ஸகாதுல் பித்ரை பணமாக ஏன் வழங்க முடியாது?
o ஸகாதுல் பித்ரை உணவாகவே வழங்க வேண்டும் என்பதற்கான ஆதாரங்கள்
o பணமாக வழங்கலாம் எனக் கூறுவதால் ஏற்படும் விபரீதங்கள்
o பணமாக வழங்கலாம் எனக் கூறுவோரின் வாதங்களும் பதில்களும்
ஸகாதுல் பித்ரை ஏழைகளுக்கு பணமாகக் கொடுப்பதே மிகவும் பயனுள்ளதாகும். ஏனெனில் அவர்களின் தேவையை விட அதிகமாக உணவுகள் அவர்களிடம் குவிந்தால் அவற்றை குறைந்த விலைக்கு விற்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்படுவார்கள் என்ற ஒரு வாதம் தற்காலத்தில் மிகவும் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.
ஆனால் இக்கருத்து உணர்ச்சிகளுக்கு நெருக்கமாக இருந்தாலும் பிக்ஹ் கலையின் அடிப்படைகளுக்கும் விதிகளுக்கும் முரணானதாகும்.
ஸகாதுல் பித்ரை உணவாகவே வழங்க வேண்டும் என்பதற்கான ஆதாரங்கள்:
நான்கு கைப்பிடிகள் (ஸாஉ) அளவு உணவை வழங்க வேண்டும் என்பதே மார்க்கத்தின் மிகத்தெளிவான வழிகாட்டலாகும். இதனைக் குறிப்பிடும் தெளிவான பல்வேறு ஹதீஸ்கள் உண்டு.
இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள், நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஸ்லிம்களான சுதந்திர அடிமையான ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், சிறியவர்கள் அனைவர் மீதும் திராட்சை, கோதுமை என்பவற்றிலிருந்து ஒரு ஸாஉ அளவை ஸதகதுல் பித்ராக விதியாக்கியுள்ளார்கள். (புஹாரி, முஸ்லிம்)
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள் நோன்பாளி அர்த்தமற்ற மோசமான வார்த்தைகளைப் பேசியிருந்தால் அவ்வழுக்குகளிலிருந்து தூய்மை பெறவும், ஏழை எளியவர்களுக்கு (மிஸ்கீன்) உணவு கொடுக்கவும் வசதியாக நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸதகதுல் பித்ரை விதியாக்கியுள்ளார்கள். (பெருநாள்) தொழுகைக்கு முன்னர் இதனை நிறைவேற்றினால் அது அங்கீகரிக்கப்பட்ட ஸதகதுல் பித்ராக அமையும். தொழுகையின் பின்னர் நிறைவேற்றப்படின் அது சாதாரண தர்மம் (ஸதகா) ஒன்றாகவே கருதப்படும் (அபூதாவுத்)
பணமாக வழங்கலாம் எனக் கூறுவதால் ஏற்படும் விபரீதங்கள்
ஸகாதுல் பித்ரை பணமாக வழங்குமாறு கூறுவது, தெளிவான ஆதாரத்தை விட்டுவிட்டு, ஏழைகளை மகிழ்விக்க வேண்டும் என்ற நோக்கத்தை ஆதாரமாகக் கொண்டதாக அமைந்துள்ளது.
ஆதாரத்தில் தெளிவாகக் கூறப்பட்டதை நடைமுறைப்படுத்த இயலாத போதுதான் நோக்கத்தை நிறைவு செய்யும் வேறொரு பதிலீட்டுக்குச் செல்ல அனுமதியுண்டு.
ஆதாரத்தில் தெளிவாகக் கூறப்பட்டதை விட்டுவிட்டு அதன் நோக்கத்திற்குத் தாவுவது இரு வகைகளில் தவறாகும்.
முதலாவது
முஸ்லிம்கள் ஆதாரத்தில் கூறப்பட்டவற்றைப் பின்பற்றுமாறே வேண்டப்பட்டுள்ளார்களேயன்றி நோக்கங்களை பின்பற்றுமாறல்ல. அந்நோக்கம் ஆதாரத்தில் குறிப்பிடப்பட்டதாகவும் இருக்கலாம் அல்லது ஆய்வு மூலம் பெறப்பட்டதாகவும் இருக்கலாம்.
ஆதாரத்திலுள்ளவற்றை அப்படியே பின்பற்றுமாறு கட்டளையிடும் வசனங்கள் அதிகமாகவும் பொதுத்தன்மையுடையவாகவும் இருப்பதே அதற்குக் காரணமாகும்.
நம்முடைய தூதர் உங்களுக்குக் கொடுத்ததை நீங்கள் (மனமுவந்து) எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எதை விட்டும் உங்களை தடுத்தாரோ, அதைவிட்டு நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். (அல்குா்ஆன் 59:7)
(மக்களே!) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கி வைக்கப்பட்டவற்றைப் பின்பற்றுங்கள்! மேலும், அவனை விடுத்து வேறு பாதுகாவலர்களைப் பின்பற்றாதீர்கள்! (அல்குா்ஆன் 7:3).
(மனிதர்களே!) நீங்கள் அறியாத விதத்தில் திடீரென உங்களிடம் வேதனை வருவதற்கு முன்னதாகவே உங்கள் இறைவனால் உங்களுக்கு இறக்கி வைக்கப்பட்ட, (வேதங்களில்) மிக அழகான இதனைப் பின்பற்றுங்கள். (அல்குா்ஆன் 39:55).
ஏவல் விலக்கல்களை உள்ளடக்கிய ஆதாரங்களுக்கு அல்லாஹ் பெரும் மதிப்பு வழங்கியுள்ளான். எமது சொந்தக் கருத்துக்களுக்காகவும் சிந்தனைகளுக்காகவும், நலவு தீமை என நாம் அனுமானிப்பவைகளுக்காகவும் அவற்றின் மதிப்பைக் குறைக்கும் விதத்தில் நாம் நடந்துகொள்வது பொருத்தமற்றதாகும்.
ஆதாரத்தை நடைமுறைப்படுத்துவதில் இயலாமை ஏற்பட முன், நலவு என நாம் கருதும் விடயத்திற்குத் தாவுவது, உண்மையான நலனை விட்டும் விலகிச்செல்வதற்கான அத்திவாரமாகும். ஏனெனில் ஒரு விசுவாசி அல்லாஹ் தனக்குத் தெரிவு செய்ததில்தான் நலவுண்டு நாமாகத் தேர்ந்தெடுத்ததில் அல்ல என்பதைப் புரிய வேண்டும்.
இரண்டாவது
பணம் உணவுக்குப் பதிலீடாகும். எனவே உணவு வழங்குவது சாத்தியமற்ற சந்தர்ப்பத்தில்தான் பதிலீட்டுக்குச் செல்ல முடியும். அதனால் தான் தண்ணீர் இருந்தால் தயம்மும் செய்ய முடியாது. நோன்பு நோற்க சக்தியற்ற நிரந்தர நோயாளி நோன்பு பிடிக்க முடியாவிட்டால் தான் உணவு கொடுக்க முடியும். ஹஜ்ஜில் குர்பானி கொடுக்க முடியாதவர் தான் நோன்பு நோற்க முடியும். இதுதான் பொதுவாக இன்னொன்றுக்குப் பதிலீடாகப் செய்யப்படுபவற்றின் அடிப்படையாகும்.
மேற்கூறப்பட்ட உதாரணங்களில் உள்ள பதிலீடுகள் அனைத்தும் ஆதாரத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்ட பதிலீடுகள். ஆனால் ஸகாதுல் பித்ரில் கூறப்படும் பதிலீடு ஆதாரத்தில் இடம்பெறாததாகும். எனவே இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை மிக இலகுவாகப் புரியலாம்.
மார்க்கத்தில் கூறப்பட்ட பதிலீடுகளுக்குச் செல்வதற்கே இயலாமை நிபந்தனையாக உள்ள போது மார்க்கத்தில் கூறப்படாத பதிலீடான பணத்தைக் கொடுப்பதற்காக ஆதாரம் திட்டவட்டமாகக் கூறும் முறையை விட்டுவிடுவது தவறு என்பது வெள்ளிடை மலை. ஆதாரத்திலுள்ளதை செய்ய இயலாத போது மாத்திரமே பதிலீட்டை அனுமதிக்க முடியும்.
நலன்களைக் கவனத்தில் கொள்ளல் என்ற வாதத்தை வைத்து நேரடி ஆதாரங்களிலுள்ளவற்றை விட்டு விடுவது, நலனை அடிப்படையாகக் கொண்டு செயற்படுவது என்ற பெயரில் அனைத்து ஆதாரங்களையும் புறக்கணிப்பதற்கு வழிவகுத்துவிடும்.
இது மிகப் பாரதூரமான விடயமாகும். ஏனெனில் அல்லாஹ் விதித்த அனைத்தும் ஒரு நோக்கத்துக்காகவே விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில சந்தர்ப்பங்களில் ஆதாரத்தில் உள்ளவற்றை விட்டு விட்டு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படலாம் என அனுமதித்தால், மார்க்கம் விதித்த அனைத்து வழிகாட்டல்களையும் விட்டுவிட்டு மார்க்கத்தில் கூறப்பட்ட இலக்குகளை அடைவதற்காக நாமாகத் தீர்மானிக்கும் அல்லது அனுமானிக்கும் வழிமுறைகளை நடைமுறைப்படுத்தலாம் என அனுமதி வழங்குகின்றோம். இதனைத்தான் இமாம் ஷாபிஈ அவர்கள் தனது அருமையான அர்ரிஸாலா என்ற நூலின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை எச்சரித்துள்ளார்கள்.
இன்று சில நவீனவாதிகள் இஸ்லாமியக் குற்றவியல் தண்டனைகள் அவசியமற்றவை எனக் கூறுவதற்கும் இதுவே காரணமாகும். ஏனெனில் தண்டித்தல், குற்றவாளியை எச்சரித்தல் என்ற நோக்கங்கள் அபராத்தொகை மற்றும் சிறைச்சாலை என்பவற்றினால் நிறைவேறிவிடுகின்றன.
கணவன் மரணித்த அல்லது விவாகரத்துப்பெற்ற பெண் இத்தா இருப்பதன் நோக்கம் அவளது கருவை உறுதி செய்வதே என்பதனால் தற்போது மருத்துவப் பரிசோதனையின் மூலம் அதனை அறிமுடியும், எனவே இத்தா அனுஷ்டிப்பது அவசியமில்லை என சிலர் கூறுகின்றனர்.
ஆதாரத்தில் இடம்பெற்றதை விட்டுவிட்டு பதிலீட்டுக்குச் செல்ல வேண்டும் என நாம் கூறுவது, மார்க்க சட்டதிட்டங்கள் காலவரையறைக்குட்பட்டவை, தற்காலத்துக்கு பொருந்தமாட்டாது என வாதிடுவோருக்கு சார்பாக அமைந்துவிடும்.
பெறுமதியை வழங்குவதே இலகுவானது, ஏழைகளுக்குச் சிறந்தது எனக் கூறப்படுவது திட்டவட்டமான ஒன்றல்ல. தனது அடியார்களுக்கு மிக இலகுவானதும் பொருத்தமானதும் எது என்பதை அல்லாஹ்வே மிக அறிந்தவன். ஒரு காலத்தில் பணத்தை வழங்குவது சிறந்தாக மாறும் என்றிருந்தால் அவனது தூதரின் மூலம் அதனைத் தெளிவுபடுத்தியிருப்பான். தேவையான நேரத்தில் தெளிவுபடுத்தாமல் விடுவது கூடாது என்பதே அடிப்படை விதியாகும்.
அது மாத்திரமின்றி ஆதாரத்தில் இடம்பெற்றுள்ளதை விட்டுவிட்டு நமது பகுத்தறிவு கூறும் இலகுவான ஒரு விடயத்துக்கு நாம் தாவக்கூடாது. ”சிந்தனையினால் மார்க்கத்தை முடிவு செய்யலாம் என்றிருந்தால் காலுரையின் மேல்பகுதியை விட கீழ்ப்பகுதியே தடவுவதற்கு உகந்ததாகும்” என்ற அலி ரழி அவர்களின் பிரபலமான கூற்று இதற்குச் சான்றாகும்.
இதற்கு இன்னுமொரு உதாரணம்தான் ”வியாபாரமும் வட்டியைப் போன்றதுதானே” என்ற காபிர்களின் வாதமாகும். ஏனெனில் இரண்டும் கொடுக்கல் வாங்கல்தான்.
இவ்வாறு அவர்கள் வாதிட்ட போது இரண்டுக்கும் மத்தியிலுள்ள வேறுபாட்டைக் எடுத்துக்கூறி அல்குர்ஆன் அவர்களுக்கு மறுப்பு வழங்கவில்லை. மாறாக ”வியாபாரத்தை அல்லாஹ் அனுமதித்துள்ளான் வட்டியைத் தடைசெய்துள்ளான்” எனக் கூறி வேறுபாடு உங்களுக்குப் புரிந்தாலும் புரியாவிட்டாலும் அதன் நோக்கத்தை நீங்கள் அறிந்துகொண்டாலும் அறிந்துகொள்ளாவிட்டாலும் ஆதாரத்திலுள்ளதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அழகிய பாடத்தை அல்குர்ஆன் நமக்கு கற்றுத்தருகின்றது.
எனவே சரியான கருத்து என்னவெனில் ஆதாரம் தெளிவாகக் கூறுவதை மாத்திரமே ஸகாதுல் பித்ர் விடயத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். ஆழமானதொரு பொருளியல் ஆய்வை மேற்கொண்டால் இதுவே மிகவும் பலனுள்ளது எனத்தெரிய வரும். உரிய முறையில் நன்கு சிந்தித்தாலும் கூட உணவாக வழங்குவதில்தான், தற்காலத்தில் பேசப்படும் தனி மனித நலன்களை விட அதிகமான பொது நலன்கள் உள்ளன என்பதைப் புரிந்துகொள்ளமுடியும். ஆனால் அதனைச் சிந்திப்போர் மிகக் குறைவானோரே.
பெறுமதியைத் தீர்மானிப்பதற்கான அளவுகோள் யாது?
பெறுமதியை எவ்வாறு தீர்மானிப்பது என்பதற்கு அளவுகோல் இல்லை. பித்ராக அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கொடுக்கச் சொன்ன பேரீத்தம்பழம், உலர்திராட்சை, கோதுமை போன்றவற்றின் விலை பெறுமதிகள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று வித்தியாசமாகும். உதாரணமாக ஒரு சுண்டு கோதுமை விலை நூறு ரூபாய் ஆகும் அதேவேளை ஒரு சுண்டு பேரீத்தம் பழத்தின் பெறுமதி கிட்டத்தட்ட நானூறு ரூபாயாகவும் இருப்பதை காணலாம். மேலும் கோதுமையில் தொலிக்கோதுமையும் கொடுக்கப்பட்டது, கோதுமையும் கொடுக்கப்பட்டது.
இவை ஒவ்வொன்றும் பெறுமதியில் வித்தியாசமாக இருந்தது. எனவே பலவகையான பெறுமதியுள்ள பொருட்கள் இருக்கும் வேளையில் பண நிர்ணயமான தொகையை நிர்ணயிக்காமல் பல்வேறுபட்ட விலையுள்ள பொருட்களை அவரவரின் நிலைமைக்கேற்ப கொடுக்குமாறு நபியவர்கள் கட்டளையிட்டார்கள்.
எனவே நான்கு கைப்பிடிகள் என்ற அளவைத்தான் நிர்ணயித்துக் கூறியுள்ளார்கள். மாறாக பெறுமதியை அல்ல என்பது இங்கு தெளிவாகின்றது.
ஒரு வாதத்திற்கு பொருள்களின் பெறுமதியை கொடுக்கலாம் என்று வைத்துக்கொண்டால் எந்தப் பொருளின் பெறுமதியை வைத்து பணத்தை கணக்கிடுவோம் என்ற கேள்வி உருவாகும்.
ஏனென்றால் நான்கு கைப்பிடிகள் அளவு அரிசியின் விலை முந்நூறு ரூபாய் எனில் நான்கு கைப்பிடிகள் அளவு பேரீத்தம் பழத்தின் விலை கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் என்ற பெறுமதியில் இருக்கும். இப்போது இதில் எதை வைத்து பணத்தை வசூலிப்பது என்ற ஒரு பிரச்சினை ஏற்படும். எனவே இதுவெல்லாம் எமது சிந்தனையின் அடிப்படையில் உருவாகும் தத்துவங்கள்.
பணமாக வழங்கலாம் எனக் கூறுவோரின் வாதங்களும் பதில்களும்
கேள்வி 01
உணவாகக் கொடுப்பதை விட பணமாகக் கொடுப்பதனால் ஏழைகள் பெருநாளை சந்தோசமாகக் கொண்டாடலாமே?
பதில் :
இந்த வாதம் பல்வேறு விதங்களில் தவறாகும்.
முதலாவது
ஏழைகள் பெருநாளைக்கு புத்தாடை அணிந்து பிரியாணி சாப்பிட வேண்டுமென்பது ஸகாதுல் பித்ரின் நோக்கமல்ல. மாறாக அவர்களின் பிரதான உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்பதே நோக்கமாகும் என்பதை ஹதீஸில் இடம்பெற்றிருக்கும் (துஃமதன் லில்மஸாகீன்) ”ஏழைகளுக்கு உணவாக அமைவதற்காக” என்ற வார்த்தையைப் பார்க்கும் போது நன்கு புரிந்துகொள்ள முடியும்.
பணமாகக் கொடுத்தால் இந்நோக்கம் நிறைவேறமாட்டாது. அப்பணத்தை வைத்து அவர்கள் ஆடம்பரச் செலவுகளைச் செய்து வீணாக்கிவிட்டு பிறகு உணவுக்காகக் கையேந்தும் நிலை ஏற்படும். இந்நிலை ஏற்படுவதைத் தடுப்பதே இஸ்லாத்தின் குறிக்கோளாகும்.
உணவுக்காக ஸகாதுல் பித்ரை வழங்க வேண்டும் எனக் கூறியிருக்கும் போது நாம் பணத்தை வழங்கி அதனை ஆடைக்காகவோ வேறு எதற்கோ ஒருவர் பயன்படுத்தினால் அதற்கு நாம்தான் பொறுப்புக்கூற வேண்டும். அவ்வாறு இடம்பெறுவதனால் ஏழைகளுக்கு உணவாக அமைய வேண்டும் என்ற மார்க்கத்தின் மகாஸித் நிறைவேறவில்லை என மகாஸித் பேசுபவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஏழைகளின் கையில் பணம் சென்றால் இவ்வாறு சில துஷ்பிரயோகங்கள் நடைபெற வாய்ப்புள்ளதனால்தான் ஸகாத் வழங்குவோர் பணமாக வழங்காமல் பொருளாகக் கொடுக்கலாமா என தீர்ப்புக் கேட்கின்றனர். ஆனால் பொருளைக் கொடுக்குமாறு கூறும் போது இல்லை பணமாகக் கொடுக்கலாமா எனக் கேட்பது அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை என்பது போன்றே உள்ளது.
தற்போது பணமாகக் கொடுப்பதை வலியுறுத்துவோர்தான் ஸகாத்தைப் பணமாகக் கொடுக்காமல் பொருளாகக் கொடுக்க வேண்டும் என வாதிட்டவர்கள் என்பதையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இரண்டாவது
வணக்கங்களைச் செய்யும் போது நபிவழியில் செய்ய வேண்டும் என்பது மிகத்தெளிவான வழிகாட்டலாகும். ஆனாலும் குர்ஆன் சுன்னாவைப் பின்பற்றுகின்றோம், அதற்கு மாறு செய்வோர் பித்அத்வாதிகள் எனக் கூக்குரலிட்டுத் திரியும் சிலரும் கூட தனது பகுத்தறிவைப் பயன்படுத்தி இந்த இடத்தில் சருக்குவது ஆச்சரியமே.
மூன்றாவது
ஸகாதுல் பித்ரை உணவாகக் கொடுக்க வேண்டும் எனக் கூறுவதற்கும் ஏழைகள் பெருநாளைச் சந்தோசமாகக் கொண்டாட வேண்டும் என்பதற்குமிடையில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை. ஜகாதுல் பித்ர் தவிர்ந்த ஏனைய வழிமுறைகளின் மூலமாக தாராளமாக ஏழைகளின் கண்ணீரைத் துடைத்து அவர்களின் சந்தோசத்தில் பங்குகொள்ள முடியும். ஸகாதுல் பித்ர் வழங்கும் ஒவ்வொருவரும் அதனை வழங்கும் போது அதனுடன் சேர்த்து மேலதிகமான பணத்தையோ ஆடையையோ இனிப்புப் பண்டங்களையோ தாராளமாக வழங்கலாம். அதனை விட்டு விட்டு மார்க்கத்தில் தெளிவாகக் கூறப்பட்ட ஒன்றில் கைவைத்துவிடக் கூடாது.
கேள்வி 02
நபியவர்களின் காலத்தில் அரிசி வழங்கப்படவில்லை. அதனால் அரிசியை வழங்குவதும் ஆதாரத்துக்கு முரணானதல்லவா? அது முரணில்லாவிட்டால் பணம் வழங்குவதும் முரணல்ல.
பதில் :
இதற்கான பதில் குறித்த ஹதீஸிலே உண்டு. அபூ ஸயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் பெருநாள் அன்று ஒரு ஸாவு உணவை தர்மமாகக் கொடுத்து வந்தோம். அக்காலத்தில் தீட்டாத கோதுமையையும் உலர்ந்த திராட்சையும் பாலாடைக் கட்டியும் பேரீச்சம் பழமும்தான் எங்களின் உணவாக இருந்தன. ஸஹீஹ் புகாரி 1510.
மேற்கூறிய ஹதீஸிலுள்ள ”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் பெருநாள் அன்று ஒரு ஸாவு உணவை தர்மமாகக் கொடுத்து வந்தோம்.” என்ற வார்த்தை ஏதாவதொரு உணவைத் தர்மம் செய்வதைக் குறிப்பிடுகின்றது. அவர்களின் காலத்தில் காணப்பட்ட உணவுகள் ஹதீஸில் இடம்பெற்றுள்ளன அவ்வளவுதான். எனவே ஒவ்வொரு நாட்டிலும் புழக்கத்தில் உள்ள பிரதான உணவை வழங்குவதே கடமை என்பதை இலகுவாகப் புரிய முடியும்.
பணத்தை வழங்குவதற்கு அனுமதியிருந்தால் பொதுவாக குறித்த பெறுமதிமிக்க தீனார்களையம் திர்ஹம்களையும் வழங்குங்கள் எனக் கூறப்பட்டிருக்கும். ஏனெனில் அக்காலத்திலும் பணப்பரிமாற்றங்கள் இடம்பெற்றன. அதற்கான தேவையும் மக்களுக்கு இருந்தன.
கேள்வி 03
பணப்பரிமாற்றம் அக்காலத்தில் குறைவாகக் காணப்பட்டது. எனவேதான் உணவை வழங்குமாறு கூறப்பட்டது.
பதில் :
ஏன் குறிப்பிட்ட வகைகளை வழங்குமாறு கூறினார்கள் என்பதல்ல கேள்வி. பணத்தை வழங்குவதற்கான அனுமதியை வழங்கும் விததில் ஏன் வார்த்தைப் பிரயோகம் அமையவில்லை என்பதே கேள்வி.
இவ்வாதம் வேண்டுமென்றால் இஸ்லாம் அல்லாத வேறு ஒரு மதத்துக்குப் பொருந்தலாம். கியாமத் வரைக்கும் வரும் அனைவருக்கும் பொதுவான மதமாகிய இஸ்லாத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு மாத்திரம் சட்டம் சொல்லப்படுவதில்லை.
எதிர்காலத்தில் இவ்வாறானதொரு நிலமை தோன்றும் என்பதை அறிந்த அல்லாஹ்வால் அருளப்பட்டது. ஸகாதுல் பித்ரை பணமாக வழங்குவதில்தான் ஏழைகளின் நலன் இருப்பதாக இருந்தால் அதனை அல்லாஹ்வும் ரஸூலும் குறிப்பிட்டிருப்பார்கள்.
இதனால்தான் பல்வேறு சட்டங்களில் அக்காலத்திற்கும் இக்காலத்திற்கும் இடையில் எவ்வித வேறுபாடும் இல்லை.
உதாரணமாக பிரயாணத் தொழுகை. அன்று ஒட்டகத்தில் பயணம் செய்வதனால்தான் தொழுகையைச் சுருக்கலாம் இன்று குளிரூட்டப்பட்ட வண்டியில் செல்வதால் சுருக்க முடியாது எனக் கூறுவதில்லை. ஏனெனில் குர்ஆன் ஹதீஸ் பொதுவாகப் பிரயாணம் என்றுதான் கூறியுள்ளது.
எனவே பணத்தை வழங்க முடியுமென்றிருந்தால் அதற்கேற்றாற் போல் ஹதீஸின் வார்த்தைப் பிரயோகங்கள் அமைந்திருக்கும். அவ்வாறு அமையாததே பணத்தைக் கொடுக்க முடியாது என்பதற்கு தெளிவான ஆதரமாகும்.
ஸகாதுல் பித்ரை பொருளாக வழங்குவதோடு ஏழைகளின் ஏனைய தேவைகளுக்கு தானதர்மங்களை வழங்குவதன் மூலம் ஷரீஆவையும் பாதுகாக்க முடியும். ஏழைகளையும் பாதுகாக்கலாம். இரண்டையும் சாத்தியப்படுத்தும் வாய்ப்பு இருந்தும் ஒன்றை மாத்திரம்தான் செயற்படுத்துவோம் என வாதிடுவது அறிவுபூர்மான நடைமுறையாகத் தோன்றவில்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்.
கேள்வி 04
பல நபித்தோழர்கள் இமாம்கள் உட்பட ஹனபி மத்கபின் கருத்துப்படி இது அனுமதிக்கட்ட ஒன்றல்லவா? அவ்வாறிருக்கும் போது இதனை எவ்வாறு தவறு எனக் கூறலாம்?
பதில் :
இவ்வாதமும் பல்வேறு காரணங்களால் தவறானதாகும்.
முதலாவது
நபித்தோழர்கள் யாரும் ஸகாதுல் பித்ரை பணமாக வழங்கவில்லை. மாறாக முஆவியா ரழி அவர்கள், உணவின் தரத்தைப் பொறுத்து உயர்ரக கோதுமையாக இருந்தால் நான்கு கைப்பிடிகளுக்குப் பதிலாக இரு பிடிகளை மாத்திரம் வழங்கினார்கள்.
எனவே இதனை, பணத்தை வழங்குவதற்கு ஆதாரமாக முன்வைப்பது பொருத்தமற்றதாகும்.
முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் இச்செயல் தவறு, ஏற்றுக்கொள்ள முடியாது, நபியவர்களின் காலத்தில் வழங்கியது போல் அதே அளவைத்தான் வழங்குவேன் என அபூ ஸயீத் அல்குத்ரீ அவர்கள் கூறினார்கள். ஹாகிம் 1495
பெறுமதியை வழங்கலாம் என்றிருந்தால் அபூ ஸஈத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கருத்துக்கு உடன்பட்டிருப்பார்கள். எனவே தற்காலத்தில் இவர்கள் கூறும் இந்த வாதம் தவறு என்பதை நபித்தோழர்களே கூறிவிட்டனர்.
அடுத்து முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பெறுமதியைச் சேகரித்தாக இடம்பெறும் அறிவிப்பு தொடர்பறுந்த தடுமாற்றமிக்க பலவீனமான அறிவிப்பாகும். ஆதாரபூர்வமானது என வைத்துக்கொண்டாலும் அது ஜிஸ்யாவைக் குறிக்கும் என்பதே பலமான கருத்தாகும்.
இமாம் அஹ்மதின் நிலைப்பாடு
அடுத்து இமாம் அஹ்மத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் ஓர் அறிவிப்பிலும் இக்கருத்து இடம்பெற்றதாகக் கூறுகின்றனர். இதுவும் சம்பந்தமற்ற தகவலாகும். ஏனெனில் அவர்கள் பயிரின் ஸகாத் விடயத்திலே இதனைக் கூறினார்கள். ஆனால் இவர்களின் நிலைப்பாட்டுக்கு மாற்றமான நிலைப்பாட்டையே இமாம் அஹ்மத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியுள்ளார்கள்.
உமர் இப்னு அப்தில் அஸீஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறியதாகக் கூறி, பெறுமதியை வழங்கலாமா என சிலர் இமாம் அஹ்மத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் வினவியபோது யாருடைய பேச்சுக்காகவும் சுன்னாவுக்கு மாறுசெய்ய முடியாது. அவ்வாறு செய்வோர் சுன்னாக்களை மறுக்கும் கூட்டம் என்று கூறினார்கள். அல்முக்னீ 87/3
இமாம் புகாரியின் நிலைப்பாடு
இமாம் புகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தனது ஸஹீஹுல் புகாரியில், மேலே நாம் குறிப்பிட்ட பலவீனமான அறிவிப்பான முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கூற்றை எடுத்தெழுதியுள்ளார்கள். ஆனால் அதனை அவர்கள் ஸகாதுல் பித்ரின் பாடத்தில் கூறவில்லை. மாறாக கால்நடைகளின் ஸகாத் என்ற பாடத்தில்தான் கூறியுள்ளார்கள். ஜகாதுல் பித்ர் பாடத்தில் உணவு சம்பந்தமான ஹதீஸ்களை மாத்திரமே அறிவித்துள்ளார்கள். அங்கு முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கூற்றைக் குறிப்பிடவில்லை.
இதனால்தான் ஹனபீ மத்கபைச் சேர்ந்த, ஸஹீஹுல் புகாரியின் ஹதீஸ்களுக்கு விரிவுரை எழுதியோர் கூட இதனை தமது மத்கபுக்கு ஆதரவான கருத்தாகக் குறிப்பிடவில்லை.
இப்னு தைமிய்யா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இக்கருத்தை ஆதரித்தார்களா?
இறுதியாக தமது கருத்துக்குச் சார்பாக இப்னு தைமிய்யாவையும் சம்பந்தமில்லாமல் அழைத்துள்ளார்கள். இப்னு தைமிய்யா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் வியாபாரப் பொருட்களின் ஸகாத்தை பணமாக வழங்காமல் அதன் பெறுமதிக்கேற்ற பொருளை வழங்கலாமா எனக் கேட்கப்பட்ட கேள்விக்குத்தான், நலன்களைக் கருத்திற்கொண்டு வழங்கலாம் என தீர்ப்புக் கூறியுள்ளார்கள். பணத்தின் பெறுமதிக்கேற்ற பொருளை வியாபாரப் பொருட்களின் ஸகாத்தாக வழங்கலாம் என்பதைத்தான் இவர்கள் ஜகாதுல் பித்ருடன் பொருத்துகின்றனர். இது அறிவியல் மோசடியாகும். தெரியாமல் செய்திருந்தாலே தவிர.
இவ்வாறு நாம் கூறும் போது அதில் கியாஸ் செய்ய முடியாதா என சிலர் கேட்கின்றனர். இது எவ்வளவு பெரும் தவறான கேள்வியென்பதை அவர் சிந்தித்திருந்தால் இவ்வாறு கேட்க முடியாது. கியாஸ் என்பது மார்க்க ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டுதான் செய்யப்பட வேண்டுமே தவிர அறிஞர்களின் கூற்றுக்களையும் பத்வாக்களையும் வைத்து அல்ல என்பது மிகத் தெளிவான பிக்ஹ் கலையின் விதிமுறையாகும். எனவே இந்த வாதமும் தவறு என்பது நிரூபனமாகின்றது.
அவ்வாறெனில் இறுதியாக இவர்களுக்கு எஞ்சியிருப்பது ஹனபி மத்கப் மற்றும் தாபிஈன்களான இமாம் ஹஸனுல் பஸரீ ரஹ்மதுல்லாஹி அலைஹி மற்றும் உமர் இப்னு அப்தில் அஸீஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி ஆகியோரின் கூற்றுக்கள் மாத்திரமே.
உமர் இப்னுல் அப்தில் அஸீஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கூற்றை முன்வைத்து பணமாகக் கொடுக்கலாமா என இமாம் அஹ்மத் அவர்கள் என்ன கருத்தைக் கூறினார்களோ அதனையே நாமும் கூறுகின்றோம். சில மனிதர்களின் கருத்துக்களுக்காக நபியவர்களுக்கு எவ்வாறு மாற்றம் செய்யலாம்?
எனவே ஸகாதுல் பித்ரை பணமாகக் கொடுப்பது தெளிவான ஆதாரத்துக்கும் ஷரீஆவின் இலக்குகளுக்கும் முரணாக அமைந்த விடயமாகும் என்பதை இலகுவாகப் புரிந்துகொள்ளலாம். இந்த விடயத்தில் இஜ்திஹாத் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். இதனை நாமாகக் கூறவில்லை. இமாம் நவவி ரஹ் அவர்கள் கூறுவதை இப்னு ஹஜர் ரஹ் அவர்கள் தனது பத்ஹுல் பாரியில் பின்வருமாறு பதிவுசெய்துள்ளார்கள்.
“இரண்டு முத்துகளை வழங்க வேண்டுமென்ற முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் நிலைப்பாட்டை அபூ ஸஈதுல் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மறுத்த அந்த செய்தியில் நேரடி ஆதாரத்தை வைத்துக்கொண்டு இஜ்திஹாத் செய்யக்கூடாது என்பதைப் புரியமுடியும். முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் நிலைப்பாடும் அவரது கருத்துடன் மக்கள் உடன்பட்டதும் இஜ்திஹாத் செய்வது அனுமதிக்கப்பட்டது என்பதை உணர்த்துகின்றது.அது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் தெளிவான ஆதாரம் உள்ள போது கவனத்தில் கொள்ளப்படமாட்டாது.” பத்ஹுல்பாரீ 3/374
அல்லாஹ்வே மிக அறிந்தவன். நிறைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே. குறைகள் என்னையே சாரும்.
source: http://www.islamkalvi.com/?p=124221