அமெரிக்கா-தாலிபான் இடையே அமைதி ஒப்பந்தம்!
19 ஆண்டு கால போரின் விளைவுகள் சீராகுமா?!
ர.முகமது இல்யாஸ்
[ கடந்த 19 ஆண்டுகளில், அமெரிக்க ஆப்கன் போரில் ஏறத்தாழ 1.5 லட்சம் பேர் உயிரிழந்தனர்.
ஏறத்தாழ 45 ஆயிரம் ஆப்கன் மக்கள் இறந்தனர்.
இந்தப் போரினால், உலகம் முழுவதும் ஏறத்தாழ 25 லட்சம் ஆப்கன் மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
அமெரிக்கப் படையினரில் 2,400 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தப் போர்களுக்கு அமெரிக்கா மொத்தமாக ஏறத்தாழ 2 ட்ரில்லியன் டாலர் பணம் செலவு செய்துள்ளது.]
19 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் மண்ணில் அமெரிக்கா நிகழ்த்திய யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. தாலிபான்களுடன் அமைதி ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட்டுள்ளது அமெரிக்கா. இந்த அமைதி ஒப்பந்தம் என்ன சொல்கிறது? ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமைதி திரும்புமா? இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
கடந்த பிப்ரவரி 29 அன்று, அமெரிக்க அரசும், தாலிபான் ஆயுதக் குழுவும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட்டன. அதன்படி, தாலிபான்களின் நீண்ட கால கோரிக்கையான, ஆப்கன் மண்ணிலிருந்து வெளிநாட்டுப் படைகள் வெளியேற வேண்டும் என்பது நிறைவேற்றப்படவுள்ளது. 19 ஆண்டுகளாக, சர்வதேச அரசியலையும், அமெரிக்க அரசியலையும் தீர்மானித்து வந்தது இந்த விவகாரம்.
2001ஆம் ஆண்டு, செப்டம்பர் 11 அன்று, அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு அல் காயிதா அமைப்பைத் தடைசெய்து உத்தரவிட்டது அமெரிக்க அரசு. மேலும், அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், ஒசாமா பின்லேடனையும், அல் காயிதா அமைப்பையும் அழிப்பதற்காக ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கப் படைகள் போர் தொடுக்க உத்தரவிட்டார்.
1996ஆம் ஆண்டு முதல், ஆப்கானிஸ்தானைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த தாலிபான் குழு, அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்குப் பிறகு, ஆட்சியை இழந்தது. அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரித்தது. போர் என்பது ஆப்கானிஸ்தானின் இயல்பாக மாறியது.
ஜார்ஜ் புஷ் ஆட்சிக்குப் பிறகு, அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்றார். அவர் பதவியேற்றபோது, ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை, 68 ஆயிரம். 2010ஆம் ஆண்டு, அமெரிக்காவிலிருந்து ஆப்கானிஸ்தானுக்குப் போருக்குச் சென்ற படையினரின் எண்ணிக்கை, 1 லட்சத்தைத் தொட்டது. அமெரிக்கா, நேட்டோ முதலான வெளிநாட்டுப் படையினரின் மொத்த எண்ணிக்கை, ஒன்றரை லட்சம் எனக் கணக்கிடப்பட்டது.
2011ஆம் ஆண்டு, ஒசாமா பின்லேடன் அமெரிக்கப் படையினரால் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்பிறகு, ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்து உத்தரவிட்டார் ஒபாமா. ஒவ்வோர் ஆண்டும் படிப்படியாக, அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, 2017ஆம் ஆண்டு ஏறத்தாழ 8 ஆயிரம் பேர் ஆப்கானிஸ்தானில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
அமெரிக்கப் படையினர் குறைக்கப்பட்ட பிறகு, தாலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்தன. மேலும், தாலிபான்களின் எல்லைகள் ஆப்கானிஸ்தான் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டன. இதனால், தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்கப் படையினர் 3 ஆயிரம் பேரை, ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்தார். மேலும், ஆப்கானிஸ்தான் முழுவதும் தாலிபான்களை அழிப்பதற்காக, ட்ரம்ப் அரசின் கீழ், அதிகளவிலான விமானத் தாக்குதல்கள் நடந்தன.
கடந்த 19 ஆண்டுகளில், அமெரிக்க ஆப்கன் போரில் ஏறத்தாழ 1.5 லட்சம் பேர் உயிரிழந்தனர்.
ஏறத்தாழ 45 ஆயிரம் ஆப்கன் மக்கள் இறந்தனர்.
இந்தப் போரினால், உலகம் முழுவதும் ஏறத்தாழ 25 லட்சம் ஆப்கன் மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
அமெரிக்கப் படையினரில் 2,400 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தப் போர்களுக்கு அமெரிக்கா மொத்தமாக ஏறத்தாழ 2 ட்ரில்லியன் டாலர் பணம் செலவு செய்துள்ளது.
இந்நிலையில், 2018ஆம் அக்டோபர் முதல், அமெரிக்காவும், தாலிபான் தலைமையும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் முயற்சிகளைத் தொடங்கின. தோஹாவில் நடைபெற்ற முதல் பேச்சுவார்த்தையில், ஆப்கானிஸ்தானின் அமெரிக்கப் பிரதிநிதியாக சல்மாய் கலீல்சாத்தும், தாலிபான்களின் தலைவரான முல்லா அப்துல் கனி பராதர், ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் ஆகியோரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
2018ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, இந்தப் பேச்சுவார்த்தைகளுக்காக 8 முறை சந்திப்பு நிகழ்ந்துள்ளன.
இந்த இடைப்பட்ட காலத்தில், ஆப்கானிஸ்தானில் போர் உக்கிரமடைந்தது. 2019ஆம் ஆண்டு, அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதைக் கண்டித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆத்திரமடைந்த தாலிபான் தரப்பு, தாக்குதல்களை அதிகரித்தது. ஏறத்தாழ 4 மாதங்களுக்குப் பிறகு, அமெரிக்காவும் தாலிபான் குழுவினரும் அமைதி ஒப்பந்தத்தைக் கையொப்பமிட்டுள்ளன.
அமைதி ஒப்பந்தத்தில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன?
கடந்த 2 ஆண்டுகளில், 9 சுற்றுகளாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளிலிருந்து, அமெரிக்காவும், தாலிபான் தரப்பும் 4 முக்கியப் பிரச்னைகளை முன்வைத்து, அவற்றின் மீது ஒப்பந்தம் இயற்றியுள்ளன. முதலாவதாக, அமெரிக்கப் படைகள், தாலிபான் குழுவினர், ஆப்கன் படைகள் ஆகியவை துப்பாக்கிச் சூடு, தாக்குதல் முதலானவற்றை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டாவதாக, ஆப்கானிஸ்தான் நாட்டிற்குள் முகாமிட்டுள்ள வெளிநாட்டுப் படைகளை வெளியேற்றுவது குறித்து பேசப்பட்டுள்ளது. அடுத்த 135 நாள்களில், அமெரிக்க அரசு ஆப்கானிஸ்தானில் உள்ள 12 ஆயிரமாக இருக்கும் வீரர்களின் எண்ணிக்கையை, 8 ஆயிரமாக முதற்கட்ட நடவடிக்கையில் குறைப்பதாகவும், தாலிபான்கள் ஒப்பந்தத்தைப் பின்பற்றினால், அடுத்த 14 மாதங்களில் வெளிநாட்டுப் படையினர் மொத்தமாக வெளியேற்றப்படுவர் என்றும் உறுதியளித்துள்ளது.
கடந்த காலங்களில், ஆப்கானிஸ்தான் அரசை அமெரிக்காவின் கைப்பாவை என வர்ணித்து வந்த தாலிபான்கள், தற்போதைய ஒப்பந்தத்திற்குப் பிறகு, ஆப்கானிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர். இந்தப் பிரச்னை, மூன்றாவதாகப் பேசப்பட்டுள்ளது. நான்காவதாக, அமெரிக்கா, அமெரிக்காவின் நேச நாடுகள் ஆகியவற்றில் தீவிரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்கு ஆப்கானிஸ்தான் பயன்படுத்தப்படமாட்டாது என தாலிபான்களின் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாகப் போர்களை மட்டுமே சந்தித்துள்ள ஆப்கானிஸ்தான் மக்கள், தற்போதைய அமைதி ஒப்பந்தத்திற்குப் பெரிதும் வரவேற்பு அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தாலிபான்களுக்கும் இடையில் நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையே தங்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என ஆப்கன் மக்கள் கருதுகின்றனர். தற்போது, ஆப்கானிஸ்தான் அரசு தங்கள் சிறையில் வைக்கப்பட்டுள்ள 5 ஆயிரம் தாலிபான் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கோரிக்கையை ஆப்கானிஸ்தான் அரசு மறுத்துள்ளது. தாலிபான் கைதிகளைக் கைவசம் வைத்திருப்பதே பாதுகாப்பு என்று ஆப்கானிஸ்தான் அரசு கருதுவதாகக் கூறப்படுகிறது.
மேலும், ஆப்கானிஸ்தான் அரசை விட தாலிபான்கள் பலமுள்ள அமைப்பாக இயங்கி வருகிறது. கடந்த 18 ஆண்டுகளாக, அமெரிக்கா போன்ற வல்லரசுகளின் படைகளை எதிர்கொண்ட பலம், நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, ஆப்கானிஸ்தான் ராணுவத் தளவாடங்களைத் தாக்கி அழிப்பது முதலானவற்றில் தாலிபான்களின் கையே ஓங்கியிருக்கிறது. மேலும், தாலிபான் அமைப்பின் கீழ்மட்டத் தலைவர்கள் தலைமைக்குக் கட்டுப்பட்டு அமைதி காப்பார்களா என்ற கேள்வி எழுகிறது.
அமெரிக்காவும் தாலிபான்களும் அமைதி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருப்பது பாகிஸ்தானுக்குச் சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான் அரசில் தாலிபான்களும் அங்கம் வகிப்பது, பாகிஸ்தானின் நலன்களுக்கு உதவும் என அந்நாட்டு விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அமெரிக்கா – தாலிபான் அமைதி ஒப்பந்தம் என்பது பெயரளவில் மட்டுமே அமைதியைக் கொண்டிருப்பதாகவும், அமெரிக்கத் தேர்தல்களை மையப்படுத்தி, வெளிநாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவத்தினரை மீண்டும் நாடுதிரும்ப வைப்பேன் என ட்ரம்ப் அளித்த வாக்குறுதியைத் தேர்தல் நேரத்தில் நிறைவேற்றுவதற்காக, தாலிபான்கள் கேட்டவற்றையெல்லாம் அமெரிக்கா செய்து தருவதாகவும் அமெரிக்காவின் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக, பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு ஆப்கானிஸ்தான் அரசுடன் சுமுக உறவில் உள்ளது. மேலும், ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்காக ஏறத்தாழ 3 பில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை நிதியாக வழங்கியுள்ளது இந்தியா. ஆப்கானிஸ்தானைப் பாகிஸ்தான் தனது கோட்டையாகப் பயன்படுத்தக் கூடாது என்ற அடிப்படையில், இந்த நிதி வழங்கப்பட்டு வந்தது. ‘அமெரிக்காவின் நட்பு நாடுகளின் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தாது’ என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. எனினும், இந்தியா அமெரிக்காவின் ‘நட்பு நாடுகள்’ என்ற பட்டியலில் இடம்பெறாததால், இந்தியத் தரப்பில் அச்சம் எழுந்துள்ளது.
source: https://www.vikatan.com/news/international/an-analysis-on-us-
taliban-peace-deal-in-afghanistan?utm_source=webengage&utm_medium=web_push