o கரோனா விடுமுறை எடுக்காமல் பரவிக் கொண்டிருக்கிறது!
o அமெரிக்காவில் கரோனா அதிகமாக பரவ காரணம்…
o கரோனாவை விரட்ட கழிப்பறைச் சுத்தமும் முக்கியம்!
o தும்மலும் இருமலும்தான் கரோனா பரவுவதன் முக்கியமான காரணிகளா?
கரோனா விடுமுறை எடுக்காமல் பரவிக் கொண்டிருக்கிறது!
இந்தியாவில் மட்டும் இல்லை; பல நாடுகளிலும் மக்களை வீட்டுக்குள் வைக்க அரசாங்கங்கள் போராடத்தான் வேண்டியிருக்கிறது.
பிரான்ஸில் வழக்கமாக ஈஸ்டர் பண்டிகையையொட்டிய இரு வார விடுமுறைக் காலத்தில் சுற்றுலா செல்வது அந்நாட்டினருக்கு வழக்கம். இப்போது பிரான்ஸில் ஊரடங்கு அமலில் இருக்கிற நிலையில், ஈஸ்டர் பருவம் கடந்த வாரம் தொடங்கியது.
பேருந்து, ரயில், விமான சேவைகள் முற்றிலுமாக முடக்கப்பட்டுவிட்டாலும், மக்கள் அடங்கவில்லை. சொந்த கார், வேன்களில் கூட்டம் கூட்டமாக சுற்றுலா புறப்பட்டுவிட்டனர்.
ராணுவமும் காவல் துறையும் கெஞ்சிக் கூத்தாடி மக்களை வீட்டுக்குத் திரும்ப அனுப்பியிருக்கிறார்கள். இப்படித் திரும்ப அனுப்பப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 58 லட்சம்! இவர்களில் 3.59 லட்சம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
‘நீங்கள் விடுமுறையை விரும்பலாம்; கரோனா விடுமுறை எடுக்காமல் பரவிக்கொண்டிருக்கிறது; வீட்டுக்குள்ளேயே இருங்கள்’ என்று தொலைக்காட்சியில் மக்களிடம் மன்றாடியிருக்கிறார் பிரதமர் எட்வர் ஃபிலிப். பிரச்சினையின் தீவிரத்தை மக்கள் உணர வேண்டும்!
அமெரிக்காவில் கரோனா அதிகமாக பரவ காரணம்…
சீனாவின் வூஹான் நகரில் கரோனா பரவல் உறுதியான பிறகேகூட சீனாவிலிருந்து 1,700 முறை விமானப் பயணங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன.
4.3 லட்சம் பேர் சீனாவிலிருந்து அமெரிக்காவுக்குப் பயணித்திருக்கிறார்கள். இவர்களில் பல்லாயிரக் கணக்கானோர் வூஹானிலிருந்து நேரடியாக அமெரிக்காவுக்கு வந்திருக்கிறார்கள்.
இவர்களில் பலருக்கு அமெரிக்க விமான நிலையங்களில் முறையான பரிசோதனைகள் செய்யப்படவில்லை.
கரோனாவை விரட்ட கழிப்பறைச் சுத்தமும் முக்கியம்!
கரோனா தொற்று தொடர்பாக ஒவ்வொரு நாளும் ஆய்வுகள் வழியே புதுப் புது விஷயங்களைக் கண்டறியும் நிபுணர்கள் கழிப்பறைச் சுத்தமும் மிக முக்கியம் என்கிறார்கள்.
தொற்று ஏற்பட்டவர்களில் சரிபாதி நோயாளிகளுக்குச் செரிமானக் கோளாறு இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டிருக்கிறது.
நோய்த் தொற்றாளர்கள் மலம் கழிக்கும்போது அதன் வழியாகவும் கரோனா வைரஸ் வெளியாகிறது. ஆகவே, ஒவ்வொருவரும் மலம் கழித்துவிட்டு, கழிப்புச் சாதனத்தை நன்கு சுத்தம் செய்வது அவசியம்.
கூடவே, ஒவ்வொரு முறையும் கழிப்பறைக்குச் செல்லும்போதும், கழிப்பு முடித்துத் திரும்பும்போதும் கைகளை நன்கு சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.
அதேபோல், ஒருவர் கழிப்பறைக்குச் சென்றுவிட்டு வந்தால் சற்று இடைவெளி விட்டு அடுத்தவர் கழிப்பறைக்குச் செல்ல வேண்டும். முக்கியமாக, மேற்கத்தியக் கழிப்பறையாக இருந்தால் உட்காரும் இடத்தில் கிருமிநாசினியைத் தெளித்து, சுத்தம் செய்துவிட்டே அதைப் பயன்படுத்த வேண்டும்.
தும்மலும் இருமலும்தான் கரோனா பரவுவதன் முக்கியமான காரணிகளா?
தும்மலும் இருமலும்தான் கரோனா பரவுவதன் முக்கியமான காரணிகள் என்று சில நிபுணர்கள் கருதுகிறார்கள்.
ஒருவருக்கொருவர் முகத்துக்கு எதிராகப் பேசுவதும் உணவைப் பங்கிட்டுக்கொள்வதும்கூட அபாயம்தான் என்கிறார் க்வோக்.
“ஒருவர் மதியம் என்ன சாப்பிட்டார் என்பதை அவர் வாய் வாசனையிலிருந்து நீங்கள் உணர்கிறீர்கள் என்றால் அவர் வெளியில் விட்ட மூச்சுக்காற்றை நீங்கள் சுவாசிக்கிறீர்கள் என்று அர்த்தம். அவர்கள் மூச்சில் உள்ள வைரஸையும் சேர்த்துதான் நீங்கள் சுவாசிக்கிறீர்கள்” என்கிறார் இங்கிலாந்தின் லீசெஸ்டர் பல்கலைக்கழகப் பேராசிரியரும் கரோனா வைரஸைப் பற்றி ஆய்வுசெய்பவருமான ஜூலியன் டேங்.
-தி ஹிந்து தமிழ் திசை