இறைத்தூதர் (ஸல்) அவர்களே தன் முன் கையால் தூக்கி சுமந்து சென்று அடக்கம் செய்த பக்கியசாலி!
வரலாற்றில் அதிகமாக பதியப்படாத ஒரு சஹாபியின் வரலாறு, இவரை குறித்து குறைவான ஹதீஸ்களே உள்ளது. கவனமாக படியுங்கள்.
இந்த சஹாபி ஒரு ஏழை, தோற்றத்தில் உடல் அமைப்பில் சற்று அழகு குறைந்தவர் (அருவருப்பான தோற்றத்தை கொண்டவர் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்). இவரின் பெயரும் வேடிக்கையாக இருக்கும் “ஜுலைபீப்” ஆம் ஜுலைபீப் என்ற பெயர் அன்றைய அரேபிய தேசத்தில் சிரிப்பை ஏற்படுத்தும் பெயராக இருந்தது. இவரின் தோற்றத்தின் காரணமாகவே இவருக்கு யாரும் பெண் தரவில்லை.
ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜுலைபீபை பார்த்து “யா ஜுலைபீப் நலமாக இருக்காயா?” என்று கேட்டார்கள், உடனே ஜுலைபீபும் “அல்ஹம்துலில்லாஹ், யா ரஸூலுல்லாஹ் நலமாக உள்ளேன்” என்றார்.
பின்பு ஜுலைபீப் நபியை நோக்கி கேட்டார் “யா ரஸூலுல்லாஹ், மறுமையிலாவது எனக்கு ஹூர்லீன் பெண்கள் மனைவியாக கிடைப்பார்களா?” என்று, உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் புன்னகையோடு சொன்னார்கள் “ஜுலைபீப் இந்த உலகத்திலும், நாளை மறுமையிலும் உனக்கு மனைவிகள் கிடைப்பார்கள்”.
ஜுலைபீப் கேட்டார், “யா ரஸூலுல்லாஹ், எனக்கு யார் பெண் கொடுப்பார்கள்?”,
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் “இந்த வீட்டில் பெண் இருக்கிறாள் போய் கேள்”..
ஜுலைபீப் போய் கேட்டார் ஆனால் அவ்வீட்டார் பெண் கொடுக்க மறுத்துவிட்டார்கள். மனமுடைந்து நபியிடம் நடந்ததை சொன்னார்.
பின்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு வீட்டிற்க்கு சென்று அழைத்தார். அந்த வீட்டிலிருந்து ஒரு ஆண் வந்து “சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே” என்றார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள் “உங்கள் பெண்ணை திருமணம் செய்து கொடுப்பீர்களா?” என்று.
உடனே அந்த ஆண் “சுபஹானல்லாஹ், உங்களுக்கு என் பெண்ணை திருமணம் முடித்து கொடுக்க நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்று.
உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் “எனக்கு இல்லை, ஜுலைபீபிற்க்கு உங்கள் பெண்ணை திருமணம் செய்து கொடுப்பீர்களா?” என்று.
உடனே அந்த மனிதர் முகத்தை சுழித்துக் கொண்டு சொன்னார் “ஜுலைபீபிற்கா பெண் கேட்டீர்கள்? என் மனைவியிடம் கேட்டுதான் முடிவு எடுக்க வேண்டும்” என்று,
அவர் தன் மனைவியை அழைத்து சொன்னார், அதற்கு அந்த மனைவி சொன்னாள் “எத்தனையோ செல்வந்தர்கள் எங்கள் பெண்ணை திருமணம் செய்த தர சொல்லி கேட்டார்கள், அப்படி இருக்கும் நிலையில் எப்படி இந்த ஜுலைபீபிற்கு எங்கள் பெண்ணை கொடுப்போம்” என்று.
இவர்கள் பேசிக் கொண்டிருந்ததை அந்த வீட்டில் இருந்த பெண் கேட்டுக் கொண்டிருந்தாள். அந்த பெண் தன் பெற்றோரை அழைத்து “அல்லாஹ்வின் தூதரே நம் வீட்டிற்கு வந்து என்னை ஜுலைபீபிற்கு பெண் கேட்கின்றார்கள், நான் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுகின்றேன்” என்று சொல்லி ஜுலைபீபை திருமணம் செய்துக் கொண்டாள்.
பல நாட்கள் ஓடின, போர் பற்றி பிரகடனம் செய்யப்பட்டது, எல்லோரும் போருக்கு தயாராகி சென்றனர், ஜுலைபீபும் சென்றார், அந்தப் போரில் முஸ்லிம்கள் வெற்றியடைந்தார்கள், போரில் ஷஹீத்தானவர்களின் உடல்களை உறவினர்கள் எடுத்துக்கொண்டு இருந்தார்கள்.
அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களை நோக்கி கேட்டார்கள் “நீங்கள் யாரையாவது தேடுகிறீர்களா?” என்று, மக்கள் சொன்னார்கள் “ஆம் ரஸூலுல்லாஹ், இந்த இந்த மனிதரை தேடுகின்றோம்” என்று,
பின்பும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களை நோக்கி கேட்டார்கள் “நீங்கள் யாரையாவது தேடுகிறீர்களா?” என்று, மக்கள் சொன்னார்கள் “இல்லை யா ரஸூலுல்லாஹ், நாங்கள் எங்கள் குடும்பத்தினரை கண்டு பிடித்துவிட்டோம்” என்று, அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்ணில் கண்ணீரோடு சொன்னார்கள் “நான் என் ஜுலைபீபை தேடுகின்றேன், நீங்களும் அவரை தேடுங்கள்” என்று.
இறுதியில் ஏழு எதிரிகளுக்கு மத்தியில் ஜுலைபீப் ரளியல்லாஹு அன்ஹு ஷஹீத் ஆகி கிடந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் “என் ஜுலைபீப் ஏழு எதிரிகளை கொன்றுவிட்டு மரணித்துவிட்டார்” என்று. பின்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் “நான் இவரைச் சேர்ந்தவன் ஆவேன். இவர் என்னைச் சேர்ந்தவர் ஆவார். நான் இவரைச் சேர்ந்தவர் ஆவேன்” என்று.
பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜுலைபீபை தன் முன் கையால் தூக்கி சுமந்து சென்று அடக்கம் செய்தார்கள்.
சிறிது நேரம் கழித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வானத்தை பார்த்து அழுது கொண்டே சிறிது நேரத்தில் சிரித்தார்கள். இதை பார்த்த சஹாபாக்கள் “யா ரஸூலுல்லாஹ், என்னவாயிற்று நீங்கள் அழுதீர்கள் பின்பு சிரித்தீர்கள்” என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “நான் ஜுலைபீப் மரணித்ததை நினைத்து அழுதேன், பிறகு அல்லாஹ் எனக்கு சில காட்சிகளை காட்டினான் அதில் ஜுலைபீப் சுவர்க்கத்தில் தன் ஹூர்லீன் மனைவியோடு விளையாடிக் கொண்டிருந்தார், அதைப் பார்த்து சிரித்தேன்” என்றார்கள். (நூல் : முஸ்லிம் 4877)
ஈமான் கொண்ட ஆண்களும்/பெண்களும் தங்கள் வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் போது, அழகையோ செல்வத்தையோ முன் வைத்து தேர்வு செய்யாதீர்கள், மாறாக ஈமானையும் இறையச்சத்தையும் முன் வைத்து தேர்வு செய்யுங்கள், அப்போதான் வாழ்க்கை அழகா இருக்கும்.