“பத்து காரியங்களால் உங்களுடைய இதயங்கள் மரணித்து விட்டன”
பிரபல துறவியான ஹளரத் இப்ராஹீமுப்னு அத்ஹம் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் ஒரு முறை பஸராவின் கடைத்தெருவில் சென்றார். அவரை அங்குள்ள மக்கள் சூழ்ந்து கொண்டு “அபூ இஸ்ஹாக்கே, நாங்கள் இறைவனைப் பிரார்த்திக்கிறோம். எங்களுடைய பிரார்த்தனை நிறைவேறுவதில்லை, இதற்கு காரணம் என்னவென்று வினவினர். அதற்கவர் பத்து காரியங்களால் உங்களுடைய இதயங்கள் மரணித்து விட்டன.
1. அல்லாஹ்வை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். (அவன்தான் உங்களைப் படைத்து காத்து இரட்சிப்பவன் என்பது உங்களுக்கு தெரியும்) ஆனால் அவனுக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளை நீங்கள் செய்வதில்லை.
2. அல்லாஹ்வின் ரசூலை நேசிப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அவர்களை விசுவாசித்திருப்பதாக கூறுகிறீர்கள். ஆனால் அவர்கள் காட்டிய வழிமுறையாகிய சுன்னத்தை நீங்கள் கடைப்பிடித்தொழுகுவதில்லை.
3. நீங்கள் திருக்குர்ஆனை ஓதி இருக்கிறீர்கள். ஆனால் அதில் கூறப்பட்டவாறு செயலாற்றுவதில்லை.
4. அல்லாஹ் உங்களுக்கு கொடுத்துள்ள பாக்கியங்களை அனுபவிக்கிறார்கள். ஆனால் அதற்குத்தக்கவாறு நன்றி செலுத்துவதில்லை.
5. ஷைத்தான் உங்களுடைய விரோதி என்று ஒப்புக்கொள்கிறீர்கள். ஆனால் அவனுடைய நோக்கத்திற்கிணங்க செயலாற்றுகிறீர்கள்.
6. சுவர்க்கம் உண்டு என்று நம்புகிறீர்கள். ஆனால் அதனை அடைவதற்கான அமல்களை செய்வதில்லை.
7. நரகம் உண்டு என்ற விசுவாசம் உங்களுக்கு இருக்கிறது. ஆனால் அதனை விட்டு விலகுவதற்கான செயல்களை செய்வதில்லை.
8. மரணம் தவிர்க்க முடியாத ஒன்று என்பதை உறுதியாக தெரிந்திருக்கிறீர்கள். ஆனால் அதற்குத் தகுந்தவாறு உங்களை நீங்கள் ஆயத்தம் செய்து கொள்வதில்லை.
9. நீங்கள் தூக்கத்திலிருந்து எழுந்ததிலிருந்து பிறருடைய குறைகளையே கவனிக்கிறீர்கள். ஆனால் உங்களிலுள்ள குறைகளைக் குறித்து நீங்கள் சிந்திப்பதில்லை.
10. உங்களில் இறந்தவரை நல்லடக்கம் நல்லடக்கம் செய்கிறீர்கள். ஆனால் அதிலிருந்து நீங்கள் பாடம் கற்றுக் கொள்வதில்லை ” என்று பதிலளித்தார்கள்.
[ திருக்குர்ஆனுக்கு தமிழில் முதன்முறையாக விரிவுரை தந்த உத்தமபாளையம் மௌலானா அல்ஹாஜ், அல்லாமா, பன்னூலாசிரியர் எஸ். எஸ். முஹம்மது அப்துல் காதிர் சாஹிப் பாக்கவி அவர்கள் மொழிபெயர்த்த “நாற்பது ஹதீஸ்ககள்” என்ற நூலிலிருந்து.]