரவுக்குக் கீழ்ப்படியாதீர்கள். நாங்கள் உங்களை அமீராக அங்கீகரிக்கிறோம். உங்களுக்குக் கீழ்ப்படிவதாக உங்கள் கரங்களில் உறுதிமொழி எடுக்கிறோம். ஃகலீஃபாவால் உங்களை ஒன்றும் செய்யமுடியாது” என்று கூறினார்கள்.
ஆனால் இறையச்சமுடைய, நேர்மையான இளவலான முஹம்மத் பின் காசிம் சிறிது கூட யோசிக்காமல், “ஃகலீஃபாவுக்குக் கீழ்ப்படியாமலிருப்பது என்ற பெருங்குற்றத்தை நான் ஒருபொழுதும் செய்யமாட்டேன்” என்று சூளுரைத்துவிட்டு, யஸீத் பின் அபூ கப்ஷாவிடம் சரணடைந்தார்.
யஸீத் அவரைக் கைது செய்து, டமஸ்கஸுக்கு அனுப்பினார். அதுதான் அப்போது உமையா ஃகலீஃபாக்களின் தலைநகராக இருந்தது.
முஹம்மத் பின் காசிம் டமஸ்கஸ் கொண்டுவரப்பட்டதும் சிறையில் அடைக்கப்பட்டார். ஃகலீஃபாவின் உத்தரவின்பேரில் ஸாலிஹ் பின் அப்துர் ரஹ்மான் என்பவரால் முஹம்மத் பின் காசிம் சித்திரவதை செய்து கொல்லப்பட்டார். அப்போது அவரது வயது இருபது மட்டுமே!
ஆட்சிக்கட்டிலில் தவறான தலைமை அமர்ந்தால் இப்படிப்பட்ட விபரீதங்கள்தாம் நிகழும் என்பதற்கு வரலாற்றில் அழிக்கமுடியா கறையாக அமைந்தது இந்நிகழ்வு.
– MSAH வரலாற்றுத் துளிகள்