என் அடியார்களே!
நான் நேர்வழி காட்டியவர்களைத் தவிர நீங்கள் யாவரும் வழி தவறியவர்களே. எனவே என்னிடம் நேர்வழியைத் தேடுங்கள். உங்களுக்கு நான் நேர்வழி (ஹிதாயத்) காட்டுகிறேன்.
என் அடியார்களே!
நான் எவருக்கு உணவளித்தேனோ அவரைத்தவிர நீங்கள் யாவரும் பசித்தவர்களே. என்னிடம் உணவு தேடுங்கள், நான் உங்களுக்கு உணவளிக்கிறேன்.
என் அடியார்களே!
நான் எவருக்கு ஆடையணிவித்தேனோ அவரைத்தவிர நீங்கள் யாவரும் ஆடையற்றவர்கள். என்னிடம் ஆடையை வேண்டுங்கள், உங்களுக்கு நான் ஆடை அளிக்கிறேன்.
என் அடியார்களே!
இரவு பகலாக நீங்கள் பாவம் செய்கிறீர்கள். சகல பாவங்களையும் மன்னிப்பவன் நான். என்னிடமே நீங்கள் மன்னிப்புத் தேடுங்கள், உங்கள் பாவங்களை நான் மன்னித்து விடுகிறேன்.
என் அடியார்களே!
நீங்கள் எனக்கு தீங்கு விளைவிக்க நாடினாலும் ஒருபோதும் தீங்கு விளைவிக்க முடியாது. நீங்கள் எனக்கு நன்மை செய்ய நாடினாலும் ஒருபோதும் எனக்கு நீங்கள் நன்மை செய்ய முடியாது.
என் அடியார்களே!
உங்களுக்கு முன்சென்றவர்கள், பின்வர இருப்பவர்கள், மனிதர்கள் இன்னும் ஜின்கள் யாவரும் உங்களில் மிகுந்த இறையச்சம் உடைய ஒரு மனிதரைப்போன்ற உள்ளம் உடையவர் போல்; ஆகிவிட்டாலும் அது எனது ஆட்சியில் எந்த ஒன்றையும் அதிகரிக்கச் செய்ய முடியாது.
என் அடியார்களே!
உங்களில் முன்சென்றவர்கள், பின்வர இருப்பவர்கள் மனிதர்கள் இன்னும் ஜின்கள் யாவரும் உங்களில் பெரும் பாவியைப் போன்ற உள்ளம் உடையவராக மாறிவிட்டாலும் அது எனது ஆட்சியில் எந்த குறையையும் ஏற்படுத்திவிடாது.
என் அடியார்களே!
உங்களது முன்னோர், பின்னோர், மனிதர்கள், ஜின்கள் அனைவரும் ஒரு மைதானத்தில் ஒன்று கூடித் தத்தமது தேவைகளை என்னிடம் கேட்க, அவர்களின் ஒவ்வொருவரின் தேவையையும் நான் நிறைவேற்றி வைப்பதால், கடலில் ஊசியை முக்கியெடுத்தால் கடல் நீர் எந்த அளவு குறையுமோ அவ்வளவுதான் என் கருவூலத்திலிருந்து குறைவு ஏற்படும். (கடல் நீரில் ஊசியளவு குறைவு ஏற்படுவது பெரிய குறைவே அல்ல, அதுபோலவே அல்லாஹ் தன் கருவூலத்திலிருந்து எல்லோருக்கும் வழங்குவதால் எந்தக் குறையும் உண்டாகாது.இதற்கு ஆதாரமாக கீழே இடம்பெற்றுள்ள புகாரி ஷரீபில் இடம்பெற்றுள்ள ஒரு ஹதீஸே ஆதாரமாகும்)
என் அடியார்களே!
உங்களுடைய அமல்களையே உங்களுக்காக நான் பாதுகாத்து வருகிறேன். பிறகு அதனுடைய முழுமையான பிரதிபலனையும் உங்களுக்குத் தருவேன். எந்த மனிதர் (அல்லாஹ்வின் உதவியால்) நன்மை செய்வாரோ, அவர் அல்லாஹ்வைப் புகழட்டும். எவர் பாவம் செய்கிறாரோ அவர் அதற்காக தன்னையே பழித்துக் கொள்ளட்டும். (ஏனெனில் அவர் மனம் அவரைத் தூண்டியதால் தான் பாவம் நிகழ்ந்தது)’. (நூல்: முஸ்லிம்)
அல்லாஹ்வின் கருவூலம் எப்போதுமே குறையாது :
‘நீங்கள் செலவு செய்யுங்கள், உங்களுக்கு நான் தருகிறேன்’ என்று அல்லாஹ் கூறுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிவிட்டு மேலும் கூறினார்கள், ‘அல்லாஹ்வின் திருக்கரம் (அவனது கருவூலம்) நிரம்பியள்ளது. இரவு பகலாக தொடர்ந்து செலவு செய்வது அக்கருவூலத்தை குறைய வைக்க முடியாது. அவன் வானம், பூமியைப் படைத்ததிலிருந்து (அதற்கு முன்பு) அவனுடைய ‘அர்ஷ்’ (அல்லாஹ்வின் அரியாசணம்) நீரின் மேல் இருந்த காலத்திலிருந்து செலவு செய்து வருகிறான். (அவ்வாறிருந்தும்) அவனது பொக்கிஷத்தில் ஏதும் குறையவில்லை என்பதை நீங்கள் அறிய மாட்டீர்களா?’ மக்களைத் தாழ்த்த, உயர்த்தக்கூடிய நீதி என்னும் துலாக்கோல் (தராசு) அவனிடமே உள்ளது’ என்றார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)