பேரழிவுகளின் நோக்கம் என்ன?
எந்தப் பேரழிவாக இருந்தாலும் நாம் எவ்வளவு பலவீனமாக இருக்கிறோம் என்பதைத்தான் தெளிவுபடுத்துகிறது.
ஆணவம் பிடித்த, அதிகார வெறிபிடித்த “பலமிக்க” அதிபர்கள், இராணுவத் தளபதிகள், இராணுவப் படைகள் என்று அனைத்து பலங்களையும் ஒன்றுகூட்டினாலும் அல்லாஹ்வின் ஆற்றலின் முன்பு அவை ஒன்றுமே இல்லை.
பேரழிவுகள் நல்லவர்களையும் கெட்டவர்களையும் ஒருசேர அழிக்கின்றன. அது ஓர் இறைநம்பிக்கையாளருக்கும் இறைநம்பிக்கையற்றவருக்கும் எந்த வித்தியாசமும் காட்டுவதில்லை. மேலும் அவற்றினால் எந்த அர்த்தமும் இல்லை. ஏனென்றால் அவை அவற்றிலிருந்து எந்தவொரு உணர்வையும் ஏற்படுத்த முடியாது என்று சிலர் கூறுகின்றனர்.
இது உண்மையல்ல. அவற்றின் தாக்கத்தில் வித்தியாசம் இருக்கின்றது.
அது ஓர் இறைநம்பிக்கையாளரின் வாழ்க்கையில் அவரது இறைநம்பிக்கையை இன்னும் அதிகப்படுத்துகிறது. ஏனெனில் ஓர் இலைகூட இறைவனின் அனுமதியின்றி கீழே விழுவதில்லை என்று இறைநம்பிக்கையாளர் நம்புகிறார்.
நம் குறுகிய புத்தியும் கூர்மையிழந்த அறிவும் இம்மாதிரி பேரழிவுகள் எப்போதாவது நடைபெறக்கூடிய ஒன்று என்றும் இதில் ஒரு நோக்கமும் இல்லை என்றும் சொல்லலாம். ஆனால் யதார்த்தத்தில், இப்பிரபஞ்சத்தில் ஏற்படும் ஒவ்வொரு நிகழ்வும் அல்லாஹ்வின் ஆணைப்படியே நடக்கின்றன.
இதற்குப் பின்னால் ஒரு நோக்கம் இருக்கிறது. இறைநம்பிக்கையாளர்களுக்கு பொறுமைக்கான, அல்லாஹ்வுக்கு அடிபணிதலுக்கான சோதனைகளாக அவை அமைகின்றன. வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து துன்பங்களும் பொறுமையைக் கடைப்பிடிக்கிறபொழுது நமக்கு மறுமையில் நன்மையை அள்ளித் தருகிற வாய்ப்புகளாக மாறிவிடுகின்றன.
இஸ்லாம் என்றால் இறைவனுக்கு முற்றிலும் அடிபணிவது. அதாவது, நமது கட்டுப்பாட்டிலுள்ளவற்றில் அல்லாஹ்வின் “கட்டளைகளுக்கு” முற்றிலுமாக அடிபணிவது. நமது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவற்றில் அல்லாஹ்வின் “நாட்டத்திற்கு” முற்றிலுமாக அடிபணிவது. ஆனால் பாவிகளுக்கு இவை தண்டனையாகும்.
“மேலும், அவர்கள் (பாவங்களிலிருந்து) திரும்பிவிடும் பொருட்டுப் பெரிய வேதனையை (மறுமையில் அவர்கள்) அடைவதற்கு முன்னதாகவே (இம்மையில்) சமீபமான ஒரு வேதனையை அவர்கள் அனுபவிக்கும்படிச் செய்வோம்.” (அஸ் ஸஜ்தா 32:21)
ஆனால் இந்தத் தண்டனைகூட சிலருக்குக் கருணையாக மாறிவிடும். யார் இந்தத் தண்டனையை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு தங்களைத் திருத்திக்கொள்கிறார்களோ, திருந்தி திரும்பி வந்து தங்களை நேரான பாதையில் மாற்றிக்கொள்கிறார்களோ அவர்கள் மறுமையில் கொடுக்கப்படும் மகா தண்டனையிலிருந்து தப்பித்துவிடுவார்கள்.
குர்ஆன், ஹதீஸ் வழியுள்ள தெளிவான இஸ்லாமியப் பாடங்களின்படி, வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு துன்பமும் – நோய், விபத்துகள், பொருளாதார நஷ்டங்கள், இயற்கைப் பேரிடர்கள், அனைத்துவகையான சிரமங்கள் என்று எதுவாக இருக்கட்டும் – ஒன்று தண்டனையாக இருக்கும். அல்லது மறைமுகமான அருளாக இருக்கும்.
இந்த இரண்டுக்கும் தோற்றத்தில் எந்த வித்தியாசமும் தெரியாது. அப்படியானால் ஒரு குறிப்பிட்ட துன்பம் நமக்கு தண்டனை என்றோ, அருள் என்றோ நமக்கு எப்படி தெரியும்? நம் உணர்வுகளைப் பரிசோதித்தால் அது தெரிய வரும்.
அந்தத் துன்பம் நம்மை நாயனுடன் நெருக்கமாக்கினால், நாம் நாயன் பக்கம் திரும்பி அதிக வணக்கவழிபாடுகளிலும் பாவமன்னிப்புகளிலும் ஈடுபட்டால், இது இயற்கையின் “அநீதி” என்று குற்றப்படுத்தாமல் இருந்தால், அல்லாஹ்வுக்கு அடிபணிந்து பொறுமையைக் காத்தால் அது நமக்கு மறைமுகமான அருளாகும். அது மறுமையில் நமக்கு அளவிடமுடியாத நன்மைகளை அள்ளித் தரும்.
மாறாக, துன்பங்களுக்குப் பிறகு அல்லாஹ்வை விட்டும் அகன்றுவிட்டால், அவனைக் குற்றப்படுத்தி, “ஏன் என்னை மட்டும்?” என்று கேள்வி எழுப்பினால், வெளிப்படையாகத் தோன்றும் காரணங்களிலும் தீர்வுகளிலுமே நமது கவனம் இருந்தால் இந்தத் துன்பங்கள் தண்டனைகளாக மாறும். இதற்கு மேலும் மிகப் பெரிய தண்டனை மறுமையில் காத்திருக்கிறது.
இலக்கியச்சோலை வெளியீடாக இன்ஷா அல்லாஹ் விரைவில் வெளிவரவிருக்கும் புதிய நூலிலிருந்து…
Thanks to M S Abdul Hameed
sourc: https://www.facebook.com/permalink.php?story_fbid=2556607294657648&id=100009252074657