துவங்கி விட்டது ரமளானின் கடைசி பத்து இரவுகள்
ரமளான் மாதத்தின் கடைசி பத்து இரவுகள் மிகவும் முக்கியமானவை. “லைலத்துல் கத்ர்” எனப்படும் இரவும், இந்த பத்து நாட்களிலேயே உள்ளது.
இந்த பத்து இரவுகளில் குறிப்பிட்ட ஒரு இரவை, நாம் லைலத்துல் கத்ர் இரவாகக் கொண்டாலும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியபடி, “எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது,பின்னர் அது மறக்கடிக் கப்பட்டு விட்டது. எனவே, நீங்கள் கடைசி பத்து இரவுகளில் ஒற்றைப்படையான இரவுகளில் அதனைத் தேடுங்கள்,” என்றார்கள்.
“ரமலான் கடைசி பத்து நாட்களில் உள்ள ஒற்றை இரவுகளில் லைலத்துல் கத்ர் இரவைத் தேடுங்கள்,” என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியார் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் அறிவித்திருக்கிறார்கள்.
இப்படி, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், கடைசி பத்து நாட்களின் ஒற்றைப்படையான இரவுகளில் இந்த இரவை அடைந்து கொள்ளுமாறு கூறினாலும், அதை அடைந்து கொள்வதற்கு, செயலில் வழிகாட்டும் போது, கடைசி பத்து நாட்கள் முழுவதிலும் முயற்சி செய்து காட்டியுள்ளதைக் காணலாம்.
ரமளான் கடைசி பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் வேட்டியை இறுகக் கட்டிக் கொள்வார்கள். அல்லாஹ்வைத் தொழுது இரவை உயிர்ப்பிப்பார்கள். அல்லாஹ்வை வணங்குவதற்காக தன் குடும்பத்தாரையும் எழுப்பி விடுவார்கள்,” என்கிறார்கள் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்.
ரமளான் மாதத்தில் அதிக அளவு தொழுகை நடத்த வேண்டும். அதிலும் கடைசி பத்து இரவுகளில் மேலும் மேலும் தொழுகையை அதிகப்படுத்த வேண்டும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. நோன்பின் கடைசி நாட்கள் துவங்கி விட்டது.
ரமளானின் கடைசி பத்து நாட்களின் சிறப்பு
எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!
அவனே மாண்பு, மகத்துவம், நிலைத்திருத்தல், பெருமை, கண்ணியம் ஆகியவற்றில் தனித்துவம் பெற்றுத் திகழ்பவன். ஒரே இறைவன்.,
ஏகன்., வல்லமை மிக்க அதிபதி. எவரிடத்தும் எத்தேவையும் இல்லாத அரசன்.
கற்பனையால் கூட நெருங்முடியாத அளவு உயர்ந்தவன்.
அறிவாலும் சிந்தனையால் கூட அறிந்திட முடியாத அளவு மகத்துவமும் மாண்பும் மிக்கவன்.
தன்னுடைய அனைத்துப் படைப்புகளை விட்டும் தேவைகள் அற்றவனாய் தன்னிறைவு உடையவனாய்த் திகழ்பவன்!
அவனல்லாதார் என்றென்றும் அவனிடம் தேவையுடையவராய் உள்ளனர்! தான் நாடியவர்களுக்கு நல்லருள்பாலிப்பவன்!
அப்படிப்பட்டவர்கள் அவன் மீது விசுவாசம் கொண்டனர்., நேர்வழியில் நிலைத்து நின்றனர். பிறகு தம்முடைய இறைவனோடு உரையாடும் இன்பத்தைப் பெற்றனர்.,
நித்திரையின் இன்பத்தைத் துறந்தனர்! ஆனாலும் நல்லவர்களோடு தோழமை கொண்டனர்!
இரவுத் தொழுகைக்காகப் படுக்கைகளை விட்டும் எழுகின்றனர்.
உயர் அந்தஸ்து பெற ஆர்வம் கொள்கின்றனர்.
இருள் சூழ்ந்த இரவு நேரத்தில் இதோ! அவர்கள் ஆன்மீகப் பயணம் புறப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்க வேண்டுமே!
அங்கே ஒருவர், தனது குற்றங்குறைகளைப் பொறுத்தருளுமாறு இறைவனிடம் இறைஞ்சிக் கொண்டிருக்கிறார்.
மற்றொருவர் தனது ஆற்றாமையை முறையிட்டுக் கொண்டிருக்கிறார்.
இன்னொருவரோ எதையும் இறைவனிடம் இறைஞ்சாமல் அவனை திக்ர் செய்வதிலேயே ஈடுபட்டிருக்கிறார்.
மக்கள் எல்லாம் நித்திரையில் மூழ்கியிருக்கும்பொழுது இவர்களை மட்டும் விழித்தெழச் செய்திருக்கும் அந்த இறைவனை நான் துதிக்கிறேன்!
மன்னித்துப் பொறுத்தருளிய இறைவன் மிகவும் அருட்பாக்கியம் உடையவன்! அவனே குற்றங்குறைகளை மறைத்து உதவி புரிந்தான்.
எல்லா மக்கள் மீதும் எல்லா உப காரங்களையும் பொழிந்தான்!
அவன் பொழிந்த மகத்தான அருட்கொடைகளின் பேரில் அவனை நான் புகழ்கிறேன்., அவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.,
இஸ்லாம் எனும் அருட்கொடையைப் பாதுகாக்குமாறு அவனிடம் இறைஞ்சுகிறேன்!
வணக்கதிற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இல்லை என்று சாட்சியம் அளிக்கிறேன்.
அவன் தனித்தவன்., அவனுக்கு யாதொரு இணையுமில்லை.
அவனது உதவியால் யார் கண்ணியம் பெற்றாரோ அவர் வலிமை பெற்றுவிட்டார். எவ்வித அநீதிக்கும் அவர் ஆளாக மாட்டார்.
அவனுக்கு அடி பணியாமல் ஆணவம் கொண்டவர் பாவங்கள் புரிந்தவர் இழிவுக்கும் கேவலத்துக்கும் ஆளாகிவிட்டார்.
மேலும் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் அடியார், (ஹலால் – ஹராம்) ஆகுமான, விலக்கப்பட்ட எல்லா விஷயங்களையும் தெளிவுபடுத்திய தூதர் என்றும் சாட்சி சொல்கிறேன்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் குகையில் சிறந்த பயணத்தோழராய்த் திகழ்ந்த அபூ பக்ர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு மீதும் – சீரான கருத்துகளின் பால் வழிகாட்டப்பட்டவரான உமர் ரளியல்லாஹு அன்ஹு மீதும்- துன்பங்களைப் பொறுமையோடு சகித்துக் கொண்டவரும் எதிரிகளின் கரங்களால் சஹாதத் (உயிர்த் தியாகம்) எனும் பெரும் சிறப்புப் பெற்ற வருமான உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு மீதும் நபியவர்களுடைய பெரிய தந்தை அபூ தாலிபின் புதல்வர் அலீ ரளியல்லாஹு அன்ஹு மீதும் – அனைத்து ஸஹாபாக்கள் மீதும் அவர்களை வாய்மையுடன் பின்பற்றிய தாபிஈன்கள் மீதும் கீழ்வானில் தாரகைகள் மறைந்து கொண்டிருக்கும் காலெமெல்லாம் அல்லாஹ் ஸலவாத் பொழிந்து கொண்டிருப்பானாக! அனைவருக்கும் ஈடேற்றம் அளிப்பானாக!
சகோதரர்களே!
இப்போது ரமளான் மாதத்தின் கடைசி பத்து நாட்கள் உங்களிடம் வந்திருக்கின்றன. இந்நாட்களில் அதிக நன்மைகளும் நற்கூலிகளும் உள்ளன! இவற்றிற்குப் பற்பல சிறப்புத் தன்மைகளும் உண்டு. அவை பிரபலமானவை., மகத்தானவை. அத்தகைய சிறப்புகளில் ஒன்று என்னவெனில்,
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்நாட்களில் அமல் செய்வதில் அழுத்தமான முயற்சியுடன் ஈடுபடுபவர்களாய் இருந்தார்கள். மற்ற நாட்களைக் காட்டிலும் அதிகமாக!
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ரமளான்) கடைசி பத்து நாட்களில் அமல் செய்வதில் அழுத்தமான முயற்சியுடன் ஈடுபடுபவர்களாய் இருந்தார்கள். வேறு நாட்களில் இது போன்ற முயற்சியை அவர்கள் மேற்கொண்டதில்லை’ (நூல்: முஸ்லிம்) மேலும் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘(ரமளானின் கடைசி)பத்து வந்து விட்டால் நபி(ஸல்)அவர்கள் கச்சை கட்டிக் கொண்டு அவற்றின் இரவுகளை விழித்திருந்து கழிப்பார்கள்., தம் குடும்பத்தினரையும் விழித்தெழச் செய்வார்கள்’ (நூல்: புகாரி, முஸ்லிம்)
மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறுதிப் பத்தின் இரவுகளில் வரிந்து கட்டிக் கொண்டு செயல்படுகிறவர்களாய் இருந்தார்கள். இதன் பொருள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையிலும் திக்ரிலும் முழுமையாக ஈடுபடுவதற்காகத் தம் மனைவியரை விட்டும் விலகியிருப்பார்கள் என்பதாகும்.
மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த நாட்களில் இரவு முழுவதும் விழித்திருந்து தொழுகையிலும் குர்ஆன் ஒதுவதிலும் திக்ர் செய்வதிலும் ஈடுபாட்டிருப்பார்கள்!
அவர்கள் திக்ர் செய்வது உள்ளம், நாவு மற்றும் உறுப்புகளால் மேற்கொள்ளப்படுவதாக இருந்தது! நபியவர்கள் இவ்வாறு ஈடுபட்டதற்குக் காரணம் இந்த இரவுகளின் சிறப்புதான்.
மேலும் லைலத்துல் கத்ர் இரவைத் தேடிப் பெறுவதும் ஒரு காரணமாகும். அது எத்தகைய இரவெனில், அதில் இறைநம்பிக்கையுடனும் மறுமைக் கூலியை எதிர்பார்த்தும் எவர் தொழுகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னித்து விடுகிறான்!
மேலே சொன்ன நபிமொழியின் வெளிப்படையான கருத்து என்னவெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமளானின் நாட்களில் இரவு முழுவதும் தன் இரட்சகனுக்கு வணக்க வழிபாடுகள் செலுத்துவதில் ஈடுபட்டிருப்பார்கள் அதாவது திக்ர் செய்வதில், குர்ஆன் ஓதுவதில் தொழுவதில், இவற்றிற்காக தயாராகுவதில் இவை போன்றவற்றில் இரவு முழுவதும் ஈடுபட்டிருப்பார்கள்., ஸஹர் எனும் பின்னிரவு நேரத்தில் உண்பதும் இவற்றில் அடங்கும்.
இந்த விளக்கத்தின் மூலம் இந்த நபிமொழிக்கும் – நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த இரவிலும் காலைவரை தொழுது கொண்டிருந்ததாக நான் அறியவில்லை என்கிற ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் மற்றோர் அறிவிப்புக்கும் (நூல்:ஸஹீஹ் முஸ்லிம்) கருத்தொற்றுமை ஏற்படுகிறது!
ஏனெனில் கடைசிப் பத்தில் கடைப்பிடிக்கப்பட்ட இஹ்யாவுல் லைல் – இரவு முழுவதும் விழித்திருந்து வழிபடுதல் என்பது, தொழுவதைக் கொண்டும் பிற வகை வழிபாடுகளில் ஈடுபடுவதைக் கொண்டும் அமைவதாகும். ஆனால் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மறுத்திருப்பது நபியவர்கள் தொழுகையில் மட்டும் ஈடுபட்டு இரவைக் கழித்தார்கள் என்பதைத்தான்! – அல்லாஹ் மிக அறிந்தவன்!
மேலும் கடைசிப் பத்து நாட்களின் சிறப்பு குறித்து இந்நபி மொழிகள் எடுத்துரைப்பது என்னவெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த நாட்களின் இரவுகளில் தொழுவதற்காகவும், திக்ர் செய்வதற்கவும் தங்கள் குடும்பத்தினரைத் தூக்கத்திலிருந்து எழுப்புவார்கள் என்பதாகும். அந்த அளவுக்கு பாக்கியமிக்க இந்த இரவுகளை அரிதாகக் கருதுவதிலும் பொருத்தமான வழிபாடுகளை நிறைவேற்றுவதிலும் ஆர்வம் உள்ளவர்களாக இருந்தார்கள். எனவே இந்த இரவுகள் அல்லாஹ்வின் நற்பாக்கியம் பெற்ற மக்களுக்கு வாழ்நாளின் அரியதொரு அவகாசம். பேறற்கரிய புதயல்!
மதிப்புமிக்க இந்த வாய்ப்பினைத் தானும் அடையாமல் தன் குடும்பத்தினரும் அடையாமல் கை நழுவிப்போகச் செய்வது, அறிவுடைய எந்த நம்பிக்கையாளருக்கும் உகந்ததல்ல!
இவை ஒருசில குறிப்பிட்ட இரவுகள்தாம்! இந்த இரவுகளில் தன் இறைவன் புறத்திலிருந்து வீசும் சுகந்தங்களில் ஒன்றைச் சில நேரம் மனிதன் பெற்றிடலாம்! அது இவ்வுலகிலும் மறுமையிலும் அவனுக்குப் பெரும் பாக்கியமாக அமைந்து விடும்!
ஆனால் முஸ்லிம்களின் நிலை அதிகக் கவலைக்குரியதாகவும் பெரிய துர்ப்பாக்கியமாகவும் உள்ளது. அவர்கள் மதிப்புமிக்க இந்த இரவுகளை எவ்விதப் பயனுமின்றி கழித்துக்கொண் டிருப்பதை நீங்கள் காணலாம்!
இரவில் வெகுநேரம் வரை கண்விழித்திருந்து வீணான கேளிக்கைகளில் மூழ்கி இருக்கிறார்கள். தொழுகையில் நிற்கும் நேரம் வந்துவிட்டால் தூங்கச் சென்று விடுகிறார்கள்! ஏராளமான நன்மைகளை வீணாக்கி விடுகிறார்கள்.
இந்த வருடம் போய்விட்டால் இனியொரு தடவை அவர்களால் இந்த ரமளானைப் பெறமுடியாமல் போகலாம்! இது சைத்தான் அவர்களை விளையாடி விட்டதன் விளைவாகும். சைத்தான் தனது சூழ்ச்சி வலையில் அவர்களைச் சிக்கவைத்ததனால் அல்லாஹ்வின் வழியை விட்டு அவர்களைத் தடுத்து திசை திருப்பியதனால் நேர்ந்த தீய கதியாகும்!
அல்லாஹ் கூறுகிறான்: ‘(ஷைத்தானை நோக்கி) திண்ணமாக என்னுடைய (வாய்மையான) அடியார்கள் மீது உனது அதிகாரம் செல்லுபடியாகாது., ஆனால் எவர்கள் உன்னைப் பின்பற்றி வழிகெட்டுப் போகிறார்களோ அவர்களின் மீதே தவிர!’ (15:42)
ஓர் அறிவாளி அல்லாஹ்வை விடுத்து சைத்தானை தனது பாதுகாவலனாக – நேசத்திற்குரியவனாக ஆக்கிக் கொள்ளமாட்டான் தன்னோடு அவன் பகைமை கொண்டிருப்பதை அறிந்து கொண்டே அப்படிச் செய்வது திண்ணமாக அறிவுக்கும் இறைநம்பிக்கைக்கும் முரணானதாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: நீங்கள் என்னை விடுத்து அவனை (ஷைத்தானை)யும் அவனுடைய சந்ததிகளையும் உங்கள் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொண்டீர்களா? அவர்களோ உங்களின் பகைவர்களாய் உள்ளனரே! எத்தனை மோசமானதொரு மாற்றை இந்தக் கொடுமையாளர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்’ (18 : 50)
திண்ணமாக ஷைத்தான் உங்களின் பகைவனாவான். ஆகையால் நீங்கள் அவனை உங்கள் பகைவனாகக் கருதுங்கள். அவன் தன்னைப் பின்பற்றுபவர்களை அழைத்துக் கொண்டிருப்பது அவர்கள் நரகவாசிகளாய் ஆகிடவேண்டும் என்பதற்காகத்தான்!’ (அல்குர்ஆன் 35 : 6)
இஃதிகாஃப்
இந்த இறுதிப் பத்து நாட்களின் இன்னொரு சிறப்பு என்னவெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள் என்பதாகும்.
இஃதிகாஃப் என்பது அல்லாஹ்வின் வழிபாட்டிலேயே முழுமையாக ஈடுபடுவதற்காக மஸ்ஜிதில் தங்கிவிடுவதாகும். இப்படிச் செய்வது குர்ஆன் மற்றும் ஹதீஸின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட நெறிமுறைகளின் பாற்பட்டது!
அல்லாஹ் கூறுகிறான்: ஆனால் மஸ்ஜித்களில் நீங்கள் இஃதிகாஃப் இருக்கும் நிலையில் மனைவியரோடு வீடு கூடாதீர்கள்’ (அல்குர்ஆன் 2 : 187)
மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். நபி யவர்களுடன் நபித்தோழர்களும் இஃதிகாஃப் இருந்தார்கள். நபியவர்களுடனும் இருந்தார்கள். அவர்களுக்குப் பிறகும் இருந் தார்கள். அபூ ஸயீத்-அல் குத்ரி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமளான் மாதத்தின் முதல் பத்தில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு நடுப்பத்தில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு சொன்னார்கள்: நிச்சயமாக நான் முதல் பத்தில் இந்த (லைலதுல் கத்ர்) இரவைத் தேடிப் பெறுவதற்காக இஃதிகாஃப் இருந்தேன். பிறகு நடுப்பத்தில் இருந்தேன். பிறகு எனது கனவில் வானவர் தோன்றி அறிவித்தார்: அந்த இரவு கடைசிப் பத்து நாட்களில் உள்ளது என்று! உங்களில் யார் (இந்தக் கடைசி நாட்களில்) இஃதிகாஃப் இருக்க விரும்புகிறாரோ அவர் இஃதிகாஃப் இருக்கட்டும்’ (முஸ்லிம்)
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமளான் மாதம் கடைசி பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்து வந்தார்கள். அல்லாஹ், அவர்களை மரணம் அடையச் செய்யும் வரையில்! அவர்களுக்குப் பிறகு அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தார்கள்’ (நூல் : புகாரி)
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமளான் மாதம் இறுதிப் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருப்பார்கள். பிறகு ஓர் ஆண்டில் அவர்கள் இஃதிகாஃப் இருக்கவில்லை. ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்’. (நூல்: முஸ்னத் அஹ்மத், திர்மிதி, இமாம் திர்மிதி, இதனை ஸஹீஹ் என்றார்கள்)
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் இருந்து அறிவிக்கப்படுகிறது:
‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஃதிகாஃப் இருக்க விரும்பினால் ஸுப்ஹு தொழுவார்கள். பிறகு தமது இஃதிகாஃப் இடத்திற்குச் செல்வார்கள். ஆயிஷாவும் இஃதிகாஃப் இருக்க நபியவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதி அளித்தார்கள். எனவே ஆயிஷாவுக்கென ஒருகூடாரம் அடிக்கப்பட்டது. ஹப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், தமக்காகவும் அனுமதி வாங்கித் தருமாறு ஆயிஷாவிடம் கேட்க ஆயிஷா அவ்வாறே செய்தார்கள். எனவே ஹப்ஸாவுக்காகவும் கூடாரம் அடிக்கப்பட்டது. ஜைனப் (ரலி) அவர்கள் இதனைக் கண்டபோது தமக்கும் ஒருகூடாரம் அடிக்கச் சொன்னார்கள். அதன்படி அவர்களுக்கும் ஒரு கூடாரம் அடிக்கப்பட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த கூடாரங்களைக் கண்டபோது – இது என்ன? என்று கேட்டார்கள். – ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, ஹப்ஸா ரளியல்லாஹு அன்ஹா, ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா ஆகியோரின் கூடாரங்கள் என்று தோழர்கள் பதிலளித்தார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: இதன் மூலம் புண்ணியம் செய்ய நாடுகிறார்களா? இவற்றை அகற்றுங்கள். இனிமேல் நான் இவற்றை காணக்கூடாது!- அந்தக் கூடாரங்கள் அகற்றப்பட்டன! மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமளானில் இஃதிகாஃபை விட்டு விட்டார்கள். பிறகு ஷவ்வால் மாதத்தில் முதல் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்’ (நூல்: புகாரி, முஸ்லிம்)
இமாம் அஹ்மத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் சொல்லியுள்ளார்கள்: இஃதிகாஃப் இருப்பது சுன்னத்-நபிவழி என்பதில் மாற்றுக் கருத்து எதனையும் மார்க்க அறிஞர்களிடம் நான் அறியவில்லை,, இஃதிகாஃப் இருப்பதன் நோக்கம் ஒருவன் பிற மனிதர்களை விட்டும் விலகி அல்லாஹ்வின் பள்ளிவாசல் ஒன்றில் அல்லாஹ்வை வழிபடுவதற்காக இருந்து விடுவதாகும். அவனது கிருபையையும் நற்கூலியையும் லைலத்துல் கத்ர் எனும் மாண்புமிகு இரவையும் அடைந்திடும் பொருட்டு!
இதனால்தான் இஃதிகாஃப் இருப்பவர்கள் திக்ர் செய்வதில், குர்ஆன் ஓதுவதில், தொழுகை தொழுவதில், பிற வழிபாடுகளில் ஈடுபட்டிருப்பது அவசியமாகும்.
மேலும் உலக விவகாரங்களைப் பேசுவது போன்ற தேவையற்ற காரியங்களை விட்டும் விலகி விடவேண்டும். ஆனால் இஃதிகாஃப் இருப்பவர் ஏதேனும் நலனை முன்னிட்டு தன் குடும்பத்தாருடன் அல்லது மற்றவர்களுடன் ஆகுமான பேச்சுகளைக் குறைவாகப் பேசுவதில் குற்றமில்லை.
ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவி ஸஃபிய்யா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்: ஒரு தடவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்: நான் அவர்களைச் சந்திப்பதற்காக இரவு நேரத்தில் சென்றேன். அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். பிறகு (வீட்டுக்குத்) திரும்புவதற்காக எழுந்தேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் (சிறிது தூரம்) என்னுடன் வருவதற்காக எழுந்தார்கள்’ (நூல்: புகாரி, முஸ்லிம்)
உடலுறவும் அதற்கு முன்னுள்ள காரியங்களான – முத்தமிடுதல், ஆசையுடன் தொடுதல் போன்றவையும் இஃதிபாஃப் இருப்பவருக்கு ஹராம் – விலக்கப்பட்டவையாகும்.
அல்லாஹ்: கட்டளை இட்டுள்ளான்:’
ஆனால் மஸ்ஜித்களில் நீங்கள் இஃதி காஃப் இருக்கும் நிலையில் மனைவியருடன் வீடு கூடாதீர்கள்’ (அல்குர்ஆன் 2: 187)
ஆனால் இஃதிகாஃப் இருப்பவர் மஸ்ஜிதில் இருந்து வெளியே வருவதெனில் அதில் சிறியதொரு விளக்கம் உள்ளது. அதாவது தலையையோ கால்களையோ வெளியே நீட்டுகிறார் என்றால் அதில் குற்றமில்லை. ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவித்துள்ளார்கள்: ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஃதிகாஃப் இருக்கும்போது மஸ்ஜிதில் இருந்து கொண்டு தங்களது தலையை வெளியே நீட்டுவார்கள். அவர்களது தலையை கழுவி விடுவேன். அப்போது நான் மாதவிடாய் உடன் இருந்தேன்’ (நூல்: புகாரி)
மற்றோர் அறிவிப்பில் – ‘பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தலைமுடியை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் சீவி விடுவார்கள். அப்போது ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மாதவிடாய் உடையவர்களாய் இருந்தார்கள்’ – ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறையினுள் இருக்கவே அவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது தலையை நீட்டியிருக்கிறார்கள்.
ஆனால் மஸ்ஜிதை விட்டு வெளியே செல்வதென்றால் அதில்; மூன்று வகை உள்ளன.
ஒன்று: இயற்கையாக அல்லது ஷரீஅத்தின் அடிப்படையில் முக்கியமான ஒரு காரியத்திற்காக வெளியே செல்வது. மலம் -ஜலம் கழிப்பது, கடமையான உளு, பெருந்துடக்கினாலோ வேறு காரணத்தினாலோ கடமையான குளிப்பு, உண்பது, பருகுவது ஆகியவை போன்று! – மஸ்ஜிதில் இவற்றிற்கு வசதி இல்லை எனில் வெளியே செல்வது கூடும். மஸ்ஜிதில் கழிப்பறையும் குளியலறையும் இருக்கிறது எனில், அங்கு அவர் தனது தேவையை நிறைவேற்றிக் கொள்ள முடியுமெனில் -குளித்துக் கொள்ளவும் முடியும் எனில் மேலும் அவருக்கு உணவும் தண்ணீரும் கொண்டு வருவதற்கு ஒருவர் இருக்கிறார் எனில் அப்போது மஸ்ஜிதைவிட்டு வெளியே செல்வது கூடாது. ஏனெனில் அதற்கு தேவையே இல்லை!
இரண்டு: கடமையல்லாத ஒரு காரியத்துக்கு வெளியே செல்வதாகும் இது. நோயாளியை நலம் விசாரிப்பது போன்று! மேலும் ஜனாஸாவைச் சென்று பார்ப்பது போன்று! இவற்றிற்காக அவர் வெளியே செல்லக்கூடாது. இஃதிகாஃபை தொடங்கும் போது இதனை ஒரு நிபந்தனையாக அவர் விதித்திருந்தாலே தவிர!
எடுத்துக்காட்டாக, அவருடைய உறவினறோ நண்பரோ நோய்வாய்ப்பட்டுள்ளார்., அவரை இவர் நலம் விசாரிக்க விரும்புகிறார். அல்லது அந்த நோயாளி மரணம் அடைந்துவிடுவாரோ என்று அஞ்சுகிறார் எனில் தனது இஃதி காஃபின் தொடக்கத்தில் – அதற்காக வெளியே செல்வதற்கு நிபந்தனை விதித்திருந்தால் வெளியே செல்வதில் குற்றம் இல்லை!
மூன்று: இஃதிகாஃபுக்கு முரணாக உள்ள காரியத்துக்காக வெளியே செல்வது. விற்பது- வாங்குவது, மனைவியுடன் வீடு கூடுவது, கூடிப்பழகுவது போன்ற காரியங்களுக்காக மஸ்ஜிதை விட்டும் வெளியே செல்வது போன்று! இஃதிகாஃப் இருப்பவர் இவற்றிற்காக வெளியே செல்லக்கூடாது. தொடக்கத்தில் நிபந்தனை விதித்திருந்தாலும் சரி விதிக்காவிட்டாலும் சரியே! இது இஃதிகாஃபுக்கு எதிரானதும் அதன் இலட்சியத்திற்கு முரணானதுமாகும்.
இந்த கடைசி பத்து நாட்களின் மற்றொரு சிறப்பு யாதெனில், லைலத்துல் கத்ர் எனும் மாண்புமிக்க இரவு இந்நாட்களில் அமைந்திருப்பதாகும். அது ஆயிரம் மாதங்களை விடவும் சிறந்த இரவு. எனவே சகோதரர்களே! இந்நாட்களின் சிறப்பை அறிந்து கொள்ளுங்கள். இவற்றை வீணாக்கி விடாதீர்கள்.
இவற்றின் காலம் மதிப்புமிக்கது. இவற்றின் நன்மை வெளிப்படையானது!
யா அல்லாஹ்! எங்களது தீன் -இறைமார்க்கம் மற்றும் உலக வாழ்க்கையின் நன்மை எவற்றில் உள்ளதோ அவற்றை அடைவதற்கு எங்களுக்கு நல்லருள் புரிவாயாக! எங்களது இறுதிநிலையை அழகாக்கவாயாக! கருணைமிக்க இறைவா! உனது கருணையால் எங்களுக்கும் எங்கள் பெற்றோருக்கும் எல்லா முஸ்லிம்களுக்கும் நீ மன்னிப்பு வழங்குவாயாக!
source: http://unmaiyanaulagam.blogspot.in/2011/08/blog-post_21.html