சந்தர்ப்பங்கள்
dr. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்
ஏன் அதிகம் படித்தோம். ஏன் இத்தனை திறமைகளை வளர்த்து கொண்டோம் என்றிருக்கிறதுஸ. திறமைக்கும் படிப்புக்கும் ஏற்ற வேலையும் கிடைக்காமல், கிடைக்கும் வேலையை காம்ப்ராமிஸ்டாக இறங்கி பார்க்கவும் முடியாமல் வேலையில்லா பட்டதாரி என்ற புதிய பட்டத்தோடு எங்கிருந்து மகிழ்ச்சியாக இருப்பது இப்படி புலம்புவார்கள் சிலர்.
கண்ணாடி முன்னால் நின்று தன்னையே பார்த்து படபடக்கும் அழகிய பறவையால் சிறகுகள் விரித்து எல்லையில்லா வானத்திலே பறக்க முடியுமா?!
உங்களுடைய படிப்பும் திறமையும் எந்த சூழ்நிலைக்கும் உங்களை தயார் செய்ய வேண்டுமே தவிர, ‘இதுதான்’, ‘இதற்குள் தான்’ என்று கட்டம் போட்டு வரையறை விதித்து, உங்களை ஒரு இடத்தில் நிறுத்தி விடக் கூடாது.
ஒவ்வொரு நிகழ்வும் ஒரு அனுபவம். ஒவ்வொரு வேலையும் ஒரு பாடம். நீங்கள் நினைத்த வேலை, நீங்கள் நினைத்த மாதிரி, நீங்கள் நினைத்த இடத்தில் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் கிடைத்த வேலையை நீங்கள் உணர்வு பூர்வமாக செய்யும் போது, நீங்கள் நினைத்ததை சாதிக்க கூடிய களம் அங்கு அமையக் கூடும்.
எல்லா நேரமும் சந்தர்ப்பங்கள் அழகிய பூங்கொத்தாக நம் முன் நிற்காது. அப்படி எதிர் பார்த்திருக்கும் போது ஒரு பூந்தோட்டமே உங்கள் முன் இருந்தாலும் உங்களால் இனங்காண முடியாமல் நல்ல சந்தர்ப்பங்கள் பிடிபடாமல் உங்கள் கண் முன்னாலே உங்கள் கை நழுவி சென்று விடக் கூடும்.
இந்த படிப்பு தான் வேண்டும், இந்த வேலை தான் வேண்டும் என தன் இலக்கில் உறுதியாக இருத்தல் தவறில்லை தான். ஆனால் எந்த வேலையும் ஒரு தொடக்கம் தானே தவிர அதுவே முடிவல்ல. நெருகலான ஒரு குறுக்கு சந்தும் பிரதான சாலைக்கான சுலபமான வழியாக இருக்கலாம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்கள். சின்ன வேலையும் பெரிய சாதனைக்கான குறுக்கு சந்தாக பல நேரம் அமையும்.
இந்த வேலை தான் வேண்டும் என வந்த வேலைகளையெல்லாம விட்டு விட்டு வெறுமனே காத்திட்டிருக்கிற நிமிடங்கள் உங்களை பின்னோக்கி மட்டுமல்ல இந்த உலகமே உங்களை விட்டு விட்டு முன்னோக்கி ஓடிக் கொண்டிருப்பதான ஒரு தாழ்வு உணர்வை, மன அழுத்தத்தை அது உங்களுக்கு ஏற்படுத்தி விடும். அதே நேரம் உங்கள் இலக்கில் பார்வையை வைத்துக் கொண்டு கிடைக்கின்ற வேலையை, நீங்கள் தவிர்க்காமல் இருந்தால் அது உங்களுக்கு ஒரு ‘வார்மிங்-அப்’ பாக, நீங்கள் விரும்பும் வேலைக்கான பயிற்சிக் களமாக, பல அனுபவங்களையும் பக்குவத்தையும் தரக் கூடியதாக அமையும்.
விளையாட்டு வீர்ர்களை பார்த்திருக்கிறீர்களா..? செஸ் விளையாடுபவர்கள் வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் நீச்சல் பயிற்சியில் ஈடுபடுவார்கள். கிரிக்கெட் வீர்ர்கள் கராத்தே, ஓட்டம் என தங்கள் துறைக்கு சம்பந்தம் இல்லாத மற்ற பயிற்சிகளை செய்து கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு துறையில் உள்ளவர்களும் அவர்கள் துறை சார்ந்த பயிற்சிகளைத் தாண்டி மற்ற பயிற்சிகளையும் செய்து கொண்டே இருப்பார்கள். அது அவர்களுக்கு மாற்று சிந்தனைகளையும், அவர்கள் களத்தில் நின்று ஆடக் கூடிய மனபலத்தையும், உடல் திடத்தையும் கொடுக்கும்.
உடலையும் மனதையும் ஆக்டிவாக வைத்திருக்க கூடிய எந்த முயற்சியும் வீண் போகாது. தான் சாதிக்க வேண்டும், வெற்றி பெற வேண்டும் என துடிப்போடு இயங்குபவனுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் தனக்கான களம் புலப்படும்.
நீங்கள் உண்மையில் ஏதாவது செய்ய நினைத்தால், அதற்கான வழியைக் கண்டு பிடிப்பீர்கள். இல்லையென்றால் எதுவும் செய்யாமல் இருப்பதற்கான காரணங்களைக் கண்டு பிடிப்பீர்கள் என்று அழகாக சொல்கிறார் ‘ஜிம் ரான்’.
அந்த இளைஞனுக்கு சிறுவயதிலிருந்தே திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பதே கனவாக இருந்தது. கண்களில் கனவுகளையும் உள்ளத்தில் உறுதியையும் சுமந்து கொண்டு ஹாலிவுட்டிற்கு வருகிறான். கனவு கண்டு கொண்டிருந்த கனவுத் தொழிற்சாலையை அடைந்ததும் அவன் தனக்கான கதவுகள் திறந்து விட்டது என்ற மகிழ்சியுடன் அங்கிருக்கும் தயாரிப்பு நிறுவனம் ஒன்றிற்கு சென்று தனது விருப்பத்தை தெரிவிக்கிறான்.
அவனை மேலும் கீழும் பார்த்த அந்நிறுவனத்தின் அதிகாரி நடிப்பு தவிர உனக்கு வேறு என்ன தெரியும் என்று கேட்கிறார். அதற்கு அவன் தனக்கு மரவேலை தெரியும் என்று சொல்ல அவன் கையில் ஒரு சுத்தியலைக் கொடுத்து அங்கு நிர்மாணிக்கப் பட்டு வந்த ஒரு திரைப்பட செட்டில் போய் வேலை செய்யச் சொல்கிறார்.
இந்த இடத்தில் வேறு யாரேனும் இருந்தால் என்ன செய்திருப்பார்கள்., நான் நடித்து பெரிய ஸ்டார் ஆகுவதற்கு இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன். இந்த ஆள் என்னை கார்ப்பென்டர் வேலை பார்க்கச் சொல்கிறாரே என்று கோபப்பட்டுக்கொண்டோ அல்லது அவமானப்பட்டுக்கொண்டோ, போய்யா.. நீயும் உன் வேலையும் என்று மனதிற்குள் குமைந்து கொண்டு வெளியேறி இருப்பார்கள்.
ஆனால் அவனுக்கு அது அவமானமாக தெரியவில்லை. ஹாலிவுட் என்னும் கோட்டைக்குள் நுழையக் கிடைத்த மாபெரும் சந்தர்ப்பமாக தெரிகிறது. தான் திட்டமிட்டபடி நடக்கவில்லையே, தன் கணக்கு தப்பி விட்டதே, ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள், தனக்கு நேரம் சரியில்லையோ என்று அந்த இளைஞன் தன்னையும் தன் விதியையும், நொந்து கொண்டு புலம்பிக் கொண்டிருக்காமல், என்றாவது ஒரு நாள் தான் நடிகனாவதற்கான சந்தர்ப்பம் கனிந்து வருவதற்காக வெறுமனே காத்திருக்காமல், கிடைத்த வேலையை, தன் பொருளாதார தேவையை நிறைவேற்றக் கூடியதாகவும் தன் மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் ஸப்போர்ட் பண்ணக் கூடியதாகவும், அதே நேரத்தில் தன் கனவிற்கான களமாகவும் உடன் மகிழ்சியோடு ஏற்றுக் கொள்கிறான்.
சில காலம் கழித்து அவன் வேலை செய்யும் நிறுவனம் தயாரிக்க இருக்கும் புதிய படத்திற்கு ஒரு புதுமுகம் தேவை என்று தயாரிப்பாளர் கேட்கும்போது அந்த அதிகாரி இவனை பரிந்துரை செய்கிறார்.
அதற்கு அவர் கூறிய காரணம்தான் மிக முக்கியமானது. ‘இவன் நடிக்க வேண்டுமென்று கேட்டு இங்கு வந்தான். ஆனால் நான் அவனை தச்சு வேலை செய்ய சொன்னேன். சற்றும் தயங்காமல் உடனே வேலையை ஏற்றுக் கொண்டான். ஆனால், அதைவிட முக்கியமானது என்னவென்றால், அந்த வேலையை, ஏதோ இந்த வேலைக்குத்தான் ஆசைப்பட்டு சேர்ந்ததுபோல, எந்த முணுமுணுப்பும் இல்லாமல் முழு ஈடுபாட்டுடன் செய்து வருகிறான். இவனுக்கு சந்தர்ப்பம் கொடுத்தால் இவன் சிகரங்கள் தொடுவான்’. என்கிறார்
இது ஏதோ கதைக்காக சொல்லப்பட்ட கற்பனையல்ல. அந்த இளைஞன்தான் பின்னாட்களில் ‘என்னைவிட அமெரிக்க ஜனாதிபதியாக இவர்தான் பொருத்தமாக இருக்கிறார்’ என்று ஏர்ஃபோர்ஸ் ஒன் படத்தை பார்த்து விட்டு அன்றைய அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டனால் பாராட்டப் பட்ட ஹாலிவுட் நடிகர் ‘ஹாரிஸன் ஃபோர்ட்’
வெற்றி என்பது நீங்கள் அதை நெருங்க முயற்சி செய்யும்போது நீங்கள் அடையக் கூடிய தூரத்தில் தான் இருக்கிறது. என்கிறார் ஸ்டீஃபன் ரிச்சர்ட். வெற்றி உங்களைத் தேடி வரும் எனக் காத்திருப்பதை விட்டு விட்டு, நம்பிக்கையோடு வெற்றியைத் தேடி எட்டி நடை போடுங்கள். வெற்றி உங்களை மகிழ்ச்சியாக அரவனைத்துக் கொள்ளும்.
From: Fajila Azad <fajila@hotmail.com>;;
முதுவை ஹிதாயத்
00971 50 51 96 433