“அல்லாஹ்வின் அருளைக்கொண்டே தவிர யாரும் சுவர்க்கம் புக முடியாது”
கண்மணி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் “அல்லாஹ்வின் அருளைக்கொண்டே தவிர யாரும் சுவர்க்கம் புகை முடியாது” என கூறுகிறார்கள் .
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள், “தாங்களுமா? யா ரசூலுல்லாஹ்” என கேட்கிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ஆம் நானும்தான்” என பதில் கூறினார்கள் (இதற்காக அமல்களே செய்யக்கூடாது என்பது பொருளல்ல. இந்த ஹதீஸின் விளக்கம் மிக நீண்டது இப்போதைக்கு இதன் நேரடி பொருளை மட்டும் வைத்துக்கொள்வோம்.)
அதைப்போல மற்றொருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவு முழுவதும் நின்று வணங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் “யா ரசூலல்லாஹ் தாங்கள் முன்பின் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டவர்களாக இருந்தும் கால் வீங்கும் அளவிற்கு வணங்குகிறீர்களே!” என கேட்ட போது நபியவர்கள் கூறினார்கள்.
“நான் இறைவனுக்கு நன்றி செலுத்தும் அடியானாக ஆக வேண்டாமா?” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள்.
இந்த இரண்டு நபிமொழிகளை நாம் கவனித்துப்பார்த்தால் நாம் செய்யக்கூடிய அமல்கள் சுவர்க்கம் வேண்டும் நரகத்தை விட்டுப்பாதுகாப்பு வேண்டும் என்று மட்டும் அமல்கள் செய்கிறோம்.
ஆனால் நபி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அருளைக்கொண்டே தவிர சுவர்க்கம் செல்ல முடியாது என கூறிவிட்டார்கள்.
நபி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கால் வீங்கும் அளவிற்க்கு அமல்கள் செய்கிறார்கள் அதற்க்கு அவர்கள் கூறும் காரணம் இறைவனுக்கு நன்றி செலுத்தும் அடியானாக நான் ஆக வேண்டாமா? என கேட்கிறார்கள்.
இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்ற சிந்தனையில் நாம் என்றாவது அமல் செய்திருக்கிறோமா? என சிந்திக்க வேண்டும்.
காரணம் ஷைத்தான் இறைவனிடம் தர்க்கம் செய்யும்போது
மனிதர்களில் மிக குறைவானவர்களே உனக்கு நன்றி செலுத்தக்கூடியவர்களாக இருப்பார்கள்.
என கூறினான்..
இறைவனுக்கு நன்றி செலுத்தக்கூடியவர்களாக நாம் ஆகாத வரை நாம் உண்மையான அப்தாக(இறைவனுக்கு வழிபடக்கூடியவர்களாக) ஆக முடியாது…
வழிபடுதலின் ஆரம்பம் நன்றி செலுத்துதலில் ஆரம்பமாகிறது.
நன்றிசெலுத்துதலில் இரு வகை இருக்கிறது.
1. இறைவன் நமக்கு செய்த, செய்துகொண்டிருக்கும் பேருபகாரத்திற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவது.
2. மனிதர்கள் நமக்கு செய்த உதவிகளுக்கு மனிதர்களுக்கு நன்றி செலுத்துவது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
“மன்லம் யஷ்குரின்னாஸ வலம் யஷ்குரில்லாஹ்”
“மனிதனுக்கு நன்றி செலுத்தாதவன் இறைவனுக்கு நன்றி செலுத்தியவனாக ஆக மாட்டான்”
அதாவது ஒரு மனிதன் நமக்கு ஏதேனும் உதவி செய்து அம்மனிதனுக்கு நாம் நன்றி செலுத்தாமல் இறைவனுக்கு நன்றி செலுத்தினால் அந்நன்றி இறைவனிடம் ஏற்றுக்கொள்ளப்படாது.
நல்ல செயல்கள் நன்றி செலுத்துதலில் ஆரம்பமாகிறது.
தீய விஷயங்கள் நன்றி மறப்பதில் ஆரம்பமாகிறது…
-மீள்