Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

தர்மம் செய்வதில் சிறந்த வகைகள்!

Posted on April 15, 2020 by admin

          தர்மம் செய்வதில் சிறந்த வகைகள்!         

o இரகசியமாக தர்மம் செய்தல்.

o  ஆர்வத்தோடும் தாமதிக்காமலும் தர்மம் செய்தல்.

o  தாராளமாக தர்மம் செய்தல்.

o  சிறந்தவற்றையும் ஹலாலானவற்றையும் தர்மம் செய்தல்.

நாம் செய்ய‌வேண்டிய தர்மங்கள் எவ்வாறு இருக்கவேண்டும்? இஸ்லாம் எந்த வகையில் தர்மம் செய்ய‌வேண்டும் என்று நமக்கு சொல்கிறது?

குர்ஆன் – ஹதீஸ் அடிப்படையில் அறிந்துக்கொள்வோம்:

 

      இரகசியமாக தர்மம் செய்தல்       

வலது கரம் செய்ததை இடது கரம் அறியாத விதத்தில் இரகசியமாக செய்வது சிறப்பிற்குரியதாகும் என்று இஸ்லாம் கூறுகிறது. தர்மம் செய்யும் போது அல்லாஹ்வின் திருப்தி மட்டுமே நோக்கமாக இருக்கவேண்டும். எனவேதான் தர்மம் செய்வதை வலியுறுத்தியுள்ள நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரகசியமாக தர்மம் செய்பவரை ‘வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு தர்மம் செய்பவர்’ என வர்ணித்துள்ளார்கள்.

“வேறு எந்த நிழழும் இல்லாத அந்த நாளில் ஏழு பேருக்கு அல்லாஹ் தன் நிழலிருந்து நிழல் தருகிறான். வலது கை தருவதை இடது கை அறியாது மறைத்து தருபவர் அந்த ஏழு பேரில் ஒருவர்” என்று கூறியுள்ளார்கள். (ஆதாரம்: புகாரி)

அல்லாஹ்தஆலா கூறுகிறான்,

யார் தங்கள் பொருள்களை (தான தர்மங்களில் )இரவிலும், பகலிலும் இரகசியமாகவும் பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. (அல்குர்ஆன் 2:274)

மேலும் மற்றொரு இடத்திலே அல்லாஹ் கூறுகிறான்,

அவனை நேசித்ததற்காக ஏழைக்கும் அனாதைக்கும் சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை எங்கள் இறைவனிடமிருந்து கடுமையும் நெருக்கடியும் நிறைந்த நாளை நாங்கள் அஞ்சுகிறோம்” (எனக் கூறுவார்கள்.) எனவே அந்த நாளின் தீங்கி ருந்து அவர்களை அல்லாஹ் காப்பாற்றி னான். அவர்களுக்கு முக மலர்ச்சியையும் மகிழ்ச்சியையும் வழங்கினான். அவர்கள் பொறுத்துக் கொண்டதால் சொர்க்கத்தையும் பட்டையும் பரிசாக அவர்களுக்கு வழங்கினான். (அல்குர்ஆன் 76:8-12)

இதுபற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் நான் தர்மம் செய்யப் போகிறேன் என யாருக்கும் தெரியாத வண்ணம் (இரவில்) தர்மத்துடன் வெளியே வந்து ஒரு திருடனிடம்(தெரியாமல்),கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், இன்றிரவு திருடனுக்குத் தர்மம் வழங்கப்பட்டுள்ளது எனப் பேசிக் கொண்டனர். (இதைக் கேட்ட) அவர், அல்லாஹ்வே! உனக்கே சகல புகழும். (நாளை) நான் தர்மம் செய்வேன் என்று கூறினார்.

மறுநாள் அவர் தர்மத்துடன் (இரவில்) வெளிவந்து அதை ஒரு விபச்சாரியிடம் கொடுத்துவிட்டார். மறுநாள் காலை மக்கள், இன்றிரவு விபச்சாரிக்குத் தர்மம் கொடுக்கப்பட்டுள்ளது எனப் பேசினர். (இதைக் கேட்ட) அவர் அல்லாஹ்வே! விபச்சாரிக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே சகலப் புகழும்! (நாளையும்) நான் தர்மம் செய்வேன்! எனக் கூறினார்.

(மூன்றாம் நாள்) அவர் தர்மத்துடன் வெளிவந்து ஒரு பணக்காரனின் கையில் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், பணக்காரருக்கு ஸதகா கொடுக்கப்பட்டள்ளது எனப் பேசினர். உடனே அவர், அல்லாஹ்வே! திருடனிமும் விபச்சாரியிடமும் செல்வந்தனிடமும் தர்மம் கொடுத்ததற்காக உனக்கே எல்லாப் புகழும் எனக் கூறினார்.

பிறகு அம்மனிதர் அன்றிரவு ஒரு கனவு காண்கிறார். அக்கனவில் ஒருவர் வந்து, நீர் திருடனுக்குக் கொடுத்த தர்மம் அவன் திருடுவதைவிட்டுத் திருந்தக் காரணமாகிவிட்டது. விபச்சாரிக்கு நீ கொடுத்த தர்மம், அவள் விபச்சாரத்திலிருந்து திருந்தி வாழ்வதற்கு வழியமைத்துவிட்டது. செல்வந்தனுக்குக் கொடுக்கப்பட்ட தர்மத்தினால் அவன் படிப்பினை பெற்று அதனால் அவன் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து தர்மம் செய்யக் காரணமாகிவிட்டது” எனக் கூறினார். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)

இந்த ஹதீஸின் மூலம் இரகசியமாக தர்மம் செய்தவர், தர்மத்தைப் பெற‌ தகுதியில்லாதவர்களுக்கு தர்மம் செய்திருந்தாலும், யாருக்கும் தெரியாமல் தர்மம் செய்யவேண்டும் என்ற அவருடைய தூய எண்ணத்திற்காக அல்லாஹ்தஆலா அந்த தர்மத்தை ஏற்றுக்கொள்கிறான் என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த அழகிய சம்பவத்தின் மூலம் நமக்கு இங்கே உணர்த்துகிறார்கள்.

ஆக, நாம் செய்யும் தர்மத்தின் முதல் நிலை, அது நம்மால் முடிந்தவரை இரகசியமானதாக இருக்கவேண்டும்.

    ஆர்வத்தோடும் தாமதிக்காமலும் தர்மம் செய்தல்       

ஏழை மக்கள் கேட்டுவிட்டார்களே என்பத‌ற்காக அலட்சியமாக ஆர்வமின்றி செயல்படாமல், அல்லாஹ்வின் அருள் மீது ஆசைக்கொண்டவர்களாக தர்மம் செய்யவேண்டும்.

அல்லாஹ்வையும் அவனது தூதரையும் மறுத்ததும் சோம்பலாகவே தொழுது வந்ததும் விருப்பமில்லாமல்(நல்வழியில்)செலவிட்டதுமே அவர்கள் செலவிட்டதை அவர்களிடமிருந்து ஏற்கப்படுவதற்கு தடையாக இருக்கிறது. (அல்குர்ஆன் 9:54)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! அதிக நன்மையுள்ள தர்மம் எது? எனக் கேட்டார். ‘நீர் ஆரோக்கியமுள்ளவராகவும், பொருள் தேவை உடையவராகவும், வறுமையைப் பயப்படுபவராகவும், செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே(தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும்வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு, இன்னாருக்கு இவ்வளவு என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உமது பொருள்கள் மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே! என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1419)

‘பொருள் தேவை உடையவர்’ என்றும் ‘வறுமையைப் பயப்படுபவர்’என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இங்கே குறிப்பிடுகிறார்கள். அதாவது, வறுமைக்கோட்டிற்கும் சற்று மேலுள்ள‌ நடுத்தர சம்பாத்தியம் உள்ளவர்கள் தர்மம் செய்யும்போது அதுவே சிறந்த தர்மம் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி இருக்கிறார்கள் என்றால், செல்வந்தர்கள் இதனை சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதுவும் தனது செல்வங்களிலிருந்து தர்மம் செய்யாமல் சேமித்து வைத்துவிட்டு, இதற்கு மேல் வாழமுடியாது என்று தெரியும் வரை, மரண நெருக்கடியில் உள்ள அந்த சக்ராத்துடைய நேரம்வரை நாம் தர்மம் செய்யாமல் தாமதிக்கவேண்டாம் என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு போதித்துளார்கள்.

       தாராளமாக தர்மம் செய்தல்       

அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் யார் உலோபித்தனம் தெய்கிறார்களோ அது தமக்கு நல்லது என்று (அவர்கள்) நிச்சயமாக எண்ண வேண்டாம். அவ்வாறன்று அது அவர்களுக்கு தீங்குதான் அவர்கள் உலோபத்தனத்தால் சேர்த்து வைத்த (பொருட்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும். (அல்குர்ஆன் 3:180)

சிலபேர் பிறருக்கு உதவுவதில் கணக்கிட்டுக் கொண்டிருப்பார்கள். இவர்களைப்பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்;

”இவ்வளவுதான் என்று வரையறுத்து தர்மம் செய்யாதே. அல்லாஹ் உம்மீது பொழியும் அருளை வரையறுத்து விடுவான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தர்மம் செய்ததின் அளவை கூறியபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”நீ தர்மம் செய். அதை வரையறுத்து விடாதே! அவ்வாறு கணக்கிட்டால் அல்லாஹ் உம்மீது வழங்கும் அருட்கொடையை கணக்கிட்டு விடுவான் என்றார்கள்.” (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: அபூதாவூத்)

மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் கஞ்சத்தனம் செய்பவர்களை ஒரு உதாரணத்துடன் கூறியிருக்கிறார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக, (தர்மம் செய்யாது)கருமித்தனம் செய்பவர் மற்றும் தர்மம் செய்பவருக்கு உதாரணம், அவ்விருவரின் மீதும் இரும்பினால் ஆன கேடயம் (முழக்க அவ்விருவரையும் மூடிக் கொண்டவாறு)உள்ளது. (அந்நிலையிலிருக்கும்)தர்மம் செய்து கொண்டிருந்தவர் ஒரு தர்மத்தை செய்ய நாடுவாரானால் அது அவருக்கு விஸ்தீரணமாகிக் கொடுக்கும். முடிவாக அவரிலிருந்து ஏற்பட்ட தவறுகளின் அடிச்சுவடுகளை அது அழித்து விடும். கருமித்தனத்தை உடையவர் ஒரு தர்மத்தை செய்ய நாடுவாரனால் (அவர் மீது இருக்கும்) கவசமானது அவரை நெருக்கும். அவருடைய இரு கைகளும் அவரது கழுத்தின்பால் இணைந்து கொள்ளும். (அதிலுள்ள) ஒவ்வொரு வளையமும் அவரை இருக்கிக் கொள்ளும். அதை அவர் விசாலமாக்கிக் கொள்ள அவர் பெரிதும் முயல்வார். ஆனால் அதற்கு சக்தி பெறமாட்டார். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

அதாவது செல்வம் கொடுக்கப்பட்ட பெரும்பாலான மக்களிடம் கஞ்சத்தனம் தானாகவே வந்துவிடுகிறது. எவ்வளவு செல்வங்களை அல்லாஹ்தஆலா அவருக்கு கொடுத்தாலும் பிறருக்கு கொடுத்து உதவும் தன்மை அவரிடம் காணாமல் போய்விடுகிறது. நமக்கும் அல்லாஹ்தஆலா செல்வங்களைக் கொடுத்தால் அதை தேவையுடைய பிறருக்கு தாராளமாக அள்ளிக்கொடுக்கும் எண்ணத்தையும் சேர்த்தே தரும்படி நாம் இறைவனிடம் துஆ செய்யவேண்டும். அதைதான் அல்லாஹ்வும் விரும்புகிறான்.

     சிறந்தவற்றையும், ஹலாலானவற்றையும் தர்மம் செய்தல்       

தர்மம் பெறுபவர்கள் தாமாக விரும்பி கேட்கும் சூழ்நிலையிலே தவிர, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பொருட்கள் அல்லது சாப்பிட முடியாத அளவுள்ளவற்றை தர்மம் செய்வதைக் கண்டிப்பாக‌ தவிர்க்க வேண்டும். ஆனால், நாம் செய்யும் தர்மப்பொருட்களில் பெரும்பாலானவை நாம் யாசகம் கேட்கும் நிலையில் அல்லது அதை பெறக்கூடியவனின் நிலையில் இருந்து எதை வாங்கமாட்டோமோ அதுவாகத்தான் இருக்கும். இதுமாதிரியான பொருளை தர்மம் செய்வது கூடாது. நாம் செய்யும் தர்மப் பொருட்கள் ஓரளவாவது நல்ல பொருட்களாக இருக்கவேண்டும்.

நீங்கள் விரும்புவதை (நல்வழியில்)செலவிடாதவரை நன்மையை அடைந்துக் கொள்ளவே மாட்டீர்கள். நீங்கள் எப்பொருளை(நல்வழியில்)செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன். (அல்குர்ஆன் 3:92)

இந்த வசனம் இறங்கியவுடன் அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தனக்கு மிகவும் விருப்பமான பைருஹா என்ற தோட்டத்தை அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்தார்கள். (ஹதீஸ் சுருக்கம்) (நூல்: புகாரி 4554)

மேலும் மக்களின் தேவைகளுக்காக ஏதாவது கொடுத்துதவும்போதும் மக்களுக்கு தர்மங்கள் செய்யும்போதும் ஹலாலான சம்பாத்தியங்களிலிருந்து செலவிடவேண்டும். உழைப்பு ஆகுமானதாகவும் தூய்மையானதாகவும் இருத்தல் அவசியமானதாகும். சிறந்த, உயர்தரமான பொருட்களையே மக்களுக்கு வழங்கவேண்டும். தர்மம் செய்கிறோம், இனாமாக வழங்குகிறோம் என்பதற்காக பழுதடைந்த, மட்டகரமான, மோசமான பொருட்களை வழங்கிடக் கூடாது என இஸ்லாம் தடைவிதிக்கிறது.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும், பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் (நல்வழியில்) செலவிடுங்கள்! கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ளமாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்! அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 2:267)

“அல்லாஹ் நல்லதை தவிர வேறெதனையும் ஏற்றுக் கொள்வதில்லை என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)

நமக்கு யாராவது எதையாவது கொடுத்தால் அது நல்லதாக தரமானதாக பயன்படுத்துவதற்கு உகந்ததாக இருப்பதையே விரும்புவோம். மட்டகரமானதை தந்தால் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ள மாட்டோம். இதுபோலவே நாம் மற்றவர்களுக்கு கொடுக்கும்போது கூட நல்லதையே கொடுக்க வேண்டும். நாம் விரும்புவதையே மற்றவர்களுக்கும் விரும்ப வேண்டும். அதனையே அல்லாஹ்வும் அங்கீகரிக்கிறான்.

நீங்கள் விரும்புவதை செலவிடாதவரை நன்மையை அடைந்து கொள்ளவே மாட்டீர்கள். நீங்கள் எப்பொருளை செலவிட்டாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை அறிந்தவன் (3:92)

மேலே கூறிய 2:267 வசனம் அருளப்பட்டது தொடர்பாக பராஉ பின் ஆஸிப் ரளியல்லாஹு அன்ஹு பின்வருமாறு கூறுகிறார்கள்,

பேரீத்த‌ மரத்திலிருந்து பேரீத்த‌ம் கனிகள் பறிக்கும் நாட்களில் அன்சாரித் தோழர்கள் தம் தோட்டங்களிலிருந்து செங்காய் குலைகளைப் பறித்து வந்து மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசலின் இரண்டு தூண்களுக்கிடையே கயிற்றில் கட்டித் தொங்கவிடுவார்கள். ஏழை முஹாஜிரீன்கள் அதை எடுத்து உண்பார்கள்.

ஒரு தடவை ஓர் அன்சாரித் தோழர் அந்த செங்காய் குலைகளுக்கிடையே மட்டமான காய்ந்த பேரீத்த‌ம் குலையைத் தொங்கவிட முற்பட்டார். அது அனுமதிக்கப்பட்டதுதான் என அவர் எண்ணிக் கொண்டார்.(அது கூடாது என்பதை சுட்டிக் காட்டுவதற்கு)அவர் தொடர்பாகவே இந்த வசனத்தை அல்லாஹ் அருளினான். (நூல்: இப்னு மாஜா)

தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் நன்மைதான் எனக் கூறுவீராக. (அல்குர்ஆன் 2:215)

ஆக, மக்களுக்கு தர்மம் செய்யும்போது நல்லவைகளை வழங்கவேண்டும், அல்லாஹ்வுக்கு மட்டும் தெரிந்தால் போதும் என்று இரகசியமாக வழங்கவேண்டும், சிறந்த பொருட்களையே வழங்கவேண்டும் என்ற இஸ்லாத்தின் போதனைகளை எப்போதும் மனதில் கொண்டு, அதன்படி செயல்பட எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் துணை புரிவானாக! ஆமீன்!

source:   http://payanikkumpaathai.blogspot.com/

 

 

 

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

56 + = 64

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb