பெருநாள் தொழுகைக்கு முன்பு செய்ய வேண்டிய கட்டாய கடமை!
Rahmath Rajakumaran
நோன்பை முழுமைப்படுத்தும் வகையில் ‘ஸக்காத்துல் பித்ர்’ எனும் கட்டாய ஈகையை நிறைவேற்ற வேண்டும்.
தொழுகையில் நாம் ஏதேனும் மறந்துவிட்டால் அதாவது ஓர் ‘ரக்அத்தை’ மறந்துவிட்டால் அல்லது என்ன ஓதினோம் என்பதை மறந்துவிட்டால் இறுதியில் மறுபடியும் ‘இரு சஜ்தாக்கள்’ செய்து அந்தப் பிழை மன்னிக்கக் கோருவோம்.
அதேபோல் நோன்பில் நாம் அறிந்து அறியாமல் செய்யும் தவறை ஈடுசெய்வதற்காகவும், ஈகைத் திருநாளில் யாரும் பட்டினியோடு இல்லாமல் உண்டு பசி தீர்த்து மகிழ்ந்திருக்க வேண்டும் என்பதற்காகவும், இறைவனுக்காக நோன்பு இருந்து அதனை முழுமைப்படுத்தியதற்கு நன்றி செலுத்துவதற்காகவும் கட்டாயம் ‘ஸக்காத்துல் பித்ரை’ நாம் நிறைவேற்ற வேண்டும்.
நோன்பு நோற்ற அனைவரும் அவர்களின் பொறுப்பிலும் பராமரிப்பிலும் உள்ள பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் அனைவர் மீதும் இந்த ஈகைக் கடமையாகும். உங்கள் வீட்டில் உங்களுக்குப் பணிவிடை செய்யும் பணியாள் இருந்தாலும் அவர் உங்கள் பொறுப்பில் வருவதால் அவருக்கும் சேர்த்து ‘ஸக்காத்துல் பித்ர்’ தருவது மிகவும் சிறப்பான செயலாகும்.
நமது நாட்டில் நாம் பிரதான உணவாகக் கொள்ளுகின்ற அரிசியில் அல்லது கோதுமையில் இருந்து ஒருவருக்கு மூன்று கிலோ வீதம் இதனை வறியவர்களுக்கு வழங்க வேண்டும். நோன்பு நோற்றவர்கள் பெருநாள் தொழுகைக்குச் செல்லும் முன் இதனை நிறைவேற்றியே ஆக வேண்டும். இது கட்டாயக் கடமையாகும்.
நம்முடைய செல்வத்தின் மீது கொடுக்கப்படும் ஸகாத் வேறு ஈகைத் திருநாளின் தொழுகைக்கு முன்பு கொடுக்கப்படும் ‘ஸக்காத்துல் பித்ர்’ வேறு. இந்த ‘ஸக்காத்துல் பித்ரை’ நோன்பு 28 அல்லது 29 அல்லது 30-ஆவது நோன்பில் அல்லது பெருநாள் காலையில் தொழுகைக்கு முன்பு கூடக் கொடுத்தால் போதுமானது.
கொடுக்கப்படும் அந்த ‘ஸக்காத்துல் பித்ரை’ ஒரே ஒருவருக்கோ அல்லது பிரித்து வெவ்வேறு நபருக்கோ கொடுக்கலாம். ஆனால் இது ஏழ்மையான நிலையில் இருப்பவருக்கு மட்டுமே போய்ச் சேர வேண்டியதாகும்.
வெளிநாட்டில் வேலையில் இருப்பவர்கள் அந்த நாட்டிலுள்ள பிரதான உணவை அங்குள்ள ஏழைகளுக்குத் தரலாம் அல்லது தம் நாட்டில் அதைவிட ஏழைகள் இருப்பதாக நினைத்தால் அதற்குரியப் பணத்தைத் தன்னுடைய பெற்றோருக்கோ, சகோதரருக்கோ குழந்தைகளுக்கோ அனுப்பி, தன்னுடைய தொழுகைக்கு முன் ஸக்காத்துல் பித்ரை நிறைவேற்றிவிடச் சொல்ல வேண்டும்.
‘ஸக்காத்துல் பித்ரை’ பொருளாகத் தருவது சிறப்பு, தவிர பணமாகச் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இறைத்தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்திலும் சரி, அதற்குப் பிறகு வாழ்ந்த கலிஃபாக்களும் இந்த முறையையே கடைப்பிடித்தார்கள் என்று வரலாற்றுக் குறிப்புகளில் உள்ளது. பொருளாதாரத்தில் மேம்பட்டிருந்த காலத்திலும் அவர்கள் பெருநாள் பித்ராவை பொருளாகத் தந்து மகிழ்ந்தார்களே தவிர, பணமாகத் தரவில்லை.
நீங்கள் தங்கியிருக்கும் இடத்தில் அல்லது வேலையில் இருக்கும் நாட்டில் பொருளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய ஏழைகள் இல்லை என்று நீங்கள் எண்ணினால், அதற்கான பணத்தை உங்கள் சொந்த நாட்டிலோ அல்லது ஏழைகள் வசிக்கும் வேறு இடத்திற்கோ முன்கூட்டியே பணத்தை அனுப்பி அங்கு உங்களுக்காகப் பித்ராவைச் செலுத்திடச் சொல்லலாம். அதற்கும் வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் நம்பகமான தொண்டு நிறுவனங்களுக்குப் பணத்தைச் செலுத்திவிடுவதில் குற்றமில்லை.
தொழில்நுட்பம் பெருகிவிட்ட காலத்தில் தமக்கும் தம் பராமரிப்பில் இருப்பவர்களுக்குமான தொகையைக் கணக்கிட்டு, இருந்த இடத்திலிருந்து இணையத்தின் மூலம் தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பிவிடலாம். ஆனால் தமக்குத் தெரிந்த ஓர் ஏழைக்கு நேரடியாகப் பித்ராவைத் தருவது மிகச்சிறப்பானது ஏற்றமிக்கது.
கடமையான ஈகையை நிறைவேற்றி ஈகைத் திருநாளைக் கொண்டாடுவோம். ரமதான் மாதத்தின் இன்னுமொரு வருகையை நம் எல்லோருக்கும் எல்லாம் வல்ல இறைவன் நற்பேறாக வழங்குவானாக.! ஆமீன்.
ஸஹிஹ் புகாரி 2:24:1503-1512, ஸஹிஹ் முஸ்லிம்: 12:1789-1802
source: https://www.facebook.com/rahmath.rajakumaran.9/posts/2618762188383120