பூமியைப் போன்ற பொறுமை!
மிகச்சிறந்த கட்டுரை
கே.ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரீ
[ கோபத்தின் மூலம், நன்மையா? தீமையா? என்று தனிமையில் நாம் சிந்தித்துப் பார்த்தால்… நன்மையை விட தீமையே நிறைந்து காணப்படும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்,
”ஒருவன் உங்களை அவமானப்படுத்தினால்; ஏளனம் செய்தால்; குறைகண்டால்; பலருக்கு மத்தியில் மானபங்கப்படுத்தினால்; அதைப் பொறுத்துக் கொள்ளுங்கள்.
அதற்குப் பதில் தரும் வகையில் நீங்களும் அவனை ஏசவோ அவமானப்படுத்தவோ வேண்டாம்!
ஏனென்றால் அவன் உங்களுக்கு எதிராகப் பேசிய அந்த வார்த்தையே செய்த அந்தச் செயலே அவனை அவமானப்படுத்தப் போதுமான ஒன்றாகும்”. (அபூதாவூது)
(இறைவன் மீது பயபக்தியுடையோர்) தங்களின் கோபத்தை மென்று விழுங்கி விடுவார்கள். மனிதர்களின் குற்றங்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோர்களை நேசிக்கின்றான் (அல்குர் ஆன் 3:134) ]
பொதுவாக இந்த உலகில் வாழும் நாம் ஒவ்வொருவருமே, விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், பிறமனிதரோடு இணைந்தே வாழ வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
அந்தப் பிறமனிதன், நமது கணவனாக, மனைவியாக, நண்பனாக, உறவினராக, சக பணியாளனாக, சகொதர மதத்தைச் சார்ந்தவனாக இப்படி பல்வேறு வகையினராக இருக்கலாம்.
இவர்கள் அனைவருமே, நல்லவர்களாக இருந்திடுவதில்லை. அவர்களில் ஒருசிலர் தீயவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் நமக்குத் தீங்கு விளைவிக்கும்போது அவமானப்படுத்தும்போது ஆத்திரம் வரும். பழிவாங்க வேண்டும் என்று நமது உள்ளம் ஆர்ப்பரிக்கும். அதுதான் இயற்கையும் கூட.
ஆனால் … உலகில் வாழும் ஒவ்வொருவருமே இப்படி பழிவாங்கும் எண்ணத்தோடு அலைந்தால் அல்லது திருப்பித் தாக்க ஆரம்பித்துவிட்டால், உலகில் உடலாலும் – மனதாலும் ஊனமுற்றவற்களே நிறைந்து காணப்படுவார்கள்.
உலகில் ஏற்படும், அத்தனை பிரச்சனைகளுக்கும் அடித்தளம், என்னவென்று நீங்கள் யோசித்துப் பார்த்தால், இந்த சகிப்புத்தன்மை இல்லாததுதான் முக்கிய காரணம் என்பதை நாம் உணரலாம். எனவேதான், மேற்கண்ட இறைவசனத்தின் மூலம் இஸ்லாம் இந்த சகிப்புத் தன்மையை இறைநம்பிக்கையாளனின் பண்புகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறது. கோபம் கூடாது என்று அது கூறவில்லை. அதை மென்று விழுங்கிவிடுமாறு வலியுறுத்துகிறது.
யுத்தகளத்தில் எதிரிகளை வெற்றிவாகை சூடுபவன் உண்மையில் வீரன் அல்ல. ஆத்திரம் வரும்போது, அதை அடக்கும் வலிமை பெற்றவனே, எதார்த்தத்தில் வீரன் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இயம்புவார்கள்.
கோபப்படும் நான்கு வகை மனிதர்கள்
கோபப்படும் மனிதர்களை நபியவர்கள் நான்கு வகையாகப் பிரிக்கின்றார்கள்.
முதல் வகையினர்; மிகத் தாமதமாகவே கோபத்திற்கு உள்ளாவர்கள். ஆனால் வெகுவிரைவிலேயே நிதானநிலைக்குத் திரும்பி விடுவார்கள். இது ஒரு ரகம்.
இரண்டாம் வகையினர், மிக வேகமாக கோபத்திற்கு உள்ளவர்கள். ஆனால் வெகு தாமதமாகவே நிதான நிலைக்குத் திரும்புவார்கள். இப்படியொரு ரகம்.
மூன்றாம் வகையினர், மிகவேகமாக கோபத்திற்கு உள்ளாவார்கள். அதே போல மிக விரைவிலேயே நிதான நிலைக்குத் திரும்புவார்கள். இது வேறொரு ரகம்.
நான்காம் வகையினர், மிக தாமதமாகவே கோபத்திற்கு உள்ளாவார்கள். அதே போல் வெகு தாமதமாகவே நிதான நிலைக்கு திரும்புவார்கள்.
இவர்களில் யார் மிக விரைவில் கோபப்பட்டு, வெகு தாமதமாக நிதான நிலைக்குத் திரும்புகிறாரோ, அவர் மனிதர்களில் ரொம்ப மோசமானவர். ஆனால் யார் மிக தாமதமாக கோபப்பட்டு உடனேயே அதற்காக வருத்தப்பட்டு மீண்டும் பழைய சகஜநிலைக்குத் திரும்பி விடுகிறாரோ, அவர் தான் இறைவனின் பார்வையில் தலைசிறந்தவர் ஆவார்.
இந்த நான்கு பிரிவினரில் நாம் எந்த ரகம் என்பதை நாம் ஒவ்வொருவரும் கொஞ்சம் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும். ஏனெனில் நடைமுறை வாழ்வில் உப்புக்கல்லுக்கும் பெறாத சின்னச் சின்ன வி~யங்களுக்கெல்லாம நாம் கோபப்பட்டு நம் உடலையும் மனதையும் வருத்திக் கொள்கிறோம்.இப்படித்தான், புத்திசுவாதீனமில்லாத ஒருவன் புதுச்செருப்பொன்றை வாங்கினான். ஆனால் அதைத் தன் வாயில் வைத்து கடித்துக் கொண்டிருந்தான்.
ஏனப்பா, காலில் அணிய வேண்டிய செருப்பை உன் வாயில் வைத்து கடித்துக் கொண்டிருக்கிறாய்? என்று பக்கத்தில் நின்றவன் கேட்டிருக்கின்றான். அதற்கு அவன் சென்னானாம்…. ‘வேறொன்றுமில்லை! அந்தச் செருப்பு என் காலைக்கடித்துவிட்டது. அதுதான் அதைத் திருப்பி கடித்துக் கொண்டிருக்கிறேன்’. இப்படித்தான் பலர், பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு இதுபோன்ற பைத்தியக்காரத்தனமான வேலையில் ஈடுபட்டு விடுகின்றார்கள்.
ஒருவகையில் பார்த்தால், கோபம் என்பது கூட தற்காலிகமான ஒரு பைத்தியக்காரத்தனம் தான். கோபத்தின் வாசலில், விழுந்து விட்ட ஒருவனை நீங்கள் பாருங்கள். அதன் தொடர்ச்சியாக அவன் பல்வேறு வகையான முட்டாள்தனங்களில் ஈடுபடுவான்.
சிலநேரங்களில் நமக்கே இப்படியான அனுபவங்கள் ஏற்படுவதுண்டு. தட்டியவுடன் கதவு திறக்கவில்லை என்றால்… உடனே நாம் நதவையே திட்ட ஆரம்பித்துவிடுவோம். இன்னும் சிலர் அந்தக் கதவையே எட்டி உதைப்பதும் கூட உண்டு. இதுவெல்லாம் கோபம் என்ற பைத்தியத்தின் வெளிப்பாடு.
கோபத்தின் மூலம், நன்மையா? தீமையா?
கோபத்தின் மூலம், நன்மையா? தீமையா? என்று தனிமையில் நாம் சிந்தித்துப் பார்த்தால்… நன்மையை விட தீமையே நிறைந்து காணப்படும்.
சே! அவசரப்பட்டு விட்டோமே.. அந்த நேரத்தில் நாம் ஏன் அப்படி நடந்து கொண்டோம்? இந்தக் கேள்வியைத் தாண்டிவராத மனிதர்களே, இந்த உலகில் யாரும் இருக்க முடியாது.
வெளியில் யாருக்கும் தெரியாமல் போனாலும், கோபத்தினால் நமக்குள்ளே அவமானப்பட்ட ஒரு பத்து சம்பவங்களாவது நம் ஒவ்வொருவரின் வாழ்விற்குள்ளும் நிச்சயம் புதைந்து கிடைக்கும்.
கோபத்தோடு ஒருவன் தன் இடத்திலிருந்து எழுகிறான் என்றால்… நீங்கள் நன்றாகக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அவன் நஷ்டத்தோடு தான் உட்கார வேண்டியது ஏற்படும்.
கோபத்தில் ஒருவனைப் பழிவாங்குவதைவிட, அவனை மன்னித்து விடுவதில் நமக்குப் பல்வேறு பயன்கள் உண்டு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
முதலாவதாக ஒருவனை மன்னிப்பதின் மூலம் கோபம் என்ற செலவை நாம் குறைக்கிறோம்.
இரண்டாவதாக நம்முடைய உடல் மற்றும் மனஅமைதி நஷ்டமாவதைத் தடுக்கிறோம். இதற்கும் மேலாக நாம் யாரை மன்னிக்கிறோமோ அவருடைய அன்பு, நன்றி உணர்ச்சி போன்றவற்றை இலவச இணைப்பாகவும் பெறமுடியும்.
ஆனால் இதற்கு மாற்றமாக நாம் கோபப்பட்டால் அதனால் நம்முடைய எனர்ஜி அதிக அளவில் செலவாகிறது. உடல் மற்றும் மனஅமைதி கெடுகிறது என்பது மாத்திரமல்ல: எதிராளியின் தொடர் கோபம் மற்றும் பகைமைக்கும் உள்ளாகிறோம்.
இவ்வாறு ஆத்திரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டுவதின் மூலம் எதிரிகளில் ஒருவனை அதிகமாக்குவது அறிவுடமையா? இல்லை பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை மூலம் புதிதாக ஒரு நண்பனை அடைவது அறிவுடமையா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்; குறிப்பிட்டுள்ளார்கள், ”ஒருவன் உங்களை அவமானப்படுத்தினால்; ஏளனம் செய்தால்; குறைகண்டால்; பலருக்கு மத்தியில் மானபங்கப்படுத்தினால்; அதைப் பொறுத்துக் கொள்ளுங்கள். அதற்குப் பதில் தரும் வகையில் நீங்களும் அவனை ஏசவோ அவமானப்படுத்தவோ வேண்டாம்! ஏனென்றால் அவன் உங்களுக்கு எதிராகப் பேசிய அந்த வார்த்தையே செய்த அந்தச் செயலே அவனை அவமானப்படுத்தப் போதுமான ஒன்றாகும்”. (அபூதாவூது)
“அதெப்படி…. ஒருவன் நம்மை அவமானப்படுத்தும் போது நாம் மட்டும் சும்மா வாயைப் பொத்திக்கொண்டு அமைதிகாப்பது? நாக்கைப் புடுங்கிக் கொள்கிற மாதிரி ஒரு நாலு கேள்வி கேட்டால் தானே ஐயா, மனசு ஆறும்!” என்று நீங்கள் கேட்கலாம்…
உங்கள் மனதை வேறு வகையில் ஆற்றக்கூடிய இந்த நபிமொழியைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள்!.
“ஒருவன் இன்னொருவனைத் திட்டுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள் உடனே அது குறிபார்த்து எறியப்பட்ட அம்புபோல நேரே எதிராளியைப் போய்தாக்கி விடுவதில்லை.
அந்த வார்த்தை சிலபல இடங்களுக்குப் பயணப்படுகிறது. முதலாவதாக அது வானத்தின் பக்கம் செல்கிறது.
ஆனால் வானத்தின் கதவுகள் மூடப்பட்டிருக்கும். உடனே அது இந்தப் பூமிக்கு மீண்டும் திரும்புகிறது. இங்கே ப+மியின் கதவுகளும் மூடப்பட்டுவிடும். எனவே அந்த வார்த்தை இங்கும் அங்குமாக இடம் தேடி அலையும். எங்கேயும் அதற்கு இடம் கிடைக்காது.
இதற்குப்பின் தான் அது எதிராளியிடம் செல்லும். சென்ற உடனேயே அது அவனைத்தாக்கி விடுவதில்லை. அதற்கு அவன் உரித்தானவனா என்று கொஞ்சநேரம் நின்று யோசிக்கும் உரித்தானவன் என்றால் அது அவனைச் சென்றடையும்.
இல்லையென்றால்… சுவற்றில் எறியப்பட்ட பந்து போல் எறிந்தவன் மீதே திரும்ப வந்து பாயும் “. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன தெளிவான இந்தச் செய்தி அபூதாவூது என்ற ஆதாரப்பூர்வமான நபி மொழி கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நம்மீது எறியப்பட்ட சொல்லம்புகள், நமக்கானது இல்லை என்கிற போது அதை நினைத்து நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும், அதற்காக கோபப்பட்டு நம் எனர்ஜியை நாம் ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும்?
جَزَاكَ اللَّهُ خَيْرًا சிந்தனை சரம், மாத இதழ்.