முஸ்லிம் நாடுகளில் கண்டு கொள்ளப்படாத விஷம்!
அப்துல் அஜீஸ் பாகவி
எனது முதல் மலேஷியப் பயணம் 1999 ம் ஆண்டு பினாங்கில் ஒரு மீலாது மாநாட்டிற்காக அமைந்தது. அங்கிருந்த ஓரிரு நாளில் மலேஷியாவில் வெளிவரும் தமிழ் தினசரிகளை படித்த போது பத்திரிக்கை முழுவதும் இந்துத்துவா சார்புச் செய்திகள் நிறைந்திருந்தன. தமிழகத்தில் கூட ஆர் எஸ் எஸ் அந்த அளவு வளர்ச்சி அடையலையே! என்று நான் நண்பர்களிடம் கேட்டேன்.
நண்பர்கள் தங்களது அதிருப்தியை சிலர் மீது வெளிப்படுத்தினர். டத்தோ சாமிவேலுவும் அவரது மனைவி இந்திராணி சாமுவேலுவும் கிட்டத்தட்ட ஒரு குறு நில மன்னருக்குரிய அதிகாரித்தில் இருந்தார்கள்.
தமிழ் பேசும் முஸ்லிம்கள் ஒரு கோரிக்கை வைத்தால் நீங்கள் ஏன் தனியாக இருக்கிறீர்கள் என்று கேட்டு நிராகரித்து விடுகிறார்கள் . நாம் ஒரு இமாமை வரவழைப்பதற்கு போதும் போதும் என்றாகிவிடுகிறது. ஆர் எஸ் எஸ் அமைப்பு அர்ச்சகர்கள் என்கிற பெயரில் கடும் சித்தம் கொண்ட பலரை மலேஷியாவுக்குள் அனுப்பி மலேஷியாவில் நிலவிவரும் சமூக உறவுகளில் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.
மலேஷியா இந்தோனேஷிய எல்லாம் இந்து நாடுதான். அவை மீண்டும் இந்து நாடுகளாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையை ஏதுமறியா மலேஷிய இளம் தலைமுறையினரின் மனதில் பதித்து வருகிறார்கள். இப்படி ஆர் எஸ் எஸை வளர்ப்பதற்காக இங்கு அனுப்பப்படுகிறவர்களுக்கு உடனடியாக வேலை அனுமதியும் நிரந்தரவாசிக்கான அட்டையும் எளிதாக வழங்கப்படுகிறது. இந்த மலாய்க்காரர்கள் இதை புரிந்து கொள்ளாமல் அம்னோவுக்கு அன்வர் இபுறாகீமுக்கும் பாஸ் கட்சிக்கும் இடையே நடக்கிற சண்டையில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று குறைப்பட்டுக் கொண்டார்கள்.
அதிருப்தியை தெரிவித்தவர்கள் சாமாணியர்கள் அல்ல. பினாங்கு மாநிலத்தில் பல தலைமுறையாக வாழ்ந்து தலைவர்களாக உயர்ந்தவர்கள். இந்தியாவிலுள்ள சூழலை விவரித்து ஆர் எஸ் எஸின் ஆபத்துக்களை நீங்கள் அரசுக்கு விளக்கி கூறலாமே என்று கேட்டேன். நாம் சொல்வதை காதில் வாங்கிக் கொள்கிற நிலையில் இவர்கள் இல்லை என்று விரக்தியோடு பதிலளித்தார்கள்.
மலேஷியாவை ஒரு வளர்ந்த நாடாக்கிவிடும் வேகத்திலிருந்த மஹாதீர் முஹம்மது தனது நிழலிலேயே விஷச் செடிகளை வளரவிடுகிறார் என்ற அதிருப்தி எனக்கு அப்போது ஏற்பட்டது. அதன் பயனை அவர் இப்போது பிரதமராக பொறுப்பேற்ற போது உணர்ந்திருப்பார். ஜாகிர் நாயக்கிற்கு அடைக்கலமளித்ததை கேள்வி எழுப்பி அவரது அமைச்சரவையிலிருந்த ஒரு அமைச்சரே பேசினார். இந்தியாவை தற்போது ஆளும் பாஜக அமைச்சர்களின் வாடை அதில் இருந்தது.
இன்று மலேஷியாவின் வளர்ச்சி நல்லிணக்கம் அமைதி ஆகியவற்றிற்கு பெரும் அச்சுறுத்தலாக ஆர் எஸ் எஸ் மாறியிருப்பதை இப்போது மஹாதீர் புரிந்துகொண்டிருப்பார். ஆனால் இப்போது நிலமை கைமீறிச் சென்றுவிட்டதாகவே எனக்கு தோன்றுகிறது. ஆர் எஸ் எஸினால் கடந்த ஐம்பது ஆண்டுகளாக விதைக்கப் பட்ட விஷ விதை, மலேஷிய தமிழ் மக்களை மலேஷிய நாட்டுடன் ஒன்ற விடாமல் தடுத்து அகண்ட இந்து ராஜிய சிந்தனை இப்போது அங்கு ஆலமரமாக முளைத்து நிற்கிறது.
அரபு நாடுகளின் நிலவரமும் இது தான்.
இன்று ஐக்கிய அமீரகத்தில் மட்டும் 2017 ம் ஆண்டின் கண்க்கின் படி 36 இலட்சத்து இருபதாயிரம் இந்தியர்கள் வேலை பார்க்கின்றனர்.
ஷார்ஜாவில் நடைபெற்ற உலக புத்தக திருவிழாவில் இந்தியர்களின் பெரும் கூட்டத்தை கண்டேன், 70 சதவீதம் பேர் உயர் பதவியில் இருக்கிற இந்திய இந்துக்கள்.
இந்தியா முஸ்லிம்களுக்கு சொர்க்கமாக இருக்கிறது என்று பாஜாவுக்கு வாய்த்த நல்ல அடிமையான முக்தார் அப்பாஸ் நக்வி கூறியிருக்கிறார். ஆனால் இந்தியாவில் இருப்பதை விட மிகச் சிறப்பான நிம்மதியான ஒரு வாழ்க்கையை வளைகுடா வில் வாழ்கிற இந்துக்களும் முஸ்லிம்களும் அனுபவித்து வருகிறார்கள். பாதுகாப்பான – அரசு ரீதியான தொந்தரவுகள் அற்ற – வாங்குகிற சம்பளத்திற்கு சிறப்பாக வளமாக வாழ்கிற ஒரு வாழ்க்கைய வளைகுடா நாடுகள் அங்குள்ள அனைவருக்கும் வழங்கியிருக்கின்றன. வளைகுடாவில் இந்துக்களும் முஸ்லிம்களும்– மற்ற அமெரிக்க ஐரோப்பிய நாடுகளை விட இந்தியத் தன்மையோடு சிறப்பாக வாழ்கிறார்கள்
ஆனால் கடந்த 30 ஆண்டுகளாக வளைகுடா நாடுகளின் பாரம்பரியத்தை சீர்குலைத்து விடும் திட்டத்தோடு ஆர் எஸ் எஸின் தளகர்த்தர்கள் பலர் அங்கிருந்து வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.
அரபு நாடுகளின் உளவுத்துறையினர் கலைஞர் கருணாநிதி, புரட்சித் தலைவர் எம் ஜி ஆர். தள்பதி ஸ்டாலின் இளைய தளபதி விஜய் என்று பேசுகிற அளவிற்கு தமிழ்நாட்டுடனும் இந்தியாவுடன் நட்பு வைத்திருக்கிறார்கள். ஆனால் நாட்டிற்குள் ஊடுறுவிய ஆர் எஸ் எஸின் கொடும் கரத்தை அவர்கள் கண்டு கொள்ள தவறினர். இங்கும் கடந்த 30 ஆண்டு கால நிலவரம் பெரும் மாற்றங்களை சந்தித்திருக்கிறது. அரபுகள் உண்மையாகவே வேலை வாய்ப்பை வழங்குவதில் மதம் பார்ப்பதை முற்றாக தவிர்த்து விட்டனர்.
மார்வாடிகள் அரபுலகின் பெரும் தொழிலதிபர்களாகியிருக்கின்றனர். பெரும்பாலான கம்பெனிகளின் உயர் பொறுப்புக்களில் ஆர் எஸ் எஸ் சிந்தனை கொண்டோர் நிர்வாகிகளாக அமர்ந்துள்ளனர். அவர்களால் வேலை எடுத்துக் கொள்ளப்படுகிற நபர்களும் அப்படியே இருக்கிறார்கள். அவர்கள் ஒரு வளைப்பின்னலில் ஒருங்கிணைக்கப் பட்டிருக்கின்றனர்.
சாமியார்களுக்கான பெரும் கூட்டங்கள்; அவர்களை மதிக்கும் அரபுகளின் ஆரவாரங்கள்; கேளிக்கை என்ற பெயரில் இஸ்லாமிற்கு எதிரான மறைமுக வன்மங்கள் என வளைகுடா ஒரு தள்ளாட்டத்திற்கு ஆளாகியிருந்தது.
இந்த வளைப்பின்னலின் தைரியம் தான் வளைகுடாவில் வசித்துக் கொண்டே இஸ்லாமை மிக மோசமாக கொச்சைப் படுத்தும் டுவீட்டுகள், பேஸ்புக் பதிவுகள், மீம்கள் போடும் துணிச்சலை அங்கிருந்த பலருக்கு வழங்கியது.
“அயோத்தி வேலை முடிந்தது. அடுத்து மக்கா தான்”
“அரபு பெண்கள் உச்சத்திற்கு செல்லாமலே பிள்ளை பெற்றுக் கொள்கிற மிஷின்கள்.”
“சாத்தானின் பிள்ளைகளான இஸ்லாமியர்களுக்கு மரணம் தான்”.
இவை எழுத்தில் தர முடிந்தவை. எடுத்துக் காட்ட முடியாத போஸ்ட்டுக்களும் ட்வீட்களும் ஏராளம்.
அமைதியாக , நிம்மதியாக, கை நிறைய சமபளத்தோடு வேலை பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்களை இத்தகை வெறிச் சொற்களுக்கு ஆளாக்கியது ஆர் எஸ் எஸின் நீண்ட கால பணிகளே. இது சிலைகளின் தேசம் என்று அங்கு தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்படுகிறது. வெறியூட்டும் கூட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த நோக்கத்திற்காக ஆட்கள் வரவழைக்கப்படுகிறார்கள்.
இதில் ஈடுபட்டவர்கள் சாமானிய பணியாளர்கள் மட்டுமல்ல. பல மில்லியன் மதிப்புடைய நிறுவனங்களின் முதலாளிகளும் தான்.
பல நாள் திருடன் ஒரு நாள் படுவான் என்பது போல சவுரவ் உபத்யாயா என்ற தொழிலதிபர் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கு எதிராக வெளியிட்டிருந்த டிவிட்டர் செய்தி ஐக்கிய அமீரத்தின் பிரபல பெண் தொழிலதிபரும் ஷார்ஜா அரச குடும்பத்தை சார்ந்தவருமான ஹிந்த் பின்த் பைசல் அல் காஸிமியின் பார்வையில் பட்டது.
”இங்கு வந்து உழைத்தீர்கள், ஊதியம் தந்தோம். எங்களது உண்வை சாப்பிட்டுக் கொண்டே எங்கள் மதத்தை கேலி செய்வதை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது” என்று அவர் டிவிட்டரில் பதிவிட்டார்.
இந்தியாவுடன் மிக நல்ல நட்புறவில் இருந்த ஹிந்தா வின் டிவீட் பெரும் புயலைக கிளப்பியது.
பல அரபுலக பிரபலங்களும் மிக எச்சரிக்கையாக தமது கண்டனங்களை பதிவு செய்தனர். இது போதாதென்று இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு இந்தியாவில் இஸ்லாமோஃபோபியாவில் முஸ்லிம்கள் தாக்கப்படுவதை தடுக்குமாறு பிரதமருக்கு கோரிக்கை வைத்தது.
பிரதமர் திடீரென மயக்கத்திலிருந்து தெளிந்து எழுந்தவர் போல கொரோனோவிற்கு ஜாதி மதம் இல்லை. நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம் என்று அறிவித்தார்.
எனது சகோதரர் நேற்று போன் சொயது, டெல்லிக்காரரின் அறிவிப்பை பார்த்தாயா என்ன தெரிகிறது என்று கேட்டார்.
அரபு நாடுகள் குரல் கொடுத்ததும் இங்கிருந்தவர்கள் அடங்கிவிட்டார்கள் என்ற ஒரு மகிழ்ச்சி அந்த கேள்வியில் இருந்தது.
இது போன்ற பல தகவல்கள் இப்போது பலரிடமிருந்தும் ஒலிக்கின்றன.
உண்மையில் இஸ்லாமிய உலகு இப்போதாவது ஆர் எஸ் எஸின் சதிப்பின்னலை புரிந்து கொண்டதா என்பதே பெரும் கேள்வியாகும்.
வெறுமனே சில கோபமூட்டுகிற வார்த்தைகளை மட்டுமல்ல. ஆர் எஸ் எஸ் வேறு பல மட்டத்திலும் வேலை செய்திருக்கிறது. கவனமாக அதை கண்டறிய வேண்டிய ஒரு சந்தர்ப்பத்தை இந்த கொரோனோ காலம் ஏற்படுத்தியிருக்கிறது,
ஆர் எஸ் எஸ் என்பது இந்துமதமோ இந்துக்களோ அல்லது இந்து மத அடிப்படை சித்தாந்தமோ கூட அல்ல.
உண்மையில் ஆர் எஸ் எஸ் என்பது மக்களை வெறி கொள்ள வைக்கும் ஒரு வெறுப்புத் தூண்டுதல், நாஸிஸம் ஃபாஸிசம் என்ற முந்தை கொடூரங்களை விட குரூரமானது. தந்திரமானது.
ஆனால் இரகசியமானது அல்ல. பசுந்தோல் போர்த்திய புலி பகிரங்கமாகவே திரிகிறது. ஒரு பகுதி நிலப்பரப்பில் மட்டுமல்ல இன்றைய நிலையில் அது உலகம் முழுவதிலும் வேர் பரப்பி நிற்கிறது.
அதன் விஷம் எத்தகையது என்பதற்கு ஒரு சமீபத்திய உதாரணம்…
காந்தியை கடவுளாக கொண்டாடும் தேசத்தில் –அவரை சுட்டுக் கொன்றவனை தேசபக்தனாக பாராளுமன்றத்திலேயே அடையாளப்படுத்த முயற்சித்தது.
முஸ்லிம் உலகம் இந்த விஷத்தை இப்போதாவது உணர்ந்து கொள்ள முற்பட வேண்டும்.