பாபர் மஸ்ஜித் வழக்கு தீர்ப்பினை மறு சீராய்வு செய்யக்கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வடக்கு மண்டல செயலாளர் அனீஸ் அன்சாரி அவர்கள் பாபர் மஸ்ஜித் நில உரிமை வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
முன்னதாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி S.A பாப்டே மற்றும் நீதிபதிகள் D.Y சந்திர சூட், அசோக் பூஷன், S. அப்துல் நசீர், சஞ்சீவ் கன்னா ஆகியோர் பாபர் மஸ்ஜித் நில உரிமை வழக்கில் பல்வேறு தரப்பினரும் தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுக்களை திறந்த நீதிமன்றத்தில் (Open Court) விசாரிக்காமல் நீதிபதிகளின் தனியறைகளில் (Chamber) விசாரணை நடத்தி கடந்த 12.12.2019 அன்று தள்ளுபடி செய்தனர்.
இந்நிலையில் கடந்த 11.02.2020 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் மறு சீராய்வு (Curative Petition) மனு தாக்கல் செய்யப்பட்டு, அது உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்காக தேதி நிர்ணயிக்கப்பட்டு பட்டியிலப்பட உள்ளது.
தற்போதைய மறு சீராய்வு மனுவானது “ரூபா அசோக் ஹீரா” எனும் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்மானித்து வகுத்துள்ள சட்ட விதிகளுக்கு உட்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேற்படி வழக்கின் தீர்வு முடிவின்படி, ஒரு மனு தாக்கல் செய்யப்படும் போது அனைத்து அடிப்படை காரணங்களையும் குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்டால் மட்டுமே விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட முடியும் என அறிவுறுத்தவோ அல்லது சாத்தியப்படுத்தவோ இயலாது. மனுதாரர் கீழ்க்கண்ட காரணங்களில் ஒன்றினை வெளிப்படுத்தினாலே அவர் உரிய நிவாரணம் பெற முடியும்.
1) ஒரு வழக்கின் தீர்ப்பானது இயற்கை நீதிக் கோட்பாட்டினை மீறும் வகையில் இருந்தால், வழக்கின் தரப்பினராக அல்லாத நபரும் நீதிமன்றத்தை அணுகலாம். ஆனால், கேள்விக்குள்ளாக்கப்படும் தீர்ப்பானது மனுதாரராக உள்ள நபரின் நலனையும் எதிரிடையாக பாதிப்புக்குள்ளாக்கி இருக்க வேண்டும். ஒரு வேளை மனுதாரர் வழக்கின் தரப்பினராக இருந்தால், அவருக்கு மனு குறித்த நீதிமன்ற நடவடிக்கைகளின் அறிவிப்பு சார்பு செய்யப்படாதிருந்தால், அவ்வறிவிப்பினை கொடுக்க வேண்டும்.
2) மனு குறித்த நீதிமன்ற நடவடிக்கைகளில் மாண்பமை நீதிபதி வழக்கின் உள்ளடக்கத்திற்கும், மனுதாரருக்குமான தொடர்பினை வெளிப்படுத்த தவறும்போது அல்லது மனுதாரர்கள் ஒரு சார்பு நிலைக்கான வாய்ப்பினை வெளிப்படுத்தும் போதும் மற்றும் தீர்ப்பானது மனுதாரரை எதிரிடையாக பாதிக்கும் நிலையிலும் அவர் தக்க மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இயலும்.
பாப்புலர் ஃப்ரண்ட் தாக்கல் செய்துள்ள மனுவில் “மறு சீராய்வு மனுவின்” மனுதாரர் வழக்கின் தரப்பினராக இல்லாத நிலையிலும், பாபர் மஸ்ஜித் நில உரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் மனுதாரருடைய நலன் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் உறுதியான மற்றும் தெளிவான வரலாற்று பொருண்மைகள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் நீதியினை இம்மறு சீராய்வு மனுவின் உண்மைகள் வாயிலாக வழங்க வேண்டும் என கோருகிறது.
திறந்த நீதிமன்ற (Open Court) விசாரணையை இம்மனு வலியுறுத்திகிறது. கடந்த 30.09.2010 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பினையும், கடந்த 09.11.2019 அன்று உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பினையும் அமல்படுத்த தடையுத்தரவை பிறப்பிப்பதோடு, மத்திய அரசு மேற்படி தீர்ப்பின் அடிப்படையில் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாதிருக்க தகுந்த கட்டுப்பாடுகளையும் விதிக்க வேண்டும் என இம்மனு கோருகிறது.
இப்படிக்கு
அனிஸ் அகமது
தேசிய பொதுச் செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
புது தில்லி.