வெறிச்சோடிய தெருக்கள்! அந்த அல்லாஹ்வின் உதவியாளர்களை தேடுகின்றது!!
ஹிஜ்ரி 532 –இல் பிறந்து சுமார் 57 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்து, மௌத்தாகும் போது முழு உலகமும் அவருடைய மரணத்திற்காக இரங்கல் தெரிவித்து, இன்றளவும் முஸ்லிம் உம்மத்தைத் தாண்டி உலகின் அத்துனை வரலாற்று அறிஞர்களின் சிந்தனையிலும் ஆளுமை செய்து கொண்டிருக்கிற அந்த மாமனிதரின் வெற்றிக்கும், உயர்ந்த அந்தஸ்துக்கும் பின்னால் என்ன இருக்கும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?
சிலுவை யுத்தத்தின் தோல்வி அந்த சமூக மக்களிடையே நூற்றாண்டுகளைக் கடந்தும் ஆறாத வடுவை ஏற்படுத்தி இருந்தது.
முதலாம் உலக யுத்தம் முடிவுக்கு வந்திருந்த தருணம் அது. மெல்ல பிரெஞ்சுப் படைகள் தங்களின் ஆதிக்கத்தை உலக நாடுகளின் பால் திருப்பிக் கொண்டிருந்த தருணமும் கூட.
சிரியாவை நோக்கி ஜெனரல் ஹென்றி கோர் தலைமையில் 1920, ஹிஜ்ரி 1338 துல்கஅதா பிறை 8 –இல் பிரெஞ்சுப்படை சென்றது.
சற்றும் எதிர்பாராத இந்த படையெடுப்பில் அன்றைய இஸ்லாமிய ஆட்சியாளர் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களோடு போரிட்டு இறுதியில் தோல்வியைத் தழுவி ஆட்சியையும் பறிகொடுத்தார்.
வரலாற்றில் இந்தப்போர் Battle of Maysalun மைஸ்லோன் போர் என அழைக்கப்படுகிறது.
முதல் வெற்றி அதுவும் இஸ்லாமிய ஆட்சியாளரை எதிர்த்து பிரெஞ்சுப் படையின் தலைமைத் தளபதி ஜெனரல் ஹென்றி கோர் வெற்றிக் களிப்பில் திளைத்தான்.
He is remembered in the Levant primarily for this role, and for an attributed anecdote which portrays him as the epitome of Western triumphalism in the Middle East. Following the Battle of Maysalun, Gouraud reportedly went to the tomb of Saladin, kicked it, and said: “Awake, Saladin. We have returned. My presence here consecrates the victory of the Cross over the Crescent.”
Kingmakers: The Invention of the Modern Middle East. W. W. Norton & Company. p. 359.
வெற்றி பெற்ற கையோடு திமிஷ்க் வந்த ஜெனரல் ஹென்றி கோர் நேராக ”உலக சிந்தனையாளர்களையும், வரலாற்று நிபுணர்களையும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிற” அந்த மாமனிதரின் மண்ணறையின் முன்பாக வந்து நின்றான்.
அந்த மாமனிதர் வேறு யாருமல்ல. சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்.
வந்தவன் சும்மா நிற்கவில்லை, மண்ணறையின் மீது ஷூ அணிந்த காலோடு நின்று கொண்டு “ஸலாஹுத்தீனே! எழுந்து வா! இதோ நாங்கள் மீண்டும் வந்து விட்டோம்! எங்கள் முன்னோர்களான சிலுவைப் படையினருக்கு எதிராக நீ பெற்ற வெற்றிக்குப் பழி வாங்கும் முகமாக இதோ பலமான வெற்றியோடு இதோ நாங்கள் வந்திருக்கின்றோம்! எழுந்து வா! ஸலாஹுத்தீனே!” என்று கொக்கரித்தான்.
நூற்றாண்டு கடந்தும் ஸலாஹுத்தீன் அய்யூபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் எதிரிகளின் இதயத்தில் நீங்காத நினைவாக இருந்தார் என்றால் அவர்களின் இஸ்லாமிய வாழ்க்கை எவ்வளவு தூய்மையானதாக இருந்திருக்கும்.
வாருங்கள்! உலக வரலாற்றை ஆளுமை செய்கிற அந்த மாமனிதரின் வாழ்விலிருந்து சில செய்திகளை பார்த்து வருவோம்!
பைத்துல் முகத்தஸ் என்றால் நமக்கு எப்படி ஸுலைமான், தாவூத் (அலைஹிமா) ஞாபகத்திற்கு வருவார்களோ, எப்படி மிஃராஜ் பயணமும், மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஞாபகத்திற்கு வருவார்களோ, எப்படி ஜகரிய்யா, யஹ்யா, யூஸுஃப் (அலைஹிம்) ஞாபகத்திற்கு வருவார்களோ, எப்படி உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஞாபகத்திற்கு வருவார்களோ, எப்படி நம்முடைய முதல் கிப்லா எனும் ஞாபகம் வருமோ அது போன்று ஸுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் ஞாபகத்திற்கு வருவார்கள்.
சிலுவை யுத்தக்காரர்களை சிதறடித்து பைத்துல் முகத்தஸை வெற்றி கொண்டு இந்த முஸ்லிம் உம்மாவின் சிந்தனையில் வெற்றி வீரராக இன்றும் வலம் வருபவர் சுல்தான் ஸலாஹுத்தீன் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களே.
சிலுவைப் போராட்ட வீரர்களுக்கெதிராக அவர்கள் அடைந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றிக்குப் பின்னர் அல்லாஹ்வின் உதவி அவருக்கு இருந்தது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.
அல்லாஹ்வின் உதவி அவருக்கு எப்படிக் கிடைத்தது என்பதை நாம் உணர வேண்டும்.
அல்லாமா தகபீ ரஹ்மதுல்லாஹி அலைஹி, அல்லாமா இப்னு கஸீர் ரஹ்மதுல்லாஹி அலைஹி, அல்லாமா அமாத் ரஹ்மதுல்லாஹி அலைஹி, அல்லாமா அப்துல் லதீஃப் ரஹ்மதுல்லாஹி அலைஹி ஆகியோர் தங்களின் நூற்களில் பதிவு செய்திருக்கும் விஷயங்கள் மிகவும் அற்புதமானது.
சுல்தான் ஸலாஹுத்தீன் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் மரணப்படுக்கையில் இருக்கும் போது கூட ஜமாஅத்துத் தொழுகையை விட்டது கிடையாது.
பெரும்பாலும் இரவு நேரங்களில் வணக்க வழிபாடுகளில் கழிப்பார்கள். இல்முடைய சபைகளில் அதிகம் பங்கேற்பார்கள். அதிகமாக குர்ஆன் ஓதுபவராகவும், குர்ஆன் ஓதச் சொல்லி கேட்பவராகவும் இருந்தார்கள்.
மாபெரும் ஆட்சியாளராக இருந்தும் ஆடை, வீடு, உணவு விஷயத்தில் மிகவும் எளிமையையே கடை பிடித்தார்கள்.
தனி வாழ்க்கை, பொதுவாழ்க்கை, அரசியல் வாழ்க்கை என அனைத்திலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்தைக் கடை பிடித்தார்கள்.
படையின் தளபதியாக இருந்தாலும் சாதாரண படை வீரர் ஒருவரைப் போன்று யுத்த களத்தில் எல்லா வேலைகளையும் செய்வார்கள்.
யுத்தத்தின் ஓய்வு நேரத்தில் கூட குர்ஆன் ஓதச் சொல்லிக் கேட்பார்கள்.
இரக்க சிந்தனை, மனிதநேயம், மனிதாபிமானம் என இவைகளை பாரபட்ச மின்றி அனைத்து வகையான மனிதர்களோடும் நடந்து கொண்டார்கள்.
ஸக்ராத்தின் நிலையில் இருக்கும் போது கல்லாஸாவின் இமாம் அபூ ஜஅஃபர் அவர்களை அழைத்து குர்ஆன் ஓதக் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். திடீரென மயக்கமாவதும், மயக்கம் தெளிந்த பின்னர் மீண்டும் குர்ஆன் ஓதச் சொல்லி கேட்பதுமாக இருந்தார்கள்.
தவ்பா அத்தியாயத்தின் 129 –ஆவது இறைவசனத்தை கேட்டுக் கொண்டிருக்கும் போது முகமலர்ச்சியோடும், புன்முறுவலோடும் அவர்களின் ஆன்மா ரப்பிடம் சென்று சேர்ந்தது.
ஈகைச் சிந்தனை அதிகம் கொண்டவர்கள் அய்யூபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள். எந்த அளவுக்கெனில் அவர்களை கஃபன் செய்யக் கூட துணி வாங்க பணம் இல்லாத நிலை ஏற்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
அவர்கள் வஃபாத் ஆகும் போது அவர்களுக்கென்று இந்த உலகில் அசையும், அசையா சொத்து என்று எதுவும் இல்லை.
மேலும், அவர்களின் இழப்பை அன்றைய அந்த மக்களால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. நீண்ட நாட்களாக வீதிகள் வெறிச்சோடி கணப்பட்டது. அனைத்து சமூக மக்களும் அவர்களின் இறப்பின் போது அழுதார்கள்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சுல்தான் ஸலாஹுத்தீன் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களுக்கு அவர்கள் செய்த நல் அமல்களைக் கொண்டு இவ்வுலகில் நீங்காத உயர்ந்த ஓர் அந்தஸ்தைக் கொடுத்தான்.
இன்ஷா அல்லாஹ்… நாளை மறுமையில் சுவனத்தைக் கொடுத்து அல்லாஹ் அன்னாரைக் கவுரவிப்பானாக! ஆமீன்!