Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

நபிவழி மருத்துவத்தில் எண்ணெய்கள்!

Posted on June 6, 2020 by admin

நபிவழி மருத்துவத்தில் எண்ணெய்கள்!

முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி Ph.D.
(இமாம் மஸ்ஜித் ஜாமிஉல் அன்வார், மணலி, சென்னை)

அகில உலகமனைத்திற்கும் இறுதித் தூதராம் முஹம்மது  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆன்மிக வழிகாட்டி மட்டுமல்ல, மனிதனுக்குத் தேவையான அனைத்தையும் அள்ளி வழங்கியுள்ளார்கள் என்பதை, அவர்களின் பொய்யாமொழிகளைப் படிக்கின்றபோது புலப்படும்.

அல்லாஹ்வின் தூதர்   ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்   அவர்கள் கூறிய பொன்மொழிகள் இன்று பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. அந்த ஆய்வுகள் மூலம் கண்டறிந்த உண்மைகளை ஆய்வாளர்கள் உலக மக்களுக்கு எடுத்துரைக்கின்றார்கள்.

இதற்கான காரணம் ஒன்று உண்டு. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதைப் பேசினாலும் அது அவர்களின் சொந்தக் கருத்தல்ல. அல்லாஹ் அவர்கள் மூலம் மக்களுக்குத் தேவையான கருத்துகளை வழங்கினான். எனவேதான் அவை யாவும் மனித சமுதாயத்திற்குப் பயனுள்ளவையாகவும் எக்காலத்திற்கும் பொருந்துபவையாகவும் உள்ளன. அதற்கான சான்றைத் திருக்குர்ஆனில் காணலாம்.

“அவர் தம் விருப்பப்படி எதனையும் கூறுவதில்லை. இது அவருக்கு வஹீமூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை” (53 : 3-4) என்று அல்லாஹ் கூறியுள்ளான்.

எண்ணெய்

அனஸ் பின் மாலிக்  ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளதாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தலையில் மிகுதியாக எண்ணெய் தடவுவதையும் தம் தாடியைச் சீவுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் முகத்தை மறைத்தவர்களாக இருந்து வந்தார்கள். அவர்களுடைய ஆடைகள் எண்ணெய் விற்பனை செய்பவரின் ஆடைகளைப் போன்று இருக்கும். (நூல்: ஷமாயில் திர்மிதீ: 33)

பொதுவாக எண்ணெய் உடலின் நுண்துளைகளை அடைத்துவிடுகிறது. அதிலிருந்து வெளியேறுகின்ற கழிவுகளைத் தடுத்துவிடுகிறது. வெந்நீரில் குளித்த பிறகு அதைப் பயன்படுத்தினால் அது உடலை அழகாக்கி, அதை ஈரப்பதத்தில் வைத்துக்கொள்ளும். அதைத் தலைமுடியில் தேய்த்தால் அதை அழகாக்கி, உரோமங்கள் நீண்டு வளர உதவும். தட்டம்மை, புட்டாளம்மை போன்ற நோய்கள் குணமாகும். உடலுக்கு ஏற்படக்கூடிய பல்வேறு ஆபத்துகளிலிருந்து காக்கும்.

இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் தலையில் எண்ணெய் தேய்த்துக்கொள்வது ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் உடலின் வெப்பநிலையைச் சீராக்கிக்கொள்வதற்குமான காரணங்களுள் ஒன்றாகும். இது வெப்பமண்டலத்தில் வாழ்பவர்களுக்கு அவசியமான ஒன்றாகும்.

அதேநேரத்தில் குளிர்ப் பிரதேசங்களில் வாழ்பவர்கள் எண்ணெய் தேய்க்க வேண்டிய அவசியமில்லை. பொதுவாக மிகப் பயனுள்ள எண்ணெய்கள் என்பவை ஸைத்தூன் (ஒலிவ) எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கருஞ்சீரக எண்ணெய் முதலானவை ஆகும்.

ஸைத்தூன் எண்ணெய்

பொதுவாக மிகப் பயனுள்ள எண்ணெய்களுள் ஒன்று ஸைத்தூன் எண்ணெய் ஆகும். ஸைத்தூன் எண்ணெய்யை ஆங்கிலத்தில் ஆலிவ் ஆயில் என்றும் தமிழில் ஒலிவ (இடலை) எண்ணெய் என்றும் கூறுவர். தமிழர்கள் இந்த எண்ணெய்யைச் சங்க காலத்தில் இருந்தே பயன்படுத்தி வந்துள்ளனர். அரபியர்கள் இந்த எண்ணெய்யை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வருகைக்கு முன்பிருந்தே பயன்படுத்தி வந்துள்ளனர்.

அதனால்தான் அல்லாஹ் ஸைத்தூன் குறித்து அத்தீன் எனும் 95ஆம் அத்தியாயத்தில் கூறியுள்ளான். அத்தோடு இந்த எண்ணெய் குறித்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளதோடு, அதை அவர்கள் மிகுதியாகப் பயன்படுத்தியுமுள்ளார்கள்.

ஆலிவ் பழத்திலிருந்து எடுக்கப்படும் இந்த எண்ணெய் பல்வேறு மருத்துவப் பயன்களைக் கொண்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரொட்டி சாப்பிடும்போது இந்த எண்ணெய்யைத் தொட்டுச் சாப்பிடும் பழக்கமுடையவர்களாக இருந்தார்கள்.

ஆகவே இதை அவர்கள் நெய்யைப் போன்று பயன்படுத்தியுள்ளதை அறியமுடிகிறது. உணவுப் பொருளாகவும் மருந்தாகவும் இது பயன்படுகிறது. அந்த வகையில் இதிலுள்ள வைட்டமின் இ, ஏ ஆகிய சத்துக்கள் முகத்தின் அழகைப் பாதுகாத்து, மேம்படுத்த உதவுகின்றன.

முகத்தில் ஏற்படும் பரு, வடு, தழும்புகள் போன்றவற்றை முற்றிலுமாக நீக்க இந்த எண்ணெய் பயன்படுகிறது.

ஆலிவ் எண்ணெய்யில் உள்ள வைட்டமின் இ சத்து, தோலிலுள்ள செல்கள் சேதமடையாமல் பாதுகாத்து, சருமத்தை மிளிரச் செய்யும். ஆலிவ் எண்ணெய்யைச் சருமத்தில் தடவி வந்தால் சருமம் பொலிவான, மிளிரும் தோற்றத்தைப் பெறுவதைக் காணலாம். அதனால்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதைத் தம் மேனியிலும் தலையிலும் தடவுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். இவ்வாறு சருமத்தை மிளிரச் செய்து, வயதாவதைத் தடுத்து, இளமைத் தோற்றத்தைப் பெற முக்கிய உதவி புரிவது இந்த எண்ணெய்யிலுள்ள ஸ்குவாலின் அமிலம் ஆகும்.

ஆலிவ் எண்ணெய் மலச்சிக்கலை நீக்க உதவுகிறது. இரைப்பை, குடல், பெருங்குடல் போன்ற உறுப்புகளுக்கு இது நன்மையளிக்கிறது. இதன் உறுதித்தன்மையும் அமைப்பும் உணவுப் பொருள்களைக் குடல் வழியாக, மென்மையாக எடுத்துச் செல்வதன்மூலம் செரிமானச் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இந்த எண்ணெய்யைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலை முற்றிலும் தடுத்து அதிலிருந்து முழுமையாக விடுபடலாம். இதில் வைட்டமின் இ, கே, இரும்புச் சத்து, ஒமேகா-3, கொழுப்பு அமிலங்கள், ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் போன்றவை நிறைந்துள்ளன. இந்த ஊட்டச் சத்துகள் செரிமான இயக்கம் உட்பட, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

ஆலிவ் எண்ணெய் இரத்தச் சோகையை நீக்குகிறது. இதன் செரிமான சக்தி இதர எண்ணெய்களைப் போலவே இருக்கும். இந்த எண்ணெய்யில் மோனோ அன்சாச்சுரேட்டட் (Mono unsaturated fat), கொழுப்பு அமிலங்கள் 70 சதவிகிதம் இருக்கும். இது இதயத்துக்கு மிகவும் நல்லது. இந்த மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலமானது எல்.டி.எல்.கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது. பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை அனைவரும் ஆலிவ் எண்ணெய்யில் செய்த உணவுகளைச் சாப்பிடலாம்.

ஆலிவ் எண்ணெய் பலவிதமான பயன்களைத் தருகிறது என்பதற்காக, தொடர்ந்து இதையே பயன்படுத்தக்கூடாது. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், அரிசித் தவிட்டில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் எனப் பல வகை எண்ணெய்களை மாற்றி மாற்றிப் பயன்படுத்துவதே சிறந்தது. ஏனெனில் ஒவ்வோர் எண்ணெய்யிலும் ஒவ்வொரு விதமான சத்தும் ஆற்றலும் உண்டு. நம் உடலுக்கு எல்லா வகையான சத்துகளும் ஆற்றல்களும் கிடைக்க வேண்டுமல்லவா?

தொப்புளில் எண்ணெய்

நம் உடலில் ஏற்படும் அனைத்து நோய்களையும் குணமாக்கப் பல்வேறு மருத்துவ இரகசியங்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமான இரகசியம்தான் தொப்புளில் எண்ணெய் தேய்ப்பதாகும். நம் தொப்புள் என்பது நம்மைப் படைத்த இறைவன் நமக்குக் கொடுத்துள்ள அற்புதமான பரிசு. அறிவியல் கூற்றுப்படி, கருவுற்றவுடன் முதல் அணு உருவாகும் இடம் தொப்புள்தான். தொப்புள் உருவானவுடன், அது தாயின் நஞ்சுக்கொடியுடன் தொப்புள் கொடி மூலம் இணைக்கப்படுகிறது. நமது தொப்புள் உண்மையிலேயே ஆச்சரியப்படத்தக்க ஓர் உறுப்புதான். ஒரு மனிதன் இறந்தவுடன் 3 மணி நேரத்திற்கு தொப்புள் வெதுவெதுப்பாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

காரணம் ஒரு பெண் கருவுற்றதும், பெண்ணின் தொப்புள் மூலம் குழந்தையின் தொப்புள் வழியாகக் கருவிலுள்ள குழந்தைக்கு ஊட்டச்சத்து வழங்கப்படும். முழுமையாக ஒரு கரு குழந்தையாக உருவாவதற்கு 270 நாள்கள்-அதாவது 9 மாதங்கள் ஆகின்றன. நமது உடம்பிலுள்ள அனைத்து நரம்புகளும் தொப்புளுடன் இணைவதற்கு இதுவே காரணம். தொப்புளே நமது உடம்பின் குவியப்புள்ளி. அதுவே உயிரும்கூட. தொப்புளுக்குப் பின்னால் 72000-க்கும் அதிகமான நரம்புகள் உள்ளன. நமது உடம்பில் உள்ள இரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை புவியின் இரு மடங்கு சுற்றளவிற்குச் சமம்.

இப்போதும் கிராமத்தில் குழந்தைகள் அழுதால் தொப்புளில் சிறிது எண்ணெய்த் துளி விட்டதும் அடுத்த நொடியில் குழந்தை அழுகையை நிறுத்துவது நமக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. வாயுக் கோளாறுகள் இருந்தால், சிறிது பெருங்காயத்தை நீரில் கரைத்து தொப்புளில் தடவுவது உண்டு. அப்படித் தடவுவதால் உடனடிப் பலன் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தொப்புளில் எண்ணெய் போடுவதன் மூலம் கண்கள் வறட்சி, குறைந்த கண்பார்வை, கணையம் சீரற்ற தன்மை, குதிகால் மற்றும் உதடு வெடிப்பு, முகப்பொலிவின்மை, பளபளப்பான முடியின்மை, மூட்டுவலி, நடுக்கம், உடல் சோர்வு, முழங்கால் வலி, வறண்ட சருமம் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

இரவில் படுக்கைக்குச் செல்லுமுன் மூன்று துளி சுத்தமான நெய் அல்லது தேங்காய் எண்ணெய் தொப்புளில் விட்டு ஒன்றரை அங்குலம் (இன்ச்) தொப்புளைச் சுற்றிப் பரவவிடுவதன்மூலம் கண்கள் வறட்சி நீங்கும்; பார்வைக்குறைவு சரியாகும்; தலைமுடி பளபளப்பாகும்.

தொப்புளில் ஏன் எண்ணெய் விட வேண்டும் என்று கேட்கலாம். எந்த நரம்பில் இரத்தம் வறண்டு உள்ளதோ அதனை நம் தொப்புளால் கண்டுபிடிக்க இயலும். அதனால் தொப்புள் அந்த எண்ணெய்யைக் குறிப்பிட்ட வறண்ட நரம்பிற்கு அனுப்பித் திறக்கச் செய்கிறது. இதனால்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் மேனியில் எண்ணெய்யைத் தடவும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்கள்.

கண்பார்வைக் குறைபாடு, கண் வறட்சி, உடல் சூட்டினால் உண்டாகும் பித்த வெடிப்பு, முழங்கால் மற்றும் மூட்டு வலிகள், உடல்சோர்வு, நரம்பு பாதிப்புகள் முதலான பல்வேறு நோய்களைத் தொப்புளில் எண்ணெய் தேய்ப்பதன்மூலம் குணப்படுத்தலாம். வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், எலுமிச்சை எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் முதலான ஒவ்வோர் எண்ணெய்க்கும் தனித்தனி குணமும் குறிப்பிட்ட நோய்களைச் சீராக்கும் தன்மையும் உண்டு. அதைத் தெரிந்துகொண்டு அந்தந்த எண்ணெய்யைத் தொப்புளில் தடவி நிவாரணம் பெறலாம்.

“ஒலிவ எண்ணெய்யை (ரொட்டியுடன்) சாப்பிடுங்கள். அதனை (உடலில்) தேய்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அது அருள்வளம் நிறைந்த மரத்திலிருந்து கிடைக்கின்றது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: ஷமாயில் திர்மிதீ: 158) அதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒலிவ எண்ணெய்யை ரொட்டியுடன் தொட்டுக்கொண்டு நேரடியாகச் சாப்பிட்டுள்ளார்கள். அவ்வாறு சாப்பிட வலியுறுத்தியும் உள்ளார்கள். அத்தோடு உடலில் தேய்த்துக்கொள்ளவும் கட்டளையிடுகின்றார்கள். சாப்பிடுதல், தலையிலும் உடலிலும் தேய்த்தல் ஆகிய செயல்பாடுகள் மூலம் பல்வேறு நற்பயன்களை மனிதனுக்கு அது வழங்குகிறது.

ஒலிவ மரம் மிகுந்த பயன்தரும் மரமாக இருப்பதால் ‘அருள்வளம் நிறைந்த மரம்’ என வர்ணிக்கப்பட்டுள்ளது. இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: ஒலிவ எண்ணெய் விளக்கெரிக்கப் பயன்படுகிறது. உட்கொள்ளும் குழம்பாகவும் தலையிலும் உடலிலும் தேய்த்துக்கொள்ளவும் பயன்படுகிறது. இதனால் தோல் பதப்படுத்தப்படுகிறது.

அதாவது நம்முள் பலர் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதே இல்லை. அதுபோலவே யாருமே உடலில் எண்ணெய் தேய்ப்பதில்லை. உடலிலும் தொப்புளிலும் தேய்ப்பதால் என்னென்ன பயன்கள் மனிதனுக்குக் கிடைக்கின்றன என்பதைச் சித்தர்கள் விளக்கிக் கூறியுள்ளனர்.

எனவே ஒலிவ எண்ணெய் மட்டுமின்றி, நல்லெண்ணெய், தேய்காய் எண்ணெய், கருஞ்சீரக எண்ணெய் ஆகியவற்றை நாம் தலைக்குத் தேய்க்கப் பயன்படுத்தலாம். அதனால் தலைமூலம் அந்த எண்ணெய் உடலுக்குப் பாய்ந்து உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்கிறது. கோடைக் காலங்களில்தான் மிகுதியாக எண்ணெய்யைப் பயன்படுத்த வேண்டும். குளிர் காலங்களில் மிகக் குறைவாகவே பயன்படுத்த வேண்டும். ஏனெனில் குளிர் காலங்களில் இயல்பாகவே உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

உடலில் ஏன் எண்ணெய் தேய்க்க வேண்டும் என்று சிலர் கேட்பதுண்டு. பொதுவாக நமது உடல் மென்மையாக இருக்க அதிலுள்ள எண்ணெய்ப் பசைதான் முக்கியக் காரணமாகும். கோடைக் காலங்களில் உடல் வறண்டுபோய்விடுவதால் அந்த மென்மைத்தன்மை குறைந்துவிடத் தொடங்குகிறது. நா வறட்சியும் ஏற்படுகிறது. எனவே உடலில் எண்ணெய் தேய்ப்பதால் மயிர்க்கால்கள் மூலம் எண்ணெய் உடலுக்குள் சென்று குளிர்ச்சியை ஏற்படுத்துவதோடு மேல்தோலை மென்மையாக வைத்துக்கொள்கிறது.

அக்காலத்தில் நாள்தோறும் தலைக்கு எண்ணெய் தேய்த்து வந்ததால்தான் ஆண்களுக்கு வழுக்கை ஏற்படாமல் இருந்தது. ஆனால் இன்றைய அவசர உலகத்தில் யாருக்கும் எதற்கும் நேரமில்லை. ஆண்களும் பெண்களும் அவசர கதியில் வேலைக்கு ஓடுகின்றார்கள். அதனால் பெண்கள் தம் தலைமுடியைக்கூடச் சீவிக்கொள்வதில்லை. இன்றைய இளைஞர்கள் பலருக்கு இளநரை ஏற்படுவதற்கான காரணங்களுள் ஒன்று தலைக்கு எண்ணெய் தேய்க்காததே ஆகும்.

எண்ணெய் தேய்க்காததால் தலைக்குக் கிடைக்க வேண்டிய வைட்டமின்கள், புரோட்டீன்கள் ஆகியவை கிடைக்காமல் போய்விடுகின்றன. அதனால் முடிக்கு நிறத்தை வழங்கும் நிறமியான மெலனின் குறைந்து, நரைக்கத் தொடங்குகிறது. அதேநேரத்தில் நாள்தோறும் எண்ணெய் தேய்ப்பதன்மூலம், முடிக்கு வேண்டிய சத்துகள் கிடைப்பதோடு நிறமியும் ஊட்டம் பெற்று, முடிக்கு நிறத்தை வழங்குகிறது.

தலைக்கு எண்ணெய் தேய்ப்பதன்மூலம் மற்றொரு நன்மை பொடுகு நீங்குதல் ஆகும். சிலருக்குத் தலையில் பொடுகு மிகுதியாக இருக்கும். அப்படி இருப்பதற்கான காரணம், உச்சந்தலை (ஸ்கால்ப்) வறட்சிதான். அதிலும் வறட்சி அதிகமான நிலையில்தான் பொடுகு உருவாகி, பேன் வரத் தொடங்கும். எனவே நாள்தோறும் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதால் உச்சந்தலையில் ஏற்படும் வறட்சி தடுக்கப்பட்டு, பொடுகு உருவாவது குறையும். தலைக்கு எண்ணெய் தேய்ப்பதால் முடி உதிர்தல், முடி உடைதல் உள்ளிட்ட குறைபாடுகள் நீங்குகின்றன. ஒவ்வொரு நாளும் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதால் மயிர்க்கால்கள் ஊட்டம் பெற்று மேற்கண்ட குறைபாடுகள் நீங்கிவிடுகின்றன.

தலையில் எண்ணெய் தேய்த்தல்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தலையில் மிகுதியாக எண்ணெய் தடவுவதையும் தம் தாடியைச் சீவுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் என்று ஷமாயில் திர்மிதீயில் இடம்பெற்றுள்ள செய்தி, தலைக்கு எண்ணெய் தடவுவதை ஊக்கப்படுத்துகிறது. தலைக்கு எண்ணெய் தடவுகின்ற பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. அதனடிப்படையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அப்பழக்கத்தைக் கடைப்பிடித்துள்ளார்கள். நமக்கு அவர்களுடைய வாழ்வில் அழகிய முன்மாதிரி உள்ளது. அந்த அடிப்படையில் தலைக்கு எண்ணெய் தேய்ப்பது நபிவழியாகும்.

பொதுவாக தலைக்குத் தேய்க்கப்படும் எண்ணெய்களுள் நல்லெண்ணெய்யும் தேங்காய் எண்ணெய்யும் முதலிடம் வகிக்கின்றன. இவற்றின் பயன்கள் மிகுதியானவை. இவ்விரு எண்ணெய்களிலும் கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம், இரும்புச் சத்து ஆகியவை உள்ளன. நல்லெண்ணெய்யில் உள்ள வைட்டமின் இ முடி சிதைவைத் தடுக்கிறது.

ஆக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத பொருளாக இருந்த எண்ணெய்யை நாமும் நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி பல்வேறு   நலன்களைப் பெறுவோம்.

–   முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி Ph.D.

(இமாம் மஸ்ஜித் ஜாமிஉல் அன்வார், மணலி, சென்னை)

source: https://hadi-baquavi.blogspot.com/2020/05/blog-post.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 74 = 77

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb