சரித்திரத்தின் சிகரத்தில்: பெண்களும் புரட்சியும்!
[ புரட்சி வரலாற்றில் “பிரான்ஸியப் புரட்சி” பெற்றிருந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை எகிப்தியப் புரட்சி விஞ்சிவிட்டது என்றால், அது மிகையில்லை.
இங்கு பெண்கள், இந்த மாபெரும் அரசியல் புரட்சியின் போது வீடுகளுக்குள் முடங்கி இருக்கவில்லை.
இளம் பெண்களாகட்டும், தாய்மார்களாகட்டும் அவர்களில் யாருமே பின்தங்கி விடவில்லை.
தாய்மார்கள் தத்தமது குழந்தைகளோடும் குடும்பத்தோடும் தஹ்ரீர் சதுக்கத்துக்குப் போனார்கள்.
ஒட்டுமொத்த மக்களின் நன்மைக்காய் அர்ப்பணிப்போடு செயற்பட்டார்கள்.
மிகமிக நேர்த்தியாய் ஒழுங்கமைக்கப்பட்ட அந்த அரசியல் புரட்சியில், முன்பள்ளிக் குழந்தைகளுக்கான பாடங்கள் நடத்தப்பட்டன;
மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன; ஊடகத்துறைப் பங்களிப்புகள் துரிதமாய் இடம்பெற்றன;
கலை இலக்கிய ஆக்க முயற்சிகள் நடந்தன. இவை அனைத்திலுமே பெண்களும் சளைக்காமல் பணியாற்றியுள்ளனர்.]
சரித்திரத்தின் சிகரத்தில்: பெண்களும் புரட்சியும்!
நவீன கால அரசியல் வரலாற்றில் எகிப்தியப் புரட்சி மிகப் பெரும் திருப்புமுனையாய் அமைந்தது. புரட்சி வரலாற்றில் “பிரான்ஸியப் புரட்சி” பெற்றிருந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை எகிப்தியப் புரட்சி விஞ்சிவிட்டது என்றால், அது மிகையில்லை.
அல்-தஹ்ரீர் சதுக்கத்தில் கடந்த வருடம் மிகப்பெரும் திரளான எகிப்தியப் பொதுமக்கள் தம்மிடையேயான சகல வேறுபாடுகளையும் மறந்து ஒன்றிணைந்தனர், ஒரே இலக்கை நோக்கி. அது… அடக்குமுறை ஆட்சியாளரான ஹொஸ்னி முபாரக்கைப் பதவியில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு, எகிப்திய மக்கள் உண்மையான சுதந்திரத்தின் சுவையைப் பருகுவதற்கான பாதையை அமைத்தல் என்பதே!
அவர்கள் வெற்றி பெற்றார்கள். ஆம், தம்முடைய சர்வாதிகார அதிபரை அதிகாரச் சிம்மாசனத்தில் இருந்து விரட்டினார்கள். மக்கள் சக்தி மகத்தானது என்பதை உலகுக்கு உணர்த்தியது மட்டுமல்ல, அவ்வளவு காலமும் அடக்குமுறை ஆட்சியின் கீழ் துன்புற்ற ஏனைய நாட்டு மக்களுக்கும் சுதந்திரப் புரட்சிக்கான உந்துதலை வழங்கினார்கள்.
இந்தப் புரட்சி பல வகையிலும் முக்கியத்துவம் மிக்கது.
பிரான்ஸியப் புரட்சியைப் போல வன்முறைகள் மலிந்த ஒரு புரட்சியாக இது, இருக்கவில்லை. மாறாக, மிகுந்த வியப்புக்குரிய வகையில், சுய கட்டுப்பாடு கொண்ட தனி மனிதர்களால் மிக நேர்த்தியான ஒழுங்கும் உயர்ந்த மனித விழுமியங்களும் மிகச் சிறப்பாகப் பேணப்பட்ட புரட்சியாக இப்புரட்சி அமைந்திருந்தது.
இப்புரட்சி வெறுமனே ஆண்களுடைய புரட்சியாக மட்டும் இருக்கவில்லை என்பது மிக முக்கியமான கவனத்துக்குரியது. மிகப் பெருமளவில் பெண்களின் மகத்தான பங்களிப்புடையதாக அது அமைந்திருந்தது. இதில், ஆச்சரியம் என்ன என்று கேட்கிறீர்களா?
முதலில், இப்புரட்சி இடம்பெற்றது, மத்தியகிழக்கில் உள்ள ஓர் அரபு நாட்டில். மிகப் பெரும்பான்மை இஸ்லாமியர்களை உடைய நாடு, அது. இஸ்லாம் ஒரு பிற்போக்கான மதம், பெண்களை அடக்கி ஒடுக்கி வைத்துள்ள ஒரு சமயம் என்ற மேற்குலகக் கூக்குரல்களை முறியடிக்கும் வகையில், லட்சக்கணக்கான முஸ்லிம் பெண்கள் புரட்சியின் பங்குதாரகளாய் அமைந்து, அதன் ஒவ்வொரு அசைவிலும் பங்குகொண்டு உள்ளனர் என்பது முக்கியமானதுதான், இல்லையா?
இங்கு பெண்கள், இந்த மாபெரும் அரசியல் புரட்சியின் போது வீடுகளுக்குள் முடங்கி இருக்கவில்லை.
இளம் பெண்களாகட்டும், தாய்மார்களாகட்டும் அவர்களில் யாருமே பின்தங்கி விடவில்லை.
தாய்மார்கள் தத்தமது குழந்தைகளோடும் குடும்பத்தோடும் தஹ்ரீர் சதுக்கத்துக்குப் போனார்கள்.
ஒட்டுமொத்த மக்களின் நன்மைக்காய் அர்ப்பணிப்போடு செயற்பட்டார்கள்.
மிகமிக நேர்த்தியாய் ஒழுங்கமைக்கப்பட்ட அந்த அரசியல் புரட்சியில், முன்பள்ளிக் குழந்தைகளுக்கான பாடங்கள் நடத்தப்பட்டன;
மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன; ஊடகத்துறைப் பங்களிப்புகள் துரிதமாய் இடம்பெற்றன;
கலை இலக்கிய ஆக்க முயற்சிகள் நடந்தன. இவை அனைத்திலுமே பெண்களும் சளைக்காமல் பணியாற்றியுள்ளனர்.
மேற்படி உரையை நிகழ்த்தும் இளம்பெண் ஸஹர் அல் நதீ, “வெறுக்க வேண்டாம், கற்றுக் கொடுங்கள்!” என்ற அமைப்பின் பணிப்பாளர்.
ஒரு துடிப்பான சமூகச் செயற்பாட்டாளர். புரட்சி நிகழ்வுகளை தானே நேரடியாக ஒளிப் பதிவு செய்து உலகுக்கு அளித்தவர். புரட்சி நிகழ்வில் தன்னுடைய நேரடி அனுபவங்களை சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஓர் அழகான முன்வைப்பின் மூலம், “எந்த ஒரு சமூகச் செயற்பாட்டிலும் ஆணைப் போலவே பெண்ணுக்கும் பங்குண்டு; அதனைச் செய்வதற்கு பெண்கள் தயங்கிப் பின்வாங்கத் தேவை இல்லை” என்று புதுமைப் பெண்ணாக நின்று நிரூபிக்கின்றார். அவருக்கு உலகப் பெண்கள் சார்பில் நம்முடைய வாழ்த்துக்கள்!
– லறீனா அப்துல் ஹக்
sopurce:www.inneram.com