பள்ளிக்கஞ்சிக்கும் இரவுப்பொழுது கழிக்க பயான்களுக்கும்
கொடுக்கும் முக்கியத்துவத்தை
ஆன்ம ஒளிக்கும் கொடுப்போம்
அப்துர் ரஹ்மான் உமரி
வழிபாடுகளை ஆன்ம நலன் கொண்டே பார்க்கவேண்டும்.
வழிபாடுகள் யாவும் ஆன்மாவால்,
ஆன்ம நலனை முன்னிறுத்தி,
ஆன்மாவை மென்மேலும் உயிரூட்டவும்
ஒளியூட்டவும்தான் செய்யப்படுகின்றன.
அவற்றிலும் சில வழிபாடுகள் முழுக்க முழுக்க ஆன்மாவிற்கான சத்துணவாக அமைந்துள்ளன.
அவ்வகையில் முதலிடம் வகிக்கின்றது, நோன்பு.
மண்பிண்டத்தினுள் வைக்கப்பட்ட ஒளியுருவாகிய ஆன்மாவிற்கு ஷரீஅத் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றது.
வான்மறை குர்ஆனின் மையத் தலைப்பே ஆன்ம நலம்தான் என்றால் மிகையாகாது.
நம் கருத்தும் கவனமும் உழைப்பும் பாடுபடலும் தேடலும் ஓடலும் எத்திசை நோக்கி என்பதிங்கே முதன்மை பெறுகின்றது. மண்ணுடல் சார்ந்த புலன் இன்பங்களை நிறைவுபடுத்தவா? இல்லை, ஆன்ம நலனை முதன்மைப் படுத்தி அதன் ஒளிவீச்சை மென்மேலும் மெருகூட்டவா?
மனைவியின் காதலும் பரிவும் பிள்ளைகளின் பற்றும் பாசமும் பொன்னாலும் வெள்ளியாலுமான செல்வச் சேகரிப்பின் ஆசையும் மோகமும் வீடு, வாகனம், வேளாண்மை, விளைச்சல், மனை, சொத்து என்றலையும் ஆர்வமும் தேடலும் – இயல்பாகவே – மனிதனுள் பதியப்பட்டுள்ளன.
உலக பயன்பாட்டுப் பொருட்கள் எனும் நிலைதாண்டி உள்ளத்தில் மோகமாய் படர்ந்து ஏக்கமாய் விரிந்து அகத்தை அரித்து ஆன்மாவைக் குலைத்து அதன் ஒளியை மங்கச்செய்து போக்கி ‘அலங்கோலம்’ ஆக்கிவிடாமல் பாதுகாப்பதில் இருக்கின்றது ஈமானெனும் நன்னம்பிக்கை.
இது துறவறம் அல்ல, இவற்றின் மீதான ஆசையையும் பாசத்தையும் அறவே இல்லாமல் ஒழித்துவிடுக என இந்நன்னெறி எங்கும் போதிக்கவில்லை. நடுநிலை தவறாது தடுமாறாது நிலைகொள்வதை உங்கள் செல்வழி ஆக்கிக் கொள்ளுங்கள் என்றே உரைக்கின்றது.
ஒரு சிறு செயல் – ஓரமாய் வண்டியை நிறுத்தி உங்களுக்கு மிகவும் பிடித்த சீத்தாப்பழத்தை வாங்குவது போன்ற – உங்கள் புலனின்பம் ஒன்றிற்கு தீனியாக அமையும் ஒரு சிறு செயல் உங்கள் ஆன்ம ஒளியை கொஞ்சமே கொஞ்சம் குறைப்பதற்கு காரணமாக அமைந்துவிடலாம் என்றோர். எச்சரிக்கையை நிலையாக பதியவைக்கின்றது இஸ்லாமிய நன்னெறி.
இவ்வாறு குலைத்துவிடுவது எச்செயல்? என்பதில் கொஞ்சம் விழிப்போடு இருந்து அச்செயலை விட்டு கொஞ்சமே அகன்று நிற்கவேண்டும், அவ்வளவே!
இச்சிறு விழிப்புணர்வும் இல்லாமல் ஆசைகளின் முன்றானையைப் பிடித்தவாறு புலனின்பங்களுக்கு தீனிபோடுவதிலேயே லயித்திருந்தால் அள்ளிப்போட்ட சாணியாய் இம்மண்ணுடம்பு தரையிலேயே கிடக்கும், அங்குமிங்கும் நகராமல்… தானும் நகராது, தன்னுள்ளே உறையும் ஆன்மாவையும் நகரவிடாது என்பதுதான் அபாயம்!
நாறிப்போய் புழுக்களோடு ஓடுகாய்ந்து ஒட்டிக்கிடக்கும் சாணிக்குவியலின் உள்ளே உறையும் ‘ஆன்மா’ எப்படியிருக்கும் – கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்!
இப்படியே கிடந்தால் திடுமென வந்தழைக்கும் சாவை எப்படி எதிர்கொள்வீர்கள்? மண்ணறை வீட்டை எப்படி அமைத்துக் கொள்வீர்கள்? இந்த ‘சாணிக்கூட்டின்’ மேனிலையாக நமது மண்ணறை அமைந்திருந்தால் …. ? இந்த புழுக்கள் பாம்புகளாகவும் நச்சேறிய கொல்லுயிர்களாகவும் மண்ணறை முழுக்க நிரம்பிக் கிடந்தால்… ?
– கவனம்: மண்ணறையில் சந்திக்க உள்ள இத்தகைய ஆபத்துகளும் அபாயங்களும் மண்ணுடலுக்கோ புலன்களுக்கோ அல்ல. நமது ஆன்மாவிற்குத்தான்!.
ஏதேனும் செய்தே ஆகவேண்டும் அல்லவா?
என்ன செய்வது?
புலன்களை கொஞ்சம் அடக்கி, ஆன்மாவின் பக்கம் கொஞ்சம் கவனத்தைத் திருப்பி, அதன் நிலையை ‘உள்ளபடி’ ஆராய்ந்து ‘கொரோனா’ தொற்றை விடக் கொடுந்தொற்று ஏற்பட்டுவிடாமல் காத்தாகவேண்டும், அல்லவா?
புலன்களை அடக்கி அகவொளியை மெருகூட்டுவது எங்ஙனம்? என்பதை கற்பிக்கவே ஆண்டுதோறும் வந்துசெல்கின்றது இந்த ரமழான்!
பள்ளிக்கஞ்சிக்கும் இரவுப்பொழுது கழிக்க பயான்களுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆன்ம ஒளிக்கும் அதன் வெளிச்சப் பிரகாசத்தை கூடுதலாக்கும் திருப்பணிக்கும் கொஞ்சம் கொடுத்தால் தேவலை என்று தானிருக்கின்றது ஆண்டுதோறும் நம் நிலைமை!
சிந்திப்போம், கொஞ்சம்
source: https://www.facebook.com/syed.umari.7/posts/1262997667237959
பின்னூட்டம்…
முன்னெப்போதும் காணப்படாத இப்படித்தான் என சொல்லமுடியாத ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் இந்த ஆண்டு ரமழான் மாதத்தை நாம் சந்திக்கின்றோம்.
உலகம் முழுவதும் இறைவனை துதித்து போற்றுகின்ற, சஜ்தாவின் மையத் தலங்களாக திகழ்கின்ற இறை இல்லங்கள் யாவும் அடைபட்டுக் கிடக்கின்றன.
அகிலத்தின் மையப் புள்ளியான கஅபத்துல்லாஹ் களையிழந்து பொலிவிழந்து அடிபணிவோரும் சிரம்பணிவோரும் இல்லாமல் அழகிழந்து காட்சி தருகின்றது.
இந்த புனித மாதத்தில் இறை இல்லத்திற்குள் நுழையாமல் நாமெல்லாம் – உலக முஸ்லிம்கள் அனைவரும் – தடுக்கப்பட்டுள்ளனர். “என் இல்லத்திற்கு வராதே! என் இல்லத்தில் நுழையாதே!” என ஆற்றலும் வல்லமையும் மிக்க இறைவன் தடுத்து நிறுத்தி விட்டானோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
”என் இல்லத்தில் நுழையாதே!”
-என்பது அருளாளன் புறத்திலிருந்து நம்மை நோக்கி எறியப்படுகின்ற தண்டனையோ என எண்ணி சிலர் கவலையில் மூழ்கிப்போய் கிடக்கிறார்கள்.
ஒருவகையில் பார்த்தால் அதுவும் சரியே!.
இறைவனை வழிபடும் முறைகளை அறியாமல் உளத் தூய்மையோடு ஆன்ம தூய்மையோடு இறைவனை அணுகாமல் வெற்று சடங்குகளை நிறைவேற்றுவதற்கு தான் நாம் பள்ளிக்குப் போய் வருகின்றோம்.
உஸ்தாத் Abdurrahman Umari அப்துர் ரஹ்மான் உமரி அவர்கள் குறிப்பிட்டதைப் போல நோன்புக் கஞ்சிக்காகவும் இரவுப் பொழுதுகளை பயான்களில் கழிப்பதற்காகவும் மட்டுமே வான்மழை அருளப்பட்ட புனித ரமழான் மாதத்தில் பள்ளிவாசலுக்கு போய் வருகின்றோம், நாம்.
நம்மிடத்தில் தூய்மை இல்லை!, நம் ஆன்மா ஒளிரவும் இல்லை!, இறைவனுக்கு முற்றிலும் அடி பணிகின்ற முஸ்லிம் இவன் என்று சொல்லத்தக்க எந்த இலக்கணங்களும் நம்மிடத்தில் இல்லை!!
எனவே நம்மை வரவேற்க அரவணைக்க உலகத்தில் எந்த இறை இல்லமும் எந்த மஸ்ஜிதும் தயாராக இல்லை. இதுவே உண்மை!!
“எந்த முஸ்லிம் சகோதரர் மீதும் வஞ்சகம் கொள்ளாத நிலையில் எந்தவொரு ரமழான் மாதத்தையாவது நாம் சந்தித்து இருக்கிறோமா?”
இறைவா!, இந்த தனிமைப் பொழுதில் எங்கள் சிந்தனையில் கொஞ்சம் மாற்றத்தை கொடு!.
உன்னை நோக்கி மேலே ஏறும் வழியில் உந்தியேறும் தகுதி, திறமையை அருகதையை எங்களுக்குக் கொடு!
-என்றெல்லாம் சிந்திப்பதற்கு தோதான பொழுதாக இந்தத் தனிமை பொழுதை ஆக்கிக்கொள்ள வேண்டும்.
தனித்திரு, விழித்திரு என்று சொல்லப்படுவதன் முழு பொருளை இஸ்லாமிய அடிப்படையில் புரிந்துணர வேண்டும்.
நாம் ஒன்றும் இப்போது வீடுகளில் தனியாக இல்லை குடும்பத்தினரோடு சேர்ந்து தான் இருக்கின்றோம்.
தனித்திரு என்றால் என்ன பொருள்?
உங்கள் இறைவனோடு உங்களைப் படைத்தவனோடு உங்கள் அகத்தில் தனித்திருக்க வேண்டும் உங்கள் ஆன்மா தன்னை படைத்தவனோடு உரையாடுவதில் உறவாடுவதில் ஈடுபட வேண்டும்!
நாம் இழைத்த குற்றங்களை எண்ணி இறைவனுக்கு முற்றிலும் அடிபணியும் முஸ்லிம் என்கின்ற தகுதியை நாம் இழந்து விட்டதை எண்ணி நம்மிடத்தில் அன்றாடம் வெளிப்படுகின்ற கீழ்ப்படியாமையை எண்ணி மனதுக்குள் மருகி கண்ணீர் கசிய வல்லவனோடு ஆற்றல் மிக்கவனோடு மன்றாடும் பொழுதாக இந்தத் தனிமையை ஆக்கிக்கொள்ள வேண்டும்!
நம் ஆன்மாவை உயிர் பெறச் செய்து உயிரூட்டி ஒளியூட்டி இறைவனின் உவப்பையும் திருப்தியையும் வென்று ஈட்டும் தகைமை கொண்டதாக மாற்றி அமைக்க வேண்டும் உண்மையில் இதுதான் விழிப்புணர்வு!
இவ்விரண்டையும் நாம் பெற்றுக்கொண்டால் ஒருவேளை இந்த நிலைமை தலைகீழாக மாறிவிடக்கூடும் அப்படி மாற்றுவதற்கு முழு ஆற்றல் படைத்தவன் தான் நம்மைப் படைத்த வல்ல இறைவன்.
வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஓதப்படுகின்ற கஹஃப் அத்தியாயத்தில் குகைத் தோழர்களின் வரலாறு கூறப்படுகின்றது.
தங்களுக்கு சாதகமான எந்த சூழலும் இல்லாத ஓர் இக்கட்டான தருணத்தில் அவர்கள் குகை ஒன்றில் தஞ்சம் புகுகிறார்கள்.
அதற்குப்பிறகு ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்குப் பிறகு நெடு நித்திரையில் இருந்து விழித்து எழுகிறார்கள்.
பார்த்தால் நிலைமை முழுவதும் மாறியிருக்கிறது, சாதகமான சூழ்நிலை வியத்தகு முறையில் அழகாக கனிந்திருக்கிறது.
நெடும் துயில் ஒன்றைத் தொடர்ந்து அருமையான வாய்ப்பு ஒன்று அவர்களுக்கு கனிந்துவிட்டது.
நமக்கு அப்படி நேராவிட்டாலும் நாம் தற்போது எதிர்கொள்வது ஒரு தண்டனையாகவே இருந்தாலும் நம்முடைய அழுகையும் மன்றாடலும் இறைவனின் மன்னிப்பையும் கருணையையும் கிருபையையும் பரிவையும் கரிசனத்தையும் சம்பாதித்து கொண்டால் நம் நிலைமையும் மாறி விடக்கூடும்.
இந்த ஊரடங்கைத் தொடர்ந்து வருகின்ற எதிர்காலம் நமக்கு சாதகமானதாக அமைந்துவிடலாம் அமைய வேண்டும் என எதிர்பார்ப்போம் அதற்காக பிரார்த்திப்போம்.
இந்த நல்ல நம்பிக்கையோடு புனித ரமலானை எதிர்கொள்வோம் வஸ்ஸலாம்.
-இறை அடிமை
M S Sheriff and family
Crown optical
https://www.facebook.com/syed.umari.7/posts/1264618693742523