மரணத்திற்கும் அப்பால் உள்ள மாயம் (1)
ரஹ்மத் ராஜகுமாரன்
அலக்ஸாண்டர் இந்தியா மீது படையெடுக்கச் செல்வதற்கு முன் தியோஜினிஸ் என்னும் கிரேக்க ஞானியைச் சந்திக்க விரும்பினார். தியோஜினிஸ் கிரேக்க நாட்டின் நதிக்கரை ஒன்றில் ஒரு பரதேசியைப் போல் அமர்ந்திருந்தார்.
காலை பொழுது… இளம் சூரியன், குளிர்ந்த மணல். இளம் காற்று வீசுகிறது. மிகவும் உற்சாகத்துடன் தியோஜினிஸ் இருந்தார். இந்தியாவை நோக்கிய பயணத்தில், தான் சந்திக்கச் சென்றவருடைய தோற்றத்தைப் பார்த்த அலக்ஸாண்டர் திகைத்தார்.
அலக்ஸாண்டர் ஆடை அலங்காரங்களை பூட்டிக்கொண்டும் எல்லா ஆபரணங்களையும் அணிந்தவராக இருந்தார். பதட்டத்துடன் இருந்தார். ஆனால், தியோஜினிஸ் முன்னால் யாசகம் பெற வந்தவர் போல் நின்றார் அலக்ஸாண்டர்.
‘உங்களோடு ஒப்பிடும்போது நான் ஏழையாக உள்ளேன். உங்களிடமோ ஒன்றுமேயில்லை. எது உங்களைச் செல்வந்தனாக்கி வைத்திருக்கிறது?’ என்றார், அலக்ஸாண்டர்.
‘எனக்கு எந்த ஆசையும் இல்லை, என்னிடம் எதுவுமில்லை.
எதுவும் என்னுடையது என்று இல்லாமல் இருப்பதே என் பலம்.
நான் என்னை வென்றுவிட்டதால் உலகை வென்றுவிட்டேன்.
என்னுடைய வெற்றி என்னோடு வரப்போகிறது.
உன்னுடைய வெற்றி நீ இறக்கும்போது உன்னிடமிருந்து எடுத்துக் கொள்ளப்படப் போகிறது’ என்றார்.
அலக்ஸாண்டர் சற்று திகைப்படைந்தார். அவர் இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லை.
தியோஜினிஸ்: நீ எங்கே, எதற்காகப் போகிறாய்?
அலக்ஸாண்டர்: இந்தியாவை வெல்லப் போகிறேன்.
தியோஜினிஸ்: இந்தியாவை வென்றபின் என்ன செய்வாய்?
அலக்ஸாண்டர்: உலகத்தை வெல்வேன்.
தியோஜினிஸ்: உலகம் முழுவதையும் வென்றபின் என்ன செய்வாய்?
அலக்ஸாண்டர்: அதற்குப்பின் நிம்மதியாக ஓய்வெடுப்பேன்.
தியோஜினிஸ் சிரித்தார், தன் நாயைக் கூப்பிட்டார். நாயைப் பார்த்துக் கூறினார். ‘இவர் சொல்வதைக் கேட்டாயா? உலகத்தை வென்றபின் இந்த மனிதர் ஓய்வெடுக்கப் போகிறாராம்! இங்கே நீ ஒரு சிறு இடத்தைக்கூட வெல்லாமல் நிம்மதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாய்!’ என்று நாயிடம் கூறிவிட்டு, அலக்ஸாண்டரிடம் தொடர்ந்தார்.
‘ஓய்வுதான் உன்னுடைய கடைசி லட்சியம் என்றால், இந்த அழகான ஆற்றங்கரையில் என்னுடனும், என் நாயுடனும் இங்கே இப்போதே நீ சேர்ந்துகொள்ளலாமே! இங்கே நம் எல்லோருக்கும் தேவையான இடம் இருக்கிறது. நான் இங்கே ஓய்வெடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன். இறுதியில் ஓய்வெடுப்பதற்காக ஏன் உலகம் முழுவதும் துன்பம் துயரங்களை உருவாக்க வேண்டும்? இப்போதே இங்கேயே நீ எங்களுடன் சேர்ந்து ஓய்வெடுக்கலாமே!’ என்றார்.
அலக்ஸாண்டர் (சற்று வெட்கப்பட்டார்.) ‘நீங்கள் சொல்வது அறிவுப்பூர்வமாகத்தான் இருக்கிறது. ஆனால், நான் இப்போது ஓய்வெடுக்க முடியாது. உலகத்தை முதலில் வென்றுவிட்டு வருகிறேன்’ என்று கூறிக் கிளம்பினார்.
தியோஜினிஸ்: உலகத்தை வெல்வதற்கும், ஓய்வெடுப்பதற்கும் சம்பந்தம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. உலகத்தை வெல்லாமல் இங்கேயே நான் நிம்மதியாக ஓய்வெடுக்கவில்லையா?
அலக்ஸாண்டர்: நீங்கள் சொல்வது நியாயம்தான், ஆனால், நான் இந்தியாவைக் கைப்பற்றுவதற்காகப் புறப்பட்டுவிட்டேன். இடையில் நிறுத்த விருப்பமில்லை.
தியோஜினிஸ்: நீ பாதி வழியைத் தாண்டமாட்டாய்.
(இந்தியாவை முழுமையாகக் கைப்பற்ற முடியாமல் தோல்வியடைந்த, அலக்ஸாண்டர் கீரிசை அடையவேயில்லை. பாதி வழியிலேயே இறந்து போனார். இவ்வாறே சேர்க்கும் செல்வங்களை அனுபவிக்காமலேயே எல்லா அலெக்ஸாண்டர்களும் இறந்தே போகிறார்கள்).
இந்தியாவுக்குச் செல்லும்போது அலக்ஸாண்டரின் ஆசிரியர் அரிஸ்டாட்டில் அவரிடம் சொல்லியிருந்தார் ‘நீ திரும்பும்போது உன்னுடன் ஒரு இந்தியத் துறவியை அழைத்துவா! நான் பார்க்கவேண்டும். இறப்புக்குப் பின் என்ன? ஆன்மா என்றால் என்ன? தியானம் என்றால் என்ன? சந்நியாசம் என்றால் என்ன? என்று தெரிந்து கொள்ள வேண்டும்’ என்றார்.
இந்தியாவிலிருந்து திரும்பும்போது அலக்ஸாண்டர் இந்தியாவிலிருந்தவர்களிடம் விசாரித்து, அவர்கள் கூறிய ஞானியை சென்று சந்தித்தார். அவரது பெயர் தந்தமெஷ் தந்தமெஷின் அருகாமையில் சென்றதும், தியோஜினிஸ்தான் அலக்ஸாண்டருடைய நினைவுக்கு வந்தார். அதே அழகு, அதே பார்வை, அதே தோற்றம்
அலக்ஸாண்டர்: நான் உங்களை கிரேக்கத்துக்கு அழைத்துப் போக வந்திருக்கிறேன். என்னோடு வந்துவிடுங்கள். அரச விருந்தினராக இருக்கலாம். எல்லா சௌகரியங்களும் செய்து தருகிறேன். என்னோடு ஏதென்ஸுக்கு வாருங்கள்’ என்றார்.
தந்தமெஷ் : வருவது போவது எல்லாமும் கழித்துவிட்டவன் நான். வந்தது யாருமில்லை… சென்றது யாருமில்லை. வந்தவர் யாரோ அவர் யாருமில்லை, சென்றவர் யாரோ அவர் யாருமாகவும் இல்லாதவர்
அலெக்ஸாண்டருக்குப் புரியவில்லை. (துறவி சொன்ன கருத்து: இனி உலகுக்கு வருவதும் இல்லை, உலகத்திலிருந்து போவதுமில்லை. வருவதையும் போவதையும் கடந்துவிட்டவன் நான். கருவறைக்குள் வருவதையும், மரணத்துக்குள் போய்விடுவதையும் கடந்துவிட்டேன் என்பதுதான்).
அலக்ஸாண்டர்: இது என் ஆணை வாருங்கள்.
தந்தமெஷ்: கடகடவென்று சிரித்தார். யாரும் எனக்கு ஆணையிட முடியாது. மரணம்கூட எனக்கு ஆணையிட முடியாது.
துறவியின் பேச்சு தியோஜினிஸை இவருக்கு ஞாபகமூட்டியது.
அலக்ஸாண்டர்: (வாளைப் பார்த்தவாறே) என்னோடு வந்து விடுங்கள்.
தந்தமெஷ்: நீ என்ன செய்வேன் என்று சொல்கிறாயோ அதை நான் என்றோ செய்து விட்டேன். தலை உருண்டு விழும்போதுஉன்னோடு சேர்ந்து நானும் வேடிக்கை பார்ப்பேன்.
அலக்ஸாண்டர்: எப்படிப் பார்க்க முடியும்? நீங்கள் இறந்து விடுவீர்களே!
தந்தமெஷ்: நான் இனிமேல் இறக்க முடியாது. என்னுடைய மரணத்தை நீ வேடிக்கை பார்ப்பது போல் நானும் வேடிக்கை பார்ப்பேன், நீயும் பார்ப்பாய். இந்த உடலின் பயனும் நிறைவேறிவிடும். நான் ஏற்கெனவே போய்ச் சேர்ந்துவிட்டவன். அந்த உடல் இனியும் இருக்க வேண்டியதில்லை. தலையை வெட்டிச் சாய்த்துவிடு.
அவரது கண்கள் அகன்று விரிந்ததன.
அலக்ஸாண்டர் தன் வாளை உறையில் போட்டார். அவரை உற்றுநோக்கினார். உள்மாற்றம் உணர்ந்தார். மரியாதையுடன் பின் நகர்ந்தார். அலக்ஸாண்டர் இறக்கும்போது தியோஜினிஸ், தந்தமெஷ் இருவரையும் நினைவுகூர்ந்தார். மரணத்தை தாண்டிய ஒன்று அவர்களிடம் இருந்தது. மரணத்துக்கு அப்பால் இருப்பதை, அவர்களிடம் கண்டேன். அவர்களிடம் இருந்தது என்னிடம் இருக்கவில்லை, என்னிடமோ ஒன்றுமில்லை” என்று அழுதார்.
தனது சேவர்களை அழைத்தார். ‘தான் இறந்த பின்பு தன்னுடைய உடலை கல்லறைக்குத் தூக்கிக் கொண்டு போகும்போது தன் கைகளை வெளியே தொங்குமாறு போடுங்கள்’ என்று ஆணையிட்டார். மந்திரிகள், சேவகர்கள் எதற்காக? என்று பவ்வியமாகக் கேட்டனர்.
அலக்ஸாண்டர்: “வெறுங்கையோடு வந்தேன், வெறுங்கை யோடு போகிறேன் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். என் வாழ்க்கை முழுக்க வீணாகிப் போய்விட்டது. எல்லோரும் பார்க்கும்படியாக என் கைகள் வெளியே தொங்கட்டும். மாவீரன் அலக்ஸாண்டர் எதையும் எடுத்துச் செல்லவில்லை. வெறுங்கையோடுதான் போகிறான்” என்பதை உலகம் அறியட்டும் என்றார்.
– Rahmath Rajakumaran
இன் ஷா அல்லாஹ், தொடரும்
source: https://www.facebook.com/rahmath.rajakumaran.9/posts/2574014766191196?__tn__=K-R