முதிர்ச்சியான அறிவு
மௌலவி. ஹிதாயத்துல்லாஹ் நூரி
முப்பதாண்டுகளுக்கு முன்பு வரை மார்க்க விவகாரங்களை விவாதிப்பவர்களாக, முடிவெடுப்பவர்களாக இருந்தவர்கள் பெரும்பாலும் அதில் *முதிர்ச்சியான அறிவு* பெற்றவர்களாகவே இருந்தனர்.
பிறை விஷயத்தில் மட்டுமல்ல. கருத்து வேறுபாடுகள் கொண்ட பல விவகாரங்களிலும் ஒரு இணக்கமான முடிவிற்கு சமூகம் வருவதற்கு அந்த முதிர்ச்சியான அறிவும் அணுகுமுறையும் தான் அடிப்படையாக இருந்தது.
தேர்ச்சியான கல்வியறிவைப் பெற்ற உலமாக்களில் பலரும் கூட எங்கே முழுமையான புரிதல் இல்லாமல் தவறிழைத்து விடுவோமோ என்று அச்சப்படும் நிலையோடுதான் முடிவுகளை எடுத்தனர். சிலர் ஒதுங்கியும் இருந்துள்ளனர்.
ஆனால் இன்றோ….?
மேலோட்டமாக சில விஷயங்களைப் படித்தும், கேட்டும் ஒரு சிறு புரிதல் ஏற்பட்டவுடன் தனது புரிதலுக்கு முரணாகத் தெரியும் அனைத்தையும் ஷிர்க்கை விட மோசமான குற்றம் போல் கருதி வெறுப்பதும், தரம் தாழ்ந்த விமர்சனங்களையும், ஆக்ரோஷமான எதிர்ப்புக்களையும், கேலி கிண்டல், அவமரியாதை போன்ற அனைத்தையும் (அல்லாஹ்வையும் மறுமையையும் உறுதியாக நம்புகிற சகோதரர்கள் மீதே) வெளிப்படுத்துவதும் யாரிடமிருந்து கற்றுக் கொண்ட பண்புகள்…?
ஷைத்தானிடமிருந்து பெற்ற, பெறவேண்டிய படிப்பினையை மறக்கலாமா…?
தன்னுடைய அறிவுத் திமிரை வெளிப்படுத்தி பிறரை இழிவாகக் கருதியதன் விளைவாகவே சபிக்கப்பட்டவனாக மாறிப் போனான் அவன்.
சத்தியத்தை நிலைநாட்டுகிறோம் என்று சொல்லிக்கொண்டு தன்னோடு உடன்படாதவர்களை எந்த எல்லையையும் தாண்டி விமர்சிப்பதற்கும் இழிவுபடுத்துவதற்கும் எந்த இஸ்லாம் அணுமதி தருகிறது…?
நூறு சதவிகிதம் நேர்வழியில் இருந்த மூஸா நபியை அதே நூறு சதவிகிதம் வழிகேட்டில் வாழ்ந்த ஃபிர்அவ்னிடம் அணுப்பியபோது அல்லாஹ் கடைபிடிக்கச் சொன்ன பண்பு என்ன..?
இதை யாராவது சுட்டிக் காட்டினால் அவர்களையும் சேர்த்து நக்கல் தொணியில் எள்ளிநகையாடி படுகேவலமாக நடந்து கொள்ளும் போக்கு இந்த முப்பதாண்டுகளில் நம் சமூகத்தில் இளைஞர்களிடம் வளர்ந்து நிற்கிறதே எங்கிருந்து வந்தது இது…?
மார்க்கத்தின் ஏனைய அம்சங்களில் எவ்வித தெளிவையும் பக்குவத்தையும் வளர்த்துக் கொள்ளாமல் இன்று அதிகமான விவாதங்களிலும் விமர்சனங்களிலும் தொடர்ச்சியாக ஈடுபடும் சிலர் முஸ்லிம்களுக்குள்ளேயே ஒருவித #வன்முறையான_கருத்தியல்_மனோபாவத்தை உருவாக்கி வருகின்றனர். இது உண்மையான இஸ்லாமியக் கோட்பாட்டிற்கு முற்றிலும் எதிரானதாகும்.
கடந்தகாலங்களில் மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்த சில நபர்களது தவறான தனிப்பட்ட நடத்தை மற்றும் அணுகுமுறையை உள்வாங்கியிருக்கிறோமே தவிர இஸ்லாமியப் பண்பு இதுவல்ல.
அல்லாஹ்வுடைய தூதரோ அவர்களைப் பின்பற்றிய உத்தம ஸஹாபாக்களோ தங்களது கருத்தை, பிரச்சாரத்தை ஏற்காத யாரையாவது இப்படி விமர்சித்ததாக ஒரேயொரு சம்பவத்தைக் காண முடியுமா…?
மாறாக அல்லாஹ் அவர்களுக்கு எப்படி அறுவுறுத்தினான் என்பதைப் பாருங்கள்.
“அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இணை வைத்திருக்க மாட்டார்கள்;
*உம்மை அவர்கள் மீது பாதுகாவலராகவும் நாம் ஏற்படுத்தவில்லை – இன்னும் நீர் அவர்கள் (காரியங்களை நிர்வகிக்கும்) பொறுப்பாளரும் அல்ல.*
(அல்குர்ஆன் : 6:107)
மார்க்கத்தின் சரியான நிலைப்பாடு குறித்த அழைப்புப் பணி என்பது பிறரிடம் கருத்துப் புரிதலை ஏற்படுத்தும் முயற்சியாக இருக்க வேண்டுமே தவிர திணிப்பாகவோ, நிர்ப்பந்தமாகவோ மாற்றிடக் கூடாது.
இது போன்ற போக்குகள்தான் மார்க்கம் குறித்தும் சமூக சீர்திருத்தங்கள் குறித்தும் சரியான புரிதலை ஏற்படுத்துவதில் முஸ்லிம்களிடமும் பிற சமூகத்திடமும் பெரும் பின்னடைவை உருவாக்கி வருகிறது என்பதை இனியாவது உணர்ந்திடுவோம்.
ஆளாளுக்கு வீதியில் நின்று அறைகூவல் விடுப்பதைத் தவிர்த்து அழகான உரையாடலை மட்டும் மேற்கொள்வோம். ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் அதன் பொறுப்பை இறைவனிடம் விட்டு விட்டு சரியான புரிதலுக்காகப் பிரார்த்திப்போம். அதற்குக் கீழ் தரம் தாழ்ந்து போகவேண்டாம்.
இந்தப் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளாமல் நாம் உயர்த்திப் பிடிக்கிற எந்த சித்தாந்தமும் கொள்கையும் ஒருபோதும் சரியாகப் புரிந்து கொள்ளப்படவும் செய்யாது. பிறரிடம் நன்மதிப்பையும் பெறாது.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார்
ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் (வீட்டுக்குள் வர) அனுமதி கேட்டார். அவரைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘இவர் அந்தக் கூட்டத்தாரிலேயே மிகவும் தீயவர்’ என்று (என்னிடம்) கூறினார்கள். அவர் வந்து அமர்ந்தபோது அவரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மலர்ந்த முகத்துடன் இதமாக நடந்து கொண்டார்கள். அந்த மனிதர் (எழுந்து) சென்றதும் நான் (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்) ‘இறைத்தூதர் அவர்களே! அந்த மனிதரைக் கண்டதும் தாங்கள் இவ்வாறு இவ்வாறு சொன்னீர்கள். பிறகு அவரிடம் மலர்ந்த முகத்துடன் இதமாக நடந்து கொண்டீர்களே’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆயிஷா! நான் கடுமையாக நடந்து கொண்டதை நீ எப்போதாவது கண்டுள்ளாயா? எவரின் தீங்கை அஞ்சி மக்கள் (அவருடன் இயல்பாகப் பழகாமல்)விட்டு விடுகிறார்களோ அவரே மறுமை நாளில் அல்லாஹ்விடம் அந்தஸ்தில் மிகவும் மோசமானவராவார்’ என்று கூறினார்கள். (ஸஹீஹ் புகாரி : 6032.)
இதுதான் நபிவழி.
உஹதுக் களத்திலே தனக்கிழைக்கப்பட்ட தீங்கை எண்ணி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய அண்ணணலாரை அல்லாஹ் கண்டித்து அமைதிபடுத்தவே செய்தான்.
(நபியே!) உமக்கு இவ்விஷயத்தில் எவ்வித அதிகாரமும் இல்லை. அவன் (அல்லாஹ்) அவர்களை மன்னித்து விடலாம்; அல்லது அவர்களை வேதனைப்படுத்தலாம் – நிச்சயமாக அவர்கள் அநீதமிழைப்பவர்களாக இருப்பதின் காரணமாக. (அல்குர்ஆன் : 3:128)
கருத்து மற்றும் பண்பியல் ரீதியாக சரியான புரிதல்களை மட்டுமே ஏற்படுத்த வேண்டிய களம் இது. தயவுசெய்து இதைப் போர்க்களமாக மாற்றி எடுத்துச் செல்ல முயலாதீர்கள்.
sourc: https://www.facebook.com/hidayathullah.hidayath.7/posts/2845572892206729