ஸதக்கத்துல் ஃபித்ரு என்றால் என்ன?
அப்துர் ரஹ்மான் உமரி
யாரெல்லாம் கொடுக்கவேண்டும்?
எப்போதுகொடுக்கவேண்டும்?
எவற்றைக்கொடுக்கவேண்டும்?
உணவுப் பொருள் என்பதை எவ்வாறு புரிந்துகொள்வது?
ஸகாத்துல் ஃபித்ரு கொடுப்பதற்கு என்ன காரணம்?
நிர்ணயிப்பது சரியா?
இறைமறை குர்ஆனின் வழிகாட்டுதல்
ஸதக்கத்துல் ஃபித்ரு என்றால் என்ன?
அப்துர் ரஹ்மான் உமரி
ஈகைத்திருநாள் என்னும் ஈதுல் ஃபித்ரு அன்று ஏழை-எளியோருக்கு வழங்க வேண்டிய கொடை ஸதக்கத்துல் ஃபித்ரு அல்லது ஸகாதுல் ஃபித்ரு எனப்படுகின்றது.
ரமழான் மாத நோன்புகளை வைத்து முடித்த பிறகு கொடுக்கப்படுவதால் இது ஸதக்கத்துல் ஃபித்ரு எனப்படுகின்றது.
ரமழான் மாத நோன்புகளில் நாம் இழைத்துவிடும் சிறுசிறு குற்றங்களுக்கு பரிகாரமாக இது அமைகின்றது. ஏழை எளிய முஸ்லிம்களும் ஈதுப்பெருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும். இல்லாமை அவர்களுடைய சந்தோஷத்திற்கு தடையாக ஆகிவிடக் கூடாது என்பதும் ஒரு முக்கிய காரணம். (அபுதாவுது, இப்னு மாஜா)
எச்செயலையும் ஃபிக்ஹு வட்டத்திற்குள் நின்றவாறே யோசிக்காமல் – கூடும் கூடாதா? என்னும் வரையறையைத் தாண்டி இஸ்லாமிய அடிப்படைகளை மனதிற்கொண்டு சற்றே பரந்தளவில் சிந்தித்துப் பழக வேண்டும். அவ்வகையில் இதுதொடர்பான சில அம்சங்களை அணுகிப் பார்ப்போம்.
யாரெல்லாம் கொடுக்கவேண்டும்?
முஸ்லிமான ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், பெரியவர்கள், பச்சிளம் குழந்தைகள், வயதானோர் அனைவரும் கட்டாயம் கொடுத்தாக வேண்டும். (புகாரி, முஸ்லிம், அபுதாவுது, நஸாயி, திர்மிதீ, அஹ்மத்)
தான-தருமம் பெறத் தகுதியில்லாத அனைவரும் ஸதக்கத்துல் ஃபித்ரு கொடுத்தாக வேண்டும். இவ்வளவு இருந்தால்தான் கொடுக்க வேண்டும் என்னும் நிபந்தனை எல்லாம் கிடையாது.
ஒரு நாளுக்கு அதிகமான உணவு வீட்டில் இருந்தால் ஸதக்கத்துல் ஃபித்ரு கொடுத்தாக வேண்டும். கடன் வாங்க முடிந்தால் கடன் வாங்கி ஸதக்கத்துல் ஃபித்ரு கொடுக்க வேண்டும்.
எப்போதுகொடுக்கவேண்டும்?
ஈது தொழுகைக்காக தொழுகைத்திடலுக்கு போவதற்கு முன்னால் கொடுத்து விட வேண்டும். அப்போதுதான் கடமை நிறைவேறும். தொழுத பிறகு, கொடுத்தால் தான-தருமமாகக் கருதப்படுமே ஒழிய, ஃபித்ரு கடமையை நிறைவேற்றியதாக ஆகாது.
எவற்றைக்கொடுக்கவேண்டும்?
உணவுப் பொருளை வழங்குமாறு நபிமொழிகள் குறிப்பிடுகின்றன. உணவுப் பொருட்களென ஏழு பொருட்கள் குறிக்கப்படுகின்றன. அவை;
(1) தீட்டாத கோதுமை
(2) பேரித்தம் பழம்
(3) சோளம்
(4) பாலாடைக் கட்டி
(5) உலர்ந்த திராட்சை
(6) வறுக்கப்பட்ட தானிய மாவு
(7) கோதுமை மாவு
(8) அந்தந்த நிலப்பகுதியின் உணவுப்பொருள்.
இப்பொருட்களில் இருந்து ஏறக்குறைய 2650 கிராம் (இரண்டே முக்கால் கிலோ) அளவு கொடுக்க வேண்டும்.
உணவுப் பொருள் என்பதை எவ்வாறு புரிந்துகொள்வது?
உணவுப் பொருள் என்பதை வாழ்வு முறையோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அக்கால மதீனா லைஃப் ஸ்டைல் வேறு, நமது இன்றைய லைஃப் ஸ்டைல் வேறு என்பதை விளக்க வேண்டியதில்லை
நமது வழக்கு மொழியில் சாதாரண நாள் வேறு, பண்டிகைக்கால பெருநாள் வேறு. பண்டிகைப் பெருநாளன்று நீங்களும் நானும் முருங்கைக் காய் சாம்பாரோடு புழுங்கல் அரிசிச்சோறு சாப்பிடுவது இல்லை.
ஆனால் அன்றைய நிலை இவ்வாறன்று. அன்றாடம் உண்ணும் சாதாரண உணவுப்பொருளையே பண்டிகை அன்றும் உண்டார்கள்
அதுகூட இல்லாத நிலைமைகளையும் கடந்துசென்றார்கள். ‘வாணாளில் ஒருமுறைகூட சலித்த கோதுமையைப் பயன்படுத்தி தோய்க்கப்பட்ட ரொட்டியை அண்ணலார் உண்டதே இல்லை’ என்பதை வரலாறு.
சுநாமி தாக்கியபோது மீனவர்களுக்கு வழங்கப்பட்ட அரிசிச் சோற்றை அவர்கள் தயங்கித் தயங்கித்தான் உண்டார்கள். ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரை அது ‘ஆடம்பர உணவு’.
பழைய சோற்றை ஒரு துண்டு கருவாட்டோடு உண்ணப் பழகியவர்கள் அவர்கள்.
கருவாட்டைக் கேட்டால் உணவு வழங்கும் தன்னார்வலர்கள் ‘இவ்வளவு சோகத்திலும் கருவாடு கேட்கின்றதா?’ என எண்ணுகிறார்கள். காரணம் அவர்களைப் பொறுத்தவரை கருவாடு என்பது வழக்கத்திற்கு மாற்றமான ஸ்பெஷல் உணவு.
ஆகையால் இந்த ஃபித்ரு ஸகாத்தின் இலக்கணத்தை கொஞ்சம் விரிவுபடுத்தி ‘பெறும் நிலையில்’ நம்மை வைத்துப்பார்த்து வழங்கினால் நலம் என்பதையே சொல்ல வருகின்றோம்
வழங்கப்படுகின்ற இரண்டரைக் கிலோ அரிசியை நீங்கள் ‘பெற்றுக் கொண்டால்’ என்ன செய்வீர்கள்?
ஏற்கனவே ரேஷன் கடைகளில் 15 கிலோ, 20 கிலோ அரிசி கொடுக்கப் படுகின்றது.
தற்போதைய கொரோனா காலத்தில் 40, 45 கிலோ அரிசியும் சில இடங்களில் கொடுக்கப்பட்டுள்ளது.
இப்போது ஃபித்ரு அரிசி இரண்டரைக் கிலோவை வைத்துக் கொண்டு என்ன செய்வது?
யோசித்துப் பார்க்க வேண்டாமா?
சின்ன கணக்கு ஒன்று.
உங்கள் வீட்டில் நான்கு நபர்கள். பெருநாள் அன்று பிரியாணிக்கும் மற்ற செலவினங்களுக்கும் எவ்வளவு செலவாகின்றதோ ஏறக்குறைய அதே அளவு கொடுப்பதுதானே, முறை? அதுதானே நியாயம்?
1000 ரூபாய் கொடுத்து ஆட்டுக்கறி எடுத்து நீங்கள் உண்பீர்கள். ஆனால் உங்கள் ஃபித்ரு ஸதகாவைப் பெற்றவர் மட்டும் வெண்டைக் காய் குழம்பை உண்ண வேண்டுமா?
இன்று அமைப்புகள் தலையெடுத்த பிறகு அவர்கள் ‘பிரியாணிக் கிட்டைத்’தான் கொடுக்கிறார்கள். ஆனால் அது முறையாகப்படவில்லை. ஏனெனில் பத்து பேரிடம் பெற்ற தொகையைக் கொண்டு மூன்று நபர்களுக்கு ‘கிட்’ தரப்படுகின்றது.
ஓராளிடம் பெற்ற தொகை ஓராளுக்கு போதுமானதாக இருக்க வேண்டும், அதுவே முறை என்கிறோம்.
ஸகாத்துல் ஃபித்ரு கொடுப்பதற்கு என்ன காரணம்?
ரமழான் பொழுதுகளில் நேர்ந்த சிறுசிறு பிழைகள், சிறு சிறு சலனங்களால் காயம்பட்ட நோன்பினை ‘சீராக்கவே’ ஸகாத்துல் ஃபித்ரு கொடுக்கப்படுகின்றது. (இப்னு அப்பாஸ்/ ஸுனன் அபூ தாவுது)
எவ்வளவு அழகிய காரணம் பின்னணியில் உள்ளது?
அப்படியென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?
அழகிய முறையில் முடிந்தளவு நிறைய அள்ளிக் கொடுக்க வேண்டும் அல்லவா?
இரண்டரைக் கிலோ கோதுமையையா கொடுப்பீர்கள்?
எல்லா ரேஷன் கடைகளிலும் கோதுமையை யாரும் வாங்காமல் கேட்டுக் கேட்டு கொடுக்கிறார்கள். அரிசி போன்றல்ல, நல்ல கோதுமையை.
யாரும் சீந்தாத கோதுமையைக் கொடுத்து ஒரு ‘வழிபாட்டை’ நிறைவேற்ற முடியுமா?
.
நிர்ணயிப்பது சரியா?
இன்னொரு கோணத்திலும் இதனை அணுகலாம்.
ஸதக்கத்து ல்ஃபித்ரு இவ்வளதான் என நிர்ணயிப்பது ஷரீஅத்தில் வழிகாட்டப்படவில்லை. ஒவ்வொருவருடைய வாழ்க்கை முறையும் வசதிகளும் வேறுபடுகின்றன. நம்முடைய வசதிவாய்ப்பு, செல்வ நிலைமை, வாழ்க்கைமுறை போன்றவற்றை கருத்தில் கொண்டு மேற்கண்ட பொருட்களில் நமக்குரிய நம்மால் இயலுகின்ற பொருளின் அளவு ஸதக்கத்துல் ஃபித்ரு கொடுக்கவேண்டும்.
மேற்கண்ட பொருட்களில் உங்களால் கொடுக்க இயலுகின்ற விலை உயர்ந்த பொருளைக் கொடுக்கவேண்டும் என இமாம் அபுஹனீஃபா (ரஹ்) கூறியுள்ளார்கள்.
பொதுவாக இரண்டரைக் கிலோ நடுத்தர கோதுமையின் விலையே நிர்ணயிக்கப்படுகின்றது. ஏறக்குறைய 100 அல்லது120 ரூபாய். கூலி வேலைக்குப் போகின்ற முஸ்லிமும் 100 ரூபாய் கொடுக்கிறார். மிகப்பெரிய பணக்காரரும் அதே 100 ரூபாய் தான் கொடுக்கிறார்
சாதாரண பருப்பு குழம்போடு தன்னுடைய உணவை முடித்துக் கொள்கின்ற ஏழை முஸ்லிம்களும் 100 ரூபாய் ஸதக்கத்துல் ஃபித்ரு கொடுக்கிறார்கள். அன்றாடம் நான்-வெஜ் சாப்பிடுகின்ற முஸ்லிம்களும் 100ரூபாய் ஸதக்கத்துல் ஃபித்ரு கொடுக்கிறார்கள்.
இறைமறை குர்ஆனின் வழிகாட்டுதல்
அல்லாஹ்வின் வேதமான அல்குர்ஆன் இதற்கு வழிகாட்டுகின்றது. “தன்மனைவியை ஒருவர் தலாக் சொல்லிவிட்டால் அவரால் முடிந்த அளவு உதவித் தொகையை வழங்க வேண்டும். “செல்வம் படைத்தவன் அவனுக்குத் தக்க அளவும், ஏழை அவனுக்குத் தக்கஅளவும் கொடுத்து, நியாயமான முறையில் உதவிசெய்தல் வேண்டும்; இது நல்லோர் மீது கடமையாகும்” (அல்குர்ஆன் 2-236)
தரத்திற்கும் தகுதிக்கும் ஏற்ப உதவித்தொகை வழங்கவேண்டும் என குர்ஆன் சொல்கின்றது.
தலாக் என்பது வெறுப்பு ஏற்பட்டபிறகு, நடைபெறும் செயல். அப்போது கூட முடிந்த அளவு உதவித்தொகையை அளிக்குமாறு குர்ஆன் சொல்கிறது.
ஸதக்கத்துல் ஃபித்ரு என்பதோ விருப்போடு செய்யும் செயல். குர்ஆன் சொல்லும் நியதியை கருத்தில் கொண்டால் இங்குதான் அதிகமாக சக்திக்கு ஏற்றவாறு கொடுத்தாக வேண்டும்.
ஆகையால், ஷரீஆ சொல்ல வருகின்ற கருத்தை மனதிற் கொண்டு 100 ரூபாயோடு ஸதக்கத்துல் ஃபித்ரை நிறுத்திக்கொள்ளாமல் நம்முடைய தகுதிக்கு ஏற்ப தலைக்கு 250, 300, 500, 800, 1000, 1200, 1500, 2000, 3000, 5000 என மனப்பூர்வமாக வழங்குவோம்.
ஏழை முஸ்லிம்களும் நம்மோடு சந்தோஷமாக ஈது கொண்டாட வழிவகை செய்வோம்.
– அப்துர் ரஹ்மான் உமரி