புறந்தள்ளுங்கள்
dr. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்
Lot of problems in the world would disappear if we talk to each other instead of about each other – Ronald Reagan
ஒருவரைப் பற்றி பேசுவதற்கு பதிலாக ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டால் இந்த உலகில் பெரும்பாலான பிரச்னைகள் மறைந்து விடும் – ரொனால்ட் ரீகன்
ஏதோ ஒரு நிகழ்ச்சிக்கோ மீட்டிங்கிற்கோ செல்லும்போது நீங்கள் அங்கிருப்பவர்களிடம் சகஜமாக சந்தோசமாக பழகிக் கொண்டிருக்க அதில் சில பேர் உங்களை அவாய்ட் பண்ணுவதுபோல பட்டும் படாமலும் பழகிய அனுபவம் உங்களுக்கு என்றேனும் நிகழ்ந்துள்ளதா?
திடீரென என்ன ஆயிற்று இவர்களுக்கு, நன்றாகத்தானே பழகிக் கொண்டிருந்தார்கள் என்று பலவாறு உங்களை நீங்களே கேள்வி கேட்டு அவர்களுடன் அன்று வரை நடந்த நிகழ்வுகளையெல்லாம் திரும்பத் திரும்ப மனதில் ஓட விட்டு ஏதேனும் தவறுதலாக நடந்ததா என்றெல்லாம் ஆராய்ந்து, ஒன்றும் புரியாமல் குழம்பிய மனதுடன், சென்றிருந்த நிகழ்ச்சியை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியாமல் தவித்திருப்பீர்கள்.
உங்களைப் பற்றி ஏற்கனவே யாரோ ஏதோ சொல்லி அங்கிருந்தவர்களிடம் உங்களைப் பற்றிய ஒரு தவறான புரிதலை ஏற்படுத்தி இருந்து பின்பு அதனை அறிய வரும்போது உங்களுக்குள் ஏற்படும் இயலாமையும் வருத்தமும் உங்களை சோர்வடையச் செய்யும். உங்களைப் பற்றிய தவறான எண்ணங்களை எப்படிச் சரி செய்வது என்று உங்கள் மனம் பதறும்.
இது உங்களுக்கு மட்டும் ஏற்படும் அனுபவம் அல்ல. பல குடும்பங்களில் மட்டும் நடக்கும் விஷயமும் அல்ல. வளரும் நாடுகளிலும், வளர்ந்த நாடுகளிலும், மிகவும் நாகரிகமானவர்கள் என்று சொல்லிக் கொள்ளக் கூடியவர்கள் மத்தியிலும் prevail ஆகிக் கொண்டிருக்கும் பழக்கம்தான் இது என்கிறது வாழ்வியல்
உலக அளவில் 60 சதவீதம் மக்கள் ஒருவரைப் பற்றி மற்றவர் ஏதேனும் பேசுகிறார்கள் என்கிறது மேலை நாட்டு ஆய்வு ஒன்று. மேலும், சிலர் மற்றவர்களைப் பற்றி தாழ்வாக பேசுவது தங்களை உயர்வாக நினைக்கச் செய்யும் என்று நினைத்துக் கொள்கிறார்கள். மற்றவர்களுக்குத் தெரியாத ஒரு விசயத்தை தாங்கள் சொல்வது அவர்களுக்கு இன்ட்ரெஸ்டிங்காக இருக்கிறது. ஆனால் உண்மையில் புறம் பேசுபவர்கள் தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்ளவே செய்கிறார்கள். இவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் அல்ல என்ற எண்ணத்தைத்தான் பிறர் மனதில் விதைக்கிறார்கள் என்கிறது அந்த ஆய்வின் முடிவு.
புறம் பேசுதல் என்பது ஒருவரைப் பற்றி தவறாக நெகடிவாக அவர் இல்லாத போது மற்றவர்களிடம் பேசுவது எனபதை நீங்கள் அறிவீர்கள். ஒருவர் இன்னொருவரைப் பற்றி அவர் இல்லாத போது பேசுகிறார் என்னும்போதே அதன் உண்மைத்துவம் கேள்விக்குறியதாகி விடுறது. அத்துடன் சொல்பவரின் நம்பகத் தன்மையும் இடறுகிறது.
மனரீதியாக தன்னம்பிக்கை இல்லாதவர்களும் பிறருடைய கவனத்தை தாங்கள் கவர வேண்டும் என நினைப்பவர்களுமே பெரும்பாலும் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவார்கள். புறம் பேசப் படுபவர்களை மட்டுமல்ல பேசுபவர்களையும் கேட்பவர்களையுமே அது மனரீதியாகப் பாதிக்கும் என்கிறது மனஇயல்.
பொதுவாக புறம் பேசுபவர்கள் தங்களை நியாயப் படுத்திக் கொள்ள சொல்லக் கூடிய வார்த்தைகள் ‘நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்ஸ வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பி விடக் கூடாது என்பதற்காகத்தான்…’ என்பது போன்றே இருக்கும். இப்படி நல்லது கெட்டதை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் அவர்களுக்கு விழிப்புணர்ச்சி கொடுப்பதற்காகவும் தான் சொல்கிறோம் என்பார்கள். ஆனால் அதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
ஒரு கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை சில நாட்கள் ஒரு குழுவாகப் பழக வைத்தார்கள். பின் அவர்களை இரண்டு பிரிவாகப் பிரித்து அவர்களுக்குள் பலருக்கும் பிடித்த இரண்டு பேரைத் தேர்ந்தெடுத்து ஒரு பிரிவினரிடம் அந்த இரண்டு பேரைப் பற்றிய நல்ல விஷயங்களைச் சொல்லச் சொன்னார்கள். அத்தனை பேரும் அவர்களைப் பற்றிய நல்லவற்றைச் சொன்னர்கள்.
பின் அதே இரண்டு பேரைப் பற்றி அடுத்த குருப்பிடம் அவர்களிடம் இருக்கும் தவறான விஷயங்களைப் பற்றிச் சொல்லச் சொன்னார்கள் அத்தனை பேருக்கும் சொல்லுவதற்கு விஷயம் இருந்தது.
ஆக அந்த இரண்டு பேரும் நல்லவரா.. தீயவராஸ? இப்போது என்ன முடிவுக்கு வர முடியும். உண்மையில் எதை நீங்கள் தேடினாலும் அந்தந்த கோணத்தில் அது உங்களுக்குக் கிடைக்கும் என்பதே அந்த ஆய்வின் முடிவு.
குறைகள் இல்லாத மனிதன் உலகில் இல்லை எனும்போது யார் ஒருவரிடமும் என்ன தவறு இருக்கிறது என்று பார்க்க முனையும் போது நிச்சயமாக ஏதாவது ஒரு தவறுதான் தெரிய வரும். அல்லது ஏதாவது ஒன்றைத் தவறாக எடுக்கத் தோன்றும்.
ஏனென்றால் ஆழ்மனதின் filtering system, தன் தேவைக்கு ஏற்ப ஒன்றை அனுமானித்துக் கொள்ளும். நீங்கள் என்ன தேடுகிறீர்களோ அதைத் தான் உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும். உங்கள் ஆழ்மனதிற்கு நீங்கள் நல்லவற்றைப் பார்க்க பழகிக் கொடுக்கிறிர்களா அல்லது தீயவற்றைப் பார்க்கப் பழகிக் கொடுக்கிறீர்களா என்பதே பிரச்னைக்கும் தீர்வுக்குமான வேறுபாடாக இருக்கிறது.
உங்கள் ஆழ்மனதால் மனிதர்களையும் பொருட்களையும் கூட பிரித்துப் பார்க்க முடியாது. நீங்கள் யாரேனும் ஒருவருடைய தவறுகளை உற்றுப் பார்க்கிறீர்கள் என்றால், அது எல்லாவற்றிலும், அதாவது பிற மனிதர்களாகட்டும், அல்லது அன்றாட வாழ்வின் நிகழ்வுகளாகட்டும், அல்லது உயிரற்ற பொருட்களாகட்டும், நீங்கள் சந்திக்கும் அனைத்து விஷயங்களிலுமே நெகடிவான செய்திகளையே உங்கள் கண்ணில் படச் செய்யும். அது போல் பிறரிடம் சென்று செய்திகளை பேசக் கூடியவர்களுக்கு எதைப் பார்த்தாலும் அதை மற்றவர்களிடம் எப்படி சொல்வது என்ற கோணத்திலேயே தான் அவர்கள் மனம் பார்க்குமே தவிர உண்மையில் ஒரிஜினலான விஷயத்தை தனக்குள் பதிய வைத்துக் கொள்ளாது.
பொதுவாக நெருப்பு என்று சொன்னால் சுட்டு விடவா போகிறது. வார்த்தைகள் வலிக்கக் கூடாது என்பார்கள். வார்த்தைகள் வலிக்கும் காலமிது என்று sociology சொல்வது ஒரு புறம் இருக்க, வார்த்தைகளுக்கு மட்டுமல்ல எண்ணங்களுக்கும் நம்முடைய நரம்பு மண்டலத்திற்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது என்கிறது நியூராலஜி. அதனால் தான் இன்று பாஸிடிவ் சைக்காலஜி பல பிரச்னைகளுக்கும் நேர்மறையான வார்த்தைகளால் தீர்வைத் தருகிறது.
புறம் பேசுவது என்பது கேட்பவருக்கும் பேசுபவருக்கும், ஏதோ அந்தக் காதில் வாங்கி இந்தக் காதில் விடும் சங்கதி அல்ல. ஒரு குதிரையின் வாயில் பூட்டப் படும் லகான் எப்படி அதன் முழு இயக்கத்தையும் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வருமோ அது போல் அது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் கொடுக்கப்படும் சமிக்கை. எதிர்மறையான சிந்தனைகள் ஒருவரின் எண்ணங்களைத் தன்னையே சுற்றிச் சுற்றி வரச் செய்து மன அழுத்ததை ஏற்படுத்தி விடும்.
தவிர, பேசப்படும் செய்தி உண்மையாகவே இருந்தாலும், ஒருவரைப் பற்றிய நெகடிவான விஷயங்களை உற்று நோக்குவது, பேசுபவர், பேசப் பட்டவர், அதை கேட்டுக் கொண்டிருந்தவர் என எல்லோருக்குள்ளும் ஒரு நெகடிவிட்டியை பரப்பி விடும்.
அதற்குப் பதிலாக, ஒருவரைப் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அவர்களுடய நல்ல கோணத்தைத் தெரிந்து கொள்ளச் செய்யலாமே. அது பேசப் பட்டவர்களின் நல்ல செயலை மேலும் தூண்டும். தங்களைப் பற்றி இருக்கும் இமேஜை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். தங்களுக்கு கிடைத்த அங்கீகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவலை அவர்களுக்குள் எழுப்பும். சொன்னவரைப் பற்றியும் நல்ல அபிப்ராயத்தைத் தரும். பிறருடனான உறவுகள் வலுப் பெறும்.
நீங்கள் ஒருவரைப் பற்றி நீங்கள் என்ன பேசுகிறீர்களோ அது முதலில் நீங்கள் யார் என்பதையே பிரதிபலிக்கும். தவிர அது அவருக்கு என்ன விளைவை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அந்த விளைவு உங்களிடம் இருந்தே ஆரம்பம் ஆகும். மற்றவர்களை மகிழ்ச்சி படுத்துவது அவர்களுக்கு தரும் மறுமலர்ச்சி அல்ல அது உங்களுக்கே மகிச்சி தரக் கூடியது. இதைப் புரிந்து கொண்டால் மகிழ்ச்சி மனதில் நிறையும்.
Dr.Fajila Azad
(International Life Coach – Mentor – Facilitator)
fajila@hotmail.com FB:fajilaazad.dr youtube:FajilaAzad
MUDUVAI HIDAYATH
DUBAI – UAE
00971 50 51 96 433
From: Fajila Azad <fajila@hotmail.com>;
—
முதுவை ஹிதாயத்
www.mudukulathur.com
muduvaihidayath@gmail.com
00971 50 51 96 433