நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (25)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இருபத்தி ஐந்தாவது சொற்பொழிவு
அறிஞர், ஆர்.பி.எம் கனி ரஹ்மதுல்லாஹி அலைஹி
ஹிஜ்ரி ஒன்பதில் சிரியாவிலுள்ள தபூக் யுத்தக்களத்தில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிகழ்த்திய விலைமதிப்பில்லாத சொற்பொழிவு இது:
(அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனுக்கு நன்றி தெரிவித்த பின்னர்) “அல்லாஹ்வின் (வேதமான) கிதாப்(அல்குர்ஆன்)தான் முழுக்க முழுக்க சத்தியமானது என்று உறுதியாகக் கூறலாம்,
பயபக்தி(தக்வா)தான் மிக நம்பிக்கைக்குரிய பிடிக்கயிறாயிருக்கும்.
மார்க்கத்தில் உயர்வானது(சிறப்பானது) பிதா இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மார்க்கம்தான்.
முன்மாதிரிகளில் அழகியது, உன்னதமானது முஹம்மதின் முன்மாதிரிதான்.
பேச்சில் மகத்தானது அல்லாஹ்வை தியானிப்பது (திக்ரு செய்வது)தான்.
விருத்தாக்கங்களில்(சொற்களில்) மகா நேர்த்தியானது அல்குர்ஆன் தான்.
விவரங்களில் சிறந்தது உறுதியுடன் முடிவுகட்டப்படுவது தான்.
மார்க்கத்தில் மிக மோசமான காரியம் அதில் புதுமை (பித்அத்)ஐப் புகுத்துவதுதான்.
பாதையில் உத்தமமானது நபிமார்களின் பாதையே.
மரணத்தில் மகத்தானது வீரத்தியாகிகளின்(ஷுஹதாக்களின்) மரணம்தான்.
கண்மூடித்தனத்தில் மாபெரும் கண்மூடித்தனம் வழிகாட்டப்பட்டபின் வழி பிசகிச் செல்வதுதான்.
செயல்களில் சிறந்தது நற்பயனுடையதுதான்.
சிறந்த வழிகாட்டுதல் என்பது அனுஷ்டானத்தில் கடைப்பிடிக்கப்படுவதுதான்.
மகா மோசமான அந்தகத்தனம் இதயத்தின் அந்தகத்தனம் தான்.
மேலோங்கிய கை தாழ்ந்திருக்கும் கையைவிட மேலானதாகும்.
மன்னிப்புக்கேட்பதில் கடையானது (ஒருவன் தன்னுடைய) மரணத்தருவாயில் கேட்கும் மன்னிப்புத்தான்.
பச்சாதாபத்தில் மோசமானது இறுதி நாளில் உண்டாகும் பச்சாதமே.
சிலருக்கு ஜும்ஆத் தொழுகைக்குக்கூட உரிய நேரத்தில் – காலதாமதமின்றி வர முடியவில்லை. அவர்களில் சிலர் அல்லாஹ்வை அலட்சியமாகவே தியானிக்கின்றனர்.
மாபெரும் பாவங்களின் ஒரு மூலஸ்தானம் பொய்யான நாவாகும்.
செல்வத்தில் சிறந்தது ஆத்மாவின் செல்வம் தான்.
வருங்காலத்துக்கான சிறந்த பாதுகாவல் பயபக்தி(தக்வா) தான்.
ஞானங்களின் மூலதனம் அல்லாஹ்வுக்கு அஞ்சுவது தான்.
இதயங்களில் உறுதியான நம்பிக்கை(யகீன்) கொண்டிருப்பது மரியாதைக்குறிய சிறந்த விஷயமாகும்.
இதயத்துல் குஃபெனும் நம்பிக்கையின்மையுடன் இருப்பது ஒதுக்கப்பட வேண்டியதாகும்.
ஒப்பாரி வைத்து அழுவது ஜாஹிலியத்தான வழிதவறிய செயலாகும்.
காட்டிக்கொடுப்பது நரக நெருப்பின் சூட்டுக்குக் காரணமாகும்.
குடிவெறி நரகநெருப்பு தகிப்பதற்கு காரணமாகும்.
(கீழ்த்தரமான) கவிதை இப்லீஸிடமிருந்து வருவதாகும்.
மதுவே குற்றங்களின் நடுநாயகமாகும்.
உணவில் மகா கெட்டது அனாதையின் சொத்தை (அபகரித்து) உண்பது.
பிறரால் உபதேசிக்கப்படுபவன் பாக்கியவான்.
கீழ்மகன் தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே கீழ்மகனாக நடக்கத்தொடங்கி விட்டவன் தான்.
நீங்கள் அனைவருமே நான்கு முழம் இடத்துள் (கபுருள்) சென்றடைய வேண்டியவர்கள் தான். இதன் பலாபலன்கள் மறுமையில் வெளியாகும்.
செயலின் சுழியாணி அதன் நோக்கம் தான்.
கனவில் மிகவும் கெட்டது பொய்யான கனவே.
வரவேண்டியவை யாவும் சமீபித்து விட்டன.
முஃமினைத் திட்டுவது வரம்பு மீறுவதாகும்; அவனோடு சண்டையிடுவதோ குஃப்ரிய்யத் – அல்லாஹ்வை நிராகரிப்பதே தான்.
ஒரு முஃமினைப் பற்றி புறம்பேசுவது அல்லாஹ்வுக்கு அடிபணிய மறுப்பதாகும்.
ஒரு முஃமினின் சொத்தை ஆக்கிரமிக்க விடாமல் அவன் உயிரைப் போல் அதைப் பாதுகாப்பது அவசியம்.
அல்லாஹ்வின் பெயரால் பொய்ச் சத்தியம் செய்பவன் அல்லாஹ்வை பொய்யனாக்கியவனாவன்.
பிறரை மன்னிப்பவனை அல்லாஹ் மன்னிக்கிறான். மற்றவர்களின் பாவங்களைத் துடைப்பவனின் பாவங்களை அல்லாஹ் துடைத்து விடுகிறான்.
கோபத்தை அடக்கிக் கொண்டவனுக்கு அல்லாஹ் சன்மானமளிக்கிறான்.
கஷ்டத்திற்கிடையே முயற்சி எடுப்பவனுக்கு அல்லாஹ் நற்கூலி தருகிறான்.
பேரும் புகழும் பெறவேண்டும் என்று ஆசைப்படுபவனை அல்லாஹ் அவமானப்படுத்தி விடுகிறான்.
பொறுமையுடையவனுக்கு அல்லாஹ் இருமடங்கு நன்கொடையளிக்கிறான். தனக்கு கீழ்படியாதவனை அல்லாஹ் தண்டிக்கிறான்.
அல்லாஹ்விடம் நான் மன்னிப்புக் கேட்கிறேன்.
அல்லாஹ்விடம் நான் மன்னிப்புக் கேட்கிறேன்.
அல்லாஹ்விடம் நான் மன்னிப்புக் கேட்கிறேன்.
(அஸ்தஃக்ஃபிருல்லாஹ், அஸ்தஃக்ஃபிருல்லாஹ், அஸ்தஃக்ஃபிருல்லாஹ்)
(ஜாதுல் மஆத்)
இன்ஷா அல்லாஹ், சொற்பொழிவு தொடரும்