தமிழகத்தின் முதல் மதரஸா (கல்விக்கூடம்) – மதரஸ”ஏ”ஆஸம், சென்னை
[மதரஸா’ஏ’ஆஸம் எனும் சொல் தான் சென்னை நகரின் புராதன பெயரான மதராஸ் என்பதற்கு அடிப்படை.
வரலாற்று சிறப்பு மிக்க இப்பள்ளிக்கூடம் மீண்டும் சரியான பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
மாணவர்களின் சேர்க்கை கணிசமான அளவு உயர்ந்து இருக்கிறது.
சென்ற வருடம் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 96% பெற்று சாதனை படைத்தது.
நம் மாணவர்களை சிறப்பு மிக்க இப்பள்ளியில் சேர்த்து பயன்பெருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
விவரங்களுக்கு: அமானுல்லாஹ் கான், துணைத் தலைவர், பள்ளி நிர்வாக குழு. 8939417786 ]
சென்னையின் இதயமான அண்ணாசாலையில் 15 ஏக்கர் பரப்பளவில் ஆயிரக்கணக்கான மரங்களுடன் சோலைவனமாக பரந்துவிரிந்து கிடக்கும் அந்த மதரஸா’ஏ’ஆஸம் கட்டிடம் தான் தமிழகத்தின் அதாவது பிரிட்டிஷ் ராஜ்ஜியம் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னதான ஆற்காடு நவாப்களின் சமஸ்த்தானமாக விளங்கிய மதராஸப்பட்டணத்தின் முதல் மார்க்க கல்வி போதிக்கப்பட திறந்து வைக்கப்பட்ட முதல் அரபு – பர்ஷிய மொழி மதரஸாவாகும்.
கி.பி.1761ல் தென்னகத்தின் முதல் மதரஸாவாக செயல்பட்டு வந்த சென்னை,திருவல்லிக்கேணி வாலாஜா பள்ளிவாசல் வளாகத்தில் தான் இயங்கியது.
அங்குள்ள பைத்துல்மால் கட்டிடம் ,பள்ளிவாசலை விட பழமையானது, ஆற்காடு நவாப் முஹம்மது அலிகான் வாலாஜா அந்த பள்ளிவாசலை கட்டும்முன்னரே அந்த வளாகம் அரபி-உருது மதரஸா நடந்துகொண்டிருந்த ஒரு கல்விக்கூடமாக இருந்தது.
உபியை சேர்ந்த பிரபல மஹ்ருல் உலூம் பாடசாலையை சேர்ந்த அரபு- பெர்சியன்- உருது இவை மூன்று மொழிகளும் அறிந்த மிகச்சிறந்த ஆசிரியர்களான மௌலானாக்கள் தருவிக்கப்பட்டு, நவாப் வாரிசுகளுக்கு பாடம் எடுப்பார்கள்.
1849ம் ஆண்டு ஆற்காடு நவாப் ஆஸம் ஜா மற்றும் அவரது மனைவி உம்தா பேகம் அவர்களின் நினைவால் அவரது மகன் நவாப் குலாம் கௌஸ் கான் அவர்களால் மதரஸா’ஏ’ஆஸம் கட்டப்பட்டது. இங்கு குலாம் கௌஸ் கானின் மனைவி கைருன்னிஸா பேகம் வாழ்ந்துவந்தார். அப்போது அவ்விடம் உம்தாபாக் என அழைக்கப்பட்டது.
உம்தா தோட்டம் அல்லது உம்தா பூங்கா என முதலில் பெயருடையதாக இருந்த அந்த பிரம்மாண்டமான கட்டிட வளாகம் பின்னாளில் மதரஸா’ஏ’ஆஸம் என்றானது.
முதன்முதலில் நவாப் வீட்டு பிள்ளைகளுக்காக அந்த மதரஸா இயங்கி வந்தது.
நவாபின் வாரிசுகள் உயர் கல்வி கற்பதற்காக கொல்கத்தாவிலுள்ள இந்தியாவின் முதல் மதரஸாவான (1781) பைத்தாகான மதரஸாவிற்குத்தான் போவார்கள். அத்தனை தூர பிரயாணம் அதற்கு பின் அவர்களுக்கு அங்கு சொகுசு வசதிகள் என மிக கடினமான சூழ்நிலைகளை தவிர்க்க 1855ல் குலாம் கௌஸ் கான் அவர்களின் மரணத்திற்கு பிறகு அவரது இரண்டாவது மனைவி அஸூமுன்னிஸா பேகம் அவர்கள் தான் முதன்முதலில் இதனை கல்வி கற்கும் பாடசாலையாக மாற்றினார் பிறகு சில ஆண்டுகளில் அனைவருக்குமான பொது பாடசாலையாக மாற்றினார். முஸ்லிம்கள் மட்டுமன்றி அனைத்து தரப்பு மக்களும் இங்கே கல்வி பயின்றார்கள்.
தமிழகத்தில் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தவர்கள் நிச்சயமாக மதரஸா’ஏ’ஆஸம் எனும் பிரம்மாண்டமான கல்விக்கூடத்தின் முன்னாள் மாணவராக இருப்பார்.
வடமாநிலத்தில் உள்ள மதரஸா கல்வி கூடங்களைவிட சென்னையில் இருந்த மதரஸா’ஏ’ஆஸம் பள்ளிக்கூடத்தில் கூடுதலாக ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, அரபு, பெர்சியன், உருது மற்றும் பிரெஞ்சு மொழிகள் கற்றுத்தரப்பட்டன, விஞ்ஞான ஆய்வு கூடங்களும் நூலகமும் கொண்ட நவீனகால கல்விச்சாலைகளை போல மிக பிரபலமாக விளங்கிய மதரஸா’ஏ’ஆஸம் கல்விச்சாலையை பார்வையிட வந்தவர்கள் மற்றும் மதராஸபட்டிணத்திற்கு சுற்றுலா வரும் வடநாட்டு நவாபுகளுக்கு இந்த இடம் தான் சொகுசு பங்களாவாக இருந்துள்ளது.
தென்னாட்டில் இருந்து வடக்கிற்கு கல்வி பயில போனது போக வடக்கிலிருந்து மதராஸிற்கு கல்வி பயில வந்தனர் வடநாட்டு நிஸாம் மற்றும் நவாப் வாரிசுகள். இதனால் இளவரசர்கள் கல்லூரி என அழைக்கப்பட்டது மதரஸா’ஏ’ஆஸம்.
இந்தியாவின் கல்வித்தந்தையும் அலிகார் பல்கலையின் நிறுவனருமான சர் சையது அகமது கான், ஐதராபாத் நிஸாம் மிர் மஹபூப் அலிகான் பஹதூர் ஆகியோர் மதரஸா’ஏ’ஆஸம் கல்விச்சாலைக்கு வருகை தந்தவர்களில் முக்கியமானவர் ஆவர்.
மதரஸா’ஏ’ஆஸம் கட்டிடக்கலை டானிஷ் மற்றும் அரபு கட்டடக்கலையை ஒத்ததாக அமைந்திருந்தது.
ஐதராபாதிலுள்ள ஃபல்குநமா அரண்மனையை நினைவுபடுத்தும் முன்புற தோற்றமும் இருபக்க வளைவு படிகட்டுகளும் அந்த கல்விச்சாலைக்கு பிரம்மாண்டமான தோற்றத்தை கொடுத்தது. 3,000 மாணவர்கள் ஒரே இடத்தில் படிக்க கூடிய பரந்துவிரிந்த அந்த வளாகத்தில் பின்னாளில் பெண்களுக்கான தனியான கல்விக்கூடம் தொடங்கப்பட்டது.
நவாப்ராணி அஸீமுன்னிஸா பேகம் அவர்களின் மரணத்திற்கு பிறகு கி.பி.1895ல் நவாபின் துபாஷாக இருந்த கோலா சிங்கண்ண செட்டி என்பவரால் அர்மேனிய வியாபாரியும் கோடீஸ்வரருமான எட்வர்ட் சாமுவேல் மூரத் என்பவருக்கு விற்கப்பட்டுவிட்டது.
வளாகம் நவாபுகளின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் பிரதான கட்டிடமான மதரஸா’ஏ’ஆஸம் மட்டும் மீண்டும் குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரியான லோத் கிருஷ்ணதாஸ் பாலமுகுந்தா என்பவரிடம் அவர் வசம் போனது.
பிறகு 1901ல் மதராஸில் ஆல் இந்தியா முஸ்லிம்ஸ் எஜுகேஷனல் கான்பிரன்ஸ் நடத்தப்பட்டது. அப்போது அந்த மதரஸா’ஏ’ஆஸம் கட்டிடத்தை முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சி மேம்பட மீண்டும் நவாப்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை ஏற்ற குஜராத் வைர வியாபாரி லோத் கிருஷ்ணதாஸ் மனமுவந்து அந்த கட்டிடத்தை அரசு நிர்ணயித்த விலையை விட குறைச்சலான மதிப்பிற்கே நவாப்களிடம் பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்தார். அப்போது 1909ல் மீண்டும் உம்தாபாக் தனது பழைய அந்தஸ்த்தை பெற்று அங்கு ஒரு பள்ளிவாசலும் கட்டப்பட்டது.
பேகம் அஸீமுன்னிஸா அவர்களின் திவானாக இருந்த பைரூஸ் ஹுசைன் கான் என்பவரது தலைமையில் மீண்டும் அந்த பிரம்மாண்டமான முஸ்லிம் பள்ளிக்கூடம் இயங்க தொடங்கியது.
1919ல் அரசினர் முகம்மதியர் கல்லூரியும் அதே வளாகத்தில் தொடங்கப்பட்டது.
அழகிய பல டானிஷ் பாணியிலான கட்டிடங்களையுடைய மதரஸா’ஏ’ஆஸம் கல்விச்சாலைக்குள் 1934ல் கட்டப்பட்ட ஒரு காம்ப்ளக்சில் அரசினர் பெண்கள் கல்லூரி தொடங்கப்பட்டது. அது சுதந்திரத்திற்கு பிறகு கண்ணியமிகு காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி என பெயர் மாற்றப்பட்டது.
அத்தனை பெருமைகளையும் தாங்கி நின்ற அந்த கவின்மிகு மதரஸா, காலப்போக்கில் அதன் அழகினை இழக்க ஆரம்பித்தது, இந்திய அரசின் ஜமீன் ஒழிப்பு முறை மற்றும் சமஸ்த்தான நவாபுகளுக்கான மானியங்கள் குறைக்கப்பட்ட பிறகு போதுமான பராமரிப்பின்றி கைவிடப்பட்டது.
2017ல் முழுவதுமாக இடிந்துவிழுந்தது வரை அந்த வளாகத்தில் 200 மாணவர்கள் வரை படித்துக்கொண்டு தான் இருந்தனர்.
மேதகு இந்து – முஸ்லிம் – கிறுஸ்தவ ஆசிரியர்கள் பலரால் பாடம் போதிக்கப்பட்ட அந்த பள்ளிக்கூடத்தில் படிப்பதற்கும் ஆளில்லை பாடம் போதிப்பதற்கும் ஆளில்லை.
மதரஸா’ஏ’ஆஸம் எனும் சொல் தான் சென்னை நகரின் புராதன பெயரான மதராஸ் என்பதற்கு அடிப்படை என நம்மில் பலருக்கு தெரிவதில்லை.
மதரஸா’ஏ’ஆஸம் பள்ளிக்கு பிறகு இஸ்லாமிய வழி கல்வியும் உலக கல்வியும் ஒருசேர கற்பிக்கும் உயர்தர பள்ளியாக அன்ஜுமன்’ஏ’ஹிமாயத் ட்ரஸ்ட் சார்பாக திநகரில் பரந்துவிரிந்த வளாகத்தினுள் நடைபெறும் அல்ஹிரா மாடல் பள்ளி (சிபிஎஸ்இ) மற்றும் அதனுள் இருக்கும் யதீம் குழந்தைகளுக்கான ட்ரஸ்ட் பள்ளியும், அன்ஜுமன் பள்ளிவாசலும் மதரஸா’ஏ’ஆஸம் தகுதிக்கும் தரத்திற்கும் ஒத்த அளவில் செயல்பட்டு வருகிறது. ஆற்காடு நவாப் முஹம்மது அலிகான், அல்ஹிரா பள்ளிக்கு ஒரு ட்ரஸ்ட்டி ஆவார்.
மதரஸா’ஏ’ஆஸம் பள்ளிக்கூடத்திற்கு 1980 வரையிலும் நல்ல மதிப்பும் மரியாதையும் இருந்து வந்தது. அது அமைந்திருக்கும் அதே மவுண்ட் ரோடு பகுதியில் தாஹிர் சாஹிப் தெருவில் இருக்கும் அரசினர் உருது ஆசிரியர்கள் ட்ரைனிங் பள்ளியும் மதரஸா’ஏ’ஆஸம் பள்ளியின் ஒரே காலகட்டத்தில் கட்டப்பட்டது தான்.
வாலாஜா பள்ளிவாசலின் பின்புற வாசலில் இருந்து எதிர்திசையில் இருக்கும் அந்த இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் அழகிய ஆங்கிலேய கட்டடக்கலையில் கட்டப்பட்ட கட்டிடங்கள் அந்த வளாகத்திற்கு அழகு சேர்க்கும்.
இப்போது அந்த ட்ரைனிங் பள்ளி வளாகத்தில் இல்ம் ட்ரஸ்ட் சார்பாக ஐமேக்ஸ் பள்ளியின் நிர்வாகத்தில் 1-12 வகுப்புகளுடைய பள்ளிக்கூடம் நடைபெற்று வருகிறது.
மதரஸா’ஏ’ஆஸம் வளாகத்தை கையகப்படுத்திய தமிழக அரசு, அந்த 15 ஏக்கர் எஸ்டேட்டில் வேறு வேறு கட்டிடங்கள் கட்டப்படும் என தெரிவித்திருந்தது. ஆனால் நவாப் முகமது அலிகான் அவர்களின் முயற்சியால் அந்த திட்டம் கைவிடப்பட்டு, முஸ்லிம்களின் கல்வி உயர்வுக்காக மீண்டும் ஒரு கல்விச்சாலை நிறுவ வேண்டுகோள் வைக்கப்பட்டதன் பெயரில் அரசு அந்த திட்டங்களை கைவிட்டது.
ஈஸ்ட் இந்திய கம்பெனியை நடத்திய வெள்ளை முதலாளிகள் வந்து தங்கி ஓய்வெடுத்த இந்த எஸ்டேட் இப்போதும் அந்த எஸ்டேட் முழுக்க மாணவர்களால் நிரம்பி வழிகிறது.
காரணம் சுற்றுவட்டத்தின் அப்படியொரு பிரம்மாண்டமான இடம் இல்லை என்பதால் விளையாட்டு மைதானமாக பயன்பட்டு வருகிறது.. PEACE Exhibition போன்ற பெரிய அமைப்புகள் நடத்தும் கண்காட்சிகளுக்கு தோதான இடமாக பயன்பட்டு வருகிறது.
170 வருடகால வரலாற்றுச்சுவடுகளை ஏந்தி மக்களின் மனதில் கம்பீரமாய் எழுந்து நிற்கும் மதரஸா’ஏ’ஆஸம் எஸ்டேட் வளாகத்திற்குள் சிறிய வயதில் விளையாடித்திருந்ததை எண்ணி இன்று மகிழ்கிறோம்.
– Nasrath S Rosy
வரலாற்று சிறப்பு மிக்க இப்பள்ளிக்கூடம் மீண்டும் சரியான பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
மாணவர்களின் சேர்க்கை கணிசமான அளவு உயர்ந்து இருக்கிறது.
சென்ற வருடம் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 96% பெற்று சாதனை படைத்தது.
ஹாக்கியில் பல இந்திய வீரர்களை உருவாக்கிய இப்பள்ளி இன்றும் சிறப்பான விளையாட்டு பயிற்சிகளை அளித்து கொண்டிருக்கிறது.
நம் மாணவர்களை சிறப்பு மிக்க இப்பள்ளியில் சேர்த்து பயன்பெருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் விவரங்களுக்கு :
அமானுல்லாஹ் கான்,
துணைத் தலைவர்,
பள்ளி நிர்வாக குழு.
8939417786