நாமும் வாழ்த்துவோம்! “பாரக்கல்லாஹு லக்குமா….”
இவர் வழக்கறிஞர் இஷ்ரத் ஜஹான். டெல்லி ஜகத்புரியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பெண் கவுன்சிலரான இவர், இரண்டு நாட்களுக்கு முன்புதான் திகார் சிறையிலிருந்து 10 நாட்கள் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி, டெல்லி கஜூரி காஸில், ஷாஹின்பாக் பாணியில் அமைதியாக நடைபெற்ற CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்ட மேடையில் இருந்து வெளியேற மறுத்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சமூக செயற்பாட்டாளரான இஷ்ரத், “வடகிழக்கு – டெல்லி கலவரத்திற்கு சதித்திட்டம் தீட்டியவர்” என்ற குற்றச்சாட்டின் பேரில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்யப்பட்டார். அவர் மீது மேலும் பல பிரிவுகளின் கீழ் பொய்வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
147 (கலவரம்), 148 (கொடிய ஆயுதங்களைப் பயன்படுத்துதல்), 149 (சட்டவிரோத அணிதிரட்டல்), 186 (அரசு அதிகாரிகளைத் செயல்படவிடாமல் தடுத்தல்) 353 (அதிகாரிகள் மீதான தாக்குதல்) ஆகிய குற்றச்சாட்டுகள் பேரில் FIR சுமத்தப்பட்டுள்ளன. மேலும், 307 (கொலை முயற்சி), 109 (கொலை முயற்சி), 332, ஐபிசி 34 என்று,
ஆயுததடைச் சட்டத்தின் மிக முக்கிய பிரிவுகள் உட்பட, குடியுரிமை போராட்டக்காரர்களை அடக்கி ஒடுக்குவது என்ற தில்லி காவல்துறையின் ரகசிய திட்டத்தின் அடிப்படையில் இந்த “பொய்வழக்குகள்” அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உலக அளவில் கொரோன பாதித்த நாடுகளின் பட்டியலில், நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ள இந்தியாவில், வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத மோடியின் மதவாத அரசு, திரைமறைவில், CAA எதிர்ப்பு போராட்டக்காரர்களை தேடித்தேடி கைது செய்து வருவது அக்கிரமத்தின் உச்சம்.
இஷ்ரத் ஜஹானுக்கு 2018 இல் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஈத் பெருநாளுக்குப் பிறகு 2020, ஜூன் 12 ஆம் தேதி திருமணம் நாள் தேதி குறிக்கப்பட்டிருந்தது.
திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்துவருகையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், திருமணத்திற்காக, 30 நாட்கள் ஜாமீன் கோரி டில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தின் கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்தர் ராணா, ஜூன் 10 முதல் 19 வரை – 10 நாட்கள் மட்டும் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்ட 75 நாட்களுக்குப் பிறகு இரண்டு நாட்களுக்கு முன்பு திஹார் சிறையிலிருந்து வெளியேறி வீட்டிற்கு வந்த இஷ்ரத், ஜூன் 19 வரை ஜாமீனில் வெளியே இருப்பார்.
இஷ்ரத்தின் நிக்காஹ் எங்கு நடைபெறும் அவரது வருங்கால கணவர் யார் என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. எனினும், மணமகன், புதுதில்லி ஜாமியா நகரில் வசிக்கும் கட்டுமான தொழிலதிபர் என்பது தெரியவந்துள்ளது.
நேற்று, குடும்பத்தார் / உறவினர் முன்னிலையில் – அவரது திருமணம் எளியமுறையில் இனிதே நடைபெற்றது.
மணமக்கள் இருவரும் எல்லா வளமும் நலமும் பெற்று இனிதே வாழ நாமும் வாழ்த்துவோம்.
எல்லாம் வல்ல இறைவன் அவரது சிறைவாழ்வை முடிவுக்குக் கொண்டுவந்து, மணவாழ்வை சிறப்பாக்கி வைப்பானாக! ஆமீன்!
بارك الله لهما وبارك عليهما وجمع بينهما