புரிந்துகொண்ட விஷயம், புரிந்துகொள்ள வேண்டிய விஷயம்: வித்தியாசம் என்ன?
மௌலவி. ஹிதாயத்துல்லாஹ், நூரி
நான் புரிந்துகொண்ட விஷயம் என்பதற்கும், நான் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்பதற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தில் தான் இந்த உலகின் எல்லா சிக்கல்களும் தொற்றி நிற்கிறது.
(“விஷயம்” என்பதில் எதை வேண்டுமானாலும் பொருத்திப் பார்க்கலாம். இஸ்லாம், அரசியல், உலகம், மனிதர்கள், பிற கொள்கைகள்… இன்னும் பல…)
தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகள் என்று இந்த உலகில் எதுவுமே இல்லையென்றாலும் கூட எத்தகைய நபர்களால் அவை அணுகப்படுகிறது என்பதை வைத்தே அவற்றின் தீர்வும் தள்ளிப் போகிறது. தடைபட்டு நிற்கிறது.
எல்லோருக்கும் தம் சமூகத்தை உயர்த்தும் ஆசையும், கனவும், இலட்சிய வேட்கையும் நிறைய இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அவற்றை செயல்படுத்தும் நுணுக்கமும் திறனும் எல்லோரிடமும் இருக்கிறதா…?
ஏராளமான கருத்துக்களைப் பகிர்கிறோம். சிந்தனைகளை முன்வைக்கிறோம். விரிவாகப் பேசி விவாதிக்கவும் செய்கிறோம்.
இறுதியில்..
எல்லோரும் ஒருமித்த குரலாக முன்வைப்பது
எப்படி செய்வது…
எங்கிருந்து துவங்குவது…
யார் வழிநடத்துவது…
எவ்வாறு ஒருங்கிணைப்பது…
என்பதில்தான் எல்லோரும் பின்தங்கி அல்லது ஒதுங்கி நின்று விடுகிறோம்.
பேசிப் பேசியே காலத்தை கடத்துகிறோமே தவிர அவற்றிற்கு செயல்வடிவம் கொடுத்து உருவாக்கி எடுக்கிற திறன் படைத்தவர்களாக நம்மில் பலரும் இருப்பதில்லை என்பதே உண்மை.
திறமையற்றவர்கள் என்பதால் அல்ல. நடைமுறை சிக்கல்களை எதிர்கொண்டு அவற்றை சீரமைத்து, செயல்பாட்டுக் களத்திற்கு தக்கவாறு சாதகமாக்கிக் கொள்கிற பக்குவமும்,
இலக்கு நோக்கிய பயணத் தெளிவும் உறுதியும் பலரிடமும் இருப்பதில்லை.
நம் சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுக்கத் தெரிந்தவராக, நம்மை ஒருங்கிணைப்பதிலும், நமது பொது எதிர்பார்ப்பை, தேவையைப் பூர்த்தி செய்து அதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் திறமையானவராய் இன்னொரு நபர் தேவைப்படுகிறார்.
உண்மையான அக்கறையோடும் கவலையோடும் சிந்திப்பதாலும் இறைவனிடம் பிரார்த்திப்பதாலும் அல்லாஹ் நம்மிலிருந்து அந்தத் திறன் படைத்த ஒருவரைத் தேர்வு செய்து அடையாளம் காட்டுகிறான்.
அந்த நபர் களத்தில் இறங்கி உழைத்திடும் போதுதான் எல்லா திட்டங்களும் செயல்வடிவம் பெறுகிறது. மாற்றங்கள் சாத்தியமாகிறது. அடுத்த கட்டம் நோக்கி அது நகரவும் செய்கிறது.
“சாண் ஏறினால் முழம் சறுக்கும்” என்று ஒரு முதுமொழி சொல்வார்கள்.
நாம் முன்னெடுத்த ஏதாவதொரு திட்டம் ஒரு சிறு வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருகிறபோது அதைப் பாதுகாப்பதிலும், அடுத்தடுத்து முன்னேற்றிச் செல்வதிலுமாவது நாம் திறன் பெற்றிருக்கிறோமோ என்றால் அதிலும் முந்தைய நிலையை விட மோசமாகப் பின்தங்கியே நிற்கிறோம்.
ஒன்று அந்த வளர்ச்சியின் பலனை உடனே பெற்றுக் கொள்ளத் துடிப்பவர்களாக இருக்கிறோம் அல்லது ஏதோ ஒருவகையில் நமக்கு அதிருப்தியளித்த ஒரு விஷயத்தை பூதாகரப்படுத்தி அதை வளரவே விடாமல் தடுக்கிற முட்டுக்கட்டைகளாக மாறி விடுகிறோம்.
இங்கு தனிப்பட்ட நபர்களின் புரிந்துணர்வுகள் முன்னுக்கு வந்துவிடுகிறதே தவிர நாம் அடைந்திட வேண்டிய பொது இலக்கை பெரிதாகக் கருதும் மனோநிலை உருவாவதில்லை.
விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி இதை விளங்க முயற்சிப்பவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.
சமூகக் கட்டமைப்பு குறித்த தெளிவான பார்வை இல்லாமல் சராசரி மனநிலையில் இதைக் காண்பவர்கள் அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள மாட்டார்கள். திருப்தியடையவும் மாட்டார்கள்.
ஒரு நீண்டகால சமூக இழப்பை மீட்டெடுக்கும் இலக்கை முன்னிறுத்தி முன்னேறிச் செல்லும் பணியில் பல்வேறு சிந்தனை கொண்டவர்கள் இணையும்போது ஆளுக்கொரு ரீதியில் அதை வழிநடத்த முயற்சித்தாலோ..
அவரவர் எதிர்பார்ப்புகளை அதில் நுழைக்க முயற்சித்தாலோ சமூகத்தின் பொது இலக்கை ஒருபோதும் அடைந்திட முடியாது.
எதற்காக வடிவமைத்து ஒன்றை உருவாக்குகிறோமோ அந்தப் பாதையில் தொடர்ச்சியாகப் பயணித்திட அணுமதிப்பதோடு அதன் சிரமங்களைத் தீர்ப்பதிலும் பக்கபலமாக நின்றால் மட்டுமே இலக்கை எளிதில் அடைந்திடவும் அதன் பலனை சமூகம் முழுமையாகப் பெற்றிடவும் முடியும்.
அதேசமயம் எல்லா வளர்ச்சிப் பணிகளிலும் ஏதேனும் ஒருவகையில் சிக்கல்களும் பின்னடைவுகளும் ஏற்படத்தான் செய்கிறது. இதுவே சராசரி மனித இயல்பும் ஆகும்.
பலவீனமும் குறைகளும் தெரியவரும்போது அதை சரிசெய்வதிலும் வலிமைப்படுத்துவதிலும் சகோதரத்துவம் மிகைத்திருக்க வேண்டுமே தவிர பழிசுமத்துவதும் வெறுப்பை விதைப்பதும் ஒருபோதும் வெளிப்படக் கூடாது.
தவறான நோக்கத்துடன் ஒன்றைத் திட்டமிட்டு, அதை மார்க்கத்தின் பெயரால், சமூகத்தின் வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றின் பெயரால் மோசடி செய்பவர்கள் எவரும் வளர்ந்ததும் இல்லை. அவர்களால் சமூகம் பலனடைந்ததும் இல்லை. இறைவனின் உதவி அத்தகையவர்களுக்கு ஒருபோதும் இருக்காது.
அதுபோன்ற சிந்தனையை முஸ்லிம்கள் எந்தச் சூழலிலும் தங்களுக்குள் எவர் மீதும் வளர்த்துக் கொள்ளக் கூடாது. அது இறை வழிகாட்டுதலுக்கும் இறைத்தூதரின் வழிகாட்டுதலுக்கும் முற்றிலும் எதிரானதும் வலிமையான சமூகக் கட்டமைப்பை சிதைத்து அழித்துவிடக் கூடியதுமாகும்.
எல்லா வளர்ச்சிப் பணிகளின் வீழ்ச்சியும் அதை முன்னெடுப்பவர்கள் மீது எழுப்பப்படும் சந்தேகங்களாலும் குற்றச்சாட்டுகளாலும்தான் சிதைந்து போயிருக்கிறது.
எவரது சிந்தனையால், உழைப்பால் ஒரு காரியம் முழு வடிவம் பெற்று உயர்ந்து நிற்கிறதோ அவரை சந்தேகிப்பதும், தவறான உள்நோக்கம் கற்பிப்பதும் நமது நோக்கத்தை மட்டுமல்ல சமூகத்தின் வளர்ச்சியையும் சேர்த்தே நாசமாக்குகிறது என்பதை உணர்ந்திட வேண்டும்.
முறையாக விசாரிக்காமல்
ஆதாரங்களை ஒப்பீடு செய்யாமல்
பின்புலங்கள் குறித்த முழுமையான புரிதல் இல்லாமல்
சமூகத்தின் வளர்ச்சிக்கான ஒருவரது உழைப்பை கொச்சைப்படுத்துவதும்,
பொதுவெளியில் அவரைக் குற்றவாளியாக்கி, அவருக்கெதிராகத் தீர்ப்பெழுதி அதைப் பரப்பி வருவதும் இஸ்லாம் ஒருபோதும் அங்கீகரிக்கவோ அணுமதிக்கவோ செய்யாத குற்றமாகும்.
எத்தகைய சமூகக் கட்டமைப்பை உருவாக்க எல்லோரும் ஆசைப்படுகிறோமோ அதற்கு இத்தகைய முதிர்ச்சியற்ற அணுகுமுறைகள் மூலம் நாமே தடையாகவும் இருந்து வருகிறோம் என்பதை உணர்ந்து தவிர்ந்து கொள்வோம்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களின் போது பேணிட வேண்டிய பண்பை, நிரந்தர வழிகாட்டுதலை இறைவன் தனது திருமறையில் கற்றுத் தந்துள்ளான். அதைப் பேணி நடப்போம்.
“இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டும், உங்களுக்கு (உறுதியான) அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித் திரிகின்றீர்கள்; இன்னும் இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய (பாவமான)தாக இருக்கும். (அல்குர்ஆன் : 24:15)
இன்னும் இதை நீங்கள் செவியேற்ற போது, “இதைப் பற்றி பேச நமக்கு எந்த(த் தகுதியும்) இல்லை; (இறைவனே!) நீயே தூய்மையானவன்; இது பெரும் பழியாகும்” என்று நீங்கள் கூறியிருக்க வேண்டாமா..? (அல்குர்ஆன் : 24:16)
நீங்கள் (திடமான) முஃமின்களாகயிருப்பின் இது போன்ற (பழி சுமத்துவ)தின் பால் மீளவேண்டாம் என்று அல்லாஹ் உங்களுக்கு போதிக்கிறான். (அல்குர்ஆன் : 24:17)
இன்னும், அல்லாஹ் (தன்) வசனங்களை உங்களுக்கு (தெளிவாக விவரித்துக் கூறுகிறான்; மேலும் அல்லாஹ் (யாவும்) அறிந்தவன்; மிகுந்த நுட்பமுடையவன். (அல்குர்ஆன் : 24:18)
மனித உள்ளங்களில் சரியான புரிதலை ஏற்படுத்துபவன் அல்லாஹ் ஒருவனே.
அந்த இறைவன் எல்லோருக்கும் தெளிவைத் தந்தருள பிரார்த்திப்போம்.
கவலையுடன்
மௌலவி. ஹிதாயத்துல்லாஹ். நூரி.
source: https://www.facebook.com/hidayathullah.hidayath.7/posts/2824240004340018